Saturday, November 24, 2012

கிச்சுகிச்சு


ஒரு லேடி (lady)*.. பெயர் வேண்டாம். பாவம். 'பாவம்' என்று அவர்களைப் பார்த்து சொல்ல வேண்டுமா இல்லை என்னைப் பார்த்து சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. சரி, யாருக்கோ பாவம் என்று வைத்துக் கொள்வோம். அந்த லேடி தான் எனக்கு பேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வஸ்ட்  கொடுத்தார்கள். அவர்கள் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்ததற்குமே ஒரு உள்நோக்கம்^ இருந்தது எனக்கு தெரியாமல் இல்லை.

'இருந்தாலும் பரவாயில்லை', என்று பெரிதாக~ எடுத்துக் கொள்ளாமல் அவர்களது ரெக்வஸ்ட்டை அக்சப்ட் பண்ணினேன். அதன் பிறகு அவர்கள் ஏதோ ஒரு கவிதையை (?) பேஸ்புக்கில் ஷேர் பண்ணி இருந்தார்கள். கவிதை என்னும் பெயரில் பகிரப்பட்ட அந்த வரிகள் அப்படியே அச்சு பிசகாமல் எனக்கு நினைவில் இல்லாவிட்டாலும் அதனுடைய சாரம் இது தான்:

தலைப்பு: அம்மா 

"மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தேன். எல்லோரும் மழையில் நனைந்து வந்ததற்காக என்னைத் திட்டினார்கள். அம்மா தன் சேலை முந்தானையால் என் தலையைத் துடைத்துக் கொண்டே திட்டினாள் மழையை."

"மழையைத் திட்டினாள்" என்று சொல்லாமல் "திட்டினாள் மழையை" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து எழுதி ஒரு பஞ்ச் (கவிதையிலா இல்லை முகத்திலா என்று கேட்காதீர்கள்) கொடுத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

அதை ஷேர் பண்ணி "பயங்கரமான வன்முறை இது" என்று எழுதி இருந்தார்கள். நான் 'ethu' என்று கேட்டு கமெண்ட் அடித்தேன். உண்மையிலேயே அங்கு சொல்லப்பட்டதில் எது பயங்கரமான வன்முறை என்பதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. மழையில் நனைந்து வந்ததற்காக எல்லோரும் திட்டியதா அல்லது நனைத்ததற்காக அம்மா மழையை திட்டியதா ? எது பயங்கரமான வன்முறை ?

'பயங்கரமாக' இல்லாவிட்டாலும், வன்முறை என்று சித்தரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இரண்டுக்குமே நிறைய இருந்ததால் எனக்குள் எழுந்த குழப்பம் அது. இதை பற்றி எழுத வேண்டுமென்றால் கவித்துவம், கலைத்துவம் மற்றும் எல்லா 'துவம்'களும் பொங்கி வழிய தனியாக ஒரு நீண்ட பதிவாகவே எழுதலாம். ஆனால் சொல்ல வந்த கதையின் (நிகழ்வின்) சுவாரசியம் போய்விடும் என்பதனால் நாம் மீண்டும் கதைக்கே திரும்பி விடுவோம்.

நான், "ethu", என்று கேட்டேன் அல்லவா.

"முதலில் தலைக்கவசம் அணிந்துக் கொள்ள பழகிக் கொள்' என்பதாக அந்த லேடி எனது கமெண்டிற்கு பதிலளித்தார்கள்.

'தலைக்கவசமா..? அது எதற்கு? ஒருவேளை வன்முறை நம் மேல் பாயப் போகிறதோ..?', என்று ரொம்பவே குழம்பிப் போய்விட்டேன்.

"onnume puriyala", என்று நான் பதிலளித்தேன்.

"ஒண்டும் புரியவில்லையா..? ********** (கெட்ட வார்த்தைக்கு பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு வார்த்தை)... முதலில் தமிழ் கற்றுக் கொள் என்று அர்த்தம்....." என்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டு போக, ஒன்றும் புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று வேகமாக ஓடி வந்துவிட்டேன். அவர்கள் திட்டியதற்கு கூட நான் எதுவும் பதில் சொல்லவில்லை. 'சரி போனா போறாங்க, அவங்க கிட்ட போய் என்னத்த பதிலுக்கு எதுவும் பேசிகிட்டு', என்று விட்டு விட்டேன்.

