Monday, November 30, 2009

சார்ந்திருத்தலைப் பற்றியது..

உடலளவிலான சுமைகளை இறக்கி வைக்க பல ஊடகங்களையும் உயிரினங்களையும் எப்படி பயன்படுத்துவதென்று தனது ஆறாம் அறிவின் உதவியால் கண்டு கொண்ட மனிதனுக்கு, மனதளவிலான சுமைகளை இறக்கி வைப்பதெப்படி என்னும் வித்தை இன்னும் விளங்கவில்லை..

தான் ஒரு மேன்மை (superior) பொருந்திய உயிரினம் என்பதனால் தன்னை விட அறிவில் குறைந்த உயிரினங்களை எளிதாக தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர முடிகின்றது அவனால். அதன் மூலமாக தனது சுய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அவன் தயங்குவதில்லை. ஆனால் கட்டுப்படுத்த முடியாமலும், தனது புத்திக்கு விளங்காமலும் அவனது மனம் இருப்பதாலோ என்னவோ, தனது மனச் சுமைகளையும், மனதளவிலான அழுத்தங்களையும், மன வருத்தங்களையும் அவ்வளவு எளிதாக அவனால் கையாள முடிவதில்லை.

தனது மனச் சுமைகளை இன்னொரு உயிரினதிடமோ அல்லது சக உயிர்களிடமோ இறக்கி வைப்பதெப்படி என்னும் சூட்சுமத்தை மட்டும் அவன் கண்டறிந்து விட்டால், இவ்வுலகின் எல்லா மனிதர்களிடமும் சிரிப்பை மட்டுமே காண முடியும் என்பது நிச்சயம். ஆனால் அப்படியொரு வழியை கண்டறிந்து விட்டால் மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பதாலோ என்னவோ இயற்கை இன்னும் அந்த வரத்தை மானுடர்களுக்கு வழங்கவில்லை.

மன அழுத்தங்களை மற்றவரிடம் இறக்கி வைக்க வழியில்லாவிட்டாலும், மனச் சுமைகளை பற்றி மற்றவரிடத்தில் பேசுவதன் மூலமாக மனதளவிலான வருத்தங்களையும் மன பாரத்தின் அளவையும் குறைக்க முடியும். எனவே தான் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மானிட வாழ்வின் மிக முக்கியமான அம்சமாகின்றது. தனது மனதை நெருடும் விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, மனதின் பாரம் பாதியாக குறைகின்றது.

அதனால் தான் துயரங்களையும் சோகங்களையும் சந்திக்கும் நேரங்களில், தன்னையும் அறியாமல் மனமானது பகிர்ந்து கொள்ள யாரும் கிடைக்கமாட்டர்களாவென்று ஏக்கம் கொள்கின்றது. மனம் தனது சாதாரண நிலையில் இல்லாத கணங்களில், 'உன் பிரச்சனை என்ன?'... 'என்ன தான் உனது கவலை?' என்று யாரவது கேட்க மாட்டார்களாவென்று பல நேரங்களில் காத்துக் கிடக்கின்றது. வேதனையில் உழலும் மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் பேச ஆட்கள் தேவை. மனதின் பாரம் முற்றிலும் இறங்காவிட்டாலும் மனம் லேசானதொரு உணர்வை அடைகின்றது.

வாழ்வின் கடினமான நேரங்களில் உடனிருப்பவர்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கின்றது. மனம் சஞ்சலப்படும் கணங்களில் ஆறுதலாக சில வார்த்தைகளைப் பேசுவோரின் மீது சட்டென்று ஒரு தோழமையுணர்வு பற்றிக் கொள்கின்றது. மன வேதனைகளை இலகுவாக்கும் விதமாக பேசி, சற்றே ஆதரவாக தோள் தட்டி 'நானிருக்கிறேன் கலங்காதே!' என்று சொல்லும் உறவுகளும் நண்பர்களும் தன்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே தான் நெருக்கமான உறவுகளும், நலம் நாடும் நண்பர்களும் பல நேரங்களில் முக்கியமானவர்களாகின்றனர்

