Sunday, September 27, 2009

எல்லையற்ற தேடல்கள்..


Solo / Alone, originally uploaded by drlopezfranco.

சமூகத்துடனான எனது தொடர்பில் அவ்வபோது விழும் இடைவெளி இப்போதும்.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத தனிமை என் அனுமதி கேட்காமலேயே என்னை சூழ்ந்து கொள்ளும் கணங்களில், என்னையும் அறியாமல் இத்தகைய இடைவெளி விழுந்து விடுகிறது..

எதையோ எங்கோ தொலைத்து விட்டு, தொலைத்தது எதுவென்றும் புரியாமல், தொலைத்த இடம் எங்கென்றும் தெரியாமல், ஆழ்கடலில் இரவும் பகலும் தன்னந்தனியே வலைவீசி தேடும் படகோட்டியைப் போன்றே நானும் தேடுகின்றேன். ஏன் தேடுகின்றேன்.. எதை தேடுகின்றேன்.. பல கேள்விகளுக்கு எப்போதும் விடை மட்டும் கிடப்பதே இல்லை. எல்லையற்று விரிந்து கிடக்கும் வாழ்க்கை கடலின் அடியாழத்தில் மனம் நடத்தும் தேடலோ நின்றபாடில்லை. வலையில் சிக்கும் எதுவும் தேடலின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இல்லை. எவ்வளவு காலம் தான் இந்த தேடல் தொடர போகின்றதென்று தெரியவில்லை..

சில நேரங்களில், எந்த நோக்கமும் இன்றி கிடைப்பதை எடுத்துக்கொண்டு முகத்தில் புன்னகையோடு கரையேறும் சக படகோட்டிகளை பார்க்கும் போது, நாமும் ஏன் அவ்வாறு இருக்க முடிவதில்லையென்று சின்னதாய் ஒரு பொறாமை துளிர்விடுகின்றது.. பல நேரங்களில், அவர்களை பார்த்து, 'என்ன சாதித்து விட்டோமென்று கரையேறுகிறார்கள் இந்த முட்டாள்கள்' என்றொரு ஏளன சிரிப்பு தான் எழுகின்றது..

என்றும் போல் இன்றும் மனதிற்குள்ளேயே அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் போது, என் தலை மேல் தன் இருப்பிடம் நோக்கி பறந்து சென்ற பெயரறியா பறவையொன்று, 'எதை சாதிக்க உன் வாழ்வை இழந்து கொண்டிருகின்றாய்..", என்றொரு ஏளன சிரிப்போடு மெல்ல என் காதுகளில் சொல்லி சென்றது, "உன் வாழ்க்கை கரையில் உள்ளது.. கடலில் அல்ல!!"

மெல்ல வானத்தை பார்க்கிறேன். அது விடியலிற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது. நானும் தான்..

1 comment:

  1. பாதிப்பு அருமை... அதைவிட .....
    மிகவும் அருமையாக இருக்கிறது உன் பதிப்பு ...
    வாழ்க தமிழ் ...

    ReplyDelete