Thursday, December 23, 2010

குளிர்கால மாலை நேரமொன்றில்..


Photo, originally uploaded by Kausthub.
சற்றே தலை வலிக்க தேநீர் அருந்தலாமென்று அருகிலிருக்கும் கடைக்கு சென்றேன்.. முதிர்ச்சியடைந்த மாலை நேரமது. இருள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட போதிலும் கூட கரைந்துக் கொண்டிருக்கும் பொழுதின் சாயல் கொஞ்சம் மிச்சமிருக்கவே செய்தது.. ஒருவேளை அடைபட்ட சுவர்களுக்குள்ளேயே பொழுது முழுவதையும் கழித்ததால் தலை வலித்ததோ என்னவோ..

குளிர் காலமென்பதால் காற்றில் நிறையவே ஈரப்பதம் கலந்திருந்தது. எல்லோரும் உடம்பிற்கு கதகதப்பு கொடுக்கும் கம்பளியாடைகளை அணிந்தபடி நடந்து சென்று கொண்டிருக்க, எனகென்னவோ அந்த குளிரில் நனைய பிடித்திருந்தது. குளுமையை முழுவதுமாக உணர பிரியப்பட்டு மெல்லிய மேல்சட்டை மட்டுமே அணிந்திருந்தேன்.. இதமாக குளிர்காற்று மேனியை வருடிக் கொண்டிருக்க சூடான தேநீர் தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது சுகமான ஒரு உணர்வு ஏற்பட்டது.

பாதி தம்ளர் தான் குடித்திருப்பேன்.. வீதியை மேய்ந்துக் கொண்டிருந்த கண்கள் சட்டென்று காட்சியொன்றில் லயிக்க ஆரம்பித்தது. கசங்கிய ஆடை அணிந்துக் கொண்டு சுருங்கிய தேகம் பூசி முதியவளொருத்தி அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் அதிகளவில் தயக்கம் கலந்திருந்தது. முதல் பார்வையிலேயே தெரிந்தது ஆதரவில்லாதவள் என்பது. முகம் அதிகமாய் துவண்டிருக்க, அதில் தென்பட்ட அயர்ச்சி கலந்த சோகம் நன்றாகவே உணர்த்தியது அவள் சாப்பிட்டு வெகு நேரமாகி விட்டது என்பதை..

அவளால் கவரப்பட்ட என் கண்களிரண்டும் அவளது நடையின் வேகத்திலேயே தொடர்ந்து பயணித்தது. வீதியில் போய் கொண்டிருந்தவள் நான் நின்று கொண்டிருந்த கடைக்கு வந்து, "இந்த பன் கொடுப்பா', என்றவாறே கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டிருந்த கிரீம் பன் ஒன்றை கை நீட்டி காண்பித்து கேட்டாள். கடைக்காரன் அவளை நோக்க, "இது என்ன வெல..?, என்று கேட்டாள். பன்னை நோக்கி நீண்டிய அவள் கையில் சில சில்லறை நாணயங்கள் தென்பட்டன.

"ஆறு ரூபா", என்று அவன் பதிலளிக்க, சில வினாடிகள் யோசித்தவள் சட்டென்று அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள். அவளது முகமாற்றத்திலிருந்தே தெரிந்தது அவள் வைத்திருந்த சில்லறை அதற்கு போதவில்லையென்பது. அந்த கடையில் நான் உட்பட இன்னும் ஓரிருவரும் நின்றுபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். எங்கள் யாரிடமும் பசியென்றோ அல்லது அதை வாங்கிக் கொடுக்கச் சொல்லியோ கேட்கவில்லை அவள்.

அக்கடையிலிருந்து நடந்தவள் எதிரிலிருந்த இன்னொரு கடைக்கு சென்றாள். அங்கும் எதையோ அவள் கைநீட்டி கேட்க, அக்கடைக்காரன் பதிலளித்த மறுநொடியே ஏமாற்றம் கலந்த பாவனையை அவள் முகம் வெளிப்படுத்தியது. பின்பு எதுவும் வாங்காமலேயே அங்கிருந்தும் விலகி தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள்.

காட்சிகளை என் விழிகள் உள்வாங்கி கொண்டிருக்க, மனதிற்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அது உதவ வேண்டுமென்பதான துடிப்பு மட்டுமல்ல.. அதற்கும் மேல்.. பிறர் படும் கஷ்டங்களை காணும் போது ஏற்படும் ஒருவிதமான அனுதாபம் கலந்த வேதனை.. இன்னொரு பரிமாணத்தில் சற்று தலை தூக்கும் ஆதங்கம், 'ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது..?' என்று. பல உணர்வுகளின் கலவை. அது ஒருவிதமான தவிப்பு..

