Wednesday, December 23, 2009

உரையாடி உறவாட சில நிமிடங்கள்..

அறிவுரைகள் சொல்லப்படும் சமயங்களில், அதை கேட்பதற்கு பெரும்பாலும் நாம் தயாராக இருப்பதில்லை. "இவன்(ள்) வேற.. எப்போ பாத்தாலும் ஏதாச்சும் சொல்லிட்டே.." என்று எண்ணுவது மனிதனின் இயல்பாகிவிட்டது. எண்ணுவதோடு மட்டுமல்லாமல், சொல்வதை நிராகரிக்கும் நோக்கத்திலேயே அதை வேண்டா வெறுப்பாக கவனிப்பதை போல நடிப்பவர்களும் உண்டு..

அதே சமயத்தில், அறிவுரைகள் சொல்லப்படும் விதம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும் போது, அதற்கு செவி கொடுக்க வேண்டுமென்கிற எண்ணமும், "நாம் இதை செய்துப் பார்த்தால் என்ன.." என்றும் தோன்றுவதுண்டு.. சில நாட்களுக்கு முன்பு எனது நண்பன் அனுப்பி இருந்த மின்னஞ்சலில் (a forward email) எழுத்தாளர் சுஜாதாவின் சில வரிகளைப் படித்த போது, "அடடே இது நல்லா இருக்கே.. இனிமே இத கொஞ்சம் கான்சியஸ்-ஆ (conscious) பாலோ (follow) பண்ணனும்"னு தோன்றியது. என்னவோ தெரியவில்லை, அவர் சொல்லியிருந்த விதம் பிடித்திருந்தது. அந்த வரிகள் இதோ:

"படுக்கப் போகும் முன் பத்து நிமிசமாவது அம்மா, அப்பா, அண்ணா, தங்கை-னு யாருடனாவது பேசவும்.. ஏதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்தது அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா.. சப்ஜெக்ட் முக்கியமில்லை.. பேசுவது தான்"

இதுவரையில் பின்பற்றாத ஒரு விசயமெல்லாம் இல்லை இது. மனதிற்கு தோன்றாமலேயே பல நேரங்களில் செய்ததுண்டு.. ஆனால் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று என்றும் நினைத்ததில்லை. மிகுந்த அலைச்சல் அல்லது நிறைய வேலை பளுவின் காரணமாக அசதியாக இருக்கும் நாட்களிலும், மனதை வேதனைப்படுத்தும் விதமாக ஏதாவது நடக்கும் நாட்களிலும், மொழிபெயர்க்க முடியாத காரணங்களுக்காக மனம் தனிமையை தேடும் கணங்களிலும் வீட்டில் உள்ளவர்களுடன் கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பேச வேண்டுமென்று பெரிதாக தோன்றியதில்லை.

அன்றைய தினத்தில் என்ன தான் நடந்திருந்தாலும், படுக்க போகும் முன்பு, நல்லதாகவோ நக்கலாகவோ (நக்கலாக என்று நான் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாத, எல்லோர் முகத்திலும் சிரிப்பை வரவழைத்து, வயிறை மட்டுமே வலிக்க வைக்க கூடிய நகைசுவை கலந்த பேச்சை) நான்கு வார்த்தைகள் மனதிற்கு இதமாக பேசிவிட்டு, கொஞ்சம் சிரித்து விட்டு, கூடி ஒன்றாக இருப்பதன் சுகத்தை உணர்த்து, பின் உறங்க செல்லும் போது வாழ்வின் ஒரு பகுதியை நாம் நிஜமாகவே வாழ்கிற உணர்வு ஏற்படுமென்பது உண்மை. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்பதால் தான் இதை சொல்கிறேன்..

இப்போதெல்லாம் நான் வீட்டில் இருக்கும் சமயங்களில், பெரும்பாலும் தொலைகாட்சி பார்ப்பதில்லை. அக்காக்களுடனும் அம்மாவுடனும் அரட்டை அடித்துக் கொண்டு, மீண்டும் சிறுவர்களைப் போல பொழுதை போக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றேன்.. இருக்கின்ற கொஞ்ச காலங்களில் வாழ்க்கையை வாழாமல் தொலைகாட்சி முன்பும் கணினி முன்பும் எனது நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை.. சிறு குழந்தைகளாக உடலளவில் மாற முடியாவிட்டாலும், மனதளவில் முடிந்த வரை மாறி, உடனிருப்பவர்களுடன் நிமிடங்களை பகிர்ந்து, உறவாடி, நகைசுவைத்து அன்பு பரிமாறும் போது, 'இப்படியே இந்த கணங்கள் உறைந்து விட கூடாதா..' என்னும் ஒரு பேராசை கூட தோன்றுவதுண்டு.. அவ்வாறான கணங்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்த கூடியவை. அதுவும் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுடன் பத்து நிமிடமாவது பேசினோமென்றால், அதை விட அவர்களுக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது.

இதெல்லாம் பல நேரங்களில் அனுபவித்து உணர்ந்ததாலோ என்னவோ, படித்தவுடன் பிடித்து விட்டது அந்த அறிவுரை.. இனி என்ன தான் அன்றைய தினத்தில் நடந்தாலும், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இருப்பவர்களுடன் கலகலவென்று கொஞ்ச நேரமாவது பேசுவதை அவ்வப்போது வரும் பண்டிகையை போன்றில்லாமல், ஒரு பழக்கமாக எப்போதுமே செய்ய முயல வேண்டுமென்று அந்த வரிகளை படித்த போது தோன்றியது.. இதை படித்தவுடன் உங்களுக்கும் அது தோன்றியதென்றால் அதை விட வேறன்ன வேண்டும் எனக்கு.. :-)

3 comments:

  1. சின்ன விஷயம் தான் ஆனா நல்லா சிந்திக்க வைக்கிற விஷயம் நன்றி,,,

    ReplyDelete
  2. மிகவும் நல்ல தகவல். பின்பற்றவேண்டிய தகவல்.

    ReplyDelete
  3. உங்க கருத்துக்கு நன்றிங்க ஜெயா & இளங்குமரன்.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.. :)

    ReplyDelete