என்னிக்கும் போல தாங்க அன்னிக்கும் எதார்த்தமா போனேன். முடி வெட்டி ரொம்ப நாளாச்சே.. பசங்க வேற, 'இன்னும் கொஞ்சம் பெரிசா வளத்து, முதுமலை காடுனு போர்டு எழுதி போடு.. நல்லா இருக்கும்!!'னு கிண்டல் பண்றாங்களே, அதனால முடி வெட்டிட்டு வரலாம்னு எப்பவும் முடிவெட்டுற கடைக்குள்ள நொளஞ்சேன்.
இப்ப கொஞ்ச மாசமா என் தலைய கதிர் அறுத்து அழகாக்குறது அந்த பதினஞ்சு வயசு பய தான். பாக்க நண்டு மாதிரி இருந்தாலும், தொழில்ல ஜித்தன்னு சொல்லலாம். நா எப்டி வெட்டுன்னு சொல்றேனோ அதே மாதிரி வெட்டி விடுவான்.
ஆனா அன்னிக்குனு பாத்து, அந்த பய இன்னொருத்தன் தலைய மேஞ்சுகிட்டு இருந்தான். கடையோட ஓனர் கொஞ்சம் பெரிய ஆள் தான். அன்னிக்கு அவர் கை பற பறன்னு இருந்திருக்கும் போல.. 'வாங்க சார்.. இங்க வந்து உட்காருங்க..'னு அவர் பக்கத்திலே இருந்த சேர்-ஐ காமிச்சாரு.
"சரி.. இந்த ஆபிசர் நல்லா எக்ஸ்பீரியென்ஸ்டு மாதிரி தெரியுது. வாண்டே நல்லா வெட்டினா தல எப்டி வெட்டி விடும்"னு நம்ம்ம்ம்ம்பி (அந்த 'ம்'-அ கொஞ்சம் அழுத்தி மெல்லமா படிங்க.. அதுக்காக தான் அத்தன 'ம்ம்ம்ம்' போட்டிருக்கேன்) போய் உட்காந்தேன்.
மெல்லமா தண்ணிய தெளிச்சு, ஒரு சின்ன மசாஜோட ஆரம்பிச்சாரு. ஆரம்பம் நல்லா இருக்கவும், கொஞ்சம் கண்ணசந்துட்டேங்க. அது தப்பா.. அப்டியே தப்புனாலும் என் தலைல ரெண்டு தட்டு தட்டி எழுப்பி விட்டுருகலாம்ல அந்தாளு. அத விட்டுட்டு தலைய இப்படியா கொதறி வெப்பாரு..
ஏதோ பத்து மாசம் சாப்பிடாம பசில இருந்த மாடு, வயல்ல இருக்குற புல்லெல்லாத்தையும் மேஞ்சிட்டு, "இன்னும் பசிக்குது.. ம்ம்ம்மே.."னு கத்துற மாதிரி, தலைல இருந்த முடி எல்லாத்தையும் ஓட்ட வெட்டிட்டு, "என்னங்க உங்கள்ட முடி அவ்ளோ தானா..?"னு கேக்குற மாதிரி கத்தரிக்கோல என் மூஞ்சி முன்னாடி ஆட்டினப்போ தான் கண்ண தொறந்தேன்.. சினிமால வடிவேலு சொல்ற மாதிரி, "நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.."
"ஏண்டா டேய்.. முடி தானடா வெட்ட சொன்னேன் உன்ன.. மொட்டையா அடிக்க சொன்னேன்.. ஆரம்பிசப்ப நல்லா தானடா ஆரம்பிச்ச.. ஏன் இந்த கொல வெறி.. 'ஐயா எனக்கு நெறைய முடி வெட்டனும்னு ஆசையா இருக்கு'னு சொல்லிருந்தினா, பக்கத்துக்கு வீட்ல கட்டிப் போட்ருக்க செம்மறி ஆட்ட கொண்டு வந்து விட்டுருப்பேன்ல.. என் தல தான் உனக்கு கெடச்சதா.. போடாங்ங்ங்ங்க.."னு அந்தாளு மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடனும் போல இருந்துச்சு..
"இன்னும் ஏன்டா கத்திய மூஞ்சி முன்னாடி ஆட்டிட்டு இருக்க. முடிய மொட்டயடிச்சது பத்தாதா? என் மூக்கையும் வெட்டனுமா? கத்திய அந்த பக்கம் எடுடா.."னு அந்தாள தள்ளிட்டு எந்திரிச்சு, "ஐயோ.. இருந்த நாலு முடியையும் நாலு இன்ச் கூட இல்லாம வெட்டிடானே"னு வயிதெரிச்சலோட, "இந்தா புடி காசு.. தூக்க மாத்திரைய வாங்கி போட்டுகிட்டு நல்லா போய் தூங்கு.. இப்டி மத்தவங்க தலையோட வெளாடாத.."னு அவன சபிசிட்டே வெளிய வந்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போனப்ப, மத்தவங்க எத கேக்க கூடாதுன்னு நெனச்சேனோ அத என் கூட வொர்க் பண்ற என் ப்ரண்ட் என்னை பாத்ததும் சிரிசிட்டே கேட்டா, "என்ன பால்.. உரிச்ச கோழியா வந்து நிக்குற.."
"சிங்கத்த உரு தெரியாம செதசிட்டதால, உனக்கு சிரிக்க தைரியம் வந்துடுச்சுல.."னு ஆதங்கத்தோட, "இனிமே முடி வெட்ட போறப்ப தூங்குவியா.. தூங்குவியா.. தூங்குவியா.."னு என்ன பாத்து நானே கேட்டுகிட்டேன்..
"சரி விடுடா பால்.. முடி தான.. இன்னும் ஒரு மாசத்திலே வளந்திட போகுது.. இதுக்கு ஏன் கவலை பட்டுகிட்டு.."னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டாலும் உள்ளுக்குள்ள, "இருந்தாலும் உன் தலைல வெளயாடிட்டானே அந்த எரும.."னு ஒரு கோபம் இருந்திட்டு தான் இருக்கு..
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Wednesday, December 30, 2009
Tuesday, December 29, 2009
மாற்றம் விரும்பப்படும் கணங்கள்..
