Saturday, November 20, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (14): ஆண்மையென்பது..?


Photo, originally uploaded by heaven_bound.
மதிய உணவருந்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வரும் வழியில் வீதியோரத்தில் ஒரு வீட்டின் வெளியே பெண்ணொருத்தி தன் குழந்தையை இடுப்பில் சுமந்தவாறே வீதியை வெறித்துப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருக்க, அவள் கணவன் அவளருகே வந்து அவளை உள்ளே வரும்படி கிட்டத்தட்ட மிரட்டும் தோரணையில் அதட்டிக் கொண்டிருந்தான். சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போதே அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் என்று தெளிவாகப் புரிந்தது. அவளை நெருங்கி கடந்து சென்ற போது கலக்கத்துடன் மௌனமாய் நீர் கசிந்துக் கொண்டிருந்த அவளது விழிகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. தலைமுடிகள் கலைந்திருக்க அவளது புருவத்திற்கு அருகில் கீறல்பட்டு லேசாக ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. சண்டையில் அவன் அவளை மிகவும் பலமாக அடித்திருக்கிறான் ரத்தம் வருமளவிற்கு..

மனைவியையும் வீட்டிலுள்ள பெண்களையும் கை நீட்டி அடிப்பவர்களை பார்க்கும் போது எனக்கு வரும் கோபத்தை வார்த்தைகள் கொண்டு (அவ்வளவும் கெட்ட வார்த்தைகள்) விளக்கி விட முடியாது.. அவர்களைப் பார்க்கும் போது, "இவனுங்கல்லாம் ஆம்பளைங்களா..?" என்றுத் தோன்றும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்.

'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். தான் தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்ட உண்மையை ஒருநாள் அவளிடம் அவள் கணவன் சொல்லும் போது, அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுப்பாள். அப்போது அவள் கணவன் அவளை சமாதனப்படுத்த முயலுவான். ஆனால் அவள் சமாதானமாகாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்படும் போது, அவன் அவளை தனது பலத்தை உபயோகித்து இழுத்துக் வந்து ஷோபாவில் உட்கார வைத்து சமாதானப்படுத்த முயலுவான். அப்போது அவள், "யூ ஜஸ்ட் யூஸ் ஃபோர்ஸ் ஜஸ்ட் பிகாஸ் யூ ஆர் ஸ்ட்ராங்..?" என்று கேட்பாள். என்னை மிகவும் கவர்ந்த வசனங்களில் ஒன்றது..

அப்படித் தான் இங்கு பல ஆண்பிள்ளைகள் நடந்துக் கொள்கின்றனர். தாம் உடலளவில் வலிமையானவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பெண்களை அடிப்பவர்களையும் அவர்களை சர்வாதிகாரம் செய்பவர்களையும் பார்க்கும் போது, 'இவர்களெல்லாம் என்ன மாதிரியான ஜென்மங்கள்' என்று கூட எனக்கு தோன்றும். உடலளவிலான தனது வலிமையை முன்வைத்து ஒரு பெண்ணை (உடலளவிலோ அல்லது மனதளவிலோ) காயப்படுத்துவது எப்படி ஆண்மையின் குறியீடாக இருக்க முடியும்..?

மென்மையானவள் என்பதற்காக ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவதும், அவளை உடலளவில் காயப்படுத்துவதும், அவளை கண்ணீர் விட வைப்பதும், அவளது இதயத்தை கிழித்து சுக்குநூறாக்குவதும் நிச்சயமாக ஆண்மையில் மிளிரக்கூடிய அம்சங்களாக இருக்கவே முடியாது. ஆண்மை என்பது பெண்மையை விட பலம் பொருந்தியதாகவோ அல்லது பெண்மையை விட ஏதோ ஒருவகையில் உயர்ந்ததாகவோ நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறென்ன இருக்க முடியும்..?

தனது எதிர்பாலை கவர்ந்திழுப்பதும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் போது தானே பெண்மையோ ஆண்மையோ அழகு கொண்டு மிளிர்கிறது.

பெண்ணின் உள்ளத்தை நெகிழச் செய்யக் கூடிய, அவள் முகத்தில் புன்னகையை மலர வைக்கக் கூடிய, அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவள் மனதை கவரக்கூடிய குணங்களும் செயல்களுமே ஆண்மையின் அடையாளமாக இருக்க முடியும். அது தான் ஆண்பிள்ளைகளுக்கு அழகும் கூட..

