Saturday, January 15, 2011

காதல் சார்ந்தவை [4]: நீயருகில் இல்லாத பொங்கல்..!!


Photo, originally uploaded by lenin1985.
நீயருகில் இல்லாததாலோ என்னவோ பொங்கல் கூட கசக்கிறதடி.. உன் அருகாமை உணரும் நாட்களிலெல்லாம் பண்டிகைக்கால குதூகலத்தை விட அதிகமான மகிழ்ச்சியை உணரும் மனம், நீ எட்டி போய்விடும் வேளைகளிலோ பண்டிகையாகவே இருந்தாலும் கூட வாடிய மலராக வசமிழந்து தவிக்கிறது..!

எல்லோரும் கரும்பு கடித்து சுவைத்து மகிழ்கின்றனர்.. சிறுவயது முதலே கரும்பென்றால் உயிர் எனக்கு உன்னை காணும் வரை. முதன்முறை உன் இதழ்களை சுவைத்த பின்பு கரும்பிலோ அதன் தித்திப்பிலோ நாட்டமிழந்து விட்டது மனம்.. அதன் பிறகு தினந்தோறும் நாம் கொண்டாடுகிறோம் பொங்கல்.. ஆனாலும் திகட்டவில்லை.. இனிப்பான எதுவுமே அதிகம் உண்டால் திகட்டும் என்று சொல்வது மூடநம்பிக்கை என்பதை உணர்த்தியவள் நீ..

தினமும் நாம் சேர்ந்திருக்கும் போதெல்லாம் பொங்கல் கொண்டாடுவதையொத்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூட இன்னும் வேண்டுமென்பதான ஏக்கமும் ஆசையும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.. என்றென்றும் இருக்கும் இந்த ஏக்கமும் ஆசையும்.. இன்று நீ குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடி கொண்டிருக்கின்றாய். நானோ இங்கு உன் அருகாமையின்றி தவித்தபடி அமர்ந்திருக்கின்றேன்.. இன்னமும் விடிந்திடாத விடியலின் நிமித்தம் நாமிருவரும் ஒன்றாய் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது அதில் வரும் நேரடி ஒளிபரப்புகளிலோ மனம் லயிக்கவில்லை.. அதிகாலையில் எழுந்து புள்ளிகள் இணைந்து நீ கோலம் போடுவதையும், வண்ணம் தூவி அக்கோலங்களை நீ அலங்கரிப்பதையும், குளித்த பின்பு துவட்ட மறந்த நீர்த்துளிகள் சில உன் மேனியில் மின்னுவதையும், இமை மூடியபடி கைகூப்பி செல்லமாய் உன்னுதடுகளால் முணுமுணுத்தபடி நீ சாமி கும்பிடுவதையும், குடும்பத்தாருடன் சேர்ந்து நீ பொங்கல் பொங்கி கொண்டாடுவதையும் இமை மூடி கற்பனை செய்து ரசித்த வண்ணமிருக்கின்றேன்.. கரும்பை நீ மென்மையாய் கடிக்கும் காட்சி கற்பனையில் வரும் போது ஏனோ தெரியவில்லை கரும்பை விடுத்து உன்னுதடுகள் மட்டுமே என் கண்களுக்கு தெரிகின்றன.. நீயும் நானும் சேர்ந்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் எப்போது வருமென்பதான ஏக்கம் பெருக்கெடுக்கின்றது என் நெஞ்சுக்குள்.. உன் அருகாமைக்காக ஏங்கி தவித்திருக்கின்றேன் என் அன்பே..! ஐ மிஸ் யூ, மை டார்லிங்..!!

Tuesday, January 11, 2011

புதுப்பொழிவு பெற சில யோசனைகள்.. [2]


Photo, originally uploaded by nvanspronsen.
இந்த பதிவு போன பதிவோட தொடர்ச்சி.. முதல் பகுதிய படிச்சிட்டு இந்த பதிவை படிங்க.. இதன் முதல் பகுதிய படிக்க இங்க கிளிக் செய்யுங்க..

