"மாற்றம் மட்டுமே மாறாதது.." என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், பல இடங்களில் படித்திருந்தாலும், நிஜ அனுபவங்கள் பல நேரங்களில் அதையே கற்று தந்திருந்தாலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு மனமென்னவோ இது வரையில் பக்குவப்படவில்லை. வாழ்வின் மாற்றங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு ஏன் நம்மால் முன்னோக்கி நகர முடிவதில்லையென்று பல நேரங்களில் சிந்தனையில் நான் ஆழ்ந்ததுண்டு.. இருக்கும் இடம், பழகிய உறவுகள் மற்றும் நண்பர்கள், செல்லும் பாதைகள், வாழும் விதம் என்று எல்லாவற்றிலும் ஏதாவதொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பெரும்பாலும் சௌகர்ய எல்லையிலிருந்து (ஆங்கிலத்தில் அதை கம்பர்ட் ஜோன் [confort zone] என்று சொல்வார்கள், எனக்கு தெரிந்த முறையில் அதை தமிழ்ப்படுத்தி உள்ளேன்) வெளிவருவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அதனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதென்பது கடினமாக உள்ளது. எனவே தான் பழகியவர்களையும் பழகிய இடங்களையும் விட்டு பிரிவதற்கு மனம் ஒத்துக் கொள்வதில்லை.
என்ன தான் மனம் இப்படி சிந்தித்தாலும், வாழ்வின் நிகழ்வுகள் நாம் விரும்பியவாறு அமையாத கணங்களிலும், மனதை அடியாழம் வரை காயப்படுத்தும் வகையிலான சில விஷயங்கள் நடக்கும் போதும், நம்பி இருந்த உறவுகளாலும் நட்புகளாலும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்திக்கும் கணங்களிலும், இருக்கும் எல்லாவற்றையும் முற்றிலுமாக துறந்து, இதுவரை நடந்தவைகளின் காலடி சுவடுகளே பாடாத ஒரு புது உலகத்தில், புதிய மனிதர்களுடன், முதன்முறையாய் பூமியை முத்தமிடும் குழந்தையின் மனநிலைக்கு மீண்டும் சென்று, முற்றிலுமாக புதியதொரு வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்திலிருந்து [ஆனால் இம்முறை மிகுந்த கவனமுடன் யாரை சேர்த்துக் கொள்வது, யாருடன் பழகுவது, எப்படி வாழ்வது என்று சற்று எச்சரிக்கையுடன்] வாழ ஆசை கொண்டதும் உண்டு..
மாற்றமென்பது ஏற்றுக் கொள்ள இயலாததாக இருப்பினும், ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் கீறல்பட்ட இதயங்கள், அதனால் ஏற்படும் வலிகளுக்கு மாற்றங்கள் எவ்வளவோ மேல் என்றே எண்ணுகின்றன. அத்தகைய சிந்தனைகள் பல நேரங்களில் எனக்குள்ளும் எழுந்ததுண்டு.. சந்தித்து பழகிய மனிதர்கள் செய்யும் துரோகங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மன வருத்தங்கள் இவற்றை விட சந்தித்திராத மனிதர்களும் அங்கே நிலவும் ஒரு அந்நிய உணர்வும் எவ்வளவோ மேலானவை என்பது தான் அத்தகைய எண்ணங்களுக்கு காரணம்.
அது ஒரு வகையில் உண்மையும் கூட. நன்றாக பழகிய சில உறவுகளால் இழைக்கப்படும் துரோகங்களும், அதனால் வரும் ஏமாற்றங்களும் மனதினுள் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை ஞாபகப்படுத்தும் சுவடுகள் அந்த காயங்களை மீண்டும் மீண்டும் கீறி ஆறாத ரணத்தையும் ஏற்படுத்துகின்றன. 'இவனா/இவளா இப்படி நடந்து கொண்டான்(ள்)..' என்று மனதினுள் ஏற்படும் ஆதங்கத்தையும், அதனால் தோன்றும் ஏமாற்றம் கலந்த வலியையும் மனிதனால் ஏற்று கொள்ள முடிவதில்லை.. அத்தகைய மனிதர்களை ஏன் சந்தித்தோம் என்றும், அவர்கள் மேல் ஏன் நம்பிக்கை கொண்டோமென்றும், அவர்களை ஏன் சார்ந்திருந்தோம் என்பதுமான கேள்விகள் மனதில் இடைவிடாமல் தோன்றி தீராத வேதனையை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன.
எனவே தான் அத்தகைய நேரங்களில், மாற்றமென்பதை நமது மனம் தானாக தேடி அலைகின்றது. முழுமையான ஒரு மாற்றத்தை ஏங்கி எதிர்பார்க்கின்றது. அத்தகைய கணங்களில் மாற்றமென்பது விரும்பப்படுகின்றது. அதுவும், கடந்த கால சுவடுகளை முற்றிலுமாக அழித்து, நடந்தவைகளை மறக்க செய்யும் மாற்றமொன்று அமைந்தால் அதை விட அக்கணங்களில் வேறென்ன வேண்டும்..
மாற்றங்கள் குறித்த உங்கள் வெளிப்பாடு மிகவும் அருமை. எதார்த்தத்தை மிகவும் எதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க இளங்குமரன்.. :)
ReplyDelete