Friday, February 20, 2015

ஆன்மீகக் கதைகள்: 1. கடவுள்

வெளிச்சம் வலுவிழந்து இருந்த ஒரு மாலைப் பொழுதில் விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்தேன். மற்ற வீடுகளைப் போல தான் எதேச்சையாக அவன் வீட்டின் கதவையும் தட்டினேன். கதவை அகல திறந்த அவன் புன்னகையுடன் என்னை எதிர் கொண்டான். கண்களில் கண்ணாடி அணிந்திருந்தான்.

தேடி  வந்த விலாசத்தை அவனிடம் கட்டி, "இது எங்கங்க இருக்கு?", என்றேன்.

"ஒரு நிமிஷம்", என்று உள்ளே சென்றவன் சில நொடிகளில் திரும்பி வந்தான். இப்போது அவன் கண்களில் வேறொரு கண்ணாடி இருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அப்போது தான் கவனித்தேன். அவன் வீட்டிற்குள் பார்க்கும் இடம் எல்லாவற்றிலும் நிறைய கண் கண்ணாடிகள் அடுக்கப்பட்டு இருந்தன. மேசை, அலமாரி, பரண் என்று எல்லா இடங்களிலும். விதவிதமாய்.

திரும்பி வந்த அவனிடம் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"ஏன் சார் இவ்ளோ ஐ-கிளாஸ் வாங்கி வச்சிருக்கீங்க..? ஹாபியா..?"

அவன் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

தன் கண்களில் இருந்த கண்ணாடியை சரி செய்தான். மெல்ல சிரித்தபடியே விலாசம் எங்கிருக்கிறது என்று சொன்னான்.

சொல்லப்பட்ட விலாசம் நோக்கி நான் திரும்ப, தன் கதவை அடைத்துக் கொள்வதற்கு முன் அவன் சொன்னான்.

"நீங்க அழகா இருக்கீங்க"​.

--
பால் ஆரோக்கியம் 

No comments:

Post a Comment