னி பனிப் பொழியும் இப்பருவத்தில் புதுப்பொழிவு பெற, புத்தாண்டு உறுதிமொழிகளுக்கான மேலும் சில யோசனைகள்:

16. ங்களுக்கு நெருக்கமானவங்களுக்கும், உங்கள நெருக்கமானவனா(ளா) நெனைக்குறவங்களுக்கும் அப்பப்ப இன்ப அதிர்ச்சி குடுங்க.. அது திடீர் விசிட், எதிர்பாரா நேரத்தில போன் கால், பூங்கொத்து, பரிசு பொருள், அவங்க மேல உங்களுக்கு இருக்குற பிரியத்தை வெளிப்படுத்துற எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள், அவங்க உங்களுக்கு எவ்ளோ முக்கியமானவங்கன்னு அப்பப்ப அவங்களுக்கு வெளிப்படுத்துறது, வாழ்த்து மடல் இப்படி எதுவா வேணாலும் இருக்கலாம்.. சின்னதோ பெரிசோ, எதிர்பாராத சந்தோசத்தயும் மகிழ்ச்சியயும் அப்பப்ப அவங்களுக்கு குடுக்குற பழக்கத்த ஏற்படுத்திகோங்க.. உறவுகள் சந்தோசமா நீடித்து நிலைக்க அது ரொம்ப உதவும்..

17. வாழ்க்கையில நீங்க சாதிக்கணும்னு நெனைக்குற விஷயத்துக்காகவோ இல்ல நீங்க ரொம்ப பிரியப்படுற விஷயத்த செய்யறதுக்கோ தினமும் நேரம் ஒதுக்குங்க.. அது அரை மணியோ, ஒரு மணியோ இல்ல ரெண்டு மணி நேரமோ.. உங்க சௌகர்யம்.. ஆனா நேரம் ஒதுக்குங்க.. அதுக்காக இருவத்தி நாலு மணி நேரத்தையும் உங்களுக்காக மட்டுமே ஒதுக்கிக்காதீங்க.. அப்பப்ப மத்தவங்களுக்காகவும் அதே சமயத்துல உங்களுக்காகவும் கொஞ்ச நேரம் ஒதுக்க தவறாதீங்க..

18. த்தவங்க குறைகள மட்டுமே சுட்டிக் காட்டாதீங்க.. மட்டம் தட்டி மட்டுமே பேசறவங்கள பெரும்பாலும் மத்தவங்களுக்கு பிடிக்காம போக வாய்ப்பிருக்கு.. அதுக்காக எப்பவுமே முதுகுல தட்டிக் கொடுத்தே பேசணும்ன்னு நா சொல்லல.. மத்தவங்க குறைகள பத்தி பேசறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் அத விட இரண்டு மடங்கு அவங்ககிட்ட இருக்குற நல்ல விஷயங்கள பத்தி பேசி பாராட்ட மறக்காதீங்க..

19. ஹீரோக்கள் படத்துல தான் வலம் வரணும்னு இல்ல. நீங்களும் ஹீரோவா இருக்க ட்ரை பண்ணுங்க. சிகரெட்ட தூக்கிப் போட்டு பிடிக்குற, வலிப்பு வந்த மாதிரி கைய சிலுப்பிகிட்டு தல முடிய கோதி விடுற ஹீரோயிஸம் பத்தி நா பேசல. நாலு பேத்துக்கு நல்லது பண்ணினா நீங்களும் ஈஸியா ஹீரோ ஆகலாம். அப்படி நாலு பேத்துக்கு நல்லது செய்ய முடியாட்டி எதுவுமே செய்யாம ஜீரோவாவே இருங்க.. ஆனா கெட்டது செஞ்சு வில்லனா மட்டும் ஆகாதீங்க..