ஆண்மை என்பது பெண்ணின் மனதை கவர்வது. அவளை கண்கலங்க வைப்பதல்ல.. உண்மையான ஆண்மை என்பது அன்பு, நேசம் மற்றும் பாசம் கலந்த ஒன்றே தவிர ஆதிக்கத்தையோ, ஆணவத்தையோ அல்லது உடல் வலிமையையோ முன்னிறுத்தி ஒரு பெண்ணை விட தான் உயர்ந்தவன் என்று சொல்ல முற்படுவதல்ல..

இது என் கருத்து.. உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லி விட்டுப் போங்கள்..

Wednesday, November 17, 2010

இந்த நாய்ங்க தொல்ல தாங்க முடியலப்பா..


Photo, originally uploaded by viwehei.
"ஆமாங்க.. இந்த நாய்ங்க தொல்ல தாங்க முடியல"..

கொஞ்சம் பொறுங்கள்.. மக்களை ஏமாற்றும் சில [ 'சில'வா ??!?] அரசியல்வாதிகளையோ அல்லது போக்குவரத்து சந்திப்பில் வேலையை கவனிக்காமல் தெருவோரம்.. சீ.. சீ.. சாலையோரம் நின்றபடி இருசக்கர அல்லது நான்குசக்கர வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தி பணம் வசூலிக்கும் சில (?!??) போக்குவரத்து அதிகாரிகளையோ அல்லது வேலையை செய்வதற்கே லஞ்சம் வாங்கும் சில (??!?) அரசுத்துறை அதிகாரிகளையோ அல்லது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை கடத்தி ஏழைகளின் வயிற்றிலடிக்கும் சில (?!??) ரேஷன் கடை ஊழியர்களையோ அல்லது பொதுவாகவே சாதாரண மக்கள் வயிறெரிந்து 'நாய்ங்க' என்று ஏசும்படியாக நடத்துக் கொள்பவர்களையோ நான் இங்கே நாய்களென்று குறிப்பிடவில்லை.. அதற்காக நான் மேற்சொன்னப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் நாய்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், "மன்னிக்கவும், நான் அந்த விவாதத்திற்கு இப்போது வரவில்லை"..

நான் தொல்லை தாங்கவில்லையென்று குறிப்பிட்டது உண்மையான நாய்களை.. அதாவது நான்கு கால்கள், இரண்டு காது, முன்புறம் சற்றே நீண்டிருக்கும் முகம், குறிப்பாக பின்புறம் வாலுடன் 'உர்ர்ர்ர்' என்று உறுமுவதும் 'லொள்' என்று குரைப்பதுமான மொழியைக் கொண்ட விலங்கின வகையை சேர்ந்த நாய்களை தான். "ஹப்பா.. நாய்கள் என்பதை மக்கள் பலவற்றுடன் குழப்பி புரிந்துக் கொள்வதால், நான் சொல்ல வருவது என்ன என்பதை விளக்கி புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது"..

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்..? ஹா.. பெங்களூருல இந்த நாய்கள் தொல்லை உண்மையிலேயே தாங்க முடியலைங்க. தெருவில் கால் வைக்க முடியவில்லை. அதுவும் இருள் பரவத் தொடங்கிவிட்டால் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகிவிடுகிறது. எல்லாமே கிட்டத்தட்ட வெறிப் பிடித்த நாய்கள். எப்போது நம் மீது பாயுமென்று பயந்துக் கொண்டே போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு காரணம் பல நேரங்களில் பலர் மீது அவை பாய்ந்தும் கடித்தும் இருப்பதால் தான்.

அதுவும் பின்னிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலைப் பொழுதுகளிலோ இருசக்கர வாகனங்களில் போகும்போது நான்கைந்து நாய்கள் ஒன்று சேர்ந்துக் கொண்டு துரத்துவதும் பல நேரங்களில் சீறிப் பாய்ந்து கடிப்பதுமாக இவற்றின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இரண்டு மூன்று முறை நானே மயிரிழையில் கடி வாங்காமல் தப்பித்து வந்திருக்கிறேன்.. அதனாலேயே ஊரடங்கியப் பின்பும் ஊர் விழிப்பதற்கு முன்பும் வீதியில் இறங்க நிறையவே பயமெனக்கு.. எனக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் பலருக்கும் தான்.

தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு நாய்களின் தொல்லை இல்லை என்பது நிச்சயம். இங்கு ஐம்பது மீட்டர் அளவே உள்ள சிறியத் தெருவில் கூட குறைந்தது ஐந்து நாய்களையாவது காண முடியும். அதிகபட்சம் பத்து பதினைந்து என்று கூட இருக்கலாம். ஒரு குறுகிய சந்தில் கூட இரண்டு மூன்று நாய்கள் இருக்கும்.

நான் பார்த்தவரையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாய்கள் சாதுவானவை.. சில நாய்களே அங்கு சீறிப் பாய்ந்துக் கடிக்கும் ரகத்தை சேர்ந்தவை. அங்கிருக்கும் பெரும்பாலான நாய்கள் குரைத்தாலும் கூட நாம் அதட்டினாலோ குனிந்து கல்லெடுத்தாலோ அவை அடங்கிப் போய்விடும். ஆனால் இங்கிருக்கும் நாய்களோ மூர்க்க குணம் கொண்டவை.. இங்கு வெகு சில நாய்களே சாதுவாய் பணிந்து போகும் ராகம். மற்றவையோ நாம் அதட்டினாலும் கூட எதிர்த்து நின்று குரைத்தபடியே பாய்ந்து தாக்க தான் முயலும்.

நான் கவனித்த இங்கிருக்கும் நாய்களைப் பற்றிய இன்னும் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும்.

ஒன்று: இங்கிருக்கும் தெருக்களின் ஒவ்வொரு பத்து பதினைந்து மீட்டருக்கும் இரண்டு மூன்று நாய்கள் அவ்விடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும். வேறு எந்த நாய் அந்த எல்லைக்குள் நுழைந்தாலோ அல்லது அவ்வழியாக கடந்து சென்றாலோ அவ்வளவு தான். அவ்விடத்தை சொந்தமாக்கி கொண்ட நாய்கள் புதிதாக வந்த நாயை பாய்ந்து சென்று கடித்து குதறிவிடும். "தமிழ்நாட்டில் கூட நா இத பாத்திருக்கிறேனே", என்று சொல்வீர்களேயானால், அங்கே வெகு சில நேரங்களில் மட்டுமே இப்படி நடக்க கூடும். ஆனால் இங்கிருக்கும் நாய்கள் அவை வாழும் இடத்தின் வழியாக எப்போதுமே இன்னொரு நாய் செல்வதை அனுமதிக்காது. அப்படி புதிதாக அவ்வழியே கடக்க முயலும் நாயை அவை பாய்ந்து தாக்கும் தருணத்தில் நீங்கள் அந்த பக்கமாக போக நேர்ந்தால் அவ்வளவு தான்.. ஒரு சில கடிகள் உங்கள் மேலும் விழலாம்..

இரண்டு: நன்றியுணர்வு இல்லாத நாய்களை இங்கு தான் நான் பார்த்திருக்கிறேன். நா உண்மைய தாங்க சொல்றேன். நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நாய்களை இங்கு நான் நிறைய பார்த்திருக்கிறேன். பொதுவாகவே தமிழ்நாட்டின் டீக்கடை ஓரங்களில் நின்றிருக்கும் நாய் ஒன்றிற்கு இரண்டு மூன்று நாள் ரொட்டி வாங்கிப் போட்டால் நாம் அந்த டீக்கடைக்கு செல்லும் எல்லா நேரங்களிலும் நம்மை எப்படியும் அடையாளம் கண்டுக் கொண்டு வாலாட்டியபடியே நம் பின்னால் வந்து நிற்குமல்லவா.. இங்கிருக்கும் பெரும்பாலான நாய்களுக்கு வாலாட்டுவதென்றால்.. ம்ஹூம்.. என்னவென்று கூட தெரியாது. எத்தனை நாள் நீங்கள் ரொட்டி வாங்கிப் போட்டாலும் கூட, நீங்கள் அதற்கு ரொட்டி வாங்கிப் போடுவது உங்கள் கடமை என்பதைப் போல ரொட்டியை தின்றுவிட்டு எனகென்னவென்று போய்விடும். "அதான் இத்தன நாள் பிஸ்கட் போட்டிருகோம்ல, நம்மள எங்க கடிக்கப் போகுது', என்று நினைத்துக் கொண்டு அவ்வழி செல்வீர்களேயானால், "தப்பு கணக்கு தப்பு கணக்குன்னு சொல்வாங்களே.. அதுக்கு பேரு இது தான் மாமு!!".. சும்மா பிரிச்சு மேஞ்சுடும்.. நன்றிகெட்ட நாய்களை நீங்கள் இங்கு தான் பார்க்க முடியும். "அதான் டெய்லி பாக்குறோமே", என்று சொல்லாதீர்கள். நான் சொல்வது நான்கு கால் நாய்களை..