ஒரு விதத்தில் பார்த்தால், சுயநலமும் பொது நலமும் சரி பாதியாக கலந்தவையே உறவுகளும் நட்புகளும் என்பது கொஞ்சம் உண்மையும் கூட. வாழ்வின் பயணத்தை எளிதாக்கிக் கொள்வதற்கே பல நேரங்களில் தனது சக உயிர்களுடன் கை கோர்த்துக் கொள்கிறான் மனிதன். கடினமான பாதையில் பயணிக்கும் போது பயணத்தை இலகுவாக்குவதற்கும், வேதனையான தருணங்களை எளிதாக எதிர் கொள்ளவும் துணையொன்று அவனுக்கு தேவை. சில நேரங்களில் இப்படியொரு சார்ந்திருத்தலிற்கான தேவையென்று ஒன்றில்லாமலிருந்தால், மனிதனை கையில் பிடிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சில உறவுகளிலும் நட்புகளிலும் நெருக்கம் அதிகரித்திருக்குமா என்பதும் அவை இன்னும் தொடருமா என்பதும் கூட ஒரு கேள்விக் குறி தான்..

குறிப்பு: படித்து முடித்ததும் உங்கள் மனதிலென்ன தோன்றுகிறதோ, அதை கருத்துகளாக இங்கே விட்டு செல்லலாமே.. :-)

Wednesday, November 25, 2009

பின்னோக்கி நகரும் நினைவுகள்..

நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தினூடே கைகளின் உதவி கொண்டு, கிடைத்த ஒரு சான் இடைவெளியில் உடம்பைத் திணித்து மெல்ல ரெயில் நிலையத்திற்குள் முன்னேறினேன்.. பெரும்பாலும் இந்த முன்னிரவு நேரங்களில் ரெயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பதென்பது ஒன்றும் அதிசயமான விசயமில்லை. பழகிப் போனதாலோ என்னவோ கூட்டம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நான் செல்ல வேண்டிய ரெயில் நிற்கும் நடைமேடைக்கு வந்து சேர்ந்தேன். அன்றென்னவோ அதிசயமாக எனக்கு முன்பே ரெயில் வந்து நின்றுக் கொண்டிருந்தது.

எனக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்த பெட்டியைத் தேடி முன்னோக்கி நகர்ந்தேன். தேனீர் மற்றும் உணவு பொட்டலங்களை விற்கும் வியாபாரிகள் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடியோடி வியாபாரத்தில் கவனம் செலுத்தி கொண்டிருந்தனர். 'விடை பெற போகிறோமே' என்று லேசான சோகம் அப்பிய முகங்கள்.. ரெயிலை பிடிக்க ஓடோடி வந்ததால் மூச்சு வாங்கி கொண்டு வியர்த்து வழியும் முகங்கள்.. ஊர் பிரயாணம் செய்யப் போவதால் மனதிற்குள் படர்ந்திருக்கும் குதூகலத்தை வெளிப்படுத்தும் பிரகாசமான கண்கள்.. அலைந்து திரிந்து கலைத்து போன முகங்கள்.. இப்படியாக வெவ்வேறான உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களில் காண முடியும்.

பலரின் இயக்கங்கள் வேகம் கலந்த சுறுசுறுப்புடன் இருக்க, ஒரு சிலரோ சுவாசம் போல் வாழ்க்கையோடு ஒன்றி போய்விட்ட பிரயாணமென்பதாலோ என்னவோ எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் உள்ளுணர்வின் உந்துதலுக்கு கட்டுப்பட்டு இயந்திரங்களை போன்று நடந்து சென்று கொண்டிருந்தனர்.

எனக்கு முன்பதிவில் ஒதுக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி வந்ததும், அதனுள் நுழைந்து எனது படுக்கை எண் என்கிருகிறதென்று கண்களால் தேடிக் கொண்டே முன்னேறினேன். எனக்கான படுக்கை வந்ததும், அதுதானாவென்று மீண்டும் ஒரு முறை சந்தேகப்படும் படியாக ஏற்கனவே பலர் அமர்ந்திருந்தனர்.

