முயற்சி: பாராட்டப்பட வேண்டியது, கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
தேர்ச்சி: பார்க்கலாம் ஒருமுறை.
இந்த படத்தைப் பார்த்த போது ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. அனுபவத்தின் முடிவில் இன்னும் மிக சிறப்பாக செய்திருக்கலாமே அல்லது சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.
படம் ஏதோவொரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பிறகு அங்கிருந்து பயணிக்கிறது அவ்வபோது ஏதோவொரு பிளாஸ்பேக் இருப்பதற்கான சிந்தனையூக்கிகளை இட்டுக் கொண்டே. படத்தின் ஆரம்பத்திலேயே சமூகத்தின் ஆரோக்கியமற்ற மனநிலையை மிகவும் நுணுக்கமாக எள்ளி நகைப்பது, சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், ரசனைக்குரியது.
துரத்தல், ரத்தம், துப்பாக்கி, வன்மம் மற்றும் இன்னபிற மனதிற்கு ஆரோக்கியமற்ற சமாச்சாரங்களுடன் வேகமாக முன்னேற முயல்கிறது படம். "முயல்கிறது" என்கிற வார்த்தையை உபயோகிக்கும் போது கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. பலருக்கு நிஜமாகவே இந்த படம் மிகவும் வேகமான திரைக்கதை கொண்ட படமாக தெரியலாம். Bourne சீரீஸ் போன்ற உலக படங்கள் பார்த்தவர்களுக்கு இதில் இந்த துரத்தல்களில் ஆங்காங்கே சில தொய்வுகள் தென்படவே செய்யும். ஆனால் படத்திற்கு அது ஒரு பெரிய மைனஸ் அல்ல. வேறு ஒரு கோணத்தில் இதை சொல்ல வேண்டுமென்றால், 100 மீட்டர் ஓட்டத்தை நாம் சீட்டின் நுனியில் உட்கார்ந்து ரசிக்கலாம், 200 மீட்டர் ஓட்டத்தை நுனியில் உட்காராவிட்டாலும் அதே சுவாரசியத்துடன் ரசிக்க முடியும், 400 மீட்டர் என்னும் போது கொஞ்சம் சுவாரசிய தளர்வு ஏற்படும். 800, 1600 என்று போகும் போது அதே சுவாரசியத்தை கொண்டு வர நிறைய செய்ய வேண்டும். அவற்றில் சில இந்த படத்தில் மிஸ்ஸிங் என்று தோன்றியது.
முக்கியமான பிளாஸ்பேக் இருக்கிறதென்று நிறைய நம்மை யோசிக்க வைத்து கதை நகருகிறது. இடைவேளை முடிந்து படம் முக்கால்வாசி முடிந்த பிறகும் வராத பிளாஸ்பேக் பற்றி யோசிக்கும் போது அதை ஒரு மிகவும் சாதுர்யமாக கவித்துவத்துடன் சொல்லி இருப்பதில் டைரக்டரின் திறமை பளிச்சிடுகிறது (எங்கிருந்தும் இது சுடபட்டதல்ல என்றே நினைக்கிறேன்).
கதையில், அதன் வேகத்திற்கான வினயூக்கிகளில் நிறைய பொத்தல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, திருந்திய ஒருவனை சுட்டாவது கொல்ல வேண்டுமென்று எதற்காக CBI துரத்த வேண்டும்? தன்னை காப்பாற்றியதற்காக போலீஸ் வசம் மாட்டி இருக்கும் ஒருவனை எதற்காக போலீசிடம் இருந்து கொண்டு செல்ல வேண்டும் ? எதற்காக அது ? விட்னசை வைத்து குற்றவாளியை கொள்ள முயலும் சிபிஐ-யின் செயல் போன்ற சில விஷயங்கள் நெருடுகின்றன. நிறைய கேள்விகள்.. பதில்கள் இல்லாமல்.
படத்தில் ஆங்காங்கே இழையோடி இருக்கும் நகைசுவை ரசிக்க வைக்கிறது. திரைக்கதையில் ஸ்டைல் இருக்கிறது.
நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம். இயக்குனரின் முயற்சியைப் பாராட்டலாம். ஆனால் எனகென்னவோ படத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
-- பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment