Tuesday, December 28, 2010

மழலைப் பருவத்தின் அழகு..!!


Photo, originally uploaded by GOPAN G. NAIR.
இன்று காலை டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன் [ பொதுவாவே வீட்ல தான டீ குடிப்பாங்க, நான் டீ குடிச்சிட்டு வீடு திரும்பினதா சொல்றேனேன்னு நெனைக்குறீங்களா..? வீட்ல டீ போட்டு தர ஆள் இல்லப்பா.. அதான் வெளிய போய் குடிச்சிட்டு வந்தேன் ]. சரி கதைக்கு வருகிறேன்..

அப்போது வீட்டு முதலாளியின் பேரனுக்கு அந்த குட்டிப் பையனது அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் என்னைப் பார்த்ததும், "ஹல்லோ" என்று சொல்வான். அது நான் அவனுக்கு கற்றுக் கொடுத்தது. அவன் கைக் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவனை தினமும் பார்ப்பேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்வான், ஏனென்றால் அந்நேரங்களில் அவன் பேச கற்றுக் கொள்ளவில்லை. தினமும் நான் அவனைப் பார்த்து, "ஹல்லோ" என்று சொல்லி அவன் திரும்ப சொல்கிறானா என்று பார்ப்பேன்.. அவன் உதடுகள் முயற்சி செய்யும், ஆனால் வார்த்தைகள் வராது. வெறும் புன்சிரிப்பு மட்டுமே வரும்.. உள்ளம் கொள்ளைக் கொள்ளும் புன்னகை அது.. பிறகு ஒருநாள் அவனைப் பார்த்து வழக்கம் போல் நான் "ஹல்லோ" சொல்ல, பதிலுக்கு புன்னகைத்தவன் தனது பிஞ்சு மொழிகளில், "ஹல்லோ" என்று சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனேன்.

அதற்காக இப்போது அவன் பெரிதாக வளர்ந்து விட்டான் என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவனுக்கு இரண்டு வயது கூட ஆகவில்லை. இன்று காலை அவனைப் பார்த்ததும் புன்னகைத்தேன்.. அவனாக "ஹல்லோ" சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.. என்னைப் பார்த்ததும் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, "பைன்" என்றான். எனக்கு சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அது என்ன "பைன்" என்று குழம்பிப் போனேன். என் முகத்திலிருந்த புன்னகையை நழுவ விடாமல், எனது ஒரு புருவத்தை மேல் நோக்கி உயர்த்தி கேள்விக் குறியுடனான முக பாவனையை காண்பித்தேன். அவன் மீண்டும் புன்னகைத்து, "பைன்' என்றான்.

நான் சிரித்தவாறே, "என்ன சொல்கிறான்..?" என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். "நேத்து நைட் நீங்க 'ஹவ் ஆர் யூ'ன்னு கேட்டீங்கல்ல, அதுக்கு இப்ப பதில் சொல்றான்", என்று அவன் அம்மா கன்னடத்தில் விளக்கம் சொன்னார்கள் [ அவங்க கன்னட மொழி பேசும் குடும்பம் ].. அவனது செயல் என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது.

நேற்றிரவு நான் வீடு திரும்பிய போது அவன் வெளி கேட்டுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். வழக்கம் போல் நாங்கள் பரிமாறி கொண்ட "ஹல்லோ"விற்கு பின்பு, நான் புன்னகையோடு முதன்முறையாக "ஹவ் ஆர் யூ..?" என்று கேட்டேன். அதற்கு எப்படி பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. வெறும் சிரிப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. யாரும் அவனிடம் இதுவரை அந்த கேள்வியை கேட்டதில்லை என்று நான் புரிந்து கொண்டேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. "குட் நைட்", என்று நான் சொல்ல, பதிலுக்கு அவனும் "குட் நைட்" என்று சொல்லி கையசைத்தான். இதை அவனது அப்பா உள்ளிருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

நான் சென்ற பின்பு, "ஹவ் ஆர் யூ..?" என்று யாராவது கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டுமென அவனது அப்பா சொல்லி கொடுத்திருக்க வேண்டும். இன்று காலை என்னைப் பார்த்ததும் மறக்காமல் முதல் வேலையாக எனது நேற்றைய கேள்விக்கு அவனாகவே பதிலளித்த அவனது மழலைத்தனம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹவ் க்யூட் அண்ட் ஸ்வீட்..!! ரொம்பவே மகிழ்ந்து போனேன். நேற்று கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொண்டு, ஞாபகம் வைத்து என்னைப் பார்த்ததும் முதல் காரியமாக அவன் புன்னகையுடன் பதில் சொன்ன விதம்.. ச்ச.. சான்ஸே இல்ல.. மழலைப் பருவத்தில் கொட்டி கிடக்கும் அழகு எப்போதுமே மனதை சொக்க வைக்கிறது. எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாத இன்பம் இந்த மழலைத்தனம்.. இன்றைய பொழுது மிக நன்றாகவே விடிந்தது..!!

Thursday, December 23, 2010

குளிர்கால மாலை நேரமொன்றில்..


Photo, originally uploaded by Kausthub.
சற்றே தலை வலிக்க தேநீர் அருந்தலாமென்று அருகிலிருக்கும் கடைக்கு சென்றேன்.. முதிர்ச்சியடைந்த மாலை நேரமது. இருள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட போதிலும் கூட கரைந்துக் கொண்டிருக்கும் பொழுதின் சாயல் கொஞ்சம் மிச்சமிருக்கவே செய்தது.. ஒருவேளை அடைபட்ட சுவர்களுக்குள்ளேயே பொழுது முழுவதையும் கழித்ததால் தலை வலித்ததோ என்னவோ..

குளிர் காலமென்பதால் காற்றில் நிறையவே ஈரப்பதம் கலந்திருந்தது. எல்லோரும் உடம்பிற்கு கதகதப்பு கொடுக்கும் கம்பளியாடைகளை அணிந்தபடி நடந்து சென்று கொண்டிருக்க, எனகென்னவோ அந்த குளிரில் நனைய பிடித்திருந்தது. குளுமையை முழுவதுமாக உணர பிரியப்பட்டு மெல்லிய மேல்சட்டை மட்டுமே அணிந்திருந்தேன்.. இதமாக குளிர்காற்று மேனியை வருடிக் கொண்டிருக்க சூடான தேநீர் தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது சுகமான ஒரு உணர்வு ஏற்பட்டது.