அங்கிருந்தவர்களில் தனது ஐம்பதுகளிலிருந்த அந்த பெண்மணி என் முகம் பார்த்து புன்னகையோடு, "உங்களோட சீட்டுங்கலா(seat) தம்பி" என்றார். நான் பதிலுக்கு புன்னகைத்து 'ஆம்' என்பது போல் தலையசைத்தேன்.

"என் பையன ஏந்தி விட வந்திருக்கோம், ட்ரெயின் கெளம்புரதுக்குள்ள நாங்க ஏறங்கிடுவோம்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க தம்பி..", என்றார். சொல்லும் போது எழுத்துக்களில் விவரிக்க முடியாததொரு சிநேகம் கலந்த பாவனைகளை அவர் முகம் வெளிப்படுத்தியது. நான் எனது புன்னகையை பெரிதாக்கி, "இட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம்ஸ்.." என்றேன். 'அட இங்க பாருடா.. துரை இங்கிலீஷ் பேசறாரு..' என்று என்னை நானே மனதிற்குள் கிண்டல் செய்து கொண்டேன். தேவை இல்லாத நேரங்களில் ஆங்கிலம் பேசுவதை முடிந்த வரை தவிர்க்க முயல்பவன் நான். ஆனாலும் என்னையுமறியாமல் சில நேரங்களில் ஆங்கிலம் என் நாவில் வந்து விடுவதுண்டு.

பையனென்று அவர் கூறிய அந்த இளைஞனுக்கு இருபத்தியிரண்டு வயதிருக்கும். சீவப்பட்டிருந்த தலைமுடி முன்புறம் லேசாக கலைந்திருந்தது. அந்த பெண்மணியோடு மேலும் மூன்று பெண்கள் அமர்ந்திருக்க, ஜன்னல் ஓரத்தில் வெளியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தவர் அவனது அப்பாவாக இருந்திருக்க வேண்டும். அவ்வபோது மௌனம் நிலவினாலும் அந்த பெண்களின் பெரும்பாலான வார்த்தைகள், 'ஒழுங்கா சாப்பிடு.. போறப்ப வர்றப்ப கவனமா இரு.. யார்டயும் சண்டை போட்டுகிட்டு இருக்காத.. அப்பப்போ போன் பண்ணு..' என்பதாகவே இருந்தது. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை, பாசம், அன்பு என்று எல்லா உணர்வுகளும் நிரம்பி வழிந்தன. அவர்கள் சொல்வதற்கெல்லாம் அவன் தலையாட்டிக் கொண்டிருந்தாலும், சுற்றி இருப்போர் கவனம் அவ்வப்போது அவனை நோக்கி இருந்ததால் அவன் முகத்தில் கொஞ்சம் அசௌகர்யம் தென்பட்டது.

அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அது ஒரு நடுத்தர வர்க்க குடும்பமென்றும், அந்த இளைஞன் தான் அந்த குடும்பத்தின் ஒரே நம்பிக்கையென்றும். முதல் முறையாக வேலைக்காக வெளியூர் போகிறான் என்பதையும் என்னால் சரியாக யூகிக்க முடிந்தது. இப்படித்தான் பல குடும்பங்கள் இன்று கையில் கிடைக்கும் ஒரே நம்பிக்கை கயிறு பற்றி எப்படியாவது மேலெழுந்து வந்துவிடலாமென்று அவர்களாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று தானே எனது பயணமும் தொடங்கியது. அன்று பயணித்த ரெயில் சில மணி நேரங்களில் தனது இலக்கை அடைந்து நின்றுவிட்டாலும், கடமைகளை நிறைவேற்ற நான் கொண்ட பயணமோ ஐந்தாண்டுகளாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருகின்றது. ஆனால் அலுப்பொன்றும் தோன்றவில்லை இதுவரை. ஒருவேளை பிறப்பின் காரணமறிந்ததாலோ என்னவோ எனது வாழ்வின் பயணம் எப்போதும் என்னை மகிழ்ச்சியிலேயே ஆழ்த்தி வருகின்றது..

