கதவுகள் சாத்தப்பட்டு இருந்தாலும், திறந்து விடப்பட்ட சாளரங்களின் வழியாக இடைவிடாமல் செவிகளை தாக்கிய வண்ணமே இருக்கின்றன பட்டாசுகளின் வெடிச் சப்தங்கள். மந்தமான வெளிச்சத்தில் மின்விசிறியின் சீரான விசிறல்களுக்கு கீழே கசங்கி கிடக்கும் மெத்தையிலிருந்து இன்னமும் எழுந்திருக்கவில்லை. உறக்கம் கலைக்கும் பட்டாசு சப்தங்கள் எரிச்சலுக்கு பதிலாக உற்சாகத்தையும் ஒருவித சந்தோசத்தையும் தான் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.
ஆண்டு முழுதும் உழைத்து, களைத்து, சிக்குண்டு, சிதறுண்டு, கசங்கி போய் இருக்கும் மனம் ஆசுவாசமாய் கொஞ்ச நேரம் குதூகலம் கொள்ள இப்படி சில தினங்கள் தேவைப்படத் தான் செய்கின்றன.
எத்தனையோ வயிறுகள் கொஞ்சமேனும் சுவையாக வயிற்றுக்கு சாப்பிடலாம் என்று இந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்திருக்கலாம். எத்தனையோ தேகங்கள் புத்தாடையோ புதுபிக்கப்பட்ட ஆடையோ தன்னை தழுவும் பரவச கணத்திற்காக இந்த நாளை எதிர்நோக்கி இருந்திருக்கலாம். எத்தனையோ இதயங்கள் சூன்யம் கவ்விய தனிமையிலிருந்து சில மணித்துளிகளாவது விடுதலை கிடைக்குமென்று இந்தநாளுக்காக காத்துக் கொண்டிருந்திருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் பார்த்திராத ஸ்பரிசித்திராத அணைத்துக் கொள்ளும் தொலைவில் இல்லாத தன் உறவுகளை கட்டியணைத்து உச்சிமுகர இந்த நாளுக்காக தவமிருந்திருக்கலாம்.. இப்படி இன்னும் எத்தனையோ.. ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் ஒரு சொட்டு நீர்த் துளியளவிலாவது தன் தாகம்தணித்துக் கொள்ள பண்டிகைகள் தேவைப்படவே செய்கின்றன..!!
கொண்டாடுவோம் நம்மால் முடிந்த மட்டும்.. மூச்சு முட்டலின் எல்லைத் தொட்டு இதற்கு மேலும் முடியாதென்று அயர்ந்து வீழும் வரையிலும் ஆடி பாடிக் கொண்டாடுவோம்.. இந்த வாழ்வின் குரூரங்களைத் தாண்டி எதைப் பற்றிய கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு குதூகலிப்போம்.. ஆனந்தத்தை, உறவின் இன்ப நிலையை முழுமையாக உணர்ந்து உடலின் ஒவ்வொரு அணுவும் அயர்ந்து போகும் வரை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வோம்.. இது நமக்கான தினம்.. மகிழ்ச்சி.. ஆனந்தம்.. சந்தோசம்.. பரவசம்.. குதூகலம்.. இவற்றை மட்டுமே இந்த நாள் தன் பொழுதுகளில் கரைந்தோடுவதைப் பார்த்து ரசிக்கட்டும்..
கோபம், மனஸ்தாபம், விரோதம், மனவருத்தம் எல்லாவற்றையும் விட்டு விட்டு உறவுகளின் அழகியலை முழுமையாக ஸ்பரிசித்து பரவசத்தில் திளைக்க இந்த நாள் ஒரு காரணமாக அமையட்டும்..!
பண்டிகை நாள் நல்வாழ்த்துக்கள்..!!
--
பால் ஆரோக்கியம்.
ஊக்குவிக்கும் எழுத்து நடை.... மற்றும் இந்த பதிப்பின் ஆழமும் சாரமும் அருமை.
ReplyDeleteஇவண்
அஹராதி