அது ஏன் இங்கிருக்கும் மாநகராட்சி இதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன்.. நான் இங்கு எழுதியிருப்பது விலங்கினங்களை சேர்ந்த நான்கு கால்களைக் கொண்ட நாய்களைப் பற்றி மட்டுமே!! வேறு எண்ணிக்கையிலான கால்களைக் கொண்ட வேறு இனங்களை சேர்ந்த சில பல உயிர்களுடன் இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கிற ஏதேனும் பொருந்துமென்றால் அது முழுக்க முழுக்க தற்செயலான பொருத்தமே தவிர வேறொன்றுமில்லை.

Monday, November 15, 2010

மாற்றுத் திறனாளிகளுக்கு பார்வையாக இருக்க ஒரு வாய்ப்பு..


Photo, originally uploaded by Melgo2K.
மனதின் அடியாழத்தையும் தொடும் ஆனந்தமான உணர்வைத் தரக் கூடிய சிலவற்றில் ஒன்று இயலாதவர்க்கு இயன்றதை செய்யும் போது அவர் முகம் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி..

மாற்றுத் திறன் கொண்ட நம்மின சகோதர சகோதரிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகள் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதான ஆர்வம் உள்ளவரா நீங்கள்..? உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்..!! இதோ உங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம். பார்வையற்ற நண்பர்கள் சிலருக்கு கொஞ்ச நேரம் அவர்களது பார்வையாக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் சென்னையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரத்தில் (9:30am to 1pm) பார்வையற்றோருக்கான வகுப்புகளை நடத்துகின்றனர். தேவைப்படும் உதவி என்னவென்றால் அவர்களது பாடங்களை அவர்களுக்கு வாசித்துக் காண்பிக்க ஆர்வமுள்ள சிலர் தேவை. அவ்வளவே..!!

பெரும்பாலும் அவர்கள் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள். அவர்களுக்கு பார்க்கும் திறன் இல்லையாதலால் அவர்களது பாடங்களை நாம் வாசித்துக் காட்ட அதை அவர்கள் மனதில் ஏற்றிக் கொள்வார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் பாடங்களை அவர்கள் ஒலிநாடாவில் பதிவும் செய்துக் கொள்வார்கள். தமிழில் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதென்றால் தமிழ் இலக்கியங்களை படித்து தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

விடுமுறை நாட்களில் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க எவ்வளவு நேரமாகுமோ அதே அளவு நேரம் தான் இதற்கும் நீங்கள் செலவழிக்க வேண்டியது. ஆனால் படம் பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு பரவசமும் சந்தோசமும் மனநிறைவும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நீங்கள் செய்யும் உதவியால் அவர்களுக்கு தங்கள் பாடங்களை மனதில் ஏற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு. உங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை சக இனத்தவருக்கு செய்த திருப்தி, மகிழ்ச்சி மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு. பார்வையற்ற அவர்களது படிக்கும் ஆர்வத்தில் ஆதரவாக உதவுவதால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு மனநிறைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பதற்றமும் கவலைகளும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து கொஞ்ச நேரம் உங்களுக்கு நிம்மதியான விடுதலை கிடைக்கும். உங்கள் மனது சாந்தமடையும்.