அந்த பெண்கள் தான் நிறைய பேசிக் கொண்டிருந்தனர். அவனது தந்தையோ அமைதியாக ஜன்னல் வழியே அவனது ஒரு கரத்தின் மேல் தனது கரத்தை வைத்து நின்றுக் கொண்டிருந்தார். பெண்கள் எப்போதும் அன்பையும் பாசத்தையும் எளிதாக வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் காட்டும் பாசமோ மலர்களுடன் கொஞ்சும் காற்றைப் போன்றது. அவ்வளவாக அது வெளியில் தெரிவதில்லையென்றாலும் எப்போதும் அந்த கொஞ்சலும் உறவாடலும் இருந்துக் கொண்டேதானிருக்கும். வெகு சில நேரங்களிலேயே மலர்கள் லேசாக அசைந்து காற்றிருப்பதை காட்டிக் கொடுக்கின்றன. என்னவோ தெரியவில்லை, சிறுவயதிலேயே இறந்து விட்ட என் தந்தையின் ஞாபகங்கள் திடீரென்று சில கணங்கள் என் இதயம் தொட்டு சென்றன. மையினால் எழுதப்படாமலேயே சில கவிதைகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.

ரெயில் புறப்பட தயாராக, அந்த பெண்கள் கீழே இறங்கி ஜன்னலருகில் நின்றுக் கொண்டனர். ரெயில் மெதுவாக நகர ஆரம்பிக்க, கையசைத்து விடை கொடுத்தவண்ணம் கூடவே சிறிது தூரம் நடந்து வந்தனர். ரெயிலின் வேகம் மெதுவாக அதிகரிக்க, பிடி தளர்த்தியிருந்த அவன் தந்தையின் கரம் மீண்டும் அவன் கரங்களை அழுத்தமாக பற்றி, 'பாத்து பத்தரமா இருப்பா..' என்று அவன் காதுகளில் மெதுவாக சொல்லி விடை பெற, அவன் தனது கையைப் பார்த்தான். கசங்கிய நூறு ரூபாய் தாளொன்று அவன் உள்ளங்கையில் இருந்தது. அவனையுமறியாமல் அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் மட்டுமல்ல.. உள்ளுக்குள் நானும் தான்.

ரெயில் வேகமாக முன்னோக்கி நகர, என் நினைவுகளோ பின்னோக்கி நழுவத் தொடங்கியிருந்தன.

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

Sunday, November 22, 2009

சிறிய இடைவெளிகள் அழகு தான்..


வேகமாக துவைத்துக் காயப் போடப்படும் துணிமணிகள்.. மாடியின் விளிம்பில் தலைக் காட்டும் மெத்தை விரிப்புகள்.. வெயில் உரசிச்செல்ல விரிப்புகளில் கொட்டப்பட்டிருக்கும் தானியங்களென்று பல வாரங்களுக்கு பின் தலைக் காட்டும் சூரியனை எல்லோரும் மகிழ்ச்சியாகவே வரவேற்கின்றனர்..

தொடர்ந்து பல வாரங்கள் பெய்த மழையின் சாயல் மெலிதாக காணாமல் போய்க் கொண்டிருகின்றது. இலைகளிலும் மலர்களிலும் படர்ந்திருக்கும் மழைத்துளிகள் மெல்ல மறைந்த வண்ணம் உள்ளன.. குழந்தைகள் வெகு உற்சாகத்துடன் தெருக்களில் விளையாட தொடங்கிவிட்டனர்..

இதே சூரியன் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து தலைக் காட்டிய போது 'பயங்கர வெயில்' என்று அலுத்துக் கொண்ட அதே மக்கள் தான் இன்று மழைக் காலத்தில் திடீரென்று தலைக் காட்டும் போது குதூகலிப்புடன் வரவேற்கின்றனர். கோடைக் காலத்தில் திடீரென்று பெய்யும் மழையை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும் மனமோ மழைக் காலத்தில் தொடர்ந்து பெய்யும் போது அதன் மேல் உற்சாகம் இழக்கின்றது. எப்போது வெயிலடிக்குமென்று ஏங்கவும் ஆரம்பித்து விடுகின்றது.

