மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Friday, December 11, 2009
நீர்க்குமிழிகள்...
என்ன தான் மறக்க முயன்றாலும், சில எண்ணங்கள் மீண்டும் மீண்டும் இடைவிடாது கரை சீண்டும் அலைகளைப் போன்று மனதை அரித்த வண்ணமே உள்ளன. மறக்க தான் முடியவில்லை, மறைத்தாவது வைக்கலாமென்றால் அதுவும் முடிவதில்லை. ஞாபக செல்களில், சில நிகழ்வுகளும் அவை சார்ந்த நினைவுகளும் கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களைப் போன்று அழுத்தமாக பதிந்து விடுகின்றன.
மனதினுள் வலி ஏற்படுத்தும் அத்தகைய ஞாபகங்களை அகற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள், தெரியாமல் மை குப்பியை சாய்த்து உடல் முழுதும் ஊற்றி, பின் குற்ற உணர்ச்சி கொண்டு அதனை உடம்பிலிருந்து அழிக்க முயன்று தோற்றுப் போன மனநிலையுடன், என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழிக்கும் சிறு குழந்தையின் நிலைக்கு தான் மனிதனை எப்போதும் எடுத்து செல்கின்றன .
'ஏன் அவளை/அவனை சந்தித்தேன்.. ஏன் அந்த செயலை செய்தேன்.. நான் ஏன் அங்கே சென்றேன்.. எதற்காக அந்த இடத்தில் நான் வாய் திறந்தேன். நானெப்படி அது நிகழ்வதற்கு என் வாழ்வில் இடம் கொடுத்தேன்..' இன்னும் எத்தனையோ கேள்விகள் பலரது உள்ளத்தில் எப்போதும் நீர்க்குமிழிகளைப் போன்று மேலெழுந்து வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. மனித வாழ்க்கையை பின்னோக்கி இயக்கி (playback), மீண்டும் வாழும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனையோ முறை நான் நினைத்ததுண்டு. அப்படியொரு வாய்ப்பிருந்தால், பல செயல்களை திருத்தி செய்யவும், நெஞ்சை சுடும் சில நிகழ்வுகளை தவிர்த்திருக்கவும், வலி ஏற்படுத்தும் சிலரை சந்தித்திராமல் வேறு வழியில் சென்றிருக்கவும் முடியுமே..
ஆனால் வாழ்க்கை நமக்களித்திருப்பதோ வெறும் எழுதுகோல் (pen) மட்டுமே.. எழுதியதை திருத்துவதற்கு அழிப்பான் (rubber) யாருக்குமே வழங்கப்படுவதில்லை. சொல்லி விட்ட வார்த்தைகள், செய்து விட்ட செயல்கள், மனதினுள் புகுந்த சிந்தனைகள், பார்வையில் பதிந்த முகங்கள், பழக்கத்தால் ஏற்பட்ட உணர்வுகள், புரியாமல் செய்து விட்ட தலையசைப்புகள், அறியாமல் எடுத்து வைத்துவிட்ட காலடிகள், நடந்தேற அனுமதித்து விட்ட நிகழ்வுகள் என்று எதையுமே திருத்தி அமைக்கும் வாய்ப்பு மனிதனுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வாறு நடந்தவைகளின் விளைவுகளும் அவை சார்ந்த வலிகளும், உணர்வுகளும் உடலுடன் ஒட்டிக் கொண்டே வரும் நிழலைப் போல என்றும் மனதினுள் நிரந்தர இடம் பிடித்து, அவ்வப்போது 'நானிருக்கிறேன்..' என்று கைகளை உயர்த்தி நினைவூட்டிக் கொண்டே தான் இருக்கின்றன.
நாம் ஆறி விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் காயங்களின் தழும்புகளை மேற்புறம் மெல்ல கீறி, மீண்டும் அதே வலியை ஏற்படுத்தும் சக்தி பல கடந்த கால ஞாபகங்களுக்கு அதிகம்.. உண்மை என்னவென்றால், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்பட்ட பல காயங்கள் என்றும் ஆறுவதே இல்லை.. மேற்புறம் தழும்புகளாக மாறியிருந்தாலும் உள்ளே காயத்தின் சுவடுகளோ அப்படியே தான் இருக்கின்றன. வலி ஏற்படுத்தும் அத்தகைய நினைவுகளை கிடப்பில் போட என்ன தான் முயன்றாலும், அவை திரும்ப திரும்ப வந்து மனக் கதவை தட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் கதவை திறந்து பார்த்துவிட்டு, 'ஓ!! நீ தானா..' என்று கதவை அடைத்து விட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்த முயன்றாலும், அவை கொஞ்சம் கூட சளைக்காமல் திரும்பவும் மனக் கதவை தட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. காலப்போக்கில் அவற்றை கண்டுக் கொள்ளாமல் புறக்கணிக்க (ignore) கற்றுக் கொள்ளலாமே தவிர அவற்றை முழுவதுமாக மனதிலிருந்து தகர்த்தெறிய முடிவதில்லை.
மீண்டும் மீண்டும் தலை காட்டும் அத்தகைய ஞாபகங்களை, வாழ்வில் செய்த தவறை திரும்ப செய்யாதிருக்க விடுக்கும் எச்சரிக்கையாகவே நான் எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு விதத்தில் அவ்வாறான நினைவூட்டுதல் அவசியமென்றும் நான் கருதுவதுண்டு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 'ஞாபகங்கள் இங்கே அழிக்கப்படும்' என்னும் அறிவிப்பு பலகையோடு கடையொன்று திறக்கப்பட்டால், உலகின் அத்தனை மனிதர்களும் அங்கே வரிசையில் நிற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
உண்மையில் மனசு கொஞ்சம் வலிக்கின்றது. இதே நிகழ்வு அண்மையில் நடந்ததால்.
ReplyDelete