"மாற்றம் மட்டுமே மாறாதது.." என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், பல இடங்களில் படித்திருந்தாலும், நிஜ அனுபவங்கள் பல நேரங்களில் அதையே கற்று தந்திருந்தாலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு மனமென்னவோ இது வரையில் பக்குவப்படவில்லை. வாழ்வின் மாற்றங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு ஏன் நம்மால் முன்னோக்கி நகர முடிவதில்லையென்று பல நேரங்களில் சிந்தனையில் நான் ஆழ்ந்ததுண்டு.. இருக்கும் இடம், பழகிய உறவுகள் மற்றும் நண்பர்கள், செல்லும் பாதைகள், வாழும் விதம் என்று எல்லாவற்றிலும் ஏதாவதொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பெரும்பாலும் சௌகர்ய எல்லையிலிருந்து (ஆங்கிலத்தில் அதை கம்பர்ட் ஜோன் [confort zone] என்று சொல்வார்கள், எனக்கு தெரிந்த முறையில் அதை தமிழ்ப்படுத்தி உள்ளேன்) வெளிவருவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அதனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதென்பது கடினமாக உள்ளது. எனவே தான் பழகியவர்களையும் பழகிய இடங்களையும் விட்டு பிரிவதற்கு மனம் ஒத்துக் கொள்வதில்லை.
என்ன தான் மனம் இப்படி சிந்தித்தாலும், வாழ்வின் நிகழ்வுகள் நாம் விரும்பியவாறு அமையாத கணங்களிலும், மனதை அடியாழம் வரை காயப்படுத்தும் வகையிலான சில விஷயங்கள் நடக்கும் போதும், நம்பி இருந்த உறவுகளாலும் நட்புகளாலும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்திக்கும் கணங்களிலும், இருக்கும் எல்லாவற்றையும் முற்றிலுமாக துறந்து, இதுவரை நடந்தவைகளின் காலடி சுவடுகளே பாடாத ஒரு புது உலகத்தில், புதிய மனிதர்களுடன், முதன்முறையாய் பூமியை முத்தமிடும் குழந்தையின் மனநிலைக்கு மீண்டும் சென்று, முற்றிலுமாக புதியதொரு வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்திலிருந்து [ஆனால் இம்முறை மிகுந்த கவனமுடன் யாரை சேர்த்துக் கொள்வது, யாருடன் பழகுவது, எப்படி வாழ்வது என்று சற்று எச்சரிக்கையுடன்] வாழ ஆசை கொண்டதும் உண்டு..
மாற்றமென்பது ஏற்றுக் கொள்ள இயலாததாக இருப்பினும், ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் கீறல்பட்ட இதயங்கள், அதனால் ஏற்படும் வலிகளுக்கு மாற்றங்கள் எவ்வளவோ மேல் என்றே எண்ணுகின்றன. அத்தகைய சிந்தனைகள் பல நேரங்களில் எனக்குள்ளும் எழுந்ததுண்டு.. சந்தித்து பழகிய மனிதர்கள் செய்யும் துரோகங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மன வருத்தங்கள் இவற்றை விட சந்தித்திராத மனிதர்களும் அங்கே நிலவும் ஒரு அந்நிய உணர்வும் எவ்வளவோ மேலானவை என்பது தான் அத்தகைய எண்ணங்களுக்கு காரணம்.
அது ஒரு வகையில் உண்மையும் கூட. நன்றாக பழகிய சில உறவுகளால் இழைக்கப்படும் துரோகங்களும், அதனால் வரும் ஏமாற்றங்களும் மனதினுள் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஞாபகப்படுத்தும் சுவடுகள் அந்த காயங்களை மீண்டும் மீண்டும் கீறி ஆறாத ரணத்தையும் ஏற்படுத்துகின்றன. 'இவனா/இவளா இப்படி நடந்து கொண்டான்(ள்)..' என்று மனதினுள் ஏற்படும் ஆதங்கத்தையும், அதனால் தோன்றும் ஏமாற்றம் கலந்த வலியையும் மனிதனால் ஏற்று கொள்ள முடிவதில்லை.. அத்தகைய மனிதர்களை ஏன் சந்தித்தோம் என்றும், அவர்கள் மேல் ஏன் நம்பிக்கை கொண்டோமென்றும், அவர்களை ஏன் சார்ந்திருந்தோம் என்பதுமான கேள்விகள் மனதில் இடைவிடாமல் தோன்றி தீராத வேதனையை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன.
எனவே தான் அத்தகைய நேரங்களில், மாற்றமென்பதை நமது மனம் தானாக தேடி அலைகின்றது. முழுமையான ஒரு மாற்றத்தை ஏங்கி எதிர்பார்க்கின்றது. அத்தகைய கணங்களில் மாற்றமென்பது விரும்பப்படுகின்றது. அதுவும், கடந்த கால சுவடுகளை முற்றிலுமாக அழித்து, நடந்தவைகளை மறக்க செய்யும் மாற்றமொன்று அமைந்தால் அதை விட அக்கணங்களில் வேறென்ன வேண்டும்..

Friday, December 25, 2009
அழகுடன் மிளிரும் குளிர்காலம்..
மீண்டும் இதோ வந்து விட்டது கிறிஸ்துமஸ்.. சட்டென்று கண் இமைகளை மூடி திறக்கும் வேளையில் ஒரு வருடம் உருண்டோடியதை போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.
குடும்பத்தினருடன் நிமிடங்களை செலவிட உதவும் விடுமுறை நாட்கள்.. எந்தவித கேள்விகளுமின்றி தானாக மனதிற்குள் நுழைந்து கொள்ளும் குதூகலம்.. உற்சாகம்.. ஏழைகளும் இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டும் இயற்கை.. உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரும், நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியும் சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் குளிர்காலம்..
"என்ன தான் சாதித்திருக்கிறோம் இந்த வருடம்..?", என்றொரு சிந்தனையில் என்னை ஆழ்த்தும் நாட்கள் இவை.. வழக்கம் போல பெரிதாக எதையும் சாதிக்கவில்லையென்றாலும், குறைபட்டு அலுத்து கொள்ளுமளவிற்கு முற்றிலும் சோம்பேறியாகவும் இருந்துவிடவில்லை..
