Wednesday, October 30, 2013

மனுஷ்ய புத்திரனுக்கு எழுதிய மடல்

அன்புள்ள மனுஷ்ய புத்திரன்,

உங்களது "இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்" கவிதைத் தொகுப்பிலுள்ள 'புரிந்துக் கொள்பவராக இருப்பது தொடர்பாக' கவிதையைப் படித்த சில நாட்களிலிருந்தே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டும் என்று எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த கவிதையைப் படித்து எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகிவிட்ட நிலையில் அன்றிருந்த அதே பரபரப்பும் அக்கவிதை பற்றிய சிந்தனைகளும் பசுமையாகவே என்னுள் இருப்பது எனக்கு ஆச்சர்யமாகவே இல்லை. காரணம், இது நான் எதிர்பார்த்தது தான். அந்த கவிதையை படித்த கணமே எனக்கு தெரிந்தது நான் படித்ததிலேயே என்னை மிகவும் பாதித்த, என் மனநிலைகளை துல்லியமாக பதிவிட்ட, என் உள்ளுணர்வுகளுடன் 'நானும் உன் இனம்' என்று சிநேகித்த கவிதைகளில் இதுவும் ஒன்று என்பது.

எந்த அளவிற்கு ஒருவனின் மனித நேயப் பண்புகள் மற்றவர்களால் அவர்களது சுயநலத் தேவைகளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு, பிறகு கரும்பின் சக்கையைப் போல ஒரு மூலையில் அவன் துப்பி எறியப்பட்டிருந்தால் இப்படியொரு கவிதையை அவன் எழுதுவான் என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்.

"I hope you understand.." என்று முடியும் மின்னஞ்சல்களையோ, 'pls understand' என்று திரையில் ஒளிரும் எஸ்.எம் எஸ். செய்திகளையோ படிக்கும் போதும், 'உன் அளவிற்கு என்னைப் புரிஞ்சுகிட்டவங்க யாருமே இல்ல', என்று செவிகளில் நாதமீட்டும் (?) குரல்களைக் கேட்கும் போதும், இப்போதெல்லாம் எனக்கு இந்த கவிதை தான் ஞாபகம் வருகிறது.

எப்பொழுதும் எல்லாவற்றையுமே புரிந்துக் கொள்ளும் ஒருவனது மனதின் ஆழத்தினுள்ளே அரும்பிக் கொண்டிருக்கும் உணர்வுகளை எவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள் இந்த கவிதையில்.

பொதுவாகவே ஒன்றை ஒருவர் எழுதி அதை மற்றொருவர் படிக்கும் போது மூன்று விதமான விளைவுகள் ஏற்படலாம் என்பது என் கருத்து. எழுதியவரே எதிர்பார்த்திராத யோசிக்க முடியாத ஆழமான பாதிப்பை வாசிப்பவர் உணர்வது, ஆழமான பாதிப்பில் விளைந்த வரிகள் பத்தோடு பதினொன்றாக வாசிக்கப்படுவது, எந்த பாதிப்பின் உச்சத்தில் ஒரு வரி எழுதப்பட்டதோ அதே உணர்வை மனநிலையை வாசிப்பவனும் உணர்வது. இந்த கவிதையைப் படிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்னது மூன்றாவதை. எழுதுபவனும் வாசிப்பவனும் அவர்களது வாழ்வின் ஏதோவொரு கணத்தில் அந்த உணர்வுகளையோ அல்லது மனநிலையையோ கடந்து சென்றதன் விளைவாக ஏற்படுவது அது.

இதுவரையில் நான் ஒரு கவிதையைப் படித்து விட்டு இவ்வளவு யோசித்தது இந்த கவிதையைப் பற்றி தான் இருக்கும். எப்பொழுதும் புரிந்துக் கொள்ளும் மனதின் ஆழத்தில் மற்றவர் ஏற்படுத்தும் ரணங்களையும் அக்கவிதையின் கடைசி வரிகளில் வெளிப்படும் புன்னகையின் ஓரங்களில் வழியும் ஆற்றாமையும் ஆதங்கமும் கலந்த வலிகளையும் என்னால் அப்படியே உணர முடிகிறது. என் வலிகளையும் ஆதங்கங்களையும் பிரதிபலிக்கும் வரிகள் அவை.