20. நீங்க மிஸ்டர்/மிசஸ்.பர்பெக்டா இருக்கலாம். அதுக்காக உங்கள சுத்தி இருக்கவங்களும் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்காதீங்க.. மத்தவங்கள அவங்க நிறை குறைகளோட எதுக்குறது தான் வாழ்க்கை.. இன்னொருத்தவங்க உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு அவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவங்களுக்காக நீங்க கொஞ்சமாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அப்பறமா சொல்லுங்க.. எல்லாத்தையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்ய முடியாது. அதே நேரத்துல மத்தவங்க அத உங்களுக்காக செய்யறப்ப அவங்க ஸ்டைல் நிச்சயமா அதுல கலந்து தான் இருக்கும். நீங்க நெனைக்குற மாதிரியே பர்பெக்டா இல்லன்னு அவங்கள படுத்தி எடுக்காதீங்க..

21. ல்லாத்துக்கும் 'ஆமாஞ்சாமி'ன்னு தலையாட்டாம, 'இல்லை'.. 'எனக்கு விருப்பமில்ல'.. 'வேண்டாம்'.. 'பிடிக்கல'..ன்னு 'நோ' சொல்லப் பழகிகோங்க.. மத்தவங்க சொல்றதுக்கு எல்லா நேரத்துலயும் 'எஸ்'ன்னு சொல்லி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினா, 'நல்லவன்(ள்)'.. 'வல்லவன்(ள்)'...ன்னு பாராட்டுவானுங்க.. ஆனா மாடு கணக்குல சேத்துடுவாங்க.. அப்படி இருந்தீங்கன்னா மனுஷனாவோ மனுஷியாவோ மதிக்காம உங்கள அவங்க சுயநலத்துக்கு தான் உபயோகப்படுத்த பாப்பாங்க.. மத்தவங்களுக்கு "நோ"ன்னு சொல்றது தப்பான காரியம் ஒண்ணும் இல்ல.. நீங்க எதுக்காக "நோ" சொல்றீங்கன்னு விளக்கம் குடுத்து நோ சொல்லுங்க.. உங்க விருப்பதுக்கு மாறா நீங்க செயல்படனும்னு எல்லா நேரத்திலேயும் அவசியமெல்லாம் இல்ல.. முடிஞ்ச வரைக்கும் மத்தவங்கள அனுசரிச்சு போங்க, ஆனா அதுக்காக உங்களோட எமொஷனல் வீக்னசை மத்தவங்க அவங்க ஆதாயத்துக்கும் சுயநலத்துக்கும் உபயோகிக்க இடம் குடுக்காதீங்க..

22. டவுள கும்பிடுங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா மத்த உயிர்கள் மேல அன்பு காட்டுறது, இரக்கம் காட்டுறது முதலான விஷயங்கள் கடவுளுக்கான குணாதிசயங்கள் அப்படின்னு ஒதுக்காம, நீங்களும் கடவுளா மத்தவங்களுக்கு இருக்க முயற்சி பண்ணுங்க.. உங்கள நாலு பேரு கடவுள்னு சொன்னா அது நல்ல விஷயம் தான.. :-)

23. னிதர்கள சம்பாதிங்க.. பணத்த செலவு பண்ணுங்க (அதுக்காக சேமிப்பு இல்லாம ஒரேடியா செலவு பண்ணிட்டு பின்னாடி முழிச்சிகிட்டு நிக்காதீங்க).. மனிதர்கள செலவு பண்ணி பணத்த சம்பாதிக்காதீங்க..

24. ல்ல நண்பர்களின் எண்ணிக்கைய அதிகரிக்கிறீங்களோ இல்லையோ அது குறையாம பாத்துக்கோங்க.. எதிரிகளின் எண்ணிக்கைய கண்டிப்பா குறைக்க முயற்சி பண்ணுங்க.. எதிரிகள போட்டு தள்ளுங்கன்னு சொல்லல.. சமாதானமா போக முயற்சி பண்ணுங்க..

