Monday, December 20, 2010

காதல் சார்ந்தவை [3]: சில காதல் பொய்கள்.. சீச்சீ.. மெய்கள்..!!


Photo, originally uploaded by sabatoa.
"ஏதோ என் அதிர்ஷ்டம் நான் அழகாய் பிறந்து விட்டேன்", என்று நீ சொல்கிறாய்.. அடியே, அழகாய் பிறக்க நீயொன்றும் கொடுத்து வைக்கவில்லை.. நீ அழகாய் இருக்க ஒப்புக் கொண்டது தன் அதிஷ்டம் என்று ஊர் முழுதும் சொல்லி வருகிறதாம் அழகு!!

"ஒருவேளை நான் அழகாய் இல்லாமல் இருந்திருந்தால்..?", என்பதாக கேட்கிறாய்.. அப்படியிருந்திருந்தால் நிச்சயமாக எனக்கு அழகென்பது பிடிக்காமல் போயிருக்கும்!!

"அது ஏன் நான் மல்லிகை சூடி வீதியில் நடக்கும் போது மட்டும் எல்லோரும் ஆச்சர்யமாகவேப் பார்க்கிறார்கள்", என்று கேட்கிறாய். மல்லிகை சூடி பெண்கள் வலம் வருவதையே பார்த்துப் பழகிய அவர்களுக்கு மல்லிகையே ஒரு பெண்ணை சூடி வலம் வருவதை பார்க்கும் போது ஆச்சர்யப்படாமல் என்ன செய்வார்கள்..

இன்னும் சில உண்மைகள் சொல்கிறேன் கேள்.. உன் மேனிபட்டு பூமியில் வழிந்தோடும் மழைத்துளிகளை உறிஞ்சி மூச்சுவிடும் செடிகளில் பூக்கின்ற மலர்களுக்கு இதுவரை கண்டிராத அழகு நிரம்பி வழிவதனால் சந்தையில் அவற்றிற்கு வரவேற்பு அதிகமாம்.. உன் விழியினது இமைகள் படபடக்கும் அழகு கண்ட மலர்களெல்லாம் இப்போது வண்ணத்துப் பூச்சிகளை கண்டுக் கொள்வதேயில்லையாம்..

உன் பாதச் சுவடு பட்ட இடமெல்லாம் கொடுத்து வைத்ததாக பூமி சொல்கிறதாம்.. பிற்காலத்தில் அவ்விடங்களில் காதல் கோவில்கள் கட்டியெழுப்பப்படலாம் என்பதாகவும் சில செய்திகளுண்டு..

நாசி நுழைந்து உன்னுயிர்த் தொடுவதற்கு காற்றணுக்களுக்குள் எவ்வளவு போட்டி நடக்கிறதென்பது உனக்கெங்கே தெரியப் போகிறது.. அவ்வப்போது நீ மூச்சுவிட சிரமப்படுவதற்கு காரணம் உள்சென்ற காற்று உன்னை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே குடியிருக்க முயல்வதால் கூட இருக்கலாம்..

"போடா.. இப்படி கவிதை சொல்லியே என்னை கிறங்கடிச்சிடு எப்போ பாத்தாலும்", என்கிறாய்.. அடியே, உனக்கு தெரியுமா..? கவிதை தன் பிறவிப் பயன் கண்டுக் கொண்டதே உன்னை பற்றி எழுதப்பட்ட பின்பு தானாம்.. அன்று தனியாய் இருக்கையில் என் காதில் கதைத்த ரகசியமிது. உன் பெயரினது மூன்றெழுத்துக்களுக்கு இப்போது மொழியில் முதல் இருக்கையில் இடமாம்.. மற்ற எழுத்துக்களுகெல்லாம் அவை மீது பொறாமையென்று அரசல் புரசலாய் செய்திகளும் உண்டு..

"ஹையோ முடியல..", என்று புன்சிரிப்பு கொள்கிறாய்.. ஆமாமடி.. இதையே தான் தோட்டத்து மலர்களும், வானவில் நிறங்களும், வண்ணத்து பூச்சியினது சிறகுகளும், இன்ன பிற இயற்கையினது அழகுகளும் சொல்கின்றனவாம்.. உன்னுடன் போட்டிப் போட முடியவில்லையாம் அவைகளுக்கு..!!

11 comments:

  1. "கவிதை தன் பிறவிப் பயன் கண்டுக் கொண்டதே உன்னை பற்றி எழுதப்பட்ட பின்பு தானாம்"

    அருமை நண்பரே...

    ReplyDelete
  2. ரொம்ப நன்றீங்க பிரஷா.. :) கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்..!! :)

    ReplyDelete
  3. நல்லாத்தான் லவ் பண்றீங்க

    ReplyDelete
  4. அடிச்சி தூள் கெளப்புங்க நண்பரே ... நல்லா இருக்குங்க

    ReplyDelete
  5. இன்றுதான் கண்டு கொண்டேன்..அழகான் எழுத்து நடை உணர்வு களை பிரதி பலிக்கிறது . மேலும் தொடரவாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  6. அருண், :-) நன்றி நண்பா..!

    பிரேம், :) நன்றி நண்பா..!!

    அரசன், :-) ரொம்ப நன்றி தோழா..!! :))

    இந்திரா, :) நன்றி தோழி... :)

    நிலாமதி, :) நன்றி தோழி..!! :)

    ReplyDelete
  7. அட...ம்..இப்புடியெல்லாம் கூட காதலிப்பாங்களா?

    ReplyDelete
  8. ஷஹி,

    ஹ்ம்ம்.. ஆமாம் தோழி.. :))

    ReplyDelete
  9. அழகைப் பற்றிய​ தங்களது கவிதை அழகோ அழகு.

    ReplyDelete