பாதி தம்ளர் தான் குடித்திருப்பேன்.. வீதியை மேய்ந்துக் கொண்டிருந்த கண்கள் சட்டென்று காட்சியொன்றில் லயிக்க ஆரம்பித்தது. கசங்கிய ஆடை அணிந்துக் கொண்டு சுருங்கிய தேகம் பூசி முதியவளொருத்தி அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் அதிகளவில் தயக்கம் கலந்திருந்தது. முதல் பார்வையிலேயே தெரிந்தது ஆதரவில்லாதவள் என்பது. முகம் அதிகமாய் துவண்டிருக்க, அதில் தென்பட்ட அயர்ச்சி கலந்த சோகம் நன்றாகவே உணர்த்தியது அவள் சாப்பிட்டு வெகு நேரமாகி விட்டது என்பதை..

அவளால் கவரப்பட்ட என் கண்களிரண்டும் அவளது நடையின் வேகத்திலேயே தொடர்ந்து பயணித்தது. வீதியில் போய் கொண்டிருந்தவள் நான் நின்று கொண்டிருந்த கடைக்கு வந்து, "இந்த பன் கொடுப்பா', என்றவாறே கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டிருந்த கிரீம் பன் ஒன்றை கை நீட்டி காண்பித்து கேட்டாள். கடைக்காரன் அவளை நோக்க, "இது என்ன வெல..?, என்று கேட்டாள். பன்னை நோக்கி நீண்டிய அவள் கையில் சில சில்லறை நாணயங்கள் தென்பட்டன.

"ஆறு ரூபா", என்று அவன் பதிலளிக்க, சில வினாடிகள் யோசித்தவள் சட்டென்று அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள். அவளது முகமாற்றத்திலிருந்தே தெரிந்தது அவள் வைத்திருந்த சில்லறை அதற்கு போதவில்லையென்பது. அந்த கடையில் நான் உட்பட இன்னும் ஓரிருவரும் நின்றுபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். எங்கள் யாரிடமும் பசியென்றோ அல்லது அதை வாங்கிக் கொடுக்கச் சொல்லியோ கேட்கவில்லை அவள்.

அக்கடையிலிருந்து நடந்தவள் எதிரிலிருந்த இன்னொரு கடைக்கு சென்றாள். அங்கும் எதையோ அவள் கைநீட்டி கேட்க, அக்கடைக்காரன் பதிலளித்த மறுநொடியே ஏமாற்றம் கலந்த பாவனையை அவள் முகம் வெளிப்படுத்தியது. பின்பு எதுவும் வாங்காமலேயே அங்கிருந்தும் விலகி தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள்.

காட்சிகளை என் விழிகள் உள்வாங்கி கொண்டிருக்க, மனதிற்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அது உதவ வேண்டுமென்பதான துடிப்பு மட்டுமல்ல.. அதற்கும் மேல்.. பிறர் படும் கஷ்டங்களை காணும் போது ஏற்படும் ஒருவிதமான அனுதாபம் கலந்த வேதனை.. இன்னொரு பரிமாணத்தில் சற்று தலை தூக்கும் ஆதங்கம், 'ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது..?' என்று. பல உணர்வுகளின் கலவை. அது ஒருவிதமான தவிப்பு..

மௌனமாக நின்றபடி அக்காட்சிகளைப் பார்த்து கொண்டிருந்தேன். அவளை அடிக்கடி அருகிலிருக்கும் வீதிகளில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் ஒரு கோவிலிற்கு எதிரே அவள் சில நேரங்களில் அமர்ந்திருப்பாள். ஆனால் அவள் பிச்சையெடுத்து பார்த்ததில்லை. அவ்வழியாக போவோர் வருவோரை பார்த்தபடியே அமர்ந்திருப்பாள்.

தேநீர் குடித்து முடித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடியே வீடு வந்தேன். சில ரூபாய் நோட்டுகளை என் பணப்பையில் இருந்து எடுத்துக் கொண்டு அதே கடைக்கு திரும்ப சென்றேன். அவள் கைநீட்டி விலை கேட்ட க்ரீம் பன்னையும், அதனுடன் சேர்த்து இன்னும் சிலவற்றையும் வாங்கிக் கொண்டேன்.

அந்த முதியவளைத் தேடி நடக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நேரமானது அவளை கண்டு பிடிக்க. வீதியில் ஓரிடத்தில் ஓரமாக அமர்ந்திருந்தாள். அருகில் சென்று நான் வாங்கி வந்த தின்பண்டம் அடங்கிய பையைக் கொடுத்தேன். என்னை ஆச்சர்யமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கி, பின்பு அதை வாங்கி கொண்டாள். கூடவே அவள் கையில் சில ரூபாய் நோட்டுகளைத் திணித்தேன். அவள் முகத்தில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தென்பட்டது. நான் தேடி வந்தது அது தான் என்று எனக்கு தோன்றியது.

என் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். இருட்டத் தொடங்கி விட்டபடியால், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல வீடுகளில் மின்சார ஒளியில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவ்வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் ஒருவித சந்தோசம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த வருடமும் கிறிஸ்மஸ் தாத்தா வந்து ஆசைப்பட்ட ஒன்றை தருவார் என்பதான எதிர்பார்ப்பில் ஏற்பட்டிருக்கும் குதூகலமாக இருக்கலாம். விரும்பியதை அவர்கள் பெரும் போது அவர்களுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு சந்தோசம் கிறிஸ்மஸ் தாத்தா அடைவார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

காற்றில் கரைந்திருந்த ஈரப்பதம் இப்போது சற்று அதிகமாக குளிர்ந்தது. ஒருவேளை உள்ளுக்குள் மனதும் குளிர்ந்திருப்பதால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம் அது.


பின்குறிப்பு: அனைவருக்கும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி பரவட்டும்..!!

Monday, December 20, 2010

காதல் சார்ந்தவை [3]: சில காதல் பொய்கள்.. சீச்சீ.. மெய்கள்..!!


Photo, originally uploaded by sabatoa.
"ஏதோ என் அதிர்ஷ்டம் நான் அழகாய் பிறந்து விட்டேன்", என்று நீ சொல்கிறாய்.. அடியே, அழகாய் பிறக்க நீயொன்றும் கொடுத்து வைக்கவில்லை.. நீ அழகாய் இருக்க ஒப்புக் கொண்டது தன் அதிஷ்டம் என்று ஊர் முழுதும் சொல்லி வருகிறதாம் அழகு!!

"ஒருவேளை நான் அழகாய் இல்லாமல் இருந்திருந்தால்..?", என்பதாக கேட்கிறாய்.. அப்படியிருந்திருந்தால் நிச்சயமாக எனக்கு அழகென்பது பிடிக்காமல் போயிருக்கும்!!