சில நல்ல செய்திகள், மகிழ்ச்சி ஏற்படுத்தும் புதிய உறவுகள், சில நண்பர்களின் விடைபெறல்கள், புதிய சில நட்புகளுக்கான அழைப்பிதழ்கள், திடீரென்ற இன்ப அதிர்வுகள், அங்காங்கே சில ஏமாற்றங்கள், தந்தையை போன்று பழகிய மனிதரின் ஈடு செய்ய முடியாத இழப்பு, பொதுவாகவே மனதை வேதனைபடுத்திய நிகழ்வுகள், ஆனந்த கண்ணீரை வரவழைத்த சில கணங்கள், முதுகு தட்டி உற்சாகம் ஏற்படுத்திய சில பாராட்டுகள், சொல்ல தெரியாத காரணங்களுக்காக மனதை பாதித்த சில காட்சிகள்.. மகிழ்ச்சி, வேதனை, சந்தோசம், பிரிவு, வருத்தம், உற்சாகம், குதூகலம், ஏமாற்றம், அழுகை, ஆனந்த கண்ணீர் இப்படி எல்லாம் கலந்த கலவையாகவே அமைந்திருந்தது இந்த வருடம்..
வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் இத்தகைய தருணங்கள் எப்போதும் எனக்கு கற்று கொடுக்கும் பாடமென்னவென்றால், வாழ்வின் ஏற்றங்களை எவ்வாறு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அதே போல வாழ்வின் கடினமான கணங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டுமென்பது தான். ஏற்ற இறக்கங்கள் கலந்தது தானே வாழ்க்கை.
வாழ்வில் மகிழ்ச்சியான நிமிடங்களையும் வெற்றிகரமான நிகழ்வுகளையும் சந்தோசமாக வரவேற்கும் மனிதன், சோகமொன்று வந்துவிட்டால் "இது ஏன் எனக்கு வருகிற"தென்று நொந்து கொள்கிறான்.. நல்ல விஷயங்கள் நடக்கும் போது, "இது ஏன் எனக்கு நடக்கின்றது.." என்று அவனுக்கு கேட்க தோன்றுவதில்லை. தீயவை நடக்கும் போது தான் அத்தகைய கேள்விகள் அவனுள் எழுகின்றன.
ஏற்றங்களை எவ்வளவு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் இறக்கங்களை மகிழ்வுடன் ஏற்று கொள்ள இயலாது என்றாலும், முடிந்தவரை அவற்றை எளிதாக எடுத்து கொள்ளவும், மனம் பெரிய அளவில் அவற்றால் பாதிக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இறக்கங்கள் என்றும் வீழ்ச்சியாகவே இருந்து விடப் போவதில்லை.. வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால் அதை விட வேறென்ன வேண்டும் மனிதனுக்கு.
நமக்கான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளை முடிந்தவரை எடுப்போம். ஆனால் அதே சமயத்தில், சில சூழ்நிலைகளால் ஏற்படும் கால தாமதங்களையும், சிற்சில ஏமாற்றங்களையும், வாழ்வின் ஏற்ற தாழ்வுகளையும், கடலின் அலைகளை ரசிப்பது போன்று எளிதாக எடுத்து கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.. வாழ்வின் இருண்ட பக்கங்களில் பயணிக்க நேரும் தருணங்களில், "என் வாழ்க்கை அவ்வளவு தான்.." என்று நீங்களே உங்களுக்கு முடிவுரைகளை எழுதிக் கொள்ளாதீர்கள். சில நேரங்களில் வாழ்க்கையை அதன் போக்கிலும் விட்டு கொடுங்கள்.. எதிர்பார்த்த காரியம் சில நேரங்களில் நிகழாமல் போனாலும், வாழ்க்கை உங்களுகென்று சுவாரசியமான, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய சில விசயங்களை வைத்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அது உண்மையும் கூட.. எனவே தைரியமாக முன்னோக்கி நகருங்கள்.. வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்.. சில நேரங்களில் உங்கள் விருப்பப்படியும், சில நேரங்களில் அதன் போக்கிலும்..
எல்லோருக்கும் பண்டிகை கால நல்வாழ்த்துக்கள்.. :-)

Wednesday, December 23, 2009
உரையாடி உறவாட சில நிமிடங்கள்..
அறிவுரைகள் சொல்லப்படும் சமயங்களில், அதை கேட்பதற்கு பெரும்பாலும் நாம் தயாராக இருப்பதில்லை. "இவன்(ள்) வேற.. எப்போ பாத்தாலும் ஏதாச்சும் சொல்லிட்டே.." என்று எண்ணுவது மனிதனின் இயல்பாகிவிட்டது. எண்ணுவதோடு மட்டுமல்லாமல், சொல்வதை நிராகரிக்கும் நோக்கத்திலேயே அதை வேண்டா வெறுப்பாக கவனிப்பதை போல நடிப்பவர்களும் உண்டு..
அதே சமயத்தில், அறிவுரைகள் சொல்லப்படும் விதம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும் போது, அதற்கு செவி கொடுக்க வேண்டுமென்கிற எண்ணமும், "நாம் இதை செய்துப் பார்த்தால் என்ன.." என்றும் தோன்றுவதுண்டு.. சில நாட்களுக்கு முன்பு எனது நண்பன் அனுப்பி இருந்த மின்னஞ்சலில் (a forward email) எழுத்தாளர் சுஜாதாவின் சில வரிகளைப் படித்த போது, "அடடே இது நல்லா இருக்கே.. இனிமே இத கொஞ்சம் கான்சியஸ்-ஆ (conscious) பாலோ (follow) பண்ணனும்"னு தோன்றியது. என்னவோ தெரியவில்லை, அவர் சொல்லியிருந்த விதம் பிடித்திருந்தது. அந்த வரிகள் இதோ:
"படுக்கப் போகும் முன் பத்து நிமிசமாவது அம்மா, அப்பா, அண்ணா, தங்கை-னு யாருடனாவது பேசவும்.. ஏதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்தது அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா.. சப்ஜெக்ட் முக்கியமில்லை.. பேசுவது தான்"
இதுவரையில் பின்பற்றாத ஒரு விசயமெல்லாம் இல்லை இது. மனதிற்கு தோன்றாமலேயே பல நேரங்களில் செய்ததுண்டு.. ஆனால் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று என்றும் நினைத்ததில்லை. மிகுந்த அலைச்சல் அல்லது நிறைய வேலை பளுவின் காரணமாக அசதியாக இருக்கும் நாட்களிலும், மனதை வேதனைப்படுத்தும் விதமாக ஏதாவது நடக்கும் நாட்களிலும், மொழிபெயர்க்க முடியாத காரணங்களுக்காக மனம் தனிமையை தேடும் கணங்களிலும் வீட்டில் உள்ளவர்களுடன் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பேச வேண்டுமென்று பெரிதாக தோன்றியதில்லை.
