Saturday, December 12, 2009

இரு பறவைகள்! ஒரு காதல்!!



அழகான கவிதையொன்று
எழுதி நெடுநாளாகி விட்டதென்று
மனதினுள் சிந்தனை கொண்டு,
எண்ணங்கள் நிலைத்திருக்க
கண்கள் வான் வெறித்திருக்க
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்..

சட்டென்று சலனம் கேட்டு
மெதுவாய் திரும்பி பார்க்கையிலே,
ஆங்கே கிளிகள் இரண்டு
மாமரத்தின் கிளைகளிலே
பார்வைக்கெட்டும் தூரத்திலே
கொஞ்சி காதல் பரிமாறும்
காட்சியொன்று கண்முன் கண்டேன்..
உள்ளுக்குள் உவகை கொண்டேன்..

கொஞ்சி குலாவிய படி
மாம்பழமொன்றை மெதுவாய் கொத்தி
அவைகளுக்குள் பகிர்ந்துண்ணும் அழகில்
மெல்ல என் இதயம் இழந்தேன்..
இனம் புரியா ஆனந்தம் கொண்டேன்..

மெதுவாய் சில முத்தங்கள்..
அருகாமையின் தீண்டல்கள்..
அன்பின் பரிமாறல்கள்..
இவைகளைக் கண்டபோது
நானுமொரு பறவையாய்
பிறந்திருக்கலாமே என்று
உள்ளுக்குள் ஓர் ஆசை கொண்டேன்..
கண்களில் நீர்த்துளிகள் பெற்றேன்..

தலைக்கு மேல் சற்று தொலைவில்
சுதந்திரமாய் இங்குமங்கும்
பறந்து திரியும் பறவைகளிடம்
சாதியில்லை மதமுமில்லை..
குலம் கோத்திரமெனும்
பேதமில்லை..
எல்லைகளோ தூரங்களோ
அவைகளுக்கு ஒரு பொருட்டுமில்லை..
பொங்கியெழும் அன்பையும்
நெஞ்சம் தொட்ட காதலையும்
விரும்பியவருடன் பகிர்ந்து கொள்ள
தடைகள் என்றெதுவுமில்லை..

பறவைகளாய் பிறந்திருந்தால்
நானும் அவளும் அருகருகில்
இந்நேரம் இருந்திருப்போமே..
அன்பு பரிமாறி
அருகாமையின் சுகம் பெற்று
ஆனந்தம் கொண்டிருப்போமே..

சின்னதாய் சில இறக்கைகள்
இல்லாததன் காரணமாய்
பூமியில் நடக்கும் சாபம் பெற்றோம்..
மடத்தனமான மானிட கொள்கைகளுக்கு
நாங்களும் இரையாகிப் போனோம்..

பறவைகளாய் இனம் மாற
விலையொன்று உண்டென்றால்
எப்பாடு பட்டாகிலும்
அவ்வரம் பெற்றே தீர்வேன்..
அப்போதாவது நாங்களிருவரும்
அருகருகே இருக்கவியலுமே!!

4 comments: