Sunday, July 19, 2009

படர்ந்துவிட்ட வெறுமை..


About Emptiness, originally uploaded by (Erik).

சிரிப்பொலிகள் மறைந்து, தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை அழும் ஓசையும் துல்லியமாய் கேட்கும் அளவிற்கு படர்ந்துவிட்ட அமைதி.. இறைந்து கிடந்த துணிகளையும் பொருட்களையும் எடுத்து வைத்து, சுத்தம் செய்த பிறகு துளியும் தெரியவில்லை வந்து போனவர்களின் பதிவுகள்..

மீண்டும் புத்தம் புதிதாய் மாறிவிட்ட அறை.. அறைகளின் கடந்தகால பதிவுகளை அழிக்க துடைப்பம் போதும்.. ஆனால் வலிகளையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும் உன் நினைவுகள் மனதினுள் இன்னும் இறைந்தே கிடக்கின்றன.. அவற்றை துடைக்க முயற்சித்தாலும் முடியவில்லை..

வெறுமை படர்ந்திருப்பது அறையில் மட்டுமல்ல.. என் மனதிலும் தான்..

Saturday, July 18, 2009

ஒரு பார்வை..


Landscape of the Ardennes, originally uploaded by Bеn.

வானினின்று பார்க்கப்படும் எல்லா காட்சிகளுமே அழகு தான்.. அருகில் நெருங்க நெருங்க, அழகின் வசீகரம் சில நேரங்களில் ஆச்சரிய குறியில் இருந்து கேள்விக் குறியாக மாறுவதுண்டு.. பல நேரங்களில் அந்த அழகென்பது தூரத்தின் மாயாஜாலம்..

பல நேரங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களும் இந்த மாதிரி தான்.. பல நட்புகள் துரத்தில் இருக்கும் வரை மட்டுமே இனிக்கின்றன.. அருகில் நெருங்கும்போது அவற்றின் நெருக்கம் கூடுவதற்கு பதிலாக குறைகின்றன.. எல்லா நட்புகளையும் நான் குறை சொல்லவில்லை. எவ்வளவு தான் அருகிலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன..

Friday, July 17, 2009

மலரை போன்றொரு வாழ்வு..


பூக்களுக்கு தெரிவதில்லை மாலையில் அவை உதிர்ந்து விடுமென்று.. அதனால் தானோ என்னவோ அவை பளிசென்ற புன்னகையுடன் அழகை வெளிப்படுத்துவதிலும், காற்றின் இசைக்கு நடனமாடுவதிலும், தன்னை சூழ்ந்திருக்கும் காற்றிற்கு மணம் சேர்ப்பதிலும் எந்த குறையும் வைப்பதில்லை... பனித்துளிகளைத் தாங்குவது முதல் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேனூட்டுவது வரை எல்லாவற்றையும் ஒரு புன்சிரிப்புடன் செய்கின்றன..

மாலையில் மடிவதற்குள் முடிந்தவரை பலரின் முகங்களில் புன்னகையையும், பூரிப்பையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வை புத்துணர்வூட்டி, சாவதற்கு முன் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்தே மடிகின்றன..

ஒருவேளை, அவை அடுத்த நாள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயோ என்னவோ அவை இருக்கும் ஒரு நாளை வாழ்ந்து பார்த்துவிடுகின்றன..

எவ்வளவோ நாட்கள், நாமும் ஏன் அப்படி வாழ முடிவதில்லை என்று வானம் பார்த்து நிலவொளியில் யோசித்ததுண்டு.. அப்படி வாழ நான் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறமுடியவில்லை... ஆனாலும் எனது முயற்சிகள் என்னவோ அடுத்தடுத்து செடிகளில் பூக்கும் மலர்களை போல தொடர தான் செய்கின்றன..

Saturday, July 4, 2009

ஐந்தறிவு ஜீவன்கள்...

ஏதோ சப்தம் கேட்க, மெல்ல எட்டிப் பார்த்தேன். எதிர் வீட்டு கணவன் மனைவிக்கிடையில் வழக்கம் போல் ஏதோ வாக்குவாதம்.. என்றும் போல் இன்றும் அந்த அம்மையாரேஅதிகம் பேசி திட்டிக்கொண்டிருக்க, கணவரோ முடிந்தவரை மௌனம் சாதித்து விட்டு இறுகிய முகத்துடன் வாசற்படி நோக்கி நடந்தார்..