மௌனமாக நின்றபடி அக்காட்சிகளைப் பார்த்து கொண்டிருந்தேன். அவளை அடிக்கடி அருகிலிருக்கும் வீதிகளில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் ஒரு கோவிலிற்கு எதிரே அவள் சில நேரங்களில் அமர்ந்திருப்பாள். ஆனால் அவள் பிச்சையெடுத்து பார்த்ததில்லை. அவ்வழியாக போவோர் வருவோரை பார்த்தபடியே அமர்ந்திருப்பாள்.

தேநீர் குடித்து முடித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடியே வீடு வந்தேன். சில ரூபாய் நோட்டுகளை என் பணப்பையில் இருந்து எடுத்துக் கொண்டு அதே கடைக்கு திரும்ப சென்றேன். அவள் கைநீட்டி விலை கேட்ட க்ரீம் பன்னையும், அதனுடன் சேர்த்து இன்னும் சிலவற்றையும் வாங்கிக் கொண்டேன்.

அந்த முதியவளைத் தேடி நடக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நேரமானது அவளை கண்டு பிடிக்க. வீதியில் ஓரிடத்தில் ஓரமாக அமர்ந்திருந்தாள். அருகில் சென்று நான் வாங்கி வந்த தின்பண்டம் அடங்கிய பையைக் கொடுத்தேன். என்னை ஆச்சர்யமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கி, பின்பு அதை வாங்கி கொண்டாள். கூடவே அவள் கையில் சில ரூபாய் நோட்டுகளைத் திணித்தேன். அவள் முகத்தில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தென்பட்டது. நான் தேடி வந்தது அது தான் என்று எனக்கு தோன்றியது.

என் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். இருட்டத் தொடங்கி விட்டபடியால், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல வீடுகளில் மின்சார ஒளியில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவ்வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் ஒருவித சந்தோசம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த வருடமும் கிறிஸ்மஸ் தாத்தா வந்து ஆசைப்பட்ட ஒன்றை தருவார் என்பதான எதிர்பார்ப்பில் ஏற்பட்டிருக்கும் குதூகலமாக இருக்கலாம். விரும்பியதை அவர்கள் பெரும் போது அவர்களுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியை விட பல மடங்கு சந்தோசம் கிறிஸ்மஸ் தாத்தா அடைவார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

காற்றில் கரைந்திருந்த ஈரப்பதம் இப்போது சற்று அதிகமாக குளிர்ந்தது. ஒருவேளை உள்ளுக்குள் மனதும் குளிர்ந்திருப்பதால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம் அது.


பின்குறிப்பு: அனைவருக்கும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி பரவட்டும்..!!

14 comments:

  1. நல்ல பதிவு
    உங்களுக்கும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. :) நன்றி பிரஷா.. :))

    ReplyDelete
  3. இது உண்மை சம்பவமாக இருந்தால் உங்களுக்கு என் சல்யூட்

    சிறுகதையாக இருந்தால், உணர்வு பூர்வமாக சொல்லியதற்கு வாழ்த்துக்கள்...
    என் மனதை கனமாக்கி விட்டீர்கள்

    ReplyDelete
  4. கடைசி வரைக்கும் உண்மையா இல்லையான்னு சொல்லவே இல்லையே

    ReplyDelete
  5. அருண் பிரசாத்,
    Arun Prasath,

    நன்றி நண்பர்களே..!! சிறுகதை வடிவில் தந்திருப்பதால், "சிறுகதை" என்றும் முத்திரையிட்டு (label) இருக்கிறேன்.. கொட்டப்பட்டிருக்கும் உணர்வுகளும் நிகழ்வும் உண்மையில் நடந்தவை தான்.. :)

    ReplyDelete
  6. கதை போல உண்மையைச் சொல்லி இருக்கீங்க.
    Happy X'mas and New year...

    ReplyDelete
  7. //காற்றில் கரைந்திருந்த ஈரப்பதம் இப்போது சற்று அதிகமாக குளிர்ந்தது. ஒருவேளை உள்ளுக்குள் மனதும் குளிர்ந்திருப்பதால் ஏற்பட்ட உணர்வாக இருக்கலாம் அது.// அசத்தீட்டிங்க அந்த இறுதி வரிகளில் அனைவரும் விழுந்துவிட்டோம்.

    ReplyDelete
  8. இளங்கோ,

    நன்றி நண்பா..!! :) உங்களுக்கும் எனது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே..!!

    ReplyDelete
  9. ANKITHA VARMA,

    உங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.. :) மிக்க நன்றி தோழி..!! :)

    ReplyDelete
  10. சிறந்த எழுத்தாளர் தான் நீங்கள். சந்தேகமே இல்லை

    ReplyDelete
  11. மீனா,

    ரொம்ப நன்றி தோழி.. :) கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்..!! :)

    ReplyDelete
  12. நல்ல பதிவு
    மனதை கனமாக்கி விட்டீர்கள்

    :(

    ReplyDelete
  13. ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி தென்பட்டது. நான் தேடி வந்தது அது தான் //

    :)

    ReplyDelete
  14. கல்பனா,

    :) கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்..!! :)

    ReplyDelete