"அது ஏன் நான் மல்லிகை சூடி வீதியில் நடக்கும் போது மட்டும் எல்லோரும் ஆச்சர்யமாகவேப் பார்க்கிறார்கள்", என்று கேட்கிறாய். மல்லிகை சூடி பெண்கள் வலம் வருவதையே பார்த்துப் பழகிய அவர்களுக்கு மல்லிகையே ஒரு பெண்ணை சூடி வலம் வருவதை பார்க்கும் போது ஆச்சர்யப்படாமல் என்ன செய்வார்கள்..

இன்னும் சில உண்மைகள் சொல்கிறேன் கேள்.. உன் மேனிபட்டு பூமியில் வழிந்தோடும் மழைத்துளிகளை உறிஞ்சி மூச்சுவிடும் செடிகளில் பூக்கின்ற மலர்களுக்கு இதுவரை கண்டிராத அழகு நிரம்பி வழிவதனால் சந்தையில் அவற்றிற்கு வரவேற்பு அதிகமாம்.. உன் விழியினது இமைகள் படபடக்கும் அழகு கண்ட மலர்களெல்லாம் இப்போது வண்ணத்துப் பூச்சிகளை கண்டுக் கொள்வதேயில்லையாம்..

உன் பாதச் சுவடு பட்ட இடமெல்லாம் கொடுத்து வைத்ததாக பூமி சொல்கிறதாம்.. பிற்காலத்தில் அவ்விடங்களில் காதல் கோவில்கள் கட்டியெழுப்பப்படலாம் என்பதாகவும் சில செய்திகளுண்டு..

நாசி நுழைந்து உன்னுயிர்த் தொடுவதற்கு காற்றணுக்களுக்குள் எவ்வளவு போட்டி நடக்கிறதென்பது உனக்கெங்கே தெரியப் போகிறது.. அவ்வப்போது நீ மூச்சுவிட சிரமப்படுவதற்கு காரணம் உள்சென்ற காற்று உன்னை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே குடியிருக்க முயல்வதால் கூட இருக்கலாம்..

"போடா.. இப்படி கவிதை சொல்லியே என்னை கிறங்கடிச்சிடு எப்போ பாத்தாலும்", என்கிறாய்.. அடியே, உனக்கு தெரியுமா..? கவிதை தன் பிறவிப் பயன் கண்டுக் கொண்டதே உன்னை பற்றி எழுதப்பட்ட பின்பு தானாம்.. அன்று தனியாய் இருக்கையில் என் காதில் கதைத்த ரகசியமிது. உன் பெயரினது மூன்றெழுத்துக்களுக்கு இப்போது மொழியில் முதல் இருக்கையில் இடமாம்.. மற்ற எழுத்துக்களுகெல்லாம் அவை மீது பொறாமையென்று அரசல் புரசலாய் செய்திகளும் உண்டு..

"ஹையோ முடியல..", என்று புன்சிரிப்பு கொள்கிறாய்.. ஆமாமடி.. இதையே தான் தோட்டத்து மலர்களும், வானவில் நிறங்களும், வண்ணத்து பூச்சியினது சிறகுகளும், இன்ன பிற இயற்கையினது அழகுகளும் சொல்கின்றனவாம்.. உன்னுடன் போட்டிப் போட முடியவில்லையாம் அவைகளுக்கு..!!

Friday, December 10, 2010

குறையொன்றுமில்லை..!!


சமீபத்தில் எதேச்சையாய் பார்த்த குறும்படமொன்று மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் குறும்படம் அது. 'உடைந்த கடவுள்' என்னும் அர்த்தத்தில் வைக்கப்பட்ட "புரோக்கன் காட்" (Broken God) என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனது சிந்தனைகள் ஏதோவொரு திசையில் பயணிக்க தொடங்கி விட்டது.



மேலே இணைக்கப்பட்டிருக்கும் அக்குறும்படத்தின் ஒளிப்பதிவை இணைய வேகம் குறைவின் காரணமாக காண இயலாதவர்களுக்காக அவ்வொளிப்பதிவின் காட்சிகளை கீழே விரித்திருக்கிறேன்.. அதன் பின் நாம் தொடர்ந்து பேசுவோம்.. [ ஒளிப்பதிவைப் பார்த்தவர்கள், கீழே விரித்திருக்கும் அதன் காட்சிகளை பற்றிய பத்திகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்து படியுங்கள், அதனால் தான் அவற்றை வேறு வண்ண எழுத்துக்களில் எழுதியுள்ளேன்.. ]


"சார்.. சாமி சிலை பாருங்க சார்.. சாமி சிலை..", என்றவாறே சுவாமி சிலைகளை தள்ளுவண்டியில் வைத்தபடி ஒருவன் விற்றுக் கொண்டிருக்கிறான். தவறுதலாக ஒரு சிலை கீழே விழுந்து உடைந்து விடுகிறது.. பின்னணியில், "குறையொன்றும் இல்லைக் கண்ணா.." என்ற பாடல் ஒலிக்க, "புரோக்கன் காட்" என்கிற தலைப்புடன் படம் தொடங்குகிறது..

"தினமும் இதே வேலை..", என்று குறைபட்டுக் கொண்டே உடைந்த சிலையை எடுத்து வண்டியின் கீழே போடுகிறான்.. அப்போது சிலை வாங்க ஒருவர் வருகிறார்.

"சார்.. சிலை பாக்குறீங்களா சார்.. சிலை..! பெரிய சிலையெல்லாம் இருநூறு ரூவா சார்.. சின்ன சிலையெல்லாம் நூறு ரூவா சார்..", என்று அவரிடம் தனது வியாபாரத்தை தொடர்கிறான்.

உடைந்ததால் வண்டியின் கீழே போடப்பட்ட சிலை ஒன்றை அவர் சுட்டிக் காட்டி, "அத பாக் பண்ணுங்க.." என்கிறார்.

"இதையா.. அது உடைஞ்சிருக்கு சார்..", என்று சொல்லியபடியே அந்த வியாபாரி வண்டியின் மேல் இருக்கும் உடையாத சிலைகளை காண்பித்து, "சார்.. இங்க பாருங்க சார்.. இதெல்லாம் நல்ல சிலைகள் சார்.. அழகழகா இருக்கு சார்.." என்கிறான்.

"அதுவும் அழகா தாங்க இருக்கு.. நீங்க அதையே பாக் பண்ணுங்க.." என்கிறார் அவர்.

"என்ன சார்.. அது உடைஞ்ச சிலை சார்.. அதெல்லாம் யாரும் வாங்க மாட்டாங்க சார்..", என்றவாறே உடைந்த அந்த சிலையை எடுத்து பாக் பண்ணுகிறான்.