அங்கே நீங்கள் காணக் கூடிய உலகம் மிகவும் வித்தியாசமானது. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தென்றல் காற்று அவ்வப்போது உலா வரும் உலகமது. நிறைய புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். கருத்து பரிமாற்றலாம். அங்கே நீங்கள் செலவழிக்கும் பொழுதுகள் நிச்சயமாக திருப்தி தரும் என்பதில் சந்தேகமில்லை. எழுத்தறிவித்தவனே இறைவனாகும் போது அவ்வெழுத்துக்களை கண்டுக் கொள்ள நீங்கள் பார்வையாக இருப்பீர்களேயானால் அது எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை உங்களுக்கு தரும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

வேண்டுமானால் ஒரு நாள் வந்துப் பாருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று முயற்சித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடருங்கள். இதில் எந்த கட்டாயமும் கிடையாது. எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் என்னால் இதை செய்ய முடியாது என்று நினைப்பீர்களேயானால், உங்களால் முடிந்த நாட்களில் மட்டும் சென்று இவ்வகுப்புகளில் வாசித்து காண்பியுங்கள். நேரடியாக அங்கு செல்ல முடியாதவர்கள் பாடங்களை ஒலிநாடாவிலோ (cassette) அல்லது மின்தட்டிலோ (cd) பதிவு செய்தும் தரலாம். நிபந்தனைகள் எதுவும் இல்லை.. ஆங்கிலத்தில் இலக்கியம் பயிலும் மாணவர்களும் கூட இங்கு வருகிறார்கள். எனவே உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக வாசிக்க வரும் என்றால் உங்களால் அவர்களுக்கும் உதவ முடியும். ஒரு நாள் வந்து தான் பாருங்களேன்!!

சனிக்கிழமை:
இடம்: பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை. [Fathima Higher Secondary School, Kodambakkam, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஞாயிற்றுக்கிழமை:
இடம்: குட்வில் ஃபவுண்டேஷன், மேதா நகர், சென்னை. [Goodwill Foundation, Metha Nagar, Chennai]
நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வகுப்புகளை நடத்தும் நண்பர்களின் தொலைப்பேசி எண்களில் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஜோசப்: 9688644474 மற்றும் 9962054684
மணிவேல்: 9788571231
பொற்செல்வன்: 9894627109

வாருங்கள்..! புதியதொரு உலகை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் நாம் வாழும் இவ்வுலகிற்கு நம்மால் முடிந்த மட்டும் இனிமை சேர்ப்போம்..!!

Sunday, November 14, 2010

த.க [1]: வாசம் கண்டுக் கொள்ள இயலாத் தன்மை


Photo, originally uploaded by peter_hasselbom.
அதென்ன "த.க" என்கிறீர்களா..? கடைசி பத்தியைப் பாருங்கள். இப்போது நேரே பதிவிற்கு..

நிறக்குருடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ['அப்படீன்னா என்ன..?' என்று கேட்பவர்களுக்காக சிறிய விளக்கம்: காட்சிகள் யாவும் பழைய காலத்து படங்களைப் போன்று கருப்பு வெள்ளையாக மட்டுமே தெரியும் குறைபாடு அது. வண்ணங்களைக் கண்டுக் கொள்ள முடியாத குறைபாடு தான் நிறக்குருடு].. ஆனால் வாசனையை உணர இயலாத குறைபாடு என்று ஒன்றுண்டென்பதை சமீபத்தில் தான் தெரிந்துக் கொண்டேன். கேள்விப்பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.

சுவாசிக்க முடியும் ஆனால் காற்றில் கலந்திருக்கும் மணம் (அது நறுமணமாகட்டும் நாற்றமாகட்டும்) நாசிகளுக்கு தட்டுப்படாது. அப்படியொரு குறைபாடென்று ஒன்றுண்டு. அந்த குறைபாட்டை அநோஸ்மியா (Anosmia) என்று சொல்வார்கள். முதன்முதலில் கேட்டப் போது ஆச்சரியமாக இருந்தாலும் கூட, அதை பற்றிய சில தகவல்களைப் படிக்கும் போது தான் தெரிந்தது, 'அடடே.. நாமும் கூட அவ்வப்போது தற்காலிகமாக அதை அனுபவித்திருக்கிறோமே' என்று.