அதன் பின்பு நான் என் ஸ்டேடஸ் மெசேஜில் எதுவோ எழுதினேன். அது சம்பந்தமே இல்லாத ஏதோ ஒன்று. வேறு எதற்காகவோ தோன்றிய ஒரு கருத்தை எழுதி இருந்தேன். அந்த ஸ்டேடஸ் மெசேஜ்க்கு 'சூடு போட்டவுடன் தமிழ் தாழமிடுகிறது" என்று கமெண்ட் எழுதினார்கள். (திட்டி சூடு போட்டுட்டாங்கலாமா !!)

அவர்கள் என்னைத் திட்டியதற்கு காரணம் நான் தமிழை இங்கிலீஷ் லெட்டர்ஸ் உபயோகித்து எழுதியதால் தான் என்பது உண்மையிலேயே அப்போது தான் எனக்கே தெரிந்தது. அதாவது 'எது' என்று எழுதாமல், 'ethu' என்று எழுதி விட்டேனாம். நானும் மிகவும் அமைதியாக (?) 'நீங்க சூடு போட்டதா நெனைச்சாலும், நீங்க என்னை திட்டினது என் பார்வையில தப்பா தான் படுதுங்க' என்றேன். உண்மையிலேயே இது மட்டும் தான் சொன்னேன், மேலும் பொதுவான என்னுடைய சில கருத்துக்களை** "வித் ஆல் டியூ ரெஸ்பெக்ட்" என்று போட்டு*** தான் சொன்னேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பார்த்தால் அந்த லேடி என்னை பிளாக் (block) பண்ணி விட்டார்கள்.. ஹா ஹா ஹா..!!

அந்த லேடி தான் அவர்களாக வலிய வந்து எனக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட்  கொடுத்தார்கள். அதுவும் அவர்களுடைய ஆதாயத்திற்காகவும் அவர்களுடைய ஸ்டேடஸை காப்பாற்றிக் கொள்வதற்காகவும். அதன் பின்பு நான் எதுவுமே செய்யாவிட்டாலும் கூட அவர்களாக என்னை சூடு வைக்கும் முனைப்புடன் (இப்போது புரிகிறது எதற்காக என்னை தலைக்கவசம் மாட்ட சொன்னார்கள் என்று) என்னை திட்டி விட்டு, பின்பு அவர்களாக என்னை பிளாக் பண்ணியது தான் இந்த வாரத்தின் காமெடி.

எவ்வளவு தான் கஷ்டங்களைக் கொடுத்து வாழ்க்கையை கடினமானதாக ஆக்கினாலும், அவ்வபோது இப்படி ஏதாவது கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்க இந்த கடவுள் தவறுவதேயில்லை.

கடவுளே, நீங்க நல்லவரா கெட்டவரா..?

பின்குறிப்புகள்:

* 'பெண்' என்று சொன்னால் கேர்ள் என்று அர்த்தம் ஆகும், ஆனால் அவர்கள் கேர்ள் இல்லை. அதே நேரத்தில், 'லேடி' என்பதை எனக்கு தெரிந்த தமிழில் சொன்னால் ஒரு சிலர் அதை "offensive"வாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் லேடி என்றே சொல்லிவிட்டேன். "'பெண்' என்பது பொதுவான ஒரு வார்த்தை, அது எல்லாரையும் குறிக்கக் கூடியது, பெண் என்றால் இளம் பருவத்தினர் என்று நினைப்பது தவறு, இளம்பெண் என்பதை இளமையானவர்களுக்கு உபயோகிக்கலாம், எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரா.." என்று கதைக்கப் போகிறவர்கள் ஒரு வினாடி நிற்க. அதெல்லாம் எனக்கும் தெரியும். இங்கே உபயோகப்படுத்தி இருப்பது நடைமுறை சார்ந்த வழக்கில் தான். உடனே நடைமுறை அப்படியொன்றும் இல்லையே என்றெல்லாம் வாதிடாதீர்கள். தயவு செய்து இந்த வரிகளை அறுவை சிகிச்சை மேசையின் மேல் கிடத்தப்பட்ட எலியைப் போல அறுத்து கூறு போட்டு ஆராயாதீர்கள். (கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா !!)

^ அந்த உள்நோக்கம் என்ன என்று சொன்னால் மனிதகுல வெறுப்புக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். அதனால் வேண்டாம். அந்த உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றால் தலை வெடித்து விடும் என்று நினைப்பவர்கள் எனக்கு தெரியப்படுத்தவும். அவர்களுக்கு அந்த தகவலை நான் தனியாக மெயிலில் அனுப்புகிறேன்.

