Saturday, December 19, 2009

இன்னும் சில சிந்தனைகள்..


உறவுகளில் சண்டைகளை தவிர்க்க முடியாது என்று யாராவது சொல்லும் வேளைகளில், எனக்குள் எழும் முதல் கேள்வி, 'புரிந்து கொள்ளுதல்கள் சரியாக இருந்தால், சண்டை ஏன் வருகிற'தென்பது தான்.. நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமில்லையென்று தெரிந்தாலும் அத்தகைய வினாவை உள்ளுக்குள் எழுப்புவதற்கு என் மனம் தயங்குவதில்லை.. ஒருவேளை, 'புரிந்து கொள்ளுதல்கள் எப்போதுமே சரியாக அமைந்து மன வருத்தங்களே ஏற்படாத வகையிலான ஒரு உறவு அமையாதா..?' என்கிற ஏக்கத்தின் ஆதங்கமாக கூட அது இருக்கலாம்.. இரு மனிதர்கள், இரு மனங்கள், இரு வேறு சிந்தனைகள், வெவ்வேறான எதிர்பார்ப்புகள்.. இப்படி இருக்கும் போது, கருத்து வேறுபாடுகள் வராமல் எப்போதுமே எப்படி பார்த்துக் கொள்ள முடியும்.

'அவன்/அவள் அப்படி தான்..' என்று மனதை என்ன தான் தயார்படுத்தி வைத்திருந்தாலும் வாக்குவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கையாளுதல் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சிறிய சண்டைகள் உறவுகளை இன்னும் நெருக்கமாக்கும் என்றாலும், சில நேரங்களில் பெரிய அளவிலான மன வருத்தங்களை ஏற்படுத்தும் சில சண்டைகளும் வேறுபட்ட கருத்து பற்றிய வாக்குவாதங்களும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

அனல் பறக்கும் வார்த்தைகள் வெளிவர தொடங்கும் கணங்களிலும், மனதின் உணர்ச்சிகள் வேகமாக கோபம் கொள்ள தொடங்கும் கணங்களிலும் முடிந்த வரை பொறுமை காத்து, வார்த்தைகளை வெளியிடாமல், மௌனம் கொண்டு, மனதை சாந்தப்படுத்தி, அதே நிகழ்வை வேறொரு கோணத்தில் இருந்து அசைப்போட்டு, அப்படியும் அது மனதை திருப்திப்படுத்தாத கணங்களில் தான் மனதில் பட்டதை பேசும் பழக்கம் எனக்கிருந்தாலும், சில நேரங்களில் அவ்வாறான பொறுமை கலந்த பண்பு கை நழுவிப் போய்விடுகின்றது. 'நான் சரி.. நீ தவறு..' என்னும் எண்ணம் மேலோங்கி விடுகின்றது. அத்தகைய எண்ணத்தின் அடிப்படையிலான சிந்தனைகளே பெரும்பாலான நேரங்களில் கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட இடைவெளியை அதிகமாக்குகின்றன.

வாழ்வில் நான் கற்று கொண்ட உண்மைகளில் ஒன்று என்னவென்றால், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயங்களில், 'நான்.. எனது கருத்து.. என் பக்க நியாயங்கள்..' என்று யோசிப்பதை தவிர்த்து, 'அவன்/அவள்.. அவரது கருத்து.. அவர் பக்க நியாயங்கள்..' என்பதன் அடிப்படையில் சிந்திப்பதே கருத்து வேறுபாட்டின் வீரியத்தை குறைக்க உதவுகின்றது. நமது பக்க நியாயங்களை பற்றிய சிந்தனைகள் உள்ளுக்குள் ஒரு எதிர்நடை நோக்கம் கலந்த பார்வையை (defensive approach) ஏற்படுத்தி விடுகின்றன. அது பிரச்சனையை தீர்க்க என்றும் உதவுவதில்லை.. மாறாக பிரச்சனை பெரிதாகவே வாய்ப்புகள் அதிகம். அடுத்தவர் பக்க நியாயங்கள் பற்றி யோசிக்கும் போது, அவர்களது நியாயம் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்கி புரிய வைப்பது மிக எளிதான காரியமாகி விடுகின்றது.

சண்டைகளிலும் வாக்குவாதங்களிலும், 'நான் சரி' என்பதை நிரூபிக்க எடுக்கும் முயற்சிகள் மனங்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக தனிமைப்படுத்தவே செய்கின்றன. பலர் மன்னிப்பு கோர்தலையும் வருத்தம் தெரிவிப்பதையும், 'நான் செய்தது/சொல்லியது தவறு..' என்று ஒப்புக் கொண்டதாகவே கருதுகின்றனர். ஆனால் பல நேரங்களில் உண்மை அதுவன்று. சில நாட்களுக்கு முன்பு யாரோ எழுதி எங்கோ நான் படித்த ஒரு மேற்கோள் சொல்கிறேன்:

"வருத்தம் தெரிவிப்பதும் மன்னிப்பு கோர்வதும் 'நீ சரி.. நான் தவறு..' என்பதாகி விடாது. எனது அகங்காரத்தை (ego) விட நமது உறவை நான் மிகவும் பெரிதாக மதிக்கிறேன் என்பதே அதன் பொருள்.." [ Apologizing doesn't mean that 'you are right and i'm wrong'.. It just means that I respect our relationship more than my ego.. ]

தன் மேல் தவறில்லையென்றாலும் சிலர் நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு காரணம் இது தான். அதே சமயத்தில் இதை வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, உங்களிடம் நெருக்கமாக பழகும் மனிதர்கள் சில நேரங்களில் சண்டையின் போது சட்டென்று வருத்தம் தெரிவிப்பதால் உடனே நீங்கள் செய்தது சரியென்று ஆகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுதல் அவசியம்.. உறவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் என்பது மிகவும் அவசியமாகி விடுகின்றது. அவ்வாறு விட்டுக் கொடுத்தல் என்பது பொருளளவில் மட்டுமல்ல உணர்வளவிலும் கருத்துகளிலும் தான். 

2 comments:

  1. Apologizing doesn't mean that 'you are right and i'm wrong'.. It just means that I respect our relationship more than my ego.. nice lines,,,,,,

    ReplyDelete
  2. நன்றிங்க ஜெயா.. :)

    ReplyDelete