அன்றைய தினத்தில் என்ன தான் நடந்திருந்தாலும், படுக்க போகும் முன்பு, நல்லதாகவோ நக்கலாகவோ (நக்கலாக என்று நான் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாத, எல்லோர் முகத்திலும் சிரிப்பை வரவழைத்து, வயிறை மட்டுமே வலிக்க வைக்க கூடிய நகைசுவை கலந்த பேச்சை) நான்கு வார்த்தைகள் மனதிற்கு இதமாக பேசிவிட்டு, கொஞ்சம் சிரித்து விட்டு, கூடி ஒன்றாக இருப்பதன் சுகத்தை உணர்த்து, பின் உறங்க செல்லும் போது வாழ்வின் ஒரு பகுதியை நாம் நிஜமாகவே வாழ்கிற உணர்வு ஏற்படுமென்பது உண்மை. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்பதால் தான் இதை சொல்கிறேன்..
இப்போதெல்லாம் நான் வீட்டில் இருக்கும் சமயங்களில், பெரும்பாலும் தொலைகாட்சி பார்ப்பதில்லை. அக்காக்களுடனும் அம்மாவுடனும் அரட்டை அடித்துக் கொண்டு, மீண்டும் சிறுவர்களைப் போல பொழுதை போக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றேன்.. இருக்கின்ற கொஞ்ச காலங்களில் வாழ்க்கையை வாழாமல் தொலைகாட்சி முன்பும் கணினி முன்பும் எனது நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை.. சிறு குழந்தைகளாக உடலளவில் மாற முடியாவிட்டாலும், மனதளவில் முடிந்த வரை மாறி, உடனிருப்பவர்களுடன் நிமிடங்களை பகிர்ந்து, உறவாடி, நகைசுவைத்து அன்பு பரிமாறும் போது, 'இப்படியே இந்த கணங்கள் உறைந்து விட கூடாதா..' என்னும் ஒரு பேராசை கூட தோன்றுவதுண்டு.. அவ்வாறான கணங்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்த கூடியவை. அதுவும் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுடன் பத்து நிமிடமாவது பேசினோமென்றால், அதை விட அவர்களுக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது.
இதெல்லாம் பல நேரங்களில் அனுபவித்து உணர்ந்ததாலோ என்னவோ, படித்தவுடன் பிடித்து விட்டது அந்த அறிவுரை.. இனி என்ன தான் அன்றைய தினத்தில் நடந்தாலும், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இருப்பவர்களுடன் கலகலவென்று கொஞ்ச நேரமாவது பேசுவதை அவ்வப்போது வரும் பண்டிகையை போன்றில்லாமல், ஒரு பழக்கமாக எப்போதுமே செய்ய முயல வேண்டுமென்று அந்த வரிகளை படித்த போது தோன்றியது.. இதை படித்தவுடன் உங்களுக்கும் அது தோன்றியதென்றால் அதை விட வேறன்ன வேண்டும் எனக்கு.. :-)
Saturday, December 19, 2009
இன்னும் சில சிந்தனைகள்..
உறவுகளில் சண்டைகளை தவிர்க்க முடியாது என்று யாராவது சொல்லும் வேளைகளில், எனக்குள் எழும் முதல் கேள்வி, 'புரிந்து கொள்ளுதல்கள் சரியாக இருந்தால், சண்டை ஏன் வருகிற'தென்பது தான்.. நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமில்லையென்று தெரிந்தாலும் அத்தகைய வினாவை உள்ளுக்குள் எழுப்புவதற்கு என் மனம் தயங்குவதில்லை.. ஒருவேளை, 'புரிந்து கொள்ளுதல்கள் எப்போதுமே சரியாக அமைந்து மன வருத்தங்களே ஏற்படாத வகையிலான ஒரு உறவு அமையாதா..?' என்கிற ஏக்கத்தின் ஆதங்கமாக கூட அது இருக்கலாம்.. இரு மனிதர்கள், இரு மனங்கள், இரு வேறு சிந்தனைகள், வெவ்வேறான எதிர்பார்ப்புகள்.. இப்படி இருக்கும் போது, கருத்து வேறுபாடுகள் வராமல் எப்போதுமே எப்படி பார்த்துக் கொள்ள முடியும்.
'அவன்/அவள் அப்படி தான்..' என்று மனதை என்ன தான் தயார்படுத்தி வைத்திருந்தாலும் வாக்குவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கையாளுதல் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சிறிய சண்டைகள் உறவுகளை இன்னும் நெருக்கமாக்கும் என்றாலும், சில நேரங்களில் பெரிய அளவிலான மன வருத்தங்களை ஏற்படுத்தும் சில சண்டைகளும் வேறுபட்ட கருத்து பற்றிய வாக்குவாதங்களும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
அனல் பறக்கும் வார்த்தைகள் வெளிவர தொடங்கும் கணங்களிலும், மனதின் உணர்ச்சிகள் வேகமாக கோபம் கொள்ள தொடங்கும் கணங்களிலும் முடிந்த வரை பொறுமை காத்து, வார்த்தைகளை வெளியிடாமல், மௌனம் கொண்டு, மனதை சாந்தப்படுத்தி, அதே நிகழ்வை வேறொரு கோணத்தில் இருந்து அசைப்போட்டு, அப்படியும் அது மனதை திருப்திப்படுத்தாத கணங்களில் தான் மனதில் பட்டதை பேசும் பழக்கம் எனக்கிருந்தாலும், சில நேரங்களில் அவ்வாறான பொறுமை கலந்த பண்பு கை நழுவிப் போய்விடுகின்றது. 'நான் சரி.. நீ தவறு..' என்னும் எண்ணம் மேலோங்கி விடுகின்றது. அத்தகைய எண்ணத்தின் அடிப்படையிலான சிந்தனைகளே பெரும்பாலான நேரங்களில் கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட இடைவெளியை அதிகமாக்குகின்றன.
