Wednesday, December 2, 2009

இலக்குகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை..


Photo uploaded by Sơn Marki.
அது ஏனென்று தெரியவில்லை!! நன்றாக பழகி, உள்ளுக்குள் ஒரு நட்புணர்வை ஏற்படுத்தி, 'இனி பயணம் சுவாரசியமாக இருக்கும்' என்றெண்ண வைத்து, மனமானது மகிழ்ச்சியில் பூரிக்க தயாராகும் போது தான் பலர் நம்மிடமிருந்து விடைபெறுகின்றனர். வாழ்வின் பயணத்தில் நமது இலக்கை அடையும் வரை கூடவே வரும் சக பயணியை அவ்வளவு எளிதாக சந்திக்க முடிவதில்லை. வாழ்கையே ஒரு பயணம் தானென்றாலும் எல்லோருடைய இலக்குகளும், அவர்கள் செல்ல வேண்டிய திசைகளும் ஒன்றாக இருப்பதில்லை. பயணத்தின் இடையில் திடீரென்று அறிமுகமாகும் சிலர், பின்னர் பாதி வழியிலேயே விடை பெற்று, அவரவர் பாதையில் சென்று விடுகின்றனர். நாமோ மீண்டும் அறிமுகமில்லாத முகங்களுடன் பயணத்தை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

பிரிவினை தவிர்க்க என்ன தான் முயன்றாலும், பலருக்கு தனது இலக்கை விடுத்து வேறொரு திசையில் பயணிக்க மனம் சம்மதிப்பதில்லை. அதற்கான சுதந்திரத்தையோ அல்லது வாய்ப்பையோ வாழ்க்கை அவர்களுக்கு வழங்குவதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கான இலக்கு குறித்த திசையில் செய்ய வேண்டிய சில பணிகள் காத்துக் கிடக்கின்றன. எனவே நினைத்த நேரத்தில் விரும்பியவாறு சில முடிவுகளை அவர்களால் எடுக்க முடிவதில்லை. ஆனால், 'என் வாழ்வில் இணைந்து என்னோடு வந்து விடு..' என்று தன்னுடன் பழகியவர்களிடம் அவர்கள் விடுக்கும் அழைப்பானது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது. அறிமுகமில்லாத முகங்களுடன் பயணிக்க பயந்து, அத்தகைய அழைப்பை ஏற்று சிலர் தான் செல்ல வேண்டிய பாதையை மாற்றி, அவர்களுடன் இணைந்தும் கொள்கின்றனர்.

ஆனால் வேறு சிலரின் வாழ்க்கையோ சற்று கடினமானது. 'என்னை அழைத்து செல்லுங்கள்.. நானும் உங்களுடன் வருகிறேன்', என்று தானே முன்வந்து கூறினாலும், இவர்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடன் நெருங்கி பழகியவர்களோ, 'எனது வாழ்வில் நீ இடம் பெறுவது கடினம்', என்று எளிதாக சொல்லி நிராகரித்து விடுகின்றனர்.

பிரிவை நினைத்து இவ்வாறாக சிலர் கலங்க, இவர்களைப் பிரிந்தவர்களோ அதைப் பற்றிய எந்தவித உணர்ச்சியுமின்றி, 'நான் போய் வருகிறேன்' என்று விடைப் பெற்று, அவர்களது வழியில் சென்று விடுகின்றனர். அவர்களுக்கு பிரிவை பற்றி சிந்திக்கவோ, மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படவோ நேரமில்லை. அவர்களுக்குண்டான வாழ்விலும், போய் சேர வேண்டிய பாதையிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 'நான் உன்னுடன் கூடவே வருவேனென்று எதற்காக நீ கனவு கண்டுக் கொண்டிருக்கிறாய்.. விழித்து கொள்.. இதோ நிஜ உலகம்.. சந்தித்துக் கொள்!! நான் போய் வருகிறேன்', என்று எளிதாக சொல்லி, புன்னகையோடு கையசைத்து, மிக வேகமாக பார்வையிலிருந்து விலகிவிடுகின்றனர்.

ஆனால், 'இவர்' தன்னுடன் கடைசி வரை வருவார் என்று கனவுகளில் கோட்டை கட்டிய இவர்களோ, தம்முடன் பழகியவர்களைப் பிரிந்து வேறு வழியில் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். நன்றாக பழகி, திடீரென்று சென்றுவிட்டவர்களின் பிரிவு, உணர்வளவில் பலவீனமான இத்தகைய மனிதர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றது. அவ்வாறான கணங்களில், ஏமாற்றம் கலந்த குழப்ப நிலையுடன் எந்த திசையிலும் செல்ல தோன்றாமல் தற்காலிகமாக அந்த இடத்திலேயே நின்றும் விடுகின்றனர்.

பிரிந்து சென்றவர் என்றாவது திரும்பி வந்தால், மீண்டும் அவருடன் இணைந்து தமது பயணத்தை தொடரலாமென்று ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் கால வரையற்று காத்திருக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆனால் உண்மையோ பல நேரங்களில் கசப்பானது.. ஏற்றுக் கொள்ள இயலாதது.. வேதனையை தரக் கூடியது.. மனதை காயப்படுத்தக் கூடியது.. பிரிந்து சென்றவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவதே இல்லை. அவர்கள் தம்முடன் அறிமுகமாகும் வேறு எவருடனோ மகிழ்ச்சியுடன் அவர்களது இலக்கின் திசையில், எந்தவித பின்னோக்கிய பார்வையுமின்றி பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அதை புரிந்துக் கொண்டவர்கள், காத்திருந்தது போதுமென்று மீண்டும் பயணத்தை தொடர்கின்றனர். சிலருக்கோ அது புரியும் கணங்களில் அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தமது பயணத்தை அவ்விடத்திலேயே முடித்துக் கொள்ளவும் முயல்கின்றனர். ஆனால் இத்தகைய மனிதர்கள் அறிந்துக் கொள்ளாத ஒரு உண்மையென்னவென்றால், இவர்கள் செல்ல வேண்டிய திசையிலேயே இன்னும் சில மைல்களுக்கு அப்பால் இவர்களுடன் பயணத்தில் இணைந்து, வாழ்க்கையை சுவாரசியமாக்கி, பயணத்தை இலகுவாக்கி, கிட்டத்தட்ட இவர்களது இலக்கு வரை கூடவே வருவதற்கும் தயாராக பயணியொருவர் காத்திருக்கிறார் என்பது தான். பலர் அவ்வாறானதொரு பயணியை சந்திக்கும் வரை பொறுமையுடன் தமது திசையில் செல்ல தயாராக இல்லையென்பது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

குறிப்பு: பாத்தோம், படிச்சோம், போனோம்னு இல்லாம ஏதாச்சும் சொல்லிட்டு போங்க :-)

1 comment:

  1. அத்தனையும் உண்மை பால். வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

    ReplyDelete