25. வீட்ல உங்க கூட இருக்கவங்க சந்தோசமா இருக்காங்களான்னு அடிக்கடி கேக்குற பழக்கத்த ஏற்படுத்திக்கோங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் மனவருத்தம்னா நீங்களா முன்வந்து என்னான்னு கேட்டு அதை சரி பண்ணவோ இல்ல அவங்களுக்கு சூழ்நிலைய புரிய வைக்கவோ முயற்சி பண்ணுங்க.. வீட்ல இருக்கவங்க சந்தோசத்துக்காக பெரிசு பெரிசா எதுவும் பண்ணனும்னு அவசியம் இல்ல.. 'நீங்க சந்தோசமா இருக்கீங்களா..?'ன்னு அக்கறையா விசாரிக்கிறதும் அன்பா நாலு வார்த்தை பேசறதுமே அவங்கள மகிழ்ச்சிப்படுத்தும்னு தெரிஞ்சுகோங்க.. வீட்ல இருக்கவங்க கூட உங்க நேரத்துல ஒரு பகுதிய கண்டிப்பா தினமும் செலவழிங்க.. டெய்லி ஒரு வேளையாச்சும் குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து உக்காந்து சாப்பிடுங்க..

26. வீட்ல வயசானவங்க இருந்தா அவங்க கூட அப்பப்ப பேசி நேரத்த செலவிடுங்க.. உங்க வீட்ல வயசானவங்க இல்லாட்டி, நண்பர்கள் வீட்லயோ இல்ல வயதான சிலரை எதேச்சையா சந்திச்சு அவங்களோட பேச வாய்ப்பு கெடைக்குறப்பயோ அவங்க கூட பேசி நேரத்த செலவிடுங்க.. வயதானாலே ரொம்ப தனிமையா ஃபீல் பண்ணுவாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசறத விட அவங்களுக்கு சந்தோசம் தர்றது வேற எதுவும் கெடையாது..

27. வாழ்க்கையிலே மாற்றம் தவிர்க்க முடியாதது.. அத பழகிக்க ஒரு வழி, நிறைய புது மனிதர்கள சந்திக்கிறது, புது இடங்களுக்கு போயிட்டு வர்றது, ஆபீசுக்கோ காலேஜுக்கோ ஸ்கூலுக்கோ எப்பவும் போற வழில போகாம அப்பப்ப வேறு வழிகள்லயும் போறது, ஒரே மாதிரி ஒரு விஷயத்தை செய்யாம வேற மாதிரி செஞ்சு பாக்குறது, இப்படி புதுசு புதுசா நெறையா ட்ரை பண்ணுங்க.. புதுசா நாலு எடத்துக்கு போயிட்டு வாங்க.. புது அனுபவங்களுக்கு உங்களையே நீங்க தயார்படுத்தி பாருங்க.. அது வேறு சில சூழ்நிலைகளிலே ரொம்ப உதவும்..

28. மாற்றுத் திறனுடையவர்கள் இல்லதிலோ, ஆதரவற்றவர்கள் காப்பகங்களிலோ, முதியோர் இல்லத்திலோ உங்க பொறந்தநாள் கொண்டாட்டத்த வச்சிகோங்க.. உங்களோட பொறந்த நாள் பார்ட்டிக்காக நீங்க முடிவு பண்ணியிருக்க பணத்த அவங்களுக்கு உபயோகமான எதையாச்சும் வாங்கி கொடுக்குறதுல செலவழிங்க..

30. விரோதம் பாராட்டாதீங்க.. மத்தவங்க மேல வெறுப்ப வளர்த்துக்காதீங்க.. அது உங்க மனச மட்டுமில்ல உடல் நலத்தையும் கூட கெடுக்கும்.. டென்ஷன், பிளட் பிரஷர் இப்படி நெறைய வந்து உங்க உடல் நலத்த பாதிக்க வாய்ப்புண்டு.. விரோதிகளையோ பிடிக்காதவங்களையோ நிச்சயமா நண்பர்களா பாக்க முடியாது, ஆனா அவங்கள அந்நியர்களா பாக்க பழகிக்கலாம்.. அந்நியர்கள் மேல நாம் கோவப்பட மாட்டோம், விரோதம் பாராட்ட மாட்டோம், அவங்கள பாத்து வெறுப்படைய மாட்டோம்.. கண்டும் காணாம தான் போக முயற்சி பண்ணுவோம்.. அத நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க..