"சார்.. ஏதோ உடைஞ்ச சிலைங்கிறதுக்காக ஓசிக்கு எல்லாம் தர முடியாது.. ஒரு அம்பது ரூவா குடுங்க.." என்றவாறே அந்த சிலையை அவரிடம் கொடுக்கிறான். அவர் சிலையை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறார். எண்ணிப் பார்க்கையில் இருநூறு ரூபாய் இருக்கிறது. "என்ன சார்.. இருநூறு ரூபாய் குடுக்குறீங்க..?", என்று வியப்புடன் அவன் கேட்கிறான்.

"வச்சுக்கோங்க.. வச்சுக்கோங்க.. எல்லாம் ஒரே சாமி தானங்க..", என்று சொல்லி விட்டு அந்த சிலையை எடுத்துக் கொண்டு அவர் நடக்க ஆரம்பித்து விடுகிறார். போகும் அவரை அந்த வியாபாரி வியப்பாய் பார்க்கிறான். அப்போது காட்சி மாறுகிறது.. அவர் நடப்பதை காண்பிக்கும் போது தான் தெரிகிறது, அவரால் சாதாரண மனிதனைப் போல நேராக நடக்க முடியாமல் சற்றே சாய்ந்தபடி ஒற்றைக் காலை இழுத்து தான் நடக்க முடியும் என்பது.

அவர் செல்வதை பார்த்தபடியே, அந்த வியாபாரி வண்டியின் கீழே போட்டிருக்கும் உடைந்த சிலைகளை எடுத்து தூசு தட்டி வண்டியின் மேல் மற்ற சிலைகளுடன் சமமாக வைத்து, "சார்.. சாமி சிலை வாங்கிக்கிறீங்களா சார்..?" என்றவாறு தனது வியாபாரத்தை தொடர்கிறான்.

உடைந்த சாமி சிலையொன்று மற்ற சிலைகளுடன் சமமாக ஒருபுறம் இருக்க, மறுபுறம் சாலையில் அவர் சிலையுடன் நடந்து செல்ல, " ஒரு சரிசமமான வாய்ப்பு என்பது மில்லியன் சலுகைகளுக்கு நிகரானது" என்கிற எழுத்துக்களுடன் காட்சி முடிவடைகிறது..



பல லட்சம் சலுகைகள் கொடுப்பதை விட ஒரு சரிசமமான வாய்ப்பு கொடுப்பது எவ்வளவோ மேலானது என்கிற கருத்தை மிகவும் அழுத்தமாக சொல்லும் இக்குறும்படத்தை பார்த்து முடித்தவுடன் நிச்சயமாக பார்த்தவர் மனதில் ஆழமான ஒரு பாதிப்பை இவ்வொளிப்பதிவு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கைகால் முதல் எல்லாமே நன்றாக இருந்தால் தான் கடவுளையே கண் கொண்டு பார்க்கவும் கையெடுத்து கும்பிடவும் முன் வருகின்றனர் நம் மக்கள் என்று தான் எனக்கு தோன்றியது இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவுடனேயே. எல்லாம் நன்றாக இருந்தால் மட்டுமே கடவுள் என்று சொல்லத் தோன்றுகிறது நம்மவர்களுக்கு. இல்லையென்றால் அது வெறும் உடைந்த சிலையாகி விடுகிறது.. கடவுளுக்கே அந்த கதியென்றால் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது..? ஆனால் பணத்திற்கு அந்த கதியில்லை.. எவ்வளவு தான் கிழிந்து இருந்தாலும் அதன் மதிப்பை குறைத்து நம்மவர்கள் எடை போடுவதில்லை..

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, "ஏன் கடவுள் தரத்தில் (quality) கவனம் செலுத்தாமல் எண்ணிக்கையில் (quantity) மட்டுமே கவனம் செலுத்துகிறார்..?" என்பதான கண்ணோட்டத்தில் "Is God concentrating on quantity than quality..?" என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். மாற்றுத் திறன் பொருந்தியவர்கள் படக்கூடிய கஷ்டங்களை எண்ணி எழுதிய பதிவு அது. "ஒருவரை பார்வையில்லாதவராகவும், மற்றொருவரை கேட்கும் திறன் இல்லாதவராகவும், இன்னொருவரை பேச இயலாதவராகவும் என்று மூன்று மனிதர்களை படைப்பதற்கு பதிலாக எல்லா திறன்களையும் கொண்ட ஒரே ஒரு மனிதனை மட்டுமே நீ படைக்கலாமே..?", என்று கடவுளிடம் கேட்க வேண்டுமென்று தோன்றியது.

அந்த பதிவை படித்துவிட்டு என்னுடைய தோழி ப்ரீத்தி சொன்ன கருத்து நான் நினைத்திருந்த சில விஷயங்களை அப்படியிருக்காது என்று யோசிக்க வைத்தது. இதுவரை சப்தங்களை கேட்டேயிராத ஒருவருக்கு அத்திறன் இல்லாதது பெரிய கஷ்டம் எதையும் கொடுக்காது என்று சிந்திக்க வைத்தது. காட்சிகள் எதையுமே பார்த்தேயிராத ஒருவருக்கு பார்க்க முடியும் என்பது தெரியாதவரை பார்க்க வேண்டும் என்பதான ஆசை கூடத் தோன்றாது. அவரை பொறுத்தவரையில் அது கண்டிராத ஒன்று. நாம் காட்சிகளை பார்த்தே பழகி விட்டதால், "திடீரென்று பார்க்க முடியாமல் போய்விட்டால்..?" என்பதான சிந்தனையில் தான், 'பார்க்க இயலாத அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்' என்று நமக்கு யோசிக்க தோன்றுகிறதே தவிர, உண்மையில் அவர்களும் அதே போல முதலில் யோசிப்பார்களா என்பது சந்தேகமே.

எதற்காக "முதலில் யோசிப்பார்களா" என்னும் வார்த்தைகளை உபயோகிக்கிறேன் என்றால், 'இது ஒரு குறை'யென்றே சிந்தித்திராத அவர்களிடம், "உங்களிடம் இது இல்லை'யென்று நாம் தான் அவர்களை அப்படி பல நேரங்களில் சிந்திக்க வைத்து விடுகிறோம்.

பொதுவாகவே இழப்பென்பதோ குறையென்பதோ இதுவரை இருந்து இப்போது இல்லாமல் போனாலோ அல்லது வேறு ஒன்றுடன் ஒப்பிடப்படும் போதோ மட்டுமே தோன்றுவது. நாம் நம்மை மற்றவர்களுடன் அவ்வாறு ஒப்பிட ஆரம்பித்தோமென்றால் நிச்சயமாக இங்கு இருக்கும் ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் குறைபட்டவர்களே.. சலுகைகள் என்னும் பெயரில், "என்னிடம் இருக்கும் ஒன்று உங்களிடம் இல்லை" என்பதை சொல்லி அவர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக சிந்திக்க வைக்கவும், குறை கொண்ட ஒருவருக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் தமது புகழை உயர்த்திக் கொள்வதான ஆதாய நோக்கத்துடனேயே தான் இன்று பல விஷயங்கள் நடக்கின்றன.