வாழ்வில் நான் கற்று கொண்ட உண்மைகளில் ஒன்று என்னவென்றால், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயங்களில், 'நான்.. எனது கருத்து.. என் பக்க நியாயங்கள்..' என்று யோசிப்பதை தவிர்த்து, 'அவன்/அவள்.. அவரது கருத்து.. அவர் பக்க நியாயங்கள்..' என்பதன் அடிப்படையில் சிந்திப்பதே கருத்து வேறுபாட்டின் வீரியத்தை குறைக்க உதவுகின்றது. நமது பக்க நியாயங்களை பற்றிய சிந்தனைகள் உள்ளுக்குள் ஒரு எதிர்நடை நோக்கம் கலந்த பார்வையை (defensive approach) ஏற்படுத்தி விடுகின்றன. அது பிரச்சனையை தீர்க்க என்றும் உதவுவதில்லை.. மாறாக பிரச்சனை பெரிதாகவே வாய்ப்புகள் அதிகம். அடுத்தவர் பக்க நியாயங்கள் பற்றி யோசிக்கும் போது, அவர்களது நியாயம் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்கி புரிய வைப்பது மிக எளிதான காரியமாகி விடுகின்றது.
சண்டைகளிலும் வாக்குவாதங்களிலும், 'நான் சரி' என்பதை நிரூபிக்க எடுக்கும் முயற்சிகள் மனங்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக தனிமைப்படுத்தவே செய்கின்றன. பலர் மன்னிப்பு கோர்தலையும் வருத்தம் தெரிவிப்பதையும், 'நான் செய்தது/சொல்லியது தவறு..' என்று ஒப்புக் கொண்டதாகவே கருதுகின்றனர். ஆனால் பல நேரங்களில் உண்மை அதுவன்று. சில நாட்களுக்கு முன்பு யாரோ எழுதி எங்கோ நான் படித்த ஒரு மேற்கோள் சொல்கிறேன்:
"வருத்தம் தெரிவிப்பதும் மன்னிப்பு கோர்வதும் 'நீ சரி.. நான் தவறு..' என்பதாகி விடாது. எனது அகங்காரத்தை (ego) விட நமது உறவை நான் மிகவும் பெரிதாக மதிக்கிறேன் என்பதே அதன் பொருள்.." [ Apologizing doesn't mean that 'you are right and i'm wrong'.. It just means that I respect our relationship more than my ego.. ]
தன் மேல் தவறில்லையென்றாலும் சிலர் நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு காரணம் இது தான். அதே சமயத்தில் இதை வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, உங்களிடம் நெருக்கமாக பழகும் மனிதர்கள் சில நேரங்களில் சண்டையின் போது சட்டென்று வருத்தம் தெரிவிப்பதால் உடனே நீங்கள் செய்தது சரியென்று ஆகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.. உறவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் என்பது மிகவும் அவசியமாகி விடுகின்றது. அவ்வாறு விட்டுக் கொடுத்தல் என்பது பொருளளவில் மட்டுமல்ல உணர்வளவிலும் கருத்துகளிலும் தான்.
Saturday, December 12, 2009
இரு பறவைகள்! ஒரு காதல்!!
அழகான கவிதையொன்று
எழுதி நெடுநாளாகி விட்டதென்று
மனதினுள் சிந்தனை கொண்டு,
எண்ணங்கள் நிலைத்திருக்க
கண்கள் வான் வெறித்திருக்க
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்..
சட்டென்று சலனம் கேட்டு
மெதுவாய் திரும்பி பார்க்கையிலே,
ஆங்கே கிளிகள் இரண்டு
மாமரத்தின் கிளைகளிலே
பார்வைக்கெட்டும் தூரத்திலே
கொஞ்சி காதல் பரிமாறும்
காட்சியொன்று கண்முன் கண்டேன்..
உள்ளுக்குள் உவகை கொண்டேன்..
கொஞ்சி குலாவிய படி
மாம்பழமொன்றை மெதுவாய் கொத்தி
அவைகளுக்குள் பகிர்ந்துண்ணும் அழகில்
மெல்ல என் இதயம் இழந்தேன்..
இனம் புரியா ஆனந்தம் கொண்டேன்..
மெதுவாய் சில முத்தங்கள்..
அருகாமையின் தீண்டல்கள்..
அன்பின் பரிமாறல்கள்..
இவைகளைக் கண்டபோது
நானுமொரு பறவையாய்
பிறந்திருக்கலாமே என்று
உள்ளுக்குள் ஓர் ஆசை கொண்டேன்..
கண்களில் நீர்த்துளிகள் பெற்றேன்..
தலைக்கு மேல் சற்று தொலைவில்
சுதந்திரமாய் இங்குமங்கும்
பறந்து திரியும் பறவைகளிடம்
சாதியில்லை மதமுமில்லை..
குலம் கோத்திரமெனும்
பேதமில்லை..
எல்லைகளோ தூரங்களோ
அவைகளுக்கு ஒரு பொருட்டுமில்லை..
பொங்கியெழும் அன்பையும்
நெஞ்சம் தொட்ட காதலையும்
நெஞ்சம் தொட்ட காதலையும்
விரும்பியவருடன் பகிர்ந்து கொள்ள
தடைகள் என்றெதுவுமில்லை..
பறவைகளாய் பிறந்திருந்தால்
நானும் அவளும் அருகருகில்
இந்நேரம் இருந்திருப்போமே..
நானும் அவளும் அருகருகில்
இந்நேரம் இருந்திருப்போமே..
அன்பு பரிமாறி
அருகாமையின் சுகம் பெற்று
ஆனந்தம் கொண்டிருப்போமே..
ஆனந்தம் கொண்டிருப்போமே..