பொதுவாகவே நமக்கு சளி அதிகமாக பிடித்திருக்கும் காலங்களில் பெரும்பாலும் வாசங்களை நம்மால் உணர இயலாது. அதை நீங்கள் கூட அனுபவித்திருப்பீர்கள். வைரஸால் (virus) ஏற்படும் சில நோய்களின் போது நாம் அதை அனுபவித்திருப்போம். ஆனால் நாம் அனுபவிப்பது தற்காலிகமானது. சிலர் பிறந்ததிலிருந்தே 'அநோஸ்மியா'வால் பாதிக்கப்படலாம். அக்குறைபாட்டால் நிரந்தரமாகவே வாசனையை உணரும் தன்மையை பெரும்பாலானவர்கள் இழந்து விடுவதுண்டு.

இக்குறைபாடு உள்ளவர்களைப் பொறுத்தவரை நாசி வழி செல்லும் காற்றானது எவ்வித மணமும் அற்றது. வாசத்தை கண்டுக் கொள்ள இயலாவிட்டாலும் கூட இக்குறைபாடுள்ள பலரால் ருசியை கண்டுக் கொள்ள முடியும். சாப்பிடும் போது சாப்பாட்டின் வாசத்தை அவர்களால் உணர முடியாது. ஆனால் உப்பு, இனிப்பு, காரம் என்பதான சுவைகளை உணர முடியும். இக்குறைபாடுள்ள சிலர் ருசியையும் கண்டுக் கொள்ள இயலாத நிலைக்கு போய்விடுவதுண்டு என்றொரு தகவலும் உண்டு.

இவர்கள் எளிதாக கூவம் நதிக் கரையோரத்தில் நடை பயில முடியும்.. துர்நாற்றங்களில் இருந்து விடுதலை பெற்றவர்கள். இக்குறைபாடுள்ள ஒருவர் நகைசுவையாக சொன்ன விஷயம், "சில நேரங்களில் வகுப்புகளின் போது சிலர் உடம்பிலிருந்து சப்தம் வரும் போது எல்லோரும் சிரித்தவாறே மூக்கை பொத்திக் கொள்வார்கள்.. ஆனால் எனக்கு நடப்பது என்ன என்று தெரியாது.. ஏதோ சப்தம் மட்டும் கேட்குமே தவிர வேறு எதையும் என்னால் உணர முடியாது", என்று.

மனதினை கிறங்கடிக்கும் மல்லிகைப் பூவின் மணம், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சாப்பாட்டின் நறுமணம் என்று எதையுமே இவர்களால் உணர முடியாது. பெரும்பாலும் இக்குறைபாட்டினால் பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட, சமயலறையில் எரிவாயு கசிவதை இவர்களால் கண்டுக் கொள்ள இயலாது. திடீரென்று வீட்டின் ஓரத்தில் தீப் பிடித்து விட்டதென்றால் புகை வாசத்தை வைத்து இவர்களால் உடனே கண்டு பிடிக்க முடியாது..

நாசியில் ஏற்படும் அடைப்பே ( nasal congestion or blockage of the nose) பெரும்பாலும் இக்குறைபாட்டிற்கு காரணம். ஆனாலும் சில நேரங்களில் இக்குறைபாடு நரம்பமைப்புகளில் ஏற்படும் கோளாறின் (nervous system (neurological) condition) அறிகுறியாக அல்லது தலையிலோ மூளையிலோ இருக்கும் கட்டியின் (tumors of the head or brain) விளைவாகவோ கூட இருக்கலாம். எனவே இக்குறைபாடுள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இன்னும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) உட்பட நிறைய பிரபலங்களுக்கும் இக்குறைபாடு இருந்திருக்கிறது என்பது தான். முதன் முதலில் கேள்விப்பட்டபோது, 'இப்படியும் ஒரு குறைபாடு உண்டா' என்று ஆச்சர்யமாக இருந்ததால் இதை பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.

தலைப்பில் இருக்கும் 'த.க' என்பது 'தகவல் களஞ்சியம்' என்பதன் சுருக்கம். ஏதோ தெரிந்த சிலவற்றையும், 'அடடே இது புதுசா இருக்கே' என்று ஆச்சர்யப்பட்ட சிலவற்றையும் பற்றிய ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். அதனால் தான் இந்த தலைப்பு. பிடித்திருந்தால் பின்னூட்டமிட தவறாதீர்கள்..

Tuesday, November 9, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (13)



எதேச்சையாக இந்த ஒளிப்பதிவை பார்க்க நேர்ந்தது.. சிரிக்க வைத்தபடியே சிந்திக்கவும் வைக்கின்ற மிக அருமையான பேச்சு. இன்றைய சூழ்நிலையில் நடக்கின்ற பல விஷயங்களை மிகவும் அழகாக சொல்லிய விதம் பிடித்திருந்தாலும் கூட பார்த்து முடித்தவுடன் சொல்லப்பட்ட சில கருத்துகளுக்கு பதில் தர வேண்டுமென்று தோன்றியதால் தான் இந்த பதிவு..

இன்றைய இளைய தலைமுறை பலவற்றை இழந்து விட்டது என்பதான வாதத்திலே சொல்லப்பட்டிருக்கும் இக்கருத்துக்களை 'இழப்புகள்' என்று வகைப்படுத்தி விட முடியாது.. பணத்தையும் பொருளாதாரத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி தம் வாழ்க்கையை நகர்த்தும் பலர் அதை அடைவதற்கு தாம் எதை விட்டுக் கொடுக்கிறோம் (இழத்தல் அல்ல விட்டுக் கொடுத்தல்) என்று தெரிந்தே செய்கின்ற விஷயமிது. இது அவரவரின் விருப்பத் தேர்வு.. அது தான் உண்மை.

இழப்பென்பது வேண்டுமென்று விரும்பி அரவணைக்க முனைந்தாலும் கூட கைவிட்டு போவது.. இங்கே இழப்பென்று இவர்கள் அடுக்குவது இவர்களாக விரும்பி தேர்ந்தெடுத்தது..

எவ்வளவு தான் வேலையில் மும்முரமாக இருந்தாலும் கூட தம் பால்ய சிநேகிதர்களுடன் தொடர்பில் இருக்கும் பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர். அன்பையும் உறவுகளையும் விட்டுக் கொடுத்து விட்டு அசுர வளர்ச்சி பெற முனைவது ஒரு தனி மனிதனுடைய மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களின் விளைவே தவிர அதை இழப்பென்று எப்படி சொல்வது..?

இன்று கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றது உறவுகளுடனும் நட்புகளுடனும் ஒருவரை எளிதாக இணைத்துக் கொள்ள.. முன்பெல்லாம் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அஞ்சலட்டை வாங்கி கடிதமெழுதி தபால் பெட்டியில் போட்டால் இரண்டு மூன்று நாட்களாகும் செய்தி போய் சேர.. இன்று அலைபேசி எடுத்து பொத்தானைத் தட்டினால் அதே செலவில் இரண்டு மூன்று நிமிடங்கள் உடனடியாக தாம் சொல்ல நினைத்ததை சொல்ல முடிவதோடு மட்டுமல்லாமல் அதற்கு அவர்களது பதில் என்ன என்பதையும் உடனடியாக தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அப்படியிருந்தும் கூட உறவுகளையும் நட்புகளையும் வளர்த்துக் கொள்ளாதது மனிதனுடைய மனோபாவத்தின் கோளாறென்று சொல்லாமல் அதை இழப்பென்று எப்படி சொல்வது..? நினைத்தவுடன் எளிதாக தொடர்பு கொள்ள தொழில்நுட்பம் கொடுத்துள்ள சாதனங்களை மென்மேலும் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்தாமல் வெட்டியாய் பொழுது போக்க உபயோகிப்பது தனிமனிதனின் முட்டாள்தனமல்லவா..

அக்காலங்களை போல் காதலிக்க முடியவில்லை என்றும் கொடுக்கும் முத்தத்தில் பாதி அலைபேசிக்கு தான் போய் சேர்கின்றதென்றும் வருத்தப்படும் பலர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் அக்காலங்களில் தொலைதூர காதலியிடம் பேசும் வாய்ப்பெல்லாம் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை என்பதை தான். தொலைதூர உறவுகளுக்கு கடிதமெழுதுவதும் முத்தத்தை அக்கடிதத்திலே பதிப்பதும் தான் அதிகபட்சம் முடியும்.. இன்று தொலைபேசிக்கு அதிகளவில் முத்தங்களை கொடுக்க நேர்ந்தாலும் கூட மறுமுனையில் இருக்கும் காதலி அம்முத்தத்தின் சப்தத்தையாவது கேட்க கொடுத்து வைத்திருக்கிறாளே என்று சந்தோசப்படுவோம்..