அதற்காக மாற்றுத் திறன் பொருந்தியவர்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நாம் அவர்கள் கஷ்டப்படுவதாக நினைக்கும் சில விஷயங்கள் அவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள அவர்களுக்குள் வேறு பல திறமைகள் இருக்கின்றது என்பது தான் உண்மை. அதனால் தான் "மாற்றுத் திறனாளிகள்" என்கிற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது தான் சரியான வார்த்தைகள். முதன் முதலில் எனது அலுவலக நோட்டீஸ் போர்டில் "Opportunities for 'differently' abled people" என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது, "அடடா எவ்வளவு சரியாக சொல்லியிருக்கிறார்கள்" என்று தோன்றியது. தாம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை தான் யாருமே எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அதற்கொன்றும் விதிவிலக்கல்லவே..


பின்குறிப்பு: இது என்னுடைய நூறாவது பதிவு.. ஆங்காங்கே சில உப்பு சப்பான மொக்கை பதிவுகளை எழுதியிருந்தாலும் கூட எண்ணிக்கையை கூட்டும் நோக்கத்துடன் அவற்றை நான் எழுதாததால் "நூறு" எண்ணிக்கையை தொட்டதில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு தூரம் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை விட இன்னும் வெகு தூரம் போக வேண்டும் என்பதான ஆசை எப்போதுமே என் நெஞ்சில் உண்டு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் நிச்சயமாக "followers" தான். அதனால் தான் "உயிரூற்றுபவர்கள்" என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அணைய எத்தனித்த வேளைகளிலெல்லாம் உயிரூற்றிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.. பார்ப்போம் இது எவ்வளவு தூரம் தொடர்கிறதென்று!! :-)

Thursday, December 9, 2010

தானாக ஒட்டிக் கொள்ளும் தவிப்புகள்..


Photo, originally uploaded by Sadia Rahman.
தனித்திருக்கும் வேளைகளில் அனுமதி கேட்காமலேயே தவிப்புகள் சில தானாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. எதேச்சையாய் செய்தித்தாள் புரட்டும் போது தட்டுப்பட்டு மனதை பதற வைக்கும் செய்திகள், வழி பயணங்களில் பார்வையில் பட்டு நெஞ்சில் சுமையாய் ஏறிக் கொள்ளும் காட்சிகள், விழிநீர் வழிந்தப் பின்னும் கூட கருவிழிகளுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் காயத்தின் சுவடுகள்.. இன்னும் எத்தனையோ.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..

வெவ்வேறு பரிமாணங்களில் அவ்வப்போது அடிமனதை அரிக்கும்படியாக ஏதாவதொன்று நடந்து கொண்டோ, பார்வையில் பட்டு கொண்டோ அல்லது காதில் விழுந்து கொண்டோ தான் இருக்கின்றது. பல நேரங்களில் விழிமூடி வெகுநேரமானப் பின்னும் கூட உறக்கம் தட்டுப்படுவதேயில்லை. மற்ற சில நேரங்களிலோ உறக்கத்திலும் கூட தொடர்கின்றன அப்பாதிப்புகளைப் பற்றிய மனதினுள்ளான சலசலப்புகள்..

'கண்டும் காணாமலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று போகும் மனமோ அல்லது எளிதாக சிலவற்றை உதறியெறிந்து விட்டு அடுத்தது என்னவென்று சிந்தித்தபடி முன்னோக்கிச் செல்லும் குணமோ நமக்கு மட்டுமேன் இல்லை'யென்று தனித்திருக்கும் வேளைகளில் யோசித்தபடி தவித்ததுண்டு. எல்லோரும் உதறிவிட்டு முன் செல்லும் காட்சிகளையும் அக்காட்சிக்கு உள்ளானவர்களையும் 'கண்டுக் கொள்ள ஒருவராவது வேண்டுமே'வென்று என்னைக் கேட்காமலேயே சுமைகள் சிலவற்றை ஏற்றிக் கொள்கின்றது மனம்.

உடலில் ஏறிக் கொள்ளும் சுமைகளில் பொதுவாக தட்டுப்படக் கூடியது அதிக அளவிலான கனமும், அதை சார்ந்த உடல் வலியும் மட்டுமே. நினைத்த நேரத்தில் இறக்கி வைத்து இளைப்பாறுவதோ அல்லது தைலம் தேய்த்து வலி களைவதோ எளிதான காரியமாகி விடுகிறது. இன்னும் சில நேரங்களில், நமக்கு எதற்கிந்த சுமையென்று தூக்கி எறிந்து விட்டு போவதும் கூட எளிதாகி விடுகிறது..

ஆனால் மனதினுள் ஏறி உட்கார்ந்துக் கொள்ளும் சுமைகளையோ மூச்சு முட்டினாலும் கூட இறக்கி வைக்க முடிவதேயில்லை. அச்சுமைகளின் கனமோ அல்லது அவை ஏற்படுத்தும் வலியோ காலம் பல கடந்தாலும் கூட துளியும் குறைந்தபாடில்லை. அவை கடைசியில் கண்மூடும் வரையிலும் கூட உள்ளே இருந்தபடி ஒருவித அழுத்தத்தையும் வலியையும் நெஞ்சுக்குள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் போலும்..

கடவுளை சந்தித்தால் கேட்க நினைக்கும் பல கேள்விகளில் ஒன்று, "என் வாழ்வில் ஏற்படும் வலிகளையே தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கும் போது, பிறர் வாழ்வினது துன்பங்களை கண்டுக் கொள்ளும் மனதையும் அவர்களுடைய வலிகளை பகிர்ந்துக் கொள்ள முயலும் குணத்தையும் எனக்கு ஏன் கொடுத்தாய்..?" என்பது தான்.

Monday, December 6, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (15): பார்க்கத் தவறும் கோணம்..


Photo, originally uploaded by ganglionn.
"மற்றவருக்காக உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்", என்னும் கருத்தை வலியுறுத்த ஜென் கதையொன்றை சொல்வார்கள். அந்த கதையை நீங்கள் படித்திருக்க கூடும். அக்கதையிலிருக்கும் சொல்லப்படாத இன்னொரு கோணத்தை சொல்ல வேண்டுமென்று தோன்றியது எனக்கு. அதனால் தான் இந்த பதிவு..