சின்னதாய் சில இறக்கைகள்
இல்லாததன் காரணமாய்
பூமியில் நடக்கும் சாபம் பெற்றோம்..
மடத்தனமான மானிட கொள்கைகளுக்கு
நாங்களும் இரையாகிப் போனோம்..
பறவைகளாய் இனம் மாற
விலையொன்று உண்டென்றால்
எப்பாடு பட்டாகிலும்
அவ்வரம் பெற்றே தீர்வேன்..
அப்போதாவது நாங்களிருவரும்
அருகருகே இருக்கவியலுமே!!
Friday, December 11, 2009
நீர்க்குமிழிகள்...
என்ன தான் மறக்க முயன்றாலும், சில எண்ணங்கள் மீண்டும் மீண்டும் இடைவிடாது கரை சீண்டும் அலைகளைப் போன்று மனதை அரித்த வண்ணமே உள்ளன. மறக்க தான் முடியவில்லை, மறைத்தாவது வைக்கலாமென்றால் அதுவும் முடிவதில்லை. ஞாபக செல்களில், சில நிகழ்வுகளும் அவை சார்ந்த நினைவுகளும் கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களைப் போன்று அழுத்தமாக பதிந்து விடுகின்றன.
மனதினுள் வலி ஏற்படுத்தும் அத்தகைய ஞாபகங்களை அகற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள், தெரியாமல் மை குப்பியை சாய்த்து உடல் முழுதும் ஊற்றி, பின் குற்ற உணர்ச்சி கொண்டு அதனை உடம்பிலிருந்து அழிக்க முயன்று தோற்றுப் போன மனநிலையுடன், என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழிக்கும் சிறு குழந்தையின் நிலைக்கு தான் மனிதனை எப்போதும் எடுத்து செல்கின்றன .
'ஏன் அவளை/அவனை சந்தித்தேன்.. ஏன் அந்த செயலை செய்தேன்.. நான் ஏன் அங்கே சென்றேன்.. எதற்காக அந்த இடத்தில் நான் வாய் திறந்தேன். நானெப்படி அது நிகழ்வதற்கு என் வாழ்வில் இடம் கொடுத்தேன்..' இன்னும் எத்தனையோ கேள்விகள் பலரது உள்ளத்தில் எப்போதும் நீர்க்குமிழிகளைப் போன்று மேலெழுந்து வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. மனித வாழ்க்கையை பின்னோக்கி இயக்கி (playback), மீண்டும் வாழும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனையோ முறை நான் நினைத்ததுண்டு. அப்படியொரு வாய்ப்பிருந்தால், பல செயல்களை திருத்தி செய்யவும், நெஞ்சை சுடும் சில நிகழ்வுகளை தவிர்த்திருக்கவும், வலி ஏற்படுத்தும் சிலரை சந்தித்திராமல் வேறு வழியில் சென்றிருக்கவும் முடியுமே..
ஆனால் வாழ்க்கை நமக்களித்திருப்பதோ வெறும் எழுதுகோல் (pen) மட்டுமே.. எழுதியதை திருத்துவதற்கு அழிப்பான் (rubber) யாருக்குமே வழங்கப்படுவதில்லை. சொல்லி விட்ட வார்த்தைகள், செய்து விட்ட செயல்கள், மனதினுள் புகுந்த சிந்தனைகள், பார்வையில் பதிந்த முகங்கள், பழக்கத்தால் ஏற்பட்ட உணர்வுகள், புரியாமல் செய்து விட்ட தலையசைப்புகள், அறியாமல் எடுத்து வைத்துவிட்ட காலடிகள், நடந்தேற அனுமதித்து விட்ட நிகழ்வுகள் என்று எதையுமே திருத்தி அமைக்கும் வாய்ப்பு மனிதனுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வாறு நடந்தவைகளின் விளைவுகளும் அவை சார்ந்த வலிகளும், உணர்வுகளும் உடலுடன் ஒட்டிக் கொண்டே வரும் நிழலைப் போல என்றும் மனதினுள் நிரந்தர இடம் பிடித்து, அவ்வப்போது 'நானிருக்கிறேன்..' என்று கைகளை உயர்த்தி நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன.
நாம் ஆறி விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் காயங்களின் தழும்புகளை மேற்புறம் மெல்ல கீறி, மீண்டும் அதே வலியை ஏற்படுத்தும் சக்தி பல கடந்த கால ஞாபகங்களுக்கு அதிகம்.. உண்மை என்னவென்றால், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்பட்ட பல காயங்கள் என்றும் ஆறுவதே இல்லை.. மேற்புறம் தழும்புகளாக மாறியிருந்தாலும் உள்ளே காயத்தின் சுவடுகளோ அப்படியே தான் இருக்கின்றன. வலி ஏற்படுத்தும் அத்தகைய நினைவுகளை கிடப்பில் போட என்ன தான் முயன்றாலும், அவை திரும்ப திரும்ப வந்து மனக் கதவை தட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் கதவை திறந்து பார்த்துவிட்டு, 'ஓ!! நீ தானா..' என்று கதவை அடைத்து விட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்த முயன்றாலும், அவை கொஞ்சம் கூட சளைக்காமல் திரும்பவும் மனக் கதவை தட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. காலப்போக்கில் அவற்றை கண்டுக் கொள்ளாமல் புறக்கணிக்க (ignore) கற்றுக் கொள்ளலாமே தவிர அவற்றை முழுவதுமாக மனதிலிருந்து தகர்த்தெறிய முடிவதில்லை.
மீண்டும் மீண்டும் தலை காட்டும் அத்தகைய ஞாபகங்களை, வாழ்வில் செய்த தவறை திரும்ப செய்யாதிருக்க விடுக்கும் எச்சரிக்கையாகவே நான் எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு விதத்தில் அவ்வாறான நினைவூட்டுதல் அவசியமென்றும் நான் கருதுவதுண்டு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 'ஞாபகங்கள் இங்கே அழிக்கப்படும்' என்னும் அறிவிப்பு பலகையோடு கடையொன்று திறக்கப்பட்டால், உலகின் அத்தனை மனிதர்களும் அங்கே வரிசையில் நிற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Saturday, December 5, 2009
காட்சிகளும் அதன் பதிவுகளும்..
