Saturday, August 13, 2016

மனிதன், கடவுள் மற்றும் இன்னபிற..

நாம் எவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மனிதன், மனிதன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், கடவுள், கடவுளாக ஆக்கப்பட்ட கடவுள்கள். கோடுகளை யார் வரைந்தார்கள் என்பது முக்கியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. 'வரைந்தது' என்பதாக அது ஆகிவிடும் பொழுது, அங்கே திருத்தத்திற்கான இடம் அளிக்கப்பட்டு விடுகிறது.

மனிதன் என்பவன் யார் என்பதில் இருக்கும் ஒரு தெளிவான மனநிலை, கடவுளைப் பற்றியோ கடவுளாக ஆக்கப்பட்டு உள்ள கடவுள்கள் பற்றியோ இல்லை என்பதில் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது. அதற்கு காரணம் வளர்க்கப்பட்ட விதத்தினால் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் மீற பயப்படும் வரம்புகள்.

மனிதம் சார்ந்த குணாதிசயங்கள் உயரிய பண்புகளாக பாராட்டப்படுவதும், அதை மனம் எதிர்பார்ப்பதும் எவ்வளவு வேடிக்கையான வருந்தத்தக்க ஒன்று. நான் என் தோழி ஒருவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, "உங்களைப் போல புரிதல் உள்ளவரை நான் இதுவரையில் பார்த்ததில்லை.. ஒரு நிகழ்வு அல்லது செயல் உங்களுக்கு முற்றிலுமே எதிராக இருக்கும் போதும் கூட எதிராளியின் கண்களின் வழியாக அந்த நிகழ்வை, செயலை பார்க்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு பாராட்டுதல்களுக்கு உரியது..?", என்பேன். அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், "அப்படி பாராட்டும் அளவிற்கு அதை  உயர்வாக பேச என்ன இருக்கிறது.. நியதியின் படி அப்படி தானே நாம் இருக்க வேண்டும்", என்பார். உதவும் பாங்குடைய ஒரு மனிதரை, இரக்கம் காட்டும் ஒரு மனிதரை, "நீங்கள் எவ்வளவு உயர்ந்தவராக இருக்கிறீர்கள்", என்று புகழும் அளவிற்கு இருக்கும் சூழ்நிலைகள் நிஜமாகவே வருத்தத்திற்கு உரிய ஒன்று தான். மனிதம் என்பதின் அடிப்படை குணாதிசயங்கள் காண்பதற்கு அல்லது அனுபவிப்பதற்கு அரிதாகி விட்ட சூழல் ஆரோக்கியமான ஒன்றா..? இந்த ஒரு அடிப்படை புரிதல் போதும், 'மனிதன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்' பற்றி என்ன சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்ள.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவனா என்பதில் எனக்கே நிறைய சந்தேகங்கள் உண்டு. ஆனால் கடவுளாக ஆக்கப்பட்ட கடவுள்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்கிற தெளிவு நிறையவே உண்டு. நான் பொதுவாகவே சொல்வது, "I'm spiritual, not religious", என்பதை தான். எனக்குள் ஒரு தெளிவு பெரும் வரை, I should give the benefit of doubt to God. இன்னமும் அறிவியலின் எல்லைகளுக்குள் அடைக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும் போது, கடவுளை விட்டு விலகினால் துரதிஷ்டம் துரத்தும் என்னும் மிகவும் கொடிய விஷயம் பிஞ்சிலேயே நம் நெஞ்சுக்குள் செலுத்தப்பட்டு ஒரு ஆழ்ந்த பயத்தை உருவாக்கி வைத்திருக்கும் சூழலில் நாம் வளர்ந்து இருக்கும் போது, giving the benefit of doubt to God is a much more comfortable and less complicated choice that one can choose என்று தான் எனக்கு இப்போது வரையில் தோன்றுகிறது. பின்னர் இது மாறலாம். அது மாறும் போது பார்த்துக் கொள்ளுவோம்.

கடவுள் நம்பிக்கையின் மீதான தெளிவு இந்த அளவில் இருக்க, 'இவர் தான் கடவுள்' என்பதில் கொஞ்சமும் உடன்பாடற்ற தெளிவு இருக்கவே செய்கிறது. இக்குறுகிய வட்டம் நிறைய வன்முறைகளை தூண்டுகிறது, மனிதர்களைப் பிரிக்கிறது, மனிதத்தை சிதைக்கிறது, மனதின் மீது சிவந்த கொடிய நஞ்சைக் பூசுகிறது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 'இவர் தான் கடவுள்', என்பது ஒரு வியாபாரம், அரசியல், சூழ்ச்சி, பிணியுள்ள மனம் தான் வாழும் சமூகத்தினுள் பரப்பும் வியாதி, ஒருவன் மனிதத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள தனக்கு தானே அல்லது பிறரிடம் கொடுக்கும் Excuse.

--
பவுல்.




சொல்ல விரும்பும் ஒன்றைப் பற்றி..

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதற்கு தேவையான அத்தனை வார்த்தைகளையும் முழுதாய் சேர்த்த பின்னும், அவற்றை சிக்கல்கள் இல்லாமல் கவனமாக கோர்த்த பின்னும் சொல்ல முடியாமல் தள்ளிப் போட வைக்கும் இச்சூழ்நிலைகளை என்ன செய்வது..?

