எப்போதும் போலல்லாது அன்று அந்நிய வீதியில் நுழைந்ததை போன்றதொரு உணர்வு திடீரென்று என் தேகம் வருடியது. தினந்தோறும் கடக்கும் வீதி தான். ஆனால் இன்றென்னவோ வெறிச்சோடி, உற்சாகம் இழந்து, சற்றே பாலைவனத்தின் சாயல் கொண்டு, சோக முகம் போர்த்தி சிரிக்க முயன்று கொண்டிருந்தது.. 'நான் செல்லும் வீதி தானே இது' என்று மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டேன்..
கொஞ்சம் சிரமம் கொண்டு யோசித்த பின்பு என் சிந்தைக்கு புரிந்தது.. அது தீப விழாவிற்கு (தீபாவளி) சற்றே முந்தய நாள் என்று.. பிழைப்பிற்காக சொந்த மண் துறந்து, குடும்பம் பிரிந்து பல நூறு மைல்கள் தாண்டி இப்படியொரு ஊரில் என்னைப் போல் குடும்பத்தின் நிலையை எப்படியாவது முன்னேற்ற வேண்டுமென்றொரு வெறிகொண்டு இரவும் பகலும் அல்லாடும் ஆயிரகணக்கான உயிர்கள் தானே நான் தினந்தோறும் இந்த வீதியில் பார்க்கும் மனிதர்களில் பலர்.. அதனால் தானோ என்னவோ, பண்டிகை என்றொன்று வந்து விட்டால் கூடு திரும்பி விட்ட பறவைகளற்ற வானம் போல இந்த வீதிகள் வெறிச்சோடி விடுகின்றன..
வீதியை கடந்து வீட்டை நெருங்கும் போது எப்போதும் போல் அன்றும் என் கவனம் கலைத்தது தனியே தாயம் விளையாடும் அந்த வயதானவளின் காட்சி.. தெருவோரத்தில் தனியாக தாயம் விளையாடும் அவளை அடிக்கடி நான் பார்த்திருகின்றேன்.. "எதற்காக இப்படி தனியே விளையாடுகிறாள்.. என்ன சாதிக்க முயற்சிக்கிறாள் இந்த முதியவள்.." என்று பல கேள்விகள் எனக்குள் எழுவதுண்டு..
தேகம் சுருங்கிய விரல் கொண்டு சிப்பிகளை சிதறவிட்டு, அதில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப காயை நகர்த்தி நேர்த்தியாக தாயம் விளையாடும் அந்த அழகை ரசிக்க விடாமல் ஏதோ ஒன்று என் நெஞ்சுக்குள் நெருடுவதுண்டு அவளை காணும் பொழுதெல்லாம்.. மனதிலெழும் கேள்விகளை அவளிடம் கேட்க வேண்டுமென்று பல முறை நினைத்ததுண்டு. ஏனோ தெரியவில்லை இதுவரை கேட்டதில்லை..
அவளை கடந்து செல்கையில், என் காலடி சப்தம் கேட்டு சற்றே கவனம் கலைந்ததால் என் முகம் பார்த்தாள். மெல்லிய புன்னகை ஒன்றை அவளை நோக்கி வீசினேன்.. பதிலுக்கு அவளும் புன்னகைக்க முயற்சித்தாள்.. தனிமையின் வெறுமை கலந்த அவளின் புன்னகையை கண்ட போது, அவள் ஏன் தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று சட்டென்று புரிந்தது.
வயோதிக தனிமையை வெல்ல அதனுடன் தாயம் விளையாடி கொண்டிருக்கிறாள் போலும். என்றாவது வென்றிருக்கிறாளா என்று அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் சற்றே அதிகமானது. 'அது சரி.. ஜெயித்திருந்தால் அவள் ஏன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..' என்று தோன்றியது.. என்னவோ தெரியவில்லை, மனதிற்குள் பதில் கிடைத்தது போல் இருந்தாலும், அவளின் தனிமையும், விளையாடும் விதமும் மேலும் பல கேள்விகளை நெஞ்சுக்குள் எழுப்பின.
மனதில் எழும் சில கேள்விகளையும், அவை சார்ந்த உணர்வுகளையும் என்ன தான் முயன்றாலும் எழுத்துக்களில் எப்போதும் வடிக்க முடிவதே இல்லை.. அன்றும் அப்படித் தான். வீடு நோக்கி நடப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை எனக்கு..
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)
No comments:
Post a Comment