காணும் காட்சியும், கண்களுக்குள் விழும் அதன் பதிவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காட்சியின் பதிவானது எப்போதும் காட்சியைப் பொறுத்ததாக அல்லாமல், கண்களைப் பொறுத்ததாகவும், கண்களுக்கு பின்னால் மனம் கொள்ளும் கற்பனையைப் பொறுத்ததாகவுமே அமைகின்றது. மனதினுள் நடக்கும் கடந்த கால நிகழ்வுகளின் உணர்வுப் போராட்டங்களும், அவற்றின் பாதிப்புகளும், பல நேரங்களில் கண் முன் நிகழும் காட்சியின் பதிவையும் பாதிக்கின்றது. அவை ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமில்லையென்றாலும், கற்பனை உலகத்தின் துணைக் கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்திப் பார்க்கவே துடிக்கின்றது மனம். அதனால் தான், பல நேரங்களில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ஒன்றாக இருப்பினும், உள்வாங்கப்படும் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.. செய்யும் செயலின் நோக்கம் ஒன்றாக இருக்க, அதன் விளைவு வேறொன்றாக இருகின்றது..
வாழ்வின் நிகழ்வுகள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாக புரிந்துக் கொள்ளப்படும் தருணங்களில், தனது புரிந்து கொள்ளுதல்களை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் அவரவர் சிந்தனைக்கேற்ப மனதிற்குள்ளேயே அவற்றை அசைபோடுவது தான் பெரும்பாலும் குழப்பங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் காரணமாக அமைகின்றது. சில நேரங்களில் அது பிரிவிலும் கூட போய் முடிவதுண்டு.
எவ்வளவு தான் நம்மால் மற்றவர் நிலை அறிந்து, அவர் நோக்கில் நடந்தவைகளை அணுகும் மனமிருந்தாலும், ஒரு சிறு நூலிழை தவறாவது புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்டு விடுவதற்கு சாத்தியமுண்டு. சுய உணர்வுடனான பார்வை கொண்டு சிந்திக்கும் மனதை பொது உணர்வு நிலைக்கு கொண்டு செல்லுதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் சில விஷயங்கள் நமது உணர்வுகளை நேராக பாதிக்கும் போது, அவற்றை வேறு கண் கொண்டு பார்க்க வேண்டுமென்று கூட நம் மனதிற்கு பெரும்பாலும் தோன்றுவதில்லை..
மற்றவர் செயல்பாடுகளோ வார்த்தைகளோ மனதை பாதிக்கும் போது, மௌனமே பலரின் மறுமொழியாக இருகின்றது. அப்படிப்பட்ட கணங்களில், அவ்வாறு நடந்ததற்கான விளக்கங்களை வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ளாமல், கற்பனை உலகத்தில், தனக்கான நியாய தர்மங்களைக் கொண்டு மனதிற்குள்ளேயே அவற்றை ஆராய முயற்சிக்கின்றது மனம்.
நெருக்கமான உறவுகளில் இது அடிக்கடி நிகழ்வதும் உண்டு. 'இவ்வளவு நெருக்கமாக பழகியும் அவன்/அவள் எப்படி அவ்வாறு சொல்லலாம் அல்லது செய்யலாம்..' என்று ஆதங்கம் கொள்ளும் மனமோ, 'இவ்வளவு நெருக்கமாக பழகிய அவன்/அவள் அப்படி சொல்ல அல்லது செய்ய என்ன காரணமிருக்கலாம்..?' என்று சிந்திக்க சில நேரங்களில் தவறி விடுவதுண்டு. நடந்தவைகளின் பாதிப்புகளை பற்றி கலந்துரையாடவும், அவற்றிற்கான காரணத்தை கண்டறியவும் நாம் பெரும்பாலும் முயற்சி எடுப்பதில்லை.
பல நேரங்களில் இத்தகைய யூகத்தின் அடிப்படையிலான சிந்தனை, 'அந்த கட்டிடம் வெள்ளை வண்ணம் கொண்டு நிறமூட்டப்பட்டிருகின்றது (paint)..' என்று சொல்பவரிடம், 'இல்லை.. அது சிவப்பு வண்ணம் கொண்டே நிறமூட்டப்பட்டிருகின்றது..' என்று யோசிக்காமல் அடித்து சொல்வதை போன்றது தான். அவர் கட்டிடத்தின் முன்புறமிருந்து பார்த்திருக்க, நீங்கள் கட்டிடத்தின் பின்புறமிருந்து பார்த்திருக்கலாமல்லவா.. முன்புறம் வெள்ளை வண்ணம் கொண்டும், பின்புறம் சிவப்பு வண்ணம் கொண்டும் நிறமூட்டப்பட்டிருக்கலாமல்லவா.. 'நீ எந்த பக்கமிருந்து பார்த்தாய்?' என்று கேட்பதற்கு பல நேரங்களில் நாம் தவறிவிடுகின்றோம்.
கற்பனை அழகு தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. தனக்கான கருத்துக்களை கொண்டிருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் பிறர் தரப்பின் எண்ணங்களையும் கேட்டறிந்துக் கொள்ள தயாராக இருப்பதென்பது மிக முக்கியம். நமது உள்ளுணர்வுகளுக்கு மட்டுமல்லாது, பிறர் சொல்வதற்கும் செவி கொடுப்போமே.
நமது புரிந்து கொள்ளுதல் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கொள்ளும் ஆரோக்கியமான விவாதங்களும், கலந்துரையாடல்களும் எப்போதுமே நல்லது தான். அது உறவுகளில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளும்.
No comments:
Post a Comment