மீண்டும் இதோ வந்து விட்டது கிறிஸ்துமஸ்.. சட்டென்று கண் இமைகளை மூடி திறக்கும் வேளையில் ஒரு வருடம் உருண்டோடியதை போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.
குடும்பத்தினருடன் நிமிடங்களை செலவிட உதவும் விடுமுறை நாட்கள்.. எந்தவித கேள்விகளுமின்றி தானாக மனதிற்குள் நுழைந்து கொள்ளும் குதூகலம்.. உற்சாகம்.. ஏழைகளும் இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டும் இயற்கை.. உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரும், நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியும் சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் குளிர்காலம்..
"என்ன தான் சாதித்திருக்கிறோம் இந்த வருடம்..?", என்றொரு சிந்தனையில் என்னை ஆழ்த்தும் நாட்கள் இவை.. வழக்கம் போல பெரிதாக எதையும் சாதிக்கவில்லையென்றாலும், குறைபட்டு அலுத்து கொள்ளுமளவிற்கு முற்றிலும் சோம்பேறியாகவும் இருந்துவிடவில்லை..
சில நல்ல செய்திகள், மகிழ்ச்சி ஏற்படுத்தும் புதிய உறவுகள், சில நண்பர்களின் விடைபெறல்கள், புதிய சில நட்புகளுக்கான அழைப்பிதழ்கள், திடீரென்ற இன்ப அதிர்வுகள், அங்காங்கே சில ஏமாற்றங்கள், தந்தையை போன்று பழகிய மனிதரின் ஈடு செய்ய முடியாத இழப்பு, பொதுவாகவே மனதை வேதனைபடுத்திய நிகழ்வுகள், ஆனந்த கண்ணீரை வரவழைத்த சில கணங்கள், முதுகு தட்டி உற்சாகம் ஏற்படுத்திய சில பாராட்டுகள், சொல்ல தெரியாத காரணங்களுக்காக மனதை பாதித்த சில காட்சிகள்.. மகிழ்ச்சி, வேதனை, சந்தோசம், பிரிவு, வருத்தம், உற்சாகம், குதூகலம், ஏமாற்றம், அழுகை, ஆனந்த கண்ணீர் இப்படி எல்லாம் கலந்த கலவையாகவே அமைந்திருந்தது இந்த வருடம்..
வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் இத்தகைய தருணங்கள் எப்போதும் எனக்கு கற்று கொடுக்கும் பாடமென்னவென்றால், வாழ்வின் ஏற்றங்களை எவ்வாறு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அதே போல வாழ்வின் கடினமான கணங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டுமென்பது தான். ஏற்ற இறக்கங்கள் கலந்தது தானே வாழ்க்கை.
வாழ்வில் மகிழ்ச்சியான நிமிடங்களையும் வெற்றிகரமான நிகழ்வுகளையும் சந்தோசமாக வரவேற்கும் மனிதன், சோகமொன்று வந்துவிட்டால் "இது ஏன் எனக்கு வருகிற"தென்று நொந்து கொள்கிறான்.. நல்ல விஷயங்கள் நடக்கும் போது, "இது ஏன் எனக்கு நடக்கின்றது.." என்று அவனுக்கு கேட்க தோன்றுவதில்லை. தீயவை நடக்கும் போது தான் அத்தகைய கேள்விகள் அவனுள் எழுகின்றன.
ஏற்றங்களை எவ்வளவு மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் இறக்கங்களை மகிழ்வுடன் ஏற்று கொள்ள இயலாது என்றாலும், முடிந்தவரை அவற்றை எளிதாக எடுத்து கொள்ளவும், மனம் பெரிய அளவில் அவற்றால் பாதிக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இறக்கங்கள் என்றும் வீழ்ச்சியாகவே இருந்து விடப் போவதில்லை.. வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால் அதை விட வேறென்ன வேண்டும் மனிதனுக்கு.
நமக்கான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதற்கான முயற்சிகளை முடிந்தவரை எடுப்போம். ஆனால் அதே சமயத்தில், சில சூழ்நிலைகளால் ஏற்படும் கால தாமதங்களையும், சிற்சில ஏமாற்றங்களையும், வாழ்வின் ஏற்ற தாழ்வுகளையும், கடலின் அலைகளை ரசிப்பது போன்று எளிதாக எடுத்து கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.. வாழ்வின் இருண்ட பக்கங்களில் பயணிக்க நேரும் தருணங்களில், "என் வாழ்க்கை அவ்வளவு தான்.." என்று நீங்களே உங்களுக்கு முடிவுரைகளை எழுதிக் கொள்ளாதீர்கள். சில நேரங்களில் வாழ்க்கையை அதன் போக்கிலும் விட்டு கொடுங்கள்.. எதிர்பார்த்த காரியம் சில நேரங்களில் நிகழாமல் போனாலும், வாழ்க்கை உங்களுகென்று சுவாரசியமான, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய சில விசயங்களை வைத்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அது உண்மையும் கூட.. எனவே தைரியமாக முன்னோக்கி நகருங்கள்.. வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்.. சில நேரங்களில் உங்கள் விருப்பப்படியும், சில நேரங்களில் அதன் போக்கிலும்..
எல்லோருக்கும் பண்டிகை கால நல்வாழ்த்துக்கள்.. :-)
Very nice mapla..
ReplyDeleteதேங்க்ஸ் மச்சி..
ReplyDelete