கூடவே இருக்கும் உறவுகளை சில நேரங்களில் பெரிதாக கண்டுக் கொள்ளாத மனம், அவர்களைப் பல நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் பிரிந்து பின் மீண்டும் சந்திக்கும் போது குதூகலிக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு அருமையானதொரு மேற்கோள் படித்தேன்.


" சில நேரங்களில் ஒரு சிறிய பிரிவின் மூலமாக உங்கள் மதிப்பை மற்றவர்களை உணர வைப்பது சரி தான். அதே சமயம் மற்றவர் நீங்களில்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுமளவிற்கு அது நீண்ட பிரிவாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.."

ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. எப்போதும் கூடவே இருக்கும் போது சில நேரங்களில் நெருங்கிய உறவுகளின் மதிப்பை நாம் உணர தவறி விடுகிறோம். ஒரு சிறிய பிரிவோ அல்லது இடைவெளியோ ஏற்படும் போது தான் அத்தகைய மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் மதிப்பையும் நாம் உணர்கிறோம். ஒரு முறை மனம் அதை உணர்ந்து விட்டால் வாழ்நாள் முழுதும் அந்த உறவை கொண்டாடி மகிழும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் மனதிற்கு இப்போது அது எத்தகைய அற்புதமான உறவென்பதும் அதன் முக்கியத்துவமும் புரிந்திருக்கும்.

அதே சமயம் இடைவெளியோ அல்லது பிரிவோ அதிகமாகும் போது, சோகத்தால் வாடும் மனமானது நாளடைவில் பிரிந்த அந்த உறவில்லாமல் வாழப் பழகிக் கொள்கின்றது. காலத்தின் மாயாஜாலமது. பிரிவின் கால அளவு மிக நீண்டதாகிவிட்டால், மீண்டும் சந்திக்கும் போது சில நேரங்களில் பழைய நெருக்கமான உணர்வு காணாமல் போய் ஒரு அந்நிய உணர்வு வரவும் வாய்ப்புகள் அதிகம். மீண்டும் அந்த இதயம் தொட்ட நெருக்கம் வருவது சில நேரங்களில் கடினம். எனவே எப்போதும் பிரிவென்பது நீண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடைவெளி விழும் நேரங்களில் மீண்டும் உறவுகளை இணைத்துக் கொள்ள எப்போதும் முனைப்பாக இருங்கள்.

எங்கோ ஆரம்பித்து, எதுவோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கின்றேன்!! நான் தமிழாக்கப்படுத்திய அந்த மேற்கோள் இது தான்..

"Let people miss you to realize your worth, but don't let them miss you enough so that they can learn to live without you.."

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

Saturday, November 21, 2009

நெருக்கமான உறவுகளைக் கொண்டாடுங்கள்..


affection, originally uploaded by digitalsparks.
பல நேரங்களில் மனிதனின் இயல்பென்னவோ சந்தித்திராத அந்நியரிடம் யோசித்து பேசியும், நெருங்கிய உறவுகளிடம் பேசிவிட்டு யோசிக்கவும் செய்து விடுகின்றது.. சொல்லப்படும் வார்த்தைகளை விட சொல்லப்படாத அர்த்தங்களும் வெளிப்படுத்தப்படாத உணர்வுகளும் தான் அதிகம் உற்று நோக்கப்படுகின்றன நெருங்கிய உறவுகளில்.. அதனை அறிய தவறும் கணங்களில் உறவில் ஏற்படும் விரிசல்களை அதன் காரணமறிந்து சரி செய்வதென்பது சற்று கடினமாகவும் போய்விடுகின்றது..

