வெளிச்சம் வலிமையிழந்துக் கொண்டிருக்கிறது.. பறவைகள் கூடு திரும்புகின்றன.. ஆரவாரங்கள் அடங்கிக் கொண்டிருக்கின்றன.. எல்லாமுமே எல்லாருமே அமைதியாய் இயல்புநிலையின் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, சாந்தப்படாத எண்ணங்களும் கொதித்தெழும் சிந்தனைகளுமாக என் மனம் மட்டும் பரபரப்பின் உச்சத்தில் சுழன்றுக் கொண்டிருக்கின்றது..
கண்கள் திறந்திருந்தாலும் கூட காட்சிகள் எதுவும் பதியவில்லை என்பதை நிலைத்துப் போயிருக்கும் விழிகளின் உட்கரு தெளிவாகவே சொல்கிறது. திறந்திருக்கும் வானம் எல்லாம் நிறைந்திருந்தாலும் கூட ஏதோவொரு வெறுமையை பிரதிபலித்த வண்ணமே உள்ளது. சுற்றியிருக்கும் மனிதர்களைப் போலவே இந்த காற்றுக் கூட திசை மாறி தீண்ட மறுத்து செல்கிறது..
தன்னுணர்வில் இயங்கிக் கொண்டிருப்பது நாசிவழி உள்சென்று வெளிவரும் சுவாசம் மட்டுமே.. அமர்திருக்கும் சுற்றுவெளியில் அசைவுகள் இருப்பதாக உள்மனம் சொன்னாலும் கூட விழிகளோ செவிகளோ பெரிதாய் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை..
எதற்குமே கலைந்திடாத ஆழ்நிலை மௌனம் சட்டென்று கலைகிறது தோள் மீது படர்ந்திட்ட மென்மையின் மிருதுவான ஸ்பரிசம் உணர்ந்து.. தெய்வீகம் கலந்த புன்னகையுடன் முன்வந்து தோள் சரிகிறாள் அந்த குட்டி தேவதை.. "எனக்கு தெரியும் நீங்க இங்க இருப்பீங்கன்னு", மழலை மொழியை காற்றில் உமிழ்ந்தபடி புருவம் உயர்த்தி தலையசைத்து சிரிக்கிறாள்.. இறுக்கம் தளர்ந்து இயல்பு திரும்ப, அடிமன ஆழத்திலிருந்து மேலெழுந்து என் உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது புன்னகையொன்று..
No comments:
Post a Comment