"ஹையோ இப்பவே கண்ண கட்டுதே.." அப்படின்னு நீங்க சொல்றது காதுல விழுது.. சரி சரி.. இதோட நிறுத்திக்கிறேன்.. இதுக்கு மேல சொன்னா என்னை அடிக்க வருவீங்கன்னு தெரியும்.. அட்வைஸு அம்புட்டுத்தான் (இப்போதைக்கு)..

புது வருஷம் யாருக்காகவோ பொறக்கல.. உங்களுக்காக தான் பொறந்திருக்கு.. அதனால ஜாலியா வருஷம் ஃபுல்லா கொண்டாடி கலக்குங்க.. ('இன்னும் போகலையா நீ'ன்னு யாரோ கேக்குறது காதுல விழுது)

இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் ண்மாவும் மகிழ்ச்சியாகவும் மலர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..! வாருங்கள்.. வாழ்க்கையை வாழ்ந்துப் பார்ப்போம்..!!

Saturday, January 8, 2011

புதுப்பொழிவு பெற சில யோசனைகள்.. [1]


Photo, originally uploaded by peevee@ds.
புத்தாண்டுனாலே உறுதிமொழி எடுத்துக்கிறது வழக்கமா நடக்கிறது தான். நம்மையே நாம மாத்திக்க எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும், அத உடனே செயல்படுத்தாம அதுக்கு ஒரு நேரம் வரட்டும்னு காத்துகிட்டு இருந்தே பழகிட்டோம்.. அப்படி நேரம் வந்திடுச்சுன்னு நெறையா பேரு நெனைக்குறது புது வருஷத்த தான்.. இந்த வருஷம் ஏதாச்சும் உறுதிமொழி எடுத்துக்கணும்னு தோணுது, ஆனா என்ன எடுத்துக்கிறதுன்னு தெரியலன்னு சொல்றவங்களுக்கு இதோ சில யோசனைகள்.. ஏற்கனவே நா உறுதிமொழி எடுத்துகிட்டேன்னு சொன்னீங்கன்னா, 'அடடே இத நாமலும் செய்யலாமே'ன்னு உங்களுக்கு தோணலாம் இங்க இருக்குற சிலவற்றை படிச்சதும்..

இனி பனிப் பொழியும் இப்பருவத்தில் புதுப்பொழிவு பெற சில யோசனைகள்:

1. ம்மணா மூஞ்சியாவே இல்லாம தினமும் ஒரு புது முகத்தையாச்சும் பாத்து புன்னகைங்க.. (நீங்க பையனா இருந்தா பொண்ணுகள மட்டுமே பாத்து சிரிக்கிறதும், நீங்க பொண்ணா இருந்தா பசங்கள மட்டுமே பாத்து சிரிக்கிறதும் இந்த கணக்குல ஏற்றுக் கொள்ளப்படாது.. ஆனா கலந்து இருக்கலாம், அது தப்பில்ல.. வாழ்க்கையே பழகுறது தான ;-) வாங்க பழகலாம்ன்னு முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் சிரிச்சு வரவேற்க தயங்காதீங்க)

2. ச்சை நிறமே பச்சை நிறமேன்னு பூமிய பச்சையா வச்சுக்க மின்சாரம், நீர், காகிதம் முதலானவற்றை தெரியாமக் கூட வீணாக்குறத எவ்ளோ முடியுமோ அவ்ளோ தவிர்க்க முயலுங்க.. பச்சை பசேல்ன்னு ஒரு ஊர காமிக்கணும்னா கிராபிக்ஸ் உபயோகிச்சா தான் உண்டுங்கிற நிலைமை எதிர்காலத்துல வராம இருக்க உங்களால முடிஞ்சத செய்யுங்க.. ஒரு மரமாச்சும் இந்த வருஷம் நட முயற்சி பண்ணுங்க.. நீங்க நடாட்டியும் அதுவா வளந்து இருக்குற மரங்கள தயவு செஞ்சு வெட்டாதீங்க.. மரம், செடி, கொடிகளுக்கு தண்ணி ஊத்துறது மன நிறைவைத் தரக்கூடிய, உலகத்துக்கு உபயோகமான ஒரு நல்ல பொழுதுபோக்கு.. முயற்சி பண்ணுங்க..