தெரியாமல் செய்துவிட்ட தவறுகள், அறியாமல் சொல்லிவிட்ட வார்த்தைகள், புரியாமல் கேட்டுவிட்ட கேள்விகள்.. இவை அந்நியரிடமிருந்து வரும் போது கோபம் அடக்கி நாசுக்காக சிரித்து அந்த இடம் விட்டு நகரும் மனமோ, அவை நெருங்கிய உறவுகளால் செய்யப்படும் போது ஏற்றுக்கொள்ள இடம் கொடுப்பதில்லை. இதயத்திற்கு அருகிலிருக்கும் மனிதர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமிருப்பதாலோ என்னவோ பல நேரங்களில் பொறுமையின் அளவு சிறியதாகி விடுகின்றது..

'அந்நியர் சில கணங்கள் நம் வாழ்வில் வருபவர்கள், ஆனால் நெருகியவர்களோ எப்போதும் உடனிருப்பவர்கள்.. நம் உணர்வை வெளிப்படுத்தாவிட்டால் அவர்கள் அதையே திரும்ப திரும்ப செய்தால் என்ன செய்வது?'.. 'என் கோபத்தையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் காட்டாமல் வேறு யாரிடம் காட்ட முடியும்'.. 'கோபப்பட்டு பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.. அதையொன்றும் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்'.. இப்படியாக பல நியாயங்களை தனக்கு தானே சொல்லி கொள்வதால் தானோ என்னவோ, அப்படி நடந்து கொள்வதின் விளைவுகளை பெரிதாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை..

செல்லமாக கோபித்துக் கொள்வதென்பது உறவிற்கு அழகு தான்.. அது கேட்பவர் உள்ளத்தில் புன்சிரிப்பையே வரவழைக்கும். அதுவே வார்த்தைகளின் வீரியம் அதிகமாகும் கணங்களில், அவர்களின் உணர்வுகள் பெரிதாக காயப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்களை நேசிப்பதால் உணர்வளவில் உங்களிடம் அவர்கள் பலவீனமானவர்கள். 'நான் அவர்களை திட்டுவதற்கு எனக்கு உரிமையில்லையா?' என்று நீங்கள் கேட்பதை போன்று தானே, 'நான் நானாக இருந்து தெரியாமல் சில தவறுகளை செய்ய அல்லது சில வார்த்தைகளை பேச எனக்கு உரிமையில்லையா?' என்று அவர்கள் நினைப்பார்கள். கோபப்படாமல் பொறுமையாக எடுத்து சொன்னால் அவர்கள் கேட்கமாட்டர்களா என்ன..?

நம்மோடு எப்போதும் உடனிருந்து, உயிருக்கு உயிராக நம்மை நேசிப்பவர்கள் தானே நமது பொறுமைக்கு மிகவும் தகுதியானவர்கள். நாம் கோபப்படுவது சில நொடிகளே என்றாலும், அதன் தாக்கமும் அதனால் உணர்வில் ஏற்படும் வலியும் நீண்ட நேரம் அவர்களை விட்டு போவதில்லை என்பதே உண்மை.

நெருங்கிய உறவுகளில் குறைவாக கோபப்படுங்கள். அதிகம் பொறுத்து போங்கள். நிறைய அன்பு செய்யுங்கள். அளவில்லாமல் புன்னகையுங்கள். எப்போதும் சிரித்து மகிழுங்கள். அத்தகைய உறவுகளை கொண்டாடுங்கள். அவர்கள் மீதான உங்கள் அன்பையும் அக்கறையையும் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்த தயங்காதீர்கள். அவர்கள் உங்கள் உலகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு அடிக்கடி சொல்லுங்கள். ஏனென்றால் இதயத்திற்கு நெருக்கமான உறவுகள் வாய்ப்பதென்பது மிக அரிது..

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

Thursday, November 19, 2009

சராசரிகளை தாண்டியதொரு உணர்வு..