முதலில் அக்கதையைப் பார்ப்போம்.. அதன் பிறகு தொடர்ந்து பேசுவோம்..

ஒரு துறவியும் அவருடைய சிஷ்யனும் காட்டின் வழியே பயணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். போகும் வழியில் ஒரு ஆறு அவர்கள் கண்ணில் படுகிறது. தாகம் தீர்த்துக் கொள்வதற்காக அந்த ஆற்றை நெருங்கி அதிலிருக்கும் நீரை பருகுகின்றனர் இருவரும்.

நீர்க் குடித்து விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது, தேள் ஒன்று அந்த ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி கவனித்து விடுகிறார். உடனே அதை காப்பாற்றும் பொருட்டு வேகமாக அத்தேளை கையில் பிடித்து கரையில் விட முயற்சி செய்கிறார். நீரை விட்டு வெளியே அந்த தேளை அவர் எடுத்தவுடன் அது அவரை கொட்டி விடுகிறது. "ஆஆ..", என்று சொல்லி தனது கையை அவர் உதற, மீண்டும் தேள் ஆற்றிலேயே விழுந்து விடுகிறது.

அதை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அத்துறவி கரையோரத்தில் கிடக்கும் ஒரு குச்சியை எடுத்து, அதன் உதவியுடன் அந்த தேளை தூக்கி கரையில் விடுகிறார். பின்பு அத்துறவியும் அவருடைய சிஷ்யனும் தொடர்ந்து நடந்து செல்கின்றனர். சிஷ்யனால் நீண்ட நேரத்திற்கு தான் கேட்க நினைத்த கேள்வியை அடக்கி வைக்க முடியவில்லை.

"குருவே, காப்பாற்ற முற்பட்ட உங்களை அந்த தேள் கொட்டிவிட்டதே. பிறகும் எதற்காக அதை காப்பாற்றினீர்கள்..?" என்று அவன் கேட்கிறான்.

"என்ன செய்வது.. கடவுள் அந்த தேளிற்கு அப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான், எனக்கு இப்படியொரு குணத்தை கொடுத்திருக்கிறான்", என்று அந்த துறவி பதிலளிக்கிறார்.


"தீமை செய்வது அந்த தேளின் குணமாக இருக்கிறது என்பதற்காக நன்மை செய்யும் எனது குணத்தை நான் எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்", என்னும் அர்த்தத்தில் சிஷ்யனிடம் பேசி கைத்தட்டல் வாங்கி விடுகிறார் அந்த துறவி..

ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே இக்கதையை நாம் பார்க்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குள் எழுந்தது. நாம் பார்க்கத் தவறும் இன்னொரு கோணமும் இருக்கலாமென்று எனக்குப்பட்டது. "ஒருத்தர் உங்களுக்கு தீமை செய்கிறார்கள் என்பதற்காக உங்களது நல்ல சில குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமே" என்பது நல்ல கருத்தாக இருந்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு கருத்து சொல்லி விட்டோமோ என்பதான சிந்தனை எனக்கு வந்தது. சொல்லப்படாத அந்த கதையின் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்..

தண்ணீரில் விழுந்து விட்ட தன் கணவனை எப்படி காப்பாற்றுவது என்று கரையில் துடித்துக் கொண்டிருந்த அந்த தேளின் துணை, துறவி அந்த தேளைக் காப்பாற்றுவதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்கிறது. காப்பாற்றப்பட்ட தேள் தன் துணையிடம் வந்து அதை கட்டிக் கொள்கிறது.

"உங்க உயிரை காப்பாத்தின அந்த துறவியை எதுக்காக கொட்டினீங்க..?", என்று அந்த தேளிடம் அதன் துணை கேட்கிறது. "என் உயிரை காப்பாத்துற அவருக்கு உடனே நன்றி சொல்லனும்னு தோனுச்சு, அதான் அப்படி செய்தேன். என்னை காப்பாதிட்டாருங்கிற சந்தோசத்துல நாம கொட்டினா அவருக்கு வலிக்குமே அப்படிங்கிறத மறந்திட்டேன்.. விஷம் இல்லாம தான் கொட்டினேன் அவரை.. எனக்கு வேற எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல", என்று சொன்னதாம் அந்த தேள்.


அந்த கதைக்கு இப்படியொரு தொடர்ச்சியை சொல்ல வேண்டுமென்று எனக்கு தோன்றியதற்கு காரணங்கள் உண்டு.

பல நேரங்களிலே, தான் நல்லவன் மற்றும் உயரிய கொள்கைகளை உடையவன் என்பதான ஒரு சிறிய ஆணவம் கலந்த எண்ணங்களும் சிந்தனைகளும் நம்மை சூழ்ந்துக் கொள்வதால் நிகழ்வினுடைய உண்மையான சில விஷயங்களை நாம் கவனிக்காமல் தவறவிட்டு விட வாய்ப்புகள் உண்டு.

தேளின் குணம் எப்போதுமே கொட்டுவது என்று தேளை பற்றிய முத்திரை அத்துறவியினுடைய உள்ளத்தில் பதிந்து விட்டதாலும், தாம் தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்பவன் என்பதான எண்ணம் அவருக்குள் இருப்பதாலும் தான் அவர் சற்று அவசரப்பட்டு தேளின் குணம் அப்படியென்று சொல்லிவிட்டாரோ என்று தோன்றுகிறது. தேள் கொட்டியது வலித்தது என்றாலும் கூட,' நாம் இன்னமும் உயிரோடு நடந்துக் கொண்டிருக்கிறோமே, தேளின் விஷம் ஏன் நம் உடம்பில் ஏறவில்லை", என்று அந்த துறவி யோசித்திருந்தார் என்றால், அந்த தேள் ஒருவேளை அதற்கு தெரிந்த விதத்தில் நன்றி சொல்கிறதோ என்று அவர் சிந்தித்து இருக்க கூடும். அதற்காக முதல் பகுதியினுடைய கருத்து தவறென்று நான் சொல்ல வரவில்லை.

பொதுவாகவே ஒரு மனிதரை, "இவர் கெட்டவர்" என்பதான முத்திரை குத்தி அவரை அந்த கண்ணோட்டத்திலேயே பல நேரங்களில் பார்க்க நம் கண்களும் மனமும் பழகி விடுகிறது. ஒருவரின் குணமறிந்து அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும் கூட, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கும் குணமானது அவர் திருந்தினாலும் கூட நாம் அதை கண்டுக் கொள்ள முடியாமல் செய்து விடக் கூடும்.