3. டிக்க வசதியில்லாத ஒரு பையனயாசும்/பொண்ணயாசும் படிக்க வைக்க உங்களால முடிஞ்சத செய்யுங்க..

4. தினம் ஒரு உதவி செய்ய முடியாட்டியும், முடிஞ்ச வரைக்கும் வழியில (வாழ்க்கையோட வழியிலங்க) தட்டுபடுறவங்களுக்கு தேவைப்படுற உதவிகள தவறாம செய்யுங்க.. (உபத்திரவம் செய்யாம இருந்தா அதுவே ஒரு பெரிய உதவிங்கிறதையும் ஞாபகத்துல்ல வச்சுக்கோங்க.. அதுக்காக 'நா உண்டு என் வேலை உண்டு'ன்னு இருந்துட்டு, 'நா இந்த வருஷம் நெறையா உதவி செஞ்சு இருக்கேன்'னு சொல்லாதீங்க)

5. திரும்ப கேட்டா கேவலமா நெனைக்க கூடும்ன்னு (பஸ்ல, கடைகள்ள மற்றும் இன்னப்பிற இடங்களில்) விட்டுட்டு போற உங்களுக்கு சொந்தமான அம்பது பைசா, ஒரு ரூபா முதலான சில்லறை பாக்கிய சண்டை போட்டாச்சும் வாங்குங்க. உங்களுக்கு அது வேணாம்னு தோணுச்சுன்னா அந்த சில்லறைய எல்லாம் வாங்கி, அப்படி சேர்ற பணத்த சேமிச்சு கஷ்டபடுற யாருக்காச்சும் வருஷ கடைசியில குடுங்க.. ஒரு வாரத்துக்கு அப்படி பத்து ரூபா சேர்த்தீங்கன்னா ஒரு வருஷத்துக்கு ஐநூறு ரூபாய்க்கு மேல சேரும்.. உங்களுக்கு சொந்தமானத நீங்க விடாம வாங்கின மனநிறைவும், இன்னொருத்தருக்கு உதவுன நிறைவும்னு ரெண்டு விதமான சந்தோசம் கிடைக்கும்..

6. வேலியில போற ஓணான்னு நெனைச்சு 'எனக்கெதுக்கு வம்பு'ன்னு ஒதுங்கி போகாம, நியாயத்துக்கு முடிஞ்சவரைக்கும் (அடிவாங்கிட்டு முன்னாடி நிக்காட்டியும் பின்னாடி நின்னாவது) ஆதரவு குடுங்க.. எதிர்காலத்துல எங்கயாச்சும் நீங்களும் அந்த ஓணான் சூழ்நிலைல சிக்கிக்க வாய்ப்பு உண்டுங்கிறத மறக்காதீங்க..

7. பிஸின்னு சீன் போட்டு உங்களுக்கே தெரியாம தொலைச்சிட்ட பால்ய நண்பர்கள்ல ஒண்ணு ரெண்டு பேரையாச்சும் கண்டுபிடிச்சு நட்ப புதுபிச்சுக்க முயற்சியாச்சும் பண்ணுங்க..

8. வன்(ள்) போன் பண்ணி பேசுவான்(ள்)னு நெனைச்சிட்டு இல்லாமலும், மிஸ் கால் மட்டுமே குடுக்காமலும் நீங்களும் யாருக்காச்சும் (எப்பவும் இல்லாட்டியும்) எப்பவாச்சுமாவது கால் பண்ணி பேசுங்க..

9. ங்களால ஒருத்தன்(ஒருத்தி) அழுதான்(ள்)னு இருக்க வேணாம்.. மத்தவங்க மனச (உடலையும் தான்) தெரிஞ்சே புண்படுத்தாதீங்க..