அக்கவிதையைப் படித்த பின்பு எழுந்த சிந்தனைகளில் எனக்கு வேறொன்றும் தோன்றியது. ஒருவன் இப்படியொரு கவிதையை எழுதி விட்டு அல்லது அதைப் படித்து அதன் பாதிப்பை அனுபவித்து விட்டு மீண்டும் தொடர்ந்து அவ்வாறே புரிந்துக் கொள்பவனாக இருக்க முடியுமா..? நிறைய நாட்கள் என் எண்ணங்கள் இதை சுற்றியே வட்டமிட்டு இருந்திருக்கின்றன. இக்கவிதையை எழுதுவதற்கான அல்லது அதன் பாதிப்பை ஏற்பதற்கான மனநிலைக்கு ஒருவன் வந்த பிறகும் அவனால் தொடர்ந்து புரிந்துக் கொள்பவனாக இருக்க முடியுமா..? அதே அளவில்...??

அது மிகக் கடினம். கடினம் என்பதை விட முடியாது என்றே சொல்லலாம். அப்படித் தான் எனக்கு தோன்றுகிறது. இக்கவிதைக்கான மனநிலை எப்போதுமே புரிந்துக் கொள்பவன் அவனது எல்லைகளைத் தொடும் போது ஏற்படுவது. It is a wake up call. ஒரு விழிப்பு. அடக்கி வைத்திருந்த ஆதங்கங்கள் பீறிட்டு வெடிக்கும் நிலை. எப்போதும் புரிந்துக் கொள்பவன் அதுவரையில் தான் உணராத அல்லது உணர விரும்பாத 'அந்த ஒன்றை' உணரும் கணம் அது. அதன் பிறகு அவன் எப்பொழுதும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் புரிந்துக் கொள்பவனாக இருக்கவே முடியாது. அல்லது அது அவனது இயல்பு என்பதிலிருந்து விலகி அவனது தேர்வுகளில் ஒன்றாக வந்து நின்று விடும். இனி அவன் மிகுந்த விழிப்பு நிலையில் தான் இருப்பான்.அவனது புரிந்துக் கொள்ளும் இயல்பிலிருந்து அவனால் முழுவதுமாக வெளிவர முடியாவிட்டாலும் கூட அதன் பின்பு அவன் மிகுந்த சுதாரிப்பு உள்ளவனாகி விடுவான் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு விதத்தில் அது ஒரு சுமையும் கூட. கூடுதல் வலிகள். புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதான அவனது இயல்பான மனிதநேய பண்புகளுக்கும் தன் சுயத்தைக் காயங்களிலிருந்து காப்பதற்காக அவன் எடுக்க வேண்டிய தேர்வுகளுக்கும் இடையில் மனதளவிலான போராட்டத்திற்கு அவன் உள்ளாகிறான். இந்த தெளிவு, இந்த விழிப்பு அவனுக்கு மேலும் ஒருவித மன அழுத்தத்தை தான் கொடுத்து விடுகிறது. வேறென்ன சொல்வது.

இந்த கவிதையை நான் இவ்வளவு சிலாகிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அக்கவிதையைப் படித்ததில் இருந்து உங்களை எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்க ஆரம்பித்து விட்டது. தன் மனநிலைகளைப் பகிரும் ஒரு உயிரைக் காணும் போது பிரியங்கள் மிகுதியாவதும், நட்புணர்வில் அன்பு கொஞ்சம் கூடுவதும் இயற்கை தானே.

இது வரையில் நான் யாருக்கும் அவர்களது படைப்பு பற்றி அஞ்சல் எதுவும் அனுப்பியதில்லை. அனுப்ப வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் சுஜாதா. ஆனால் அனுப்பியதில்லை. அதைப் பற்றிய வருத்தம் இன்னமும் எனக்குண்டு. மனதின் உணர்வுகளை சிறிதும் பிசகாமல் எழுத்துக்களில் பதிவிடும் ஒரு கலைஞனுக்கு பாதிப்பையோ பரவசத்தையோ ஏற்படுத்தும் அவனது படைப்பைப் பற்றி தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதையும் தாண்டி வாசகனின் கடமை என்றே நினைக்கிறேன். அந்த ஒரு மனநிறைவைக் கூட வாசகன் அக்கலைஞனுக்கு தராவிட்டால் அது அநியாயம்.

-- பால் ஆரோக்கியம் 

No comments:

Post a Comment