எப்போதும் யார் எது செய்தாலும் சூழ்நிலைகளை சற்று ஆராய்ந்து, அவர்கள் அவ்வாறு செய்வதற்கு என்ன காரணமிருக்க கூடும் என்று ஒவ்வொரு முறையும் சற்று உள்ளார்ந்து சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.. முன்பு நடந்த நிகழ்வுகளின் உதவியுடனோ அல்லது ஒருவர் எப்படிப்பட்டவர் என்று நமது உள்ளத்திற்குள் நாம் கொண்டிருக்கும் முத்திரையின் காரணமாகவோ சூழ்நிலைகளை ஆராயாமல் அவசரப்பட்டு முடிவெடுப்பதை முடிந்தவரை தவிர்ப்போமே..!!

Thursday, December 2, 2010

ஒரு அவசரம்


Random Bangalore Traffic, originally uploaded by Peter Richmond.
அது ஒரு குளிர்கால மாலை நேரம். மிதமாக வீசிக் கொண்டிருந்த வெயில் வடிந்திருந்த போதிலும் வெளிச்சத்தின் சுவடு இன்னும் மிச்சமிருந்தது. வேலைகள் அதிகமில்லாததால் சீக்கரமே வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. பெரும்பாலானவர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் அந்நேரத்திற்கு சாலையில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்திருந்தது. என்றாலும் கூட பைக்கை ஓட்டுகையில் தேகத்தில் மோதும் எதிர்த்திசைக் காற்றில் குளுமை கலந்திருந்தபடியால் எப்போதும் மனதிற்குள் எழும் சலிப்பும் எரிச்சலும் அன்று எழவில்லை. அம்மாலை நேரத்துக் குளிர்க்காற்று ரொம்பவே பிடித்துப் போய்விட்டதால் தலைக்கவசத்தில் இருந்த முகம் காக்கும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டபடி பொழுதில் கலந்திருந்த அழகையும் தேகத்தில் மோதும் காற்றையும் ரசித்தவாறே பைக்கை மிதமான வேகத்தில் வீடு நோக்கி செலுத்தினேன்.

பாதி தூரம் வந்திருப்பேன். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் சப்தம் எனக்கு பின்புறம் தொலைதூரத்திலிருந்து லேசாய் கேட்க ஆரம்பித்தது. சைரனை அலறவிட்டபடியே வரும் ஆம்புலன்ஸ் எப்போதுமே எனக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அன்றும் அப்படித் தான். தூரத்தில் கேட்ட சைரன் சப்தம் சில வினாடிகளில் அதிகரித்தவாறே என்னை நெருங்க, 'வேதனையில் யாரோ' என்று நெஞ்சுக்குள் படபடப்பு அதிகரித்தது. சாலையின் நடுவில் போய்க் கொண்டிருந்த வாகனங்கள் சில இடதுபுறம் ஒதுங்கி வழிவிட, இன்னும் சில வாகனங்களோ எனகென்னவென்று போய்க் கொண்டிருக்க மிகவும் சாமர்த்தியமாக கிடைத்த இடைவெளியில் முடிந்தமட்டும் வேகத்துடன் சீறி முன்சென்றது அந்த ஆம்புலன்ஸ்.

அந்த ஆம்புலன்ஸ் என்னை கடந்த சில வினாடிகளிலேயே டிராஃபிக் சிக்னல் ஒன்று வந்து விட்டது. நாங்கள் செல்ல வேண்டிய வழியில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்ததால் எல்லா வாகனங்களும் தேங்கி நின்றிருக்க வழி கிடைக்காது சைரனை அலறவிட்டபடியே என்ஜினை உறுமிக் கொண்டு பின்னால் தங்கி விட்டது. என் பைக்கையும் அதன் அருகிலேயே நிறுத்தும்படியாகி விட்டதால் அந்த சைரன் சப்தம் என் காதுகளை நிரப்ப, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உயிர் போகும் அவஸ்தையை உள்ளுக்குள் என்னால் உணர முடிந்தது. 'போக முடியாம நிக்குதே ஆம்புலன்ஸ்', என்று என் மனதிற்குள் ஒரு பதற்றம் பற்றிக் கொண்டது.

ஆம்புலன்சின் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்ற, பைக்கில் அமர்ந்தபடியே லேசாக எம்பி அதன் கண்ணாடி ஜன்னல்களை பார்க்க முயன்றேன். திரை சீலை மூடியிருக்க, லேசாக விலகியிருந்த ஓரத்தில் வெள்ளையுடையில் யாரோ வீற்றிருப்பது தெரிந்தது.

"அதான் ஆம்புலன்ஸ் இப்புடி அலறுதே. சட்டுன்னு இந்த சைடுக்கு கிரீன் சிக்னல் போட வேண்டியது தான..", என்று என் மனதிற்குள் தோன்றியது. சிக்னலில் டிராபிக் போலீஸ் யாரும் தென்படுகிறார்களா என்று சாலையை மேய்ந்தேன். அப்படி யாரும் என் கண்களில் தட்டுப்படவில்லை. சற்று உற்றுப் பார்த்ததில் சிக்னலில் நின்று போக்குவரத்தை கவனிக்க வேண்டிய ட்ராஃபிக் போலீஸ்காரர் ஒருவர் சற்று தொலைவில் தள்ளி நின்றபடி வேலை நேரத்தில் அலைபேசியில் கதையளந்துக் கொண்டிருந்தது தெரிந்தது. எப்போதும் கொஞ்சமாக வரும் கோபம் அன்று சற்று அதிகமாகவே வந்தது. 'பொறுப்பில்லாத நாய்ங்க', என்று மனதிற்கு திட்டினேன்.

நான் மனதிற்குள் திட்டியது அருகிலிருப்பவன் காதில் விழுந்து விட்டது போலும். நான் திட்டி முடிப்பதற்குள், "யூஸ்லெஸ் ஃபெல்லோஸ், இவனுகளையெல்லாம் கட்டி வச்சு அடிக்கணும். வேலைய பாக்காமா போன்ல எவகிட்டயோ கொஞ்சிகிட்டு இருக்கான் பாரு. பாஸ்டர்ட்..", என்று சப்தமாகவே அவன் சொன்னான். சொன்னதோடு நில்லாமல் ஹார்னை விடாமல் அழுத்தவும் ஆரம்பித்தான்.