காணும் காட்சியும், கண்களுக்குள் விழும் அதன் பதிவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காட்சியின் பதிவானது எப்போதும் காட்சியைப் பொறுத்ததாக அல்லாமல், கண்களைப் பொறுத்ததாகவும், கண்களுக்கு பின்னால் மனம் கொள்ளும் கற்பனையைப் பொறுத்ததாகவுமே அமைகின்றது. மனதினுள் நடக்கும் கடந்த கால நிகழ்வுகளின் உணர்வுப் போராட்டங்களும், அவற்றின் பாதிப்புகளும், பல நேரங்களில் கண் முன் நிகழும் காட்சியின் பதிவையும் பாதிக்கின்றது. அவை ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமில்லையென்றாலும், கற்பனை உலகத்தின் துணைக் கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்திப் பார்க்கவே துடிக்கின்றது மனம். அதனால் தான், பல நேரங்களில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ஒன்றாக இருப்பினும், உள்வாங்கப்படும் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.. செய்யும் செயலின் நோக்கம் ஒன்றாக இருக்க, அதன் விளைவு வேறொன்றாக இருகின்றது..
வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாக புரிந்துக் கொள்ளப்படும் தருணங்களில், தனது புரிந்து கொள்ளுதல்களை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் அவரவர் சிந்தனைக்கேற்ப மனதிற்குள்ளேயே அவற்றை அசைபோடுவது தான் பெரும்பாலும் குழப்பங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் காரணமாக அமைகின்றது. சில நேரங்களில் அது பிரிவிலும் கூட போய் முடிவதுண்டு.
எவ்வளவு தான் நம்மால் மற்றவர் நிலை அறிந்து, அவர் நோக்கில் நடந்தவைகளை அணுகும் மனமிருந்தாலும், ஒரு சிறு நூலிழை தவறாவது புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்டு விடுவதற்கு சாத்தியமுண்டு. சுய உணர்வுடனான பார்வை கொண்டு சிந்திக்கும் மனதை பொது உணர்வு நிலைக்கு கொண்டு செல்லுதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் சில விஷயங்கள் நமது உணர்வுகளை நேராக பாதிக்கும் போது, அவற்றை வேறு கண் கொண்டு பார்க்க வேண்டுமென்று கூட நம் மனதிற்கு பெரும்பாலும் தோன்றுவதில்லை..
மற்றவர் செயல்பாடுகளோ வார்த்தைகளோ மனதை பாதிக்கும் போது, மௌனமே பலரின் மறுமொழியாக இருகின்றது. அப்படிப்பட்ட கணங்களில், அவ்வாறு நடந்ததற்கான விளக்கங்களை வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ளாமல், கற்பனை உலகத்தில், தனக்கான நியாய தர்மங்களைக் கொண்டு மனதிற்குள்ளேயே அவற்றை ஆராய முயற்சிக்கின்றது மனம்.
நெருக்கமான உறவுகளில் இது அடிக்கடி நிகழ்வதும் உண்டு. 'இவ்வளவு நெருக்கமாக பழகியும் அவன்/அவள் எப்படி அவ்வாறு சொல்லலாம் அல்லது செய்யலாம்..' என்று ஆதங்கம் கொள்ளும் மனமோ, 'இவ்வளவு நெருக்கமாக பழகிய அவன்/அவள் அப்படி சொல்ல அல்லது செய்ய என்ன காரணமிருக்கலாம்..?' என்று சிந்திக்க சில நேரங்களில் தவறி விடுவதுண்டு. நடந்தவைகளின் பாதிப்புகளை பற்றி கலந்துரையாடவும், அவற்றிற்கான காரணத்தை கண்டறியவும் நாம் பெரும்பாலும் முயற்சி எடுப்பதில்லை.
பல நேரங்களில் இத்தகைய யூகத்தின் அடிப்படையிலான சிந்தனை, 'அந்த கட்டிடம் வெள்ளை வண்ணம் கொண்டு நிறமூட்டப்பட்டிருகின்றது (paint)..' என்று சொல்பவரிடம், 'இல்லை.. அது சிவப்பு வண்ணம் கொண்டே நிறமூட்டப்பட்டிருகின்றது..' என்று யோசிக்காமல் அடித்து சொல்வதை போன்றது தான். அவர் கட்டிடத்தின் முன்புறமிருந்து பார்த்திருக்க, நீங்கள் கட்டிடத்தின் பின்புறமிருந்து பார்த்திருக்கலாமல்லவா.. முன்புறம் வெள்ளை வண்ணம் கொண்டும், பின்புறம் சிவப்பு வண்ணம் கொண்டும் நிறமூட்டப்பட்டிருக்கலாமல்லவா.. 'நீ எந்த பக்கமிருந்து பார்த்தாய்?' என்று கேட்பதற்கு பல நேரங்களில் நாம் தவறிவிடுகின்றோம்.
கற்பனை அழகு தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. தனக்கான கருத்துக்களை கொண்டிருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் பிறர் தரப்பின் எண்ணங்களையும் கேட்டறிந்துக் கொள்ள தயாராக இருப்பதென்பது மிக முக்கியம். நமது உள்ளுணர்வுகளுக்கு மட்டுமல்லாது, பிறர் சொல்வதற்கும் செவி கொடுப்போமே.
நமது புரிந்து கொள்ளுதல் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கொள்ளும் ஆரோக்கியமான விவாதங்களும், கலந்துரையாடல்களும் எப்போதுமே நல்லது தான். அது உறவுகளில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளும்.

Wednesday, December 2, 2009
இலக்குகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை..
அது ஏனென்று தெரியவில்லை!! நன்றாக பழகி, உள்ளுக்குள் ஒரு நட்புணர்வை ஏற்படுத்தி, 'இனி பயணம் சுவாரசியமாக இருக்கும்' என்றெண்ண வைத்து, மனமானது மகிழ்ச்சியில் பூரிக்க தயாராகும் போது தான் பலர் நம்மிடமிருந்து விடைபெறுகின்றனர். வாழ்வின் பயணத்தில் நமது இலக்கை அடையும் வரை கூடவே வரும் சக பயணியை அவ்வளவு எளிதாக சந்திக்க முடிவதில்லை. வாழ்கையே ஒரு பயணம் தானென்றாலும் எல்லோருடைய இலக்குகளும், அவர்கள் செல்ல வேண்டிய திசைகளும் ஒன்றாக இருப்பதில்லை. பயணத்தின் இடையில் திடீரென்று அறிமுகமாகும் சிலர், பின்னர் பாதி வழியிலேயே விடை பெற்று, அவரவர் பாதையில் சென்று விடுகின்றனர். நாமோ மீண்டும் அறிமுகமில்லாத முகங்களுடன் பயணத்தை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.
பிரிவினை தவிர்க்க என்ன தான் முயன்றாலும், பலருக்கு தனது இலக்கை விடுத்து வேறொரு திசையில் பயணிக்க மனம் சம்மதிப்பதில்லை. அதற்கான சுதந்திரத்தையோ அல்லது வாய்ப்பையோ வாழ்க்கை அவர்களுக்கு வழங்குவதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கான இலக்கு குறித்த திசையில் செய்ய வேண்டிய சில பணிகள் காத்துக் கிடக்கின்றன. எனவே நினைத்த நேரத்தில் விரும்பியவாறு சில முடிவுகளை அவர்களால் எடுக்க முடிவதில்லை. ஆனால், 'என் வாழ்வில் இணைந்து என்னோடு வந்து விடு..' என்று தன்னுடன் பழகியவர்களிடம் அவர்கள் விடுக்கும் அழைப்பானது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது. அறிமுகமில்லாத முகங்களுடன் பயணிக்க பயந்து, அத்தகைய அழைப்பை ஏற்று சிலர் தான் செல்ல வேண்டிய பாதையை மாற்றி, அவர்களுடன் இணைந்தும் கொள்கின்றனர்.
ஆனால் வேறு சிலரின் வாழ்க்கையோ சற்று கடினமானது. 'என்னை அழைத்து செல்லுங்கள்.. நானும் உங்களுடன் வருகிறேன்', என்று தானே முன்வந்து கூறினாலும், இவர்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடன் நெருங்கி பழகியவர்களோ, 'எனது வாழ்வில் நீ இடம் பெறுவது கடினம்', என்று எளிதாக சொல்லி நிராகரித்து விடுகின்றனர்.
பிரிவை நினைத்து இவ்வாறாக சிலர் கலங்க, இவர்களைப் பிரிந்தவர்களோ அதைப் பற்றிய எந்தவித உணர்ச்சியுமின்றி, 'நான் போய் வருகிறேன்' என்று விடைப் பெற்று, அவர்களது வழியில் சென்று விடுகின்றனர். அவர்களுக்கு பிரிவை பற்றி சிந்திக்கவோ, மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படவோ நேரமில்லை. அவர்களுக்குண்டான வாழ்விலும், போய் சேர வேண்டிய பாதையிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 'நான் உன்னுடன் கூடவே வருவேனென்று எதற்காக நீ கனவு கண்டுக் கொண்டிருக்கிறாய்.. விழித்து கொள்.. இதோ நிஜ உலகம்.. சந்தித்துக் கொள்!! நான் போய் வருகிறேன்', என்று எளிதாக சொல்லி, புன்னகையோடு கையசைத்து, மிக வேகமாக பார்வையிலிருந்து விலகிவிடுகின்றனர்.
ஆனால், 'இவர்' தன்னுடன் கடைசி வரை வருவார் என்று கனவுகளில் கோட்டை கட்டிய இவர்களோ, தம்முடன் பழகியவர்களைப் பிரிந்து வேறு வழியில் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். நன்றாக பழகி, திடீரென்று சென்றுவிட்டவர்களின் பிரிவு, உணர்வளவில் பலவீனமான இத்தகைய மனிதர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றது. அவ்வாறான கணங்களில், ஏமாற்றம் கலந்த குழப்ப நிலையுடன் எந்த திசையிலும் செல்ல தோன்றாமல் தற்காலிகமாக அந்த இடத்திலேயே நின்றும் விடுகின்றனர்.
பிரிந்து சென்றவர் என்றாவது திரும்பி வந்தால், மீண்டும் அவருடன் இணைந்து தமது பயணத்தை தொடரலாமென்று ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் கால வரையற்று காத்திருக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆனால் உண்மையோ பல நேரங்களில் கசப்பானது.. ஏற்றுக் கொள்ள இயலாதது.. வேதனையை தரக் கூடியது.. மனதை காயப்படுத்தக் கூடியது.. பிரிந்து சென்றவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவதே இல்லை. அவர்கள் தம்முடன் அறிமுகமாகும் வேறு எவருடனோ மகிழ்ச்சியுடன் அவர்களது இலக்கின் திசையில், எந்தவித பின்னோக்கிய பார்வையுமின்றி பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
அதை புரிந்துக் கொண்டவர்கள், காத்திருந்தது போதுமென்று மீண்டும் பயணத்தை தொடர்கின்றனர். சிலருக்கோ அது புரியும் கணங்களில் அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தமது பயணத்தை அவ்விடத்திலேயே முடித்துக் கொள்ளவும் முயல்கின்றனர். ஆனால் இத்தகைய மனிதர்கள் அறிந்துக் கொள்ளாத ஒரு உண்மையென்னவென்றால், இவர்கள் செல்ல வேண்டிய திசையிலேயே இன்னும் சில மைல்களுக்கு அப்பால் இவர்களுடன் பயணத்தில் இணைந்து, வாழ்க்கையை சுவாரசியமாக்கி, பயணத்தை இலகுவாக்கி, கிட்டத்தட்ட இவர்களது இலக்கு வரை கூடவே வருவதற்கும் தயாராக பயணியொருவர் காத்திருக்கிறார் என்பது தான். பலர் அவ்வாறானதொரு பயணியை சந்திக்கும் வரை பொறுமையுடன் தமது திசையில் செல்ல தயாராக இல்லையென்பது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
குறிப்பு: பாத்தோம், படிச்சோம், போனோம்னு இல்லாம ஏதாச்சும் சொல்லிட்டு போங்க :-)

Subscribe to:
Comments (Atom)