பிற்காலைப் பொழுதொன்றில் வேலைப்பளு அதிகமாகி சோர்வின் சுவடுகள் சில மனதில் அரும்ப, இளைப்பாறுவதற்காக தேநீர் அருந்த அலுவலகத்திற்கு வெளியே வந்தோம்.. செப்பனிட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கும் புல்வெளிகளுக்கிடையிலான திட்டுகளில் தேநீர் கோப்பையுடன் அமர்ந்தவாறே காற்று வாங்குவதும், அங்கே செயற்கையாக வழிந்தோடும் நீருற்றுகளின் எழிலை உள்வாங்குவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..
அங்கிருப்பவர்கள் கவனத்தை காந்தம் கொண்டு தன் பக்கம் ஈர்த்தாள் தனக்கே உரிய மழலை தடுமாற்றத்துடன் தத்தி நடை பயின்ற அந்த இரண்டு வயது சிறுமி.. தன் தந்தையின் விரல்நுனி பற்றியபடி பாதங்களை காற்றில் உலாத்தி சீறில்லாத அடிகளை எடுத்து வைத்தவாறே அவள் நடந்த அழகு நிச்சயமாக எல்லாரது கண்களையும் அவள் பக்கம் திரும்ப செய்தது.. அமர்வதற்காக அங்கிருந்த திட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அவளது தந்தை அமர, அவரை சுற்றி வந்தபடியே நிறைய குறும்புகள் செய்து கொண்டிருந்தாள்..
காற்றினது இசைக்கு தாளம் போட்டவாறே இலைகள் கொண்ட ஒரு செடியினது கிளை அவள் தலைக்கு சற்று மேலும் கீழும் அசைந்தது அவளது ஆர்வத்தை தூண்டவே உற்சாகத்துடன் எழுந்து அதை தொடுவதற்காக தன் கைகளை நீட்டியவாறே முயற்சி செய்ய ஆரம்பித்தாள்..
அவளது விரல் நுனிகளுக்கும் செடியில் தொங்கும் இலைக்கும் சில அங்குலங்களே இடைவெளி இருந்தது.. இருந்த போதிலும் அதை எட்டி தொட அவளால் முடியவில்லை.. ஆனாலும் அவள் முகத்தில் மிகுந்த சந்தோசம்.. இலைகளை தொட முடியாதது அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அவளை பொறுத்தவரையில் கைக்கு எட்டவில்லையென்றாலும் கூட காற்றின் உதவியுடன் மேலும் கீழும் அசைந்தாடும் இலைகளிலும் அவள் எடுக்கும் முயற்சியிலும் தான் அவளுக்கு கேளிக்கை.. சற்று நேரத்தில் அதை விட்டு விட்டு அருகில் இருந்த செயற்கை அருவியில் வழிந்தோடும் நீருடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்..
விளைவுகள் மற்றும் முடிவுகள் பற்றிய சிந்தனைகள் ஏதுமில்லாமல் தான் செய்யும் அப்போதைய செயல்களில் மகிழ்ச்சி காண்பதும், கையிலிருக்கும் அப்பொழுதுகளை உவகையுடன் செலவழிப்பதும், அப்பொழுதுகள் கரைய கரைய முன்னோக்கி நகர்ந்து அடுத்தடுத்தவற்றில் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதும் என்று நாமும் தானே குழந்தை பருவத்தில் இருந்திருக்கிறோம்.. எளிதாக வாழுமந்த மனப்பாங்கை வளரும் போது எந்த இடத்தில் தவறவிட்டோம்..?
No comments:
Post a Comment