'என்னை விட உணர்ச்சிவசப்படுபவன் போல', என்று எனக்குள்ளேயே நான் சொல்லிக் கொண்டேன். அவனோடு சேர்ந்து நானும் என்னால் முடிந்த எதையாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. எனது பைக்கின் ஹார்னை நானும் விடாது அழுத்த ஆரம்பித்தேன். ஏற்கனவே அலறிக் கொண்டிருக்கும் சைரன் சப்தத்துடன் எங்களது ஹார்ன் சப்தமும் சேர்ந்துக் கொண்டு எங்களுக்கு முன்னால் இருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்த முகத்தை சுளித்துக் கொண்டு சிலர் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். என் அருகில் இருந்தவனோ ஆம்புலன்சை கை காட்டியபடியே முன்னாடி செல்லுங்கள் என்பதாக அவர்களுக்கு சைகை செய்தான். பலர் அதை அலட்சியப்படுத்தி மீண்டும் திரும்பிக் கொள்ள, அவர்களில் சிலர் எங்களுடன் சேர்ந்துக் கொண்டு ஹார்னை அழுத்த ஆரம்பித்தனர். நிச்சயமாக எங்களது ஹார்ன் சப்தம் ஆம்புலன்சின் சைரனை விட பெரிதாக எழவில்லையென்றாலும் கூட எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை செய்கிறோம் என்பதான நிறைவு நெஞ்சுக்குள் ஏற்பட்டது.

சிக்னலின் முன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களில் சிலவும் எங்களோடு சேர்ந்துக் கொண்டன. பீறிட்டு எழுந்த ஆம்புலன்சின் சைரனும், பல வாகனங்களின் ஹார்ன் சப்தங்களும் அலைபேசியில் ஒன்றியிருந்த போலீஸ்காரரின் கவனத்தை கலைத்தது. அப்போது தான் ஆம்புலன்ஸை கவனித்ததை போன்று பாவனை செய்தபடி போலிப் பதற்றம் உடம்பில் தொற்றிக் கொள்ள வேகமாய் ஓடி வந்தவாறே கிரீன் சிக்னல் விழுந்து போய்க் கொண்டிருந்த வாகனங்களை கைக் காட்டி நிறுத்திவிட்டு எங்கள் பக்கம் பச்சை விளக்கு ஒளிரும்படியாக சிக்னலை மாற்றினார்.

இதனிடையில் ஆம்புலன்சிற்கு எப்படியும் வழி கிடைத்து விடும் என்பதால் அதன் பின்னாலேயே போனால் போக்குவரத்து நெரிசலை எளிதாக தவிர்த்து சென்று விடலாம் என்னும் எண்ணத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, 'என்ன மனுஷங்களோ..?' என்றொரு எண்ணம் என் மனதிற்குள் எழுந்தது.

'உயிருக்கு ஒருத்தன் போராடிட்டு இருக்குறப்ப கூட அதுல நமக்கு என்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு எப்புடி இவங்களால இப்புடி சுயநலமா யோசிக்க முடியுது', என்று தோன்றியது.

கிரீன் சிக்னல் கிடைத்ததும் முன்னால் நின்றிருந்த வானங்கள் பல வேகமாக சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கி ஆம்புலன்ஸ் போக வழி விட்டுக் கொண்டிருக்க ஒரு சில வாகனங்கள் மட்டும், 'இது தான் சான்ஸ்' என்று கிடைத்த வழியில் ஆம்புலன்ஸை முந்திக் கொண்டு போகும் நோக்கத்துடன் வழிவிடாமல் வேகமாக சீறிப் பாய்ந்தன.

'இவனுங்கல்லாம் என்ன ஜென்மங்க. எப்புடி இவனுங்களால இப்படிலாம் நடந்துக்க தோணுது..?', என்று ஆதங்கப்பட்டது மனது. 'உயிருக்கு போராடிட்டு இருக்குற இன்னொரு மனுஷனுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழிவிட கூட முடியாத அளவுக்கு அப்புடியென்ன அவசரம் இவனுங்களுக்கு..?', என்று எனக்கு தோன்றியது..

"இவனுங்கள எல்லாம் திருத்தவே முடியாது. அவனவனுக்கு வந்தா தெரியும்", என்று அவர்களை நான் மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, கிடைத்த வழியில் ஆம்புலன்சை முந்திக் கொண்டு வேகமாக சீறிப் பாய முயன்ற பைக் ஒன்று லேசாய் தடுமாற, அதை சீர் செய்வதற்காக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன் வேகத்தை சட்டென்று குறைத்தான். கிடைத்த வழியில் அவனைத் தொடர்ந்து சீறிப் பாய முயன்ற கார் ஒன்று அவன் வேகத்தை குறைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் வேகமாக முன்னோக்கி சென்று அந்த பைக்கை பின்புறம் லேசாக தட்ட, தடுமாறிய பைக்கை நிலைப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிலைகுலைந்து கீழே சரிந்தான். பைக் ஒருபுறம் சரிய அவனோ தூக்கி எறியப்பட்டு தனது உடம்பை சாலையில் தேய்த்துக் கொண்டே தூரப் போய் விழுந்தான்.

சட்டென்று கிறீச்சிட்ட பிரேக் சப்தங்கள்.. சின்னதாய் ஒரு அலறல்.. தொடர்ந்திட்ட பதற்றம்.. பதறியபடியே அவனைத் தூக்க ஓடிய காலடிகள்.. ஸ்டைலுக்காக தாடையை காக்கும்படியான தலைக்கவசம் அணியாமல் வெறும் தலையை மட்டுமே மூடும் தொப்பி போன்ற தலைக்கவசத்தை அவன் அணிந்திருந்ததால் விழுந்ததில் தாடைப் பகுதி பிளந்திருக்க நிறைய ரத்தத்தை சாலையில் கொட்டியவாறே கீழே கிடந்தான். அவனது உடம்பின் கைகால் மூட்டுப் பகுதிகளில் சதை பிய்த்தெறியப்பட்டிருக்க, எல்லா இடங்களிலும் ரத்தம் வேகமாய் வடிந்துக் கொண்டிருந்தது. அவனால் எந்திரிக்க முடியவில்லை. வலியில் கொஞ்சம் சப்தமாகவே முனகினான். கிட்டத்தட்ட நினைவிழக்கும் தருவாயிலிருந்தான்.

நடந்திட்ட விபத்தின் நிமித்தம் முன்செல்ல முடியாது அந்த ஆம்புலன்சும் அங்கேயே நின்று விட்டதால், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சிலரின் உதவியுடன் அவசர அவசரமாக அவன் அந்த ஆம்புலன்சிலேயே ஏற்றப்பட, சைரனை வேகமாக அலறவிட்டபடியே கிளம்பிய ஆம்புலன்சை முந்திக் கொண்டு போக இம்முறை யாரும் சீறிப் பாயவில்லை. எல்லா வாகனங்களும் ஒதுங்கி வழிவிட எளிதாக முன்னோக்கி வேகமாக சென்றது அந்த ஆம்புலன்ஸ்.