அவர் வாசலை கடக்கும் முன் திடீரென்று உதைபட்டது, வாசற் கதவோரம் கட்டப்பட்டிருந்த அவர் வீட்டு நாய். "சனியன்.. நடு வழியிலே நின்னுகிட்டு!!", என்று அடக்கி வைத்திருந்த கோபத்தை அந்த நாய் மீது காட்டினார்.. 'அட பாவி.. எல்லா நாளும் அந்த நாய் அங்க தானடா நிக்குது.. இன்னைக்கு மட்டும் ஏன் அது உனக்கு புதுசா தெரியுது??', கேட்க வேண்டும் போல் இருந்தது எனக்கு..

உதைபட்ட நாய், மெல்லிய விம்மலுடன் விலகி நின்று அவரைப் பார்த்துக் குரைத்தது .. 'யோவ்.. நீ தான இங்க கட்டி போட்ட, இப்போ நீயே உதைக்கிறியே.. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...?', என்று அது கேட்பது போல் இருந்தது.. பின்னர் மாலையில் அவர் சாப்பாட்டு தட்டோடு வருகையில், வழக்கம் போல் வாலாட்டி கொஞ்சியது..

சில மனிதர்களின் வெளிப்படுத்தப்படாத கோப உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருப்பது இந்த ஐந்தறிவு ஜீவன்கள் தான்... 'மத்தியானம் தானே உதைச்சான் அந்தாளு.. அவன் கிட்ட போய் வாலட்டுறியே, உனக்கு வெட்கமா இல்ல..?', என்றா கேட்க முடியும் அந்த நாயிடம்.. 'என்ன செய்யறது.. அவன் சோறு போடுறானே..' என்று சொன்னாலும் சொல்லும்!!

குறிப்பு: இதைப் பற்றிய ஒரு கவிதையை நீங்கள் இங்கே படிக்கலாம்...

Friday, July 3, 2009

பண மோகத்தை கொஞ்சம் களையலாமே..

என்ன தான் அன்பு இருந்தாலும், பணம் அப்படினு வந்துட்டா ஆள மாத்திடுமோ..? அதுக்காக எல்லாரும் அப்படினு நான் சொல்ல வரல... கண்டிப்பா எல்லாரும் அப்படி கிடையாது.. அதுக்கு என்னோட சில நண்பர்கள் எதார்த்த உதாரணங்கள்.. ஆனா அதே சமயத்திலே, சிலரிடம் சில வித்தியாசங்களை கண்டிப்பா உணர முடியுது, பணம் அவங்க கிட்ட கொஞ்சம் நெறையா வந்ததுக்கு அப்புறம்!!

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதென்னவோ உண்மை தான்.. ஆனா அதுக்காக பாசத்தை கொலை செய்யவுமா அனுமதிக்கணும்? வாழ்க்கையிலே என்ன தான் எல்லாத்தையும் பணத்தை வச்சு வாங்கலாம் அப்படினாலும், வாங்க முடியாத சில விஷயங்கள் இன்னும் இருக்க தான் செய்கின்றன.. என்ன அவை உணர்வு சம்பந்தப்பட்டவை.. பொருள் மற்றும் பண மோகத்திலே இருக்கிறவங்களுக்கு அதெல்லாம் எங்க புரிய போகுது..

படுக்க மெத்தை வாங்கலாம் ஆனா தூக்கத்தை வாங்க முடியாது (உடனே 'தூக்க மாத்திரை வாங்கலாம்' அப்படினு மொக்க நகைசுவை அடிக்காதீங்க)... அது மாதிரி தான்.. பணத்தை வச்சு எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனா உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களை பணத்தை வச்சு வாங்க முடியாது.. அதனால மற்றவங்க உணர்வுகளை மதியுங்கள்.. மதிக்கவில்லை என்றாலும் மிதிக்காமல் இருக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.. பட்டும் படாம சொல்லணும் அப்படினு தான் ரொம்ப மேலோட்டமா சொல்லி இருக்கேன்..

வேற என்ன.. அறிவுரை அவ்வளவு தான் :-)