தனித்திருக்கும் வேளைகளில் அனுமதி கேட்காமலேயே தவிப்புகள் சில தானாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. எதேச்சையாய் செய்தித்தாள் புரட்டும் போது தட்டுப்பட்டு மனதை பதற வைக்கும் செய்திகள், வழி பயணங்களில் பார்வையில் பட்டு நெஞ்சில் சுமையாய் ஏறிக் கொள்ளும் காட்சிகள், விழிநீர் வழிந்தப் பின்னும் கூட கருவிழிகளுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் காயத்தின் சுவடுகள்.. இன்னும் எத்தனையோ.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
வெவ்வேறு பரிமாணங்களில் அவ்வப்போது அடிமனதை அரிக்கும்படியாக ஏதாவதொன்று நடந்து கொண்டோ, பார்வையில் பட்டு கொண்டோ அல்லது காதில் விழுந்து கொண்டோ தான் இருக்கின்றது. பல நேரங்களில் விழிமூடி வெகுநேரமானப் பின்னும் கூட உறக்கம் தட்டுப்படுவதேயில்லை. மற்ற சில நேரங்களிலோ உறக்கத்திலும் கூட தொடர்கின்றன அப்பாதிப்புகளைப் பற்றிய மனதினுள்ளான சலசலப்புகள்..
'கண்டும் காணாமலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று போகும் மனமோ அல்லது எளிதாக சிலவற்றை உதறியெறிந்து விட்டு அடுத்தது என்னவென்று சிந்தித்தபடி முன்னோக்கிச் செல்லும் குணமோ நமக்கு மட்டுமேன் இல்லை'யென்று தனித்திருக்கும் வேளைகளில் யோசித்தபடி தவித்ததுண்டு. எல்லோரும் உதறிவிட்டு முன் செல்லும் காட்சிகளையும் அக்காட்சிக்கு உள்ளானவர்களையும் 'கண்டுக் கொள்ள ஒருவராவது வேண்டுமே'வென்று என்னைக் கேட்காமலேயே சுமைகள் சிலவற்றை ஏற்றிக் கொள்கின்றது மனம்.
உடலில் ஏறிக் கொள்ளும் சுமைகளில் பொதுவாக தட்டுப்படக் கூடியது அதிக அளவிலான கனமும், அதை சார்ந்த உடல் வலியும் மட்டுமே. நினைத்த நேரத்தில் இறக்கி வைத்து இளைப்பாறுவதோ அல்லது தைலம் தேய்த்து வலி களைவதோ எளிதான காரியமாகி விடுகிறது. இன்னும் சில நேரங்களில், நமக்கு எதற்கிந்த சுமையென்று தூக்கி எறிந்து விட்டு போவதும் கூட எளிதாகி விடுகிறது..
ஆனால் மனதினுள் ஏறி உட்கார்ந்துக் கொள்ளும் சுமைகளையோ மூச்சு முட்டினாலும் கூட இறக்கி வைக்க முடிவதேயில்லை. அச்சுமைகளின் கனமோ அல்லது அவை ஏற்படுத்தும் வலியோ காலம் பல கடந்தாலும் கூட துளியும் குறைந்தபாடில்லை. அவை கடைசியில் கண்மூடும் வரையிலும் கூட உள்ளே இருந்தபடி ஒருவித அழுத்தத்தையும் வலியையும் நெஞ்சுக்குள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் போலும்..
கடவுளை சந்தித்தால் கேட்க நினைக்கும் பல கேள்விகளில் ஒன்று, "என் வாழ்வில் ஏற்படும் வலிகளையே தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கும் போது, பிறர் வாழ்வினது துன்பங்களை கண்டுக் கொள்ளும் மனதையும் அவர்களுடைய வலிகளை பகிர்ந்துக் கொள்ள முயலும் குணத்தையும் எனக்கு ஏன் கொடுத்தாய்..?" என்பது தான்.
அவை கடைசியில் கண்மூடும் வரையிலும் கூட உள்ளே இருந்தபடி ஒருவித அழுத்தத்தையும் வலியையும் நெஞ்சுக்குள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் போலும்..
ReplyDeleteஉண்மை தான் :((
சரி தான் நண்பா...
ReplyDeleteI too want to ask the same question to God..!!
ReplyDeleteகடவுளிடம் கேட்கத் தகுந்த கேள்வி தான்.
ReplyDeleteசக்தி,
ReplyDeleteஅருண் பிரசாத்,
ஜெயா,
Froila,
நன்றி நண்பர்களே.. :)