He sits alone, originally uploaded by _Ragnarok_.
ஓடிச்சென்று ஜன்னலோர இடம் பிடிப்பதிலும், ஜன்னல் வழி பரந்து விரிந்து கிடக்கும் பசுமையின் அழகினிலும், வேகமாய் பின்னோக்கி நகரும் மரங்களிலும், தூரத்தில் ஆங்காங்கே புதைந்து காணப்படும் சிறிய வீடுகளிலும் என்னை சுற்றி அமர்ந்திருப்போரின் கவனமிருக்க, என் நினைவுகளோ பல மைல்களுக்கு முன்னே கடந்து சென்ற அந்த பொட்டல் வெளியிலும், அதன் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒற்றை பனை மரத்திலும், சற்று முன் கடந்து சென்ற சிறுவர் புத்தகங்கள் விற்கும் அந்த நடுத்தர வயது ஒற்றைக் கை இளைஞனின் 'காணப்படாத' இன்னொரு கையிலும் உறைந்து கிடக்கின்றது.. பெரும்பாலானவர்களின் கவனம் வந்து செல்லும் அப்போதைய காட்சிகளில் இருக்க, என் மனமோ கடந்து சென்ற காட்சிகளையும் வரவிருக்கும் இலக்குகளையும் பற்றியே சிந்தனை செய்கின்றது.

ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் கீறல்பட்ட இதயம் சுமந்து, பசியின் காரணமாய் கெளரவம் துறந்து, கலங்கிய கண்களுடன் கையேந்தி நிற்கும் வயோதிகர்களுக்கு கையில் கிடைத்த சில்லறைகளை கொடுத்து விட்டு பலர் நகர்ந்து கொண்டிருக்க, என் மனமோ 'கொடுக்கும் சில்லறை இன்று போதும். ஆனால் நாளைய பசி தீர அவர்களுக்கு போதுமான பணம் கிடைக்குமா..?' என்றெண்ணி கவலை கொள்கிறது.

செடிகளின் இலைகளை செதுக்கிய பின் தோன்றும் நேர்த்தியான அதன் வடிவமைப்பையும் அழகையும் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் கண்களுக்கு மத்தியில் என் கண்களோ செடியின் அழகை மட்டுமல்லாது ஓரத்தில் தள்ளப்பட்டிருக்கும் வெட்டுப்பட்ட இலைகளிலும் கவனம் கொள்கிறது. காதுகளில் கேட்கப்படாத செடிகளின் ஓலம் பற்றியே எண்ண தோன்றுகிறது.. சிலைகளின் அழகில் மெய் மறந்து அதிசயிப்போர் பலர் இருக்க, என் சிந்தனைகளோ சிலையின் அழகில் மட்டுமல்லாது அதனை அழகாக்க தியாகம் செய்து செதுக்கப்பட்ட கற்சிதறல்களையும் சுற்றி வருகின்றது..

இப்படியாக சராசரிகளை மட்டுமல்லாது அவை சார்ந்த கண்களுக்கு புலப்படாத அசாதாரணங்களையும் பற்றி எண்ணுவதாலோ என்னவோ, பல நேரங்களில் மிக சுலபமாக சிந்தனையில் ஆழ்ந்து விடுகின்றேன். மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது, தன் இனம் சார்ந்த உயிரொன்றை கண்டதை போன்றதொரு உணர்வு என்னை சூழ்ந்து கொள்கின்றது..

அதனால் தானோ என்னவோ, அத்தகைய மனிதர்களை சந்திக்காத கணங்களில், ஏதோ அந்நிய தேசத்தில் வாழ்கின்ற உணர்வும், கண்ணாடி பிம்பம் தவிர வேறொன்றும் தன் இனத்தின் சாயல் பிரதிபலிக்காத உணர்வும் மேலோங்குகின்றன. அவ்வாறான தனிமை சூழ்ந்துகொள்ளும் சில நேரங்களில் கூட ஒரு மாற்றத்திற்காக சாதாரண மனிதனின் சிந்தனைக் கொண்டு அவர்கள் இனத்தில் இணைய என்னால் முடிவதில்லை..

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

Friday, November 13, 2009

சின்னதாய் ஒரு பாதிப்பு..


எப்போதும் போலல்லாது அன்று அந்நிய வீதியில் நுழைந்ததை போன்றதொரு உணர்வு திடீரென்று என் தேகம் வருடியது. தினந்தோறும் கடக்கும் வீதி தான். ஆனால் இன்றென்னவோ வெறிச்சோடி, உற்சாகம் இழந்து, சற்றே பாலைவனத்தின் சாயல் கொண்டு, சோக முகம் போர்த்தி சிரிக்க முயன்று கொண்டிருந்தது.. 'நான் செல்லும் வீதி தானே இது' என்று மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டேன்..