~ "பெருந்தன்மையாக" என்னும் வார்த்தையை தான் நான் உபயோகித்து இருக்க வேண்டும். ஆனால் அது கொஞ்சம் சுயவிளம்பரம் மாதிரி இருக்கும் என்பதால் பெருந்தன்மையுடன் 'பெருந்தன்மையாக' என்னும் வார்த்தையை உபயோகிக்காமல் விட்டு விட்டேன்.

**

என்னுடைய பதிலாக நான் எழுதி இருந்தது இது தான்:

########, உங்களுக்கு நேரடியான பதில்: தமிழ் மீதான என்னுடைய கருத்துக்களும் ஈடுபாடும் எத்தகையது என்பதை துளிக்கூட அறியாமல் சூடு வைப்பதாக தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொண்டு "எதையோ" சொன்னது என் பார்வையில் தவறாகவே படுகிறது. அதைப் பற்றி மேலும் பேசுவது நேரத்தை வீணடிப்பது என்று எண்ணியதால் மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அது அசௌகர்யங்களை தான் கொண்டு வந்து விடும். மேலும் இங்கே நான் தமிழில் பதிவிட்டு இருப்பதற்கும் உங்களுக்கும் (நீங்கள் சொன்னதற்கும்) துளியும் சம்பந்தமில்லை.

பொதுவாகவே தமிழ் வளர்க்கிறேன் என்னும் பெயரில் "எரிச்சல்" ஏற்படுத்தும் சப்தமிடுபவர்களுக்கும் (இந்த வாக்கியத்தைப் பொதுப்படையாக சொல்லவே இல்லை, எனவே இதை தன்னைத் தான் சொல்கிறான் என்று எவரேனும் எடுத்துக் கொண்டால் அது அவரவர் பிரச்சனை), நான் சொல்ல நினைக்கும் ஒன்று உண்டு: 

தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதியதை நான் ஒன்றும் பெரிய தவறாகவோ கொலைக் குற்றமாகவோ எண்ணவில்லை. அப்படி எழுதுவது தவறு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடும் இல்லை. பொதுவாகவே தமிழ் வளர்க்கிறேன் என்னும் பெயரில் இங்கு அடிக்கப்படும் கேலிக்கூத்துக்களைப் பார்க்கும் போது சிரிப்பாகவும், ஒருவிதத்தில் அத்தகைய மனிதர்கள் மேல் பரிதாபமாகவும் தான் உள்ளது. ஆங்கிலத்தில் தமிழை எழுதுவது அவரவரது சௌகர்யத்தைப் பொறுத்தது. தமிழே கணிணியில் தெரியாத காலத்தில் நாம் என்ன கைகளை சுட்டுக் கொண்டு கணிணியைத் தொடாமலா இருந்தோம்.

தமிழ் பயன்படுத்துதல் அல்லது வளர்த்தல் என்பது இத்தகைய முட்டாள்தனமான வற்புறுத்தலின் மூலமாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் ஒருவரைக் கவரும் போது அவர் தாமாக தமிழ் பேச ஆரம்பிப்பார். அத்தகைய கவர்ச்சியை தமிழ் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அதில் ஏற்கனவே வளர்ந்திருக்கும் கவர்ச்சியை ஒருவர் அவராக கண்டு கொள்ளும் தருணத்தில் தமிழ் மீதான ஆர்வமும் அதை பயன்படுத்த வேண்டுமென்பதான எண்ணமும் அவரவர்க்கு அதுவாகவே வரும். அப்படி அதைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கையைப் பெருக்க விரும்பினால் ஒருவர் அதிகபட்சம் செய்யக்கூடியது என்னவென்றால் தமிழின் மேன்மைகளை தம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் எதுவும் இல்லாமலும் வற்புறுத்தாமலும் மெளனமாக செய்துக் கொண்டிருப்பது தான். அதற்கு மேல் ஒருவர் ஏதேனும் செய்தால் அது எந்தவிதத்திலும் பயனுடையதாக இருக்காது என்பது மட்டுமல்லாமல் பெரும்பாலும் எரிச்சலைத் தான் ஏற்படுத்தும் என்பது என்னுடைய கருத்து.

இதை வைத்து நான் தமிழின் எதிரி, தமிழ் துரோகி என்றெல்லாம் யாரேனும் சொன்னால், அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. தமிழ் மீது எவ்வளவு ஈடுபடும் ஆர்வமும் எனக்கு உள்ளது என்பது எனக்கு மட்டும் தெரிந்தால் போதுமானது. அதை ஊருக்கு விளம்பரப்படுத்தும் ஆர்வம் எனக்கு இல்லை.

*** கண்டிசன்ஸ் அப்ளை..

-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment