ஒரு தனிமையுடனான உரையாடல் அவ்வளவு சுவாரசியமாக இருப்பது இல்லை.
நான் பலவிதமான தனிமைகளை சந்தித்து இருக்கிறேன். தனிமையின் இருண்ட பள்ளத்தாக்கில் நான் பயணிக்க நேரும் ஒவ்வொரு முறையும், முந்தைய பயணங்களின் ஏதோவொரு அனுபவம் இப்பயணத்தை எளிதாக மாற்றாதா என்னும் பெரும் ஏக்கம் கொள்வதுண்டு. பிறகு ஏக்கத்தினால் பயனேதும் இல்லை என்பதை உணர்ந்து எப்போதும் போலவே அப்புதிய தனிமையின் நியதிகளை புரிந்து கொள்வதிலும், அதற்கு ஏற்ப என் காய்களை நகர்த்தி அதை கடந்து போவதிலும் எனக்கு அளிக்கப்பட்ட நேரம் ஆவியாகி கரைந்து போய்விடும்.
தனிமையில் ஆழ்ந்திருக்கும் மனிதர்கள் எப்போதுமே என் கவனத்தை பெற்று விடுகின்றனர். என்னையும் அறியாமல் அவர்களது தனிமையை எப்படியாயிலும் கலைக்கும் முனைப்பு எனக்கு ஏற்பட்டு விடுகிறது. தனிமை என்பது வலிகள் தாங்கியதாக மட்டுமே இருக்க முடியாது என்பதை அறிந்ததில் இருந்து நான் அவர்களிடம் இருந்து விலகி நடக்க கற்றுக் கொண்டேன்.
தனிமையை தனக்கு அளிக்கப்பட விதியாக அல்லாமல் அதை தன் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக கொண்டிருப்பவர்கள், என் சுவாரசியத்தின் ரகசிய காட்சிப் பொருளாகி விடுகின்றனர். நான் அவர்களிடம் மெல்ல உரையாட முயல்கிறேன். அவர்களின் தேர்வு கலைந்து விடாதபடி என் வார்த்தைகளை நான் தேர்ந்தெடுக்கிறேன். மிகவும் கவனமாக அவர்களுக்கு நான் ஒரு சுவாரசியமாக மாற முயல்கிறேன். அவர்களின் தேர்வை மறுபரிசீலனை செய்ய மெதுவாக அவர்களை தூண்டுகிறேன். அவர்களின் கவனம் சிதறும் போது என் வார்த்தைகளை நான் மேலும் மிருதுவாக்குகிறேன். எந்த காலத்திலும் அவை அவர்களின் தேர்வுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்க போவதில்லை என்னும் உறுதிமொழிகளை மறைமுகமாக வழங்குகிறேன். பிறகு அவர்களது மறுபரிசீலனை முடிவுக்கு வருவதற்கு சற்று முன் அல்லது முடிவுக்கு வந்த அடுத்த கணம், புன்னகையுடன் விடை பெறுகிறேன்.
அவர்களிடம் நான் சொல்வதேயில்லை, அவர்கள் மீதான எனது சுவாரசியம் ஒத்த மனம் கொண்ட சக மனிதன் மீதான எனது கவர்ச்சி என்பதையோ அல்லது எனது விடைபெறல் என் தேர்வினது மறுபரிசீலனையின் முடிவு என்பதையோ.
--
பால் ஆரோக்கியம் | Paul Arockiam