10. வ்ளோ முடியுமோ அவ்ளோ சிரிங்க.. மத்தவங்களயும் சிரிக்க வைங்க.. அதுக்காக சிரிக்கிறேன்னு சொல்லிட்டு ரோட்டு ஓரத்துல நின்னு கேக்கபிக்கன்னு சிரிச்சு பைத்தியம்னு பேரு வாங்காதீங்க.. அதே மாதிரி சிரிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு ஒரேடியா காமெடி பீஸாவும் ஆயிடாதீங்க.. சந்தோசமா இருங்க, மத்தவங்களயும் சந்தோசமா வச்சுக்கோங்கன்னு சொல்றேன்.. ('புரியுது புரியுது'ன்னு நீங்க சொல்றது கேக்குது)

11. ரு உறவையோ நட்பையோ நீங்க முடிச்சுகிட்டீங்கன்னு இருக்க வேணாம்.. எவ்ளோ முடியுமோ அவ்ளோ விட்டுக் குடுத்தாலும் குடுங்க, ஆனா ரிலெஷன்ஷிப்ப மட்டும் விட்டுடாதீங்க.. உறவிலயும் நட்பிலயும் ஈகோவ விட்டுட்டு சமரசம் செய்ய முதல்ல முன் வர்றது நீங்களா இருக்க முயற்சி பண்ணுங்க..

12. 'ன்னிப்பு.. தமிழ்ல்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை'ன்னு விஜயகாந்த் ஸ்டைல்ல டயலாக் அடிக்காம நெறையா மன்னிங்க.. மன்னிப்பு கேக்க தயங்காதீங்க..

13. ண்மூடித்தனமா நிறைய லவ் பண்ணுங்க.. அது உயிர்களா இருக்கட்டும்.. பொருள்களா இருக்க வேணாம்..

14. சில விஷயங்கள நல்லா ரூம் போட்டு யோசிச்சுட்டு அப்பறமாவே பேசுங்க.. பேசினதுக்கு அப்பறம் யோசிக்குற மாதிரியான சூழ்நிலைகள முடிஞ்ச வரைக்கும் தவிர்க்க முயற்சி செய்யுங்க.. அதுக்காக ரொம்ப நேரம் ரூம் போட்டு யோசிச்சிட்டு கடை காலியானதுக்கு அப்பறம் வந்து டீ ஆத்த முயற்சி பண்ணாதீங்க..

15. மாற்றம் உள்ளுக்குள்ள இருந்தும் ஏமாற்றம் வெளிய இருந்தும் வர்ற மாதிரி பாத்துக்கோங்க.. மத்தவங்க உங்களுக்காக மாறணும்னு எதிர்பாக்காதீங்க.. உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க.. சுயமாற்றமும் முன்மாதிரியா நடந்துக்கிறதும் தான் நாம விரும்புறத பெறுவதற்கு முதல் படின்னு தெரிஞ்சுகோங்க.. மத்தவங்களுக்கு முடிஞ்சவரைக்கும் ஏமாற்றத்தை குடுக்காதீங்க.. உங்ககிட்ட இருந்து அதிகம் எதிர்பாக்குறாங்கன்னா உங்களால அத பூர்த்தி செய்ய முடியாம போகலாம்ன்னு முடிஞ்சவரைக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க.. அதே நேரத்துல உங்களோட எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யும் முதல் நபர் நீங்களா இருங்க..

யோசனைகள சொல்லி முடிக்கல.. இன்னும் நெறையா இருக்கு.. இதன் தொடர்ச்சியா மேலும் சில யோசனைகள அடுத்த பதிவுல எழுதறேன்..

வாங்க.. மத்தவங்கள சந்தோசப்படுத்தி நாமலும் சந்தோசமா இருக்கலாம்(எதுக்கு முன்னுரிமை குடுத்து இருக்கேன்னு நல்லா கூர்ந்து கவனிங்க).. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

இந்த பதிவோட தொடர்ச்சிய படிக்க இங்க கிளிக் செய்யுங்க..