ஒன்றை சொல்ல விரும்பும் ஒருவன் அதை முழுதாய் எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்த எவ்வளவு முயற்சிகள் எடுத்து கொள்கிறான். ஆனாலும் கூட சொல்ல வருவதை சென்று சேரும் இடத்தின் மனநிலைகளுக்கு ஏற்புடையவாறு எடுத்துரைப்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கிறது.

வார்த்தைகளின் உண்மைத்தன்மை வெளித் தெரியுமாறு அவற்றை நன்றாக செதுக்கி, அவற்றிற்கு மனநிலையின் வண்ணம் பூசி, அவற்றை வெளிப்படுத்தும் போது ஏற்படக் கூடிய (சாதகமான அல்லது எதிரான) எதிர்வினைகளை ஏற்கும் மனப்பக்குவத்தை உள்ளுக்குள் சுடர் விடச் செய்து, கடைசியில் சொல்ல விரும்பியதை சேதாரங்கள் இன்றி முழுவதுமாக வெளிப்படுத்தி முழுமையடைவது ஏன் இவ்வளவு தவிப்புகள் தாண்ட வேண்டிய ஒன்றாக இருக்கிறது..?

ஆடைகளை துறந்தவனுக்கு தன் மேல் படும் அல்லது படிந்து விடும் தூசுகளை துடைப்பதற்கு துணிகள் இருப்பதேயில்லை. அதற்கு துணிகள் தேவையில்லை என்பதையும் அவன் அறிந்தவனாகவே இருக்கிறான். அவன் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதெல்லாம் கருமேகங்கள் அவன் தலை மேல் குவிந்து தன் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்ளும் அக்கணத்திற்காக தான்.

ஆடைகளை துறக்கும் ஒருவன் நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறான், தன்  மீது அறிந்தோ அறியாமலோ படிந்துவிடும் தூசுகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள தண்ணீர் எவ்வளவு உதவும் என்பதை. அதனாலேயே அவன் தான் தனித்திருக்கும் நேரங்களில் தண்ணீருடனான உறவாடலை விரும்பி ஏற்கிறான். அவன் தான் சொல்ல விரும்புவதற்கு தேவையான அத்தனை வார்த்தைகளையும் அத்தண்ணீரில் தான் வலை வீசிப் பிடிக்கிறான்.

--
பவுல்.

Tuesday, August 2, 2016

பரிவு

இது ஒரு புதிய தொடக்கம் அல்ல. இடையில் விட்டு சென்ற ஒன்றின்  தொடர்ச்சி. சிமெண்ட் பூசப்பட்ட தரையின் அடியில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு விதையிடம் காட்டும் பரிவு. சிறியதொன்று பெரிதாகும் என்னும் நம்பிக்கையில் தரையை உடைக்கும் முயற்சி அல்ல. விடாத ஒரு போராட்டத்திற்கு கொடுத்து தான் பார்ப்போமே என்னும் ஒரு சந்தர்ப்பம்.

மாறிக் கொண்டே இருக்கும் இவ்வுலகத்தில் கடைசி வரை கூட வரும் ஒரு துணைக்கான தேடல் எவ்வளவு அயர்வைத் தருகிறது. நான் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன். நட்புகளை அடைந்திருக்கிறேன். நண்பர்களை இழந்திருக்கிறேன். ஏதோ ஒன்றின் வெறுமை இந்த உலகை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கும் மாசுவைப் போல எப்போதும் என்னை சுற்றி படர்ந்திருக்கிறது. அர்த்தங்களை தேடுவதிலும், அவற்றைக் கொடுப்பதிலும் ஏன் இவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

என் எழுத்துக்களின் உருமாற்றங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன. எங்கோ தொடங்கி, என்னை எங்கெங்கோ எடுத்து சென்றிருக்கின்றன. எவ்வளவு முகங்கள்.. எவ்வளவு அசைவுகள்.. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவை எல்லாம் ஏன் ஓடி ஒளிந்துக் கொண்டன என்பது புரியவில்லை. ஒருவேளை அவை நிரப்ப முயன்ற வெற்றிடம் அக்கணத்திற்கு பிறகு வெற்றிடமாக இல்லாமல் போய்விட்டதோ..?  அல்லது அதன் எதிர்பாராத வடிவப் பெருக்கம் என் எழுத்துக்களுக்கு அச்சத்தைக் கொடுத்து விட்டதோ..?

நான் என் யோசனைகளை பின்னோக்கிய திசையில் திரும்புகிறேன். என் வாழ்வின் மிகவும் உயிருள்ள பொழுதுகள் எழுத்துக்களின் துணையுடன் என் இருப்பிற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுதுகளாகவே இருந்திருக்கின்றன.  எனக்கு தெரியும், அவை மிகவும் இனிமையான இதமான பொழுதுகள் அல்ல என்று. ஆனால் அவற்றில் நிறைய துடிப்பு இருந்ததாகவே இப்போது நினைக்கையில் எனக்கு தோன்றுகிறது.

நான் என் மேசை மீதிருக்கும் இந்த தாளைப் பார்க்கிறேன். இதில் எழுத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன. ஆங்காங்கே மை சிந்தியிருக்கிறது. இது பார்க்க தெளிவாக இல்லை. ஆனால் இது என்னை என் குழந்தைப் பருவத்திற்கு எடுத்து செல்கிறது. பேனாவின் மை தாளிற்கு மட்டுமே ஆனதல்ல என்பதை என் கைவிரல்கள், கன்னம் மற்றும் உதடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

--
பவுல்.