தமக்கு நேரம் போதவில்லையென்று பிதற்றிக் கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவர்கள் கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்தி கொடுத்திருக்கிறது.. முன்பெல்லாம் பணமெடுக்க வேண்டுமென்றால் அரை நாள் வங்கியில் வரிசையில் நிற்க வேண்டும். இப்போதோ ஒருசில நிமிடங்களில் ஏ.டி.எமில் பணமெடுத்துக் கொண்டு தம் பொண்டாட்டி பிள்ளைகளுடன் உணவகம் சென்று மகிழ்ச்சியாக அந்த அரை நாள் பொழுதை கழிக்க முடியும்.. முன்பெல்லம் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் செய்த பல விஷயங்களை இப்போதெல்லாம் நிமிடங்களிலும் வினாடிகளிலும் செய்து முடிக்க முடிகிறது.. அவ்வாறு மிச்சமான பொழுதுகளை தம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் செலவழிக்காமல் வீணாக்குவதும் மனித உறவுகளின் மீது அக்கறையில்லாதிருப்பதும் தவறான மனோபாவத்தின் விளைவே..

வேண்டுமென்றே தெரிந்தே இது வேண்டுமென்றும் அது வேண்டாமென்றும் சுயமாக முடிவெடுத்துக் கொண்டு 'நான் இதை இழந்து விட்டேன்' என்று போலி முத்திரை குத்துவது எனகென்னவோ சரியாக படவில்லை..

இன்றைய சமூக சூழ்நிலை மிகவும் வேகமான வாழ்க்கைமுறை கொண்டதாக இருந்தாலும் கூட தமக்கு எது முக்கியம் என்று தனிமனிதன் தான் முடிவெடுக்கிறான். குடும்பத்தையும் உறவுகளையும் நட்புகளையும் அரவணைத்தபடியே முன்செல்வதனால் ஒருவனது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் சற்று மிதமான வேகத்திலே தான் இருக்கும்.. அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது வேலையும் அதில் கிடைக்கும் பதவி உயர்வுகளும் தான் முக்கியம் என்று குடும்பத்தையும் உறவுகளையும் பின்னுக்கு தள்ளுவது ஒருவன் தெரிந்தே சுயமாக எடுக்கும் தேர்வு.. 'இரண்டு வருட பதவி உயர்வுக்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை, எனது உறவுகளுக்கும் நான் சமமான முன்னுரிமை கொடுத்து என் வாழ்க்கையை நகர்த்துகிறேன்' என்னும் மனோபாவத்துடன் வாழ்கின்ற எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கின்றேன்.. அதே சமயத்தில் தனது வேலையும் பதவியும் தான் முக்கியமென்று தம் பொழுதுகளை வேலையிலேயே கழிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன்.. இது ஒவ்வொருவரும் சுயமாக எடுக்கும் முடிவு.. பின்னாளில் நான் இதை இழந்து விட்டேன் என்று பிதற்றுவது முட்டாள்தனம்..

எவ்வளவு தான் வேலைபளு அதிகமாக இருந்தாலும் படுக்க போகும் முன் தனது நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ அலைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் கூட தன்னால் பேச முடியாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அது சுத்த அபத்தம்.. சீரழிந்து போன மனோபாவத்திற்கும் சோம்பேறித்தனத்திற்கும் தொழில்நுட்பத்தையும் வேகமான வாழ்க்கை முறையையும் நாம் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம்.. அது தான் உண்மை..

வாழ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.. அசுர வளர்ச்சியையும் வேகமான பதவி உயர்வுகளையும் கொஞ்சம் சமரசம் செய்துக் கொண்டும் பணத்தின் மீதான மோகம் மட்டுமே கொள்ளாமல் உறவுகளிலும் நட்புகளிலும் நேசம் பாராட்டி வாழ நினைத்தால் வாழலாம்.. இன்றைய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் அதற்கு எவ்வளவோ வழிகளை நமக்கு தருகின்றன.. நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தாமல் தெரிந்தே வீணடித்துக் கொண்டு 'இழந்து விட்டோம்' என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை..