Sunday, August 1, 2010

வழக்கம் போலவே இன்னுமொரு விடியல்..

விடியல் வேண்டாமென்று இமைகளை இறுக்கி மூடி துயில் கொள்ள நினைக்கும் போது தான் ஜன்னல் வழி காற்றுடன் வேகமாய் பரவி விழுகின்றன அதிகாலை கதிரவனின் ஒளிக்கற்றைகளில் சில.. கருமை கலந்திருந்த இரவுகளில் இமை மூடாது எதையெதையோ தேடித் திரிந்த விழிகள், இருள் வெளுத்தப் பின் தூக்கம் வருவதாக சொல்லி துயில் கொள்ளத் துடிக்கின்றன.

'பாசாங்கு செய்தது போதும்.. நிறைய வேலையிருக்கிறது', என்று போராடி எழ முயன்றாலும், "விடைகளில்லாத இன்னுமொரு விடியலா..? எவ்வாறு சமாளிப்பது..?", என்பதான அவஸ்தை பரவுகிறது கனமான இதயத்தின் ரணமான காயங்களிலிருந்து..

"இரவு மட்டும் தினம் தினம் விடிகிறது. ஏன் வாழ்க்கை மட்டும் இன்னுமதே இருட்டில் இரைந்தே கிடக்கிறது..?" நிஜத்தின் பொய்மை பிரதிபலிக்கும் கண்ணாடி முன்னின்று தினந்தோறும் கேட்கும் கேள்வி தான்.. வழக்கம் போல் வெற்றுப் புன்னகையும் அசாத்திய மௌனமுமே பதிலாக இன்றும்..

"கனவுகளிலும் கற்பனைகளிலும் எண்ணங்களிலும் எழுத்துக்களிலுமே மட்டும் இன்னும் எத்தனை நாட்கள் தான் வாழ்க்கை ஓடப் போகின்றது..? இருள் பிரித்து வெளிச்சம் படரும் இந்த நிஜமான பொழுதுகளோடு எனக்கே எனக்கான வாழ்க்கையும் புலராதா..?" என்பதான ஏக்கம் கண்களின் கருவிழிகளுக்கு பின்னால் கனமாகவே இன்னும்..!!

இன்னுமொரு விடியல் கண்ட குதூகலத்துடன் எல்லோரும் மலர்ந்திருக்கும் போது ஏனோ என் மனம் மட்டும் நிசப்தம் கலந்த பின்னிரவு பொழுதுகளிலேயே இன்னமும் தங்கி இருக்கின்றது.. தனிமை கலந்துவிட்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் காணும் காட்சிகளில் தட்டுப்படும் மௌனங்களை மட்டுமே விழிகள் உள்வாங்குகின்றன.. எனக்கே எனக்கான பொழுதுகளுடன் விடியலொன்று மலருமென்பதான நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகின்றேன் தன்னந்தனியாய்..!!

பொல்லாத குணம் கொண்ட விதியின் முன்னே போராடி வெல்வதற்கு இருகரம் போதவில்லை.. தன்னந்தனியாகவே போர்க்களம் எதிர்கொள்வதால் கரைந்திடும் நாட்களைப் போலவே நம்பிக்கையின் இறகுகள் மெல்ல உதிர்கின்றன.. உரையாடி உறவாடினாய்.. உடனொருவர் தேவைப்படும் முக்கியமான தருணமிது.. உடனிருப்பாயா..? யோசித்துச் சொல்..!!

No comments:

Post a Comment