கொஞ்சம் சிரமம் கொண்டு யோசித்த பின்பு என் சிந்தைக்கு புரிந்தது.. அது தீப விழாவிற்கு (தீபாவளி) சற்றே முந்தய நாள் என்று.. பிழைப்பிற்காக சொந்த மண் துறந்து, குடும்பம் பிரிந்து பல நூறு மைல்கள் தாண்டி இப்படியொரு ஊரில் என்னைப் போல் குடும்பத்தின் நிலையை எப்படியாவது முன்னேற்ற வேண்டுமென்றொரு வெறிகொண்டு இரவும் பகலும் அல்லாடும் ஆயிரகணக்கான உயிர்கள் தானே நான் தினந்தோறும் இந்த வீதியில் பார்க்கும் மனிதர்களில் பலர்.. அதனால் தானோ என்னவோ, பண்டிகை என்றொன்று வந்து விட்டால் கூடு திரும்பி விட்ட பறவைகளற்ற வானம் போல இந்த வீதிகள் வெறிச்சோடி விடுகின்றன..

வீதியை கடந்து வீட்டை நெருங்கும் போது எப்போதும் போல் அன்றும் என் கவனம் கலைத்தது தனியே தாயம் விளையாடும் அந்த வயதானவளின் காட்சி.. தெருவோரத்தில் தனியாக தாயம் விளையாடும் அவளை அடிக்கடி நான் பார்த்திருகின்றேன்.. "எதற்காக இப்படி தனியே விளையாடுகிறாள்.. என்ன சாதிக்க முயற்சிக்கிறாள் இந்த முதியவள்.." என்று பல கேள்விகள் எனக்குள் எழுவதுண்டு..

தேகம் சுருங்கிய விரல் கொண்டு சிப்பிகளை சிதறவிட்டு, அதில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப காயை நகர்த்தி நேர்த்தியாக தாயம் விளையாடும் அந்த அழகை ரசிக்க விடாமல் ஏதோ ஒன்று என் நெஞ்சுக்குள் நெருடுவதுண்டு அவளை காணும் பொழுதெல்லாம்.. மனதிலெழும் கேள்விகளை அவளிடம் கேட்க வேண்டுமென்று பல முறை நினைத்ததுண்டு. ஏனோ தெரியவில்லை இதுவரை கேட்டதில்லை..

அவளை கடந்து செல்கையில், என் காலடி சப்தம் கேட்டு சற்றே கவனம் கலைந்ததால் என் முகம் பார்த்தாள். மெல்லிய புன்னகை ஒன்றை அவளை நோக்கி வீசினேன்.. பதிலுக்கு அவளும் புன்னகைக்க முயற்சித்தாள்.. தனிமையின் வெறுமை கலந்த அவளின் புன்னகையை கண்ட போது, அவள் ஏன் தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று சட்டென்று புரிந்தது.

வயோதிக தனிமையை வெல்ல அதனுடன் தாயம் விளையாடி கொண்டிருக்கிறாள் போலும். என்றாவது வென்றிருக்கிறாளா என்று அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் சற்றே அதிகமானது. 'அது சரி.. ஜெயித்திருந்தால் அவள் ஏன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..' என்று தோன்றியது.. என்னவோ தெரியவில்லை, மனதிற்குள் பதில் கிடைத்தது போல் இருந்தாலும், அவளின் தனிமையும், விளையாடும் விதமும் மேலும் பல கேள்விகளை நெஞ்சுக்குள் எழுப்பின.

மனதில் எழும் சில கேள்விகளையும், அவை சார்ந்த உணர்வுகளையும் என்ன தான் முயன்றாலும் எழுத்துக்களில் எப்போதும் வடிக்க முடிவதே இல்லை.. அன்றும் அப்படித் தான். வீடு நோக்கி நடப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை எனக்கு..

குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)