Saturday, February 20, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (3)

வெற்றி என்பது இலக்கை நோக்கிய வழியை சரியாக அடையாளம் கண்டு கொள்வதினால் மட்டும் ஏற்படுவதல்ல.. அவ்வபோது ஏற்படும் பல தடைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் கூட தொடர்ந்து முன்னேறும் மன உறுதியினால் ஏற்படுவது. "எவ்வளவு காலம் தான் நான் ஏமாற்றங்களையும் தோல்விகளையுமே சந்தித்து கொண்டிருப்பது. இதற்கு மேல் என்னால் பொறுக்க இயலாது..", என்று எத்தனையோ பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். தோல்வியையும் ஏமாற்றங்களையும் தொடர்ந்து சந்திக்கும் மனமானது நாளடைவில் சோர்வடைவது மட்டுமல்ல விரக்தியின் எல்லையை தொடுவதும் கூட சற்று இயற்கை தான். "இன்னும் கொஞ்சம் பொறுத்து தான் பாருங்களேன்.." என்பதான ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படும் போது, "உனக்கு வந்தால் தெரியும்.." என்பதாகவே அவர்களின் சிந்தனையும் பதிலும் இருக்கும்.

எடுக்கப்படும் எல்லா முயற்சிகளும் தொடர்ந்து எதிர்மறையான முடிவுகளையே (negative results) சந்திக்கும் போது வெறுமை கலந்ததொரு வெறுப்பு தோன்றுவது நிகழக் கூடிய ஒன்று தான். என்றாலும் தோல்விகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளில் அதே தவறை செய்யாமல் இருக்கிறோமா என்று ஆராய்வது வெகு சிலரே. உண்மையை சொல்லப் போனால், தனது தோல்விகளை ஆராய்ந்து, அதில் தான் செய்த தவறுகளை கற்றுக் கொண்டு, தனது அடுத்தடுத்த முயற்சிகளை திருத்தி அமைக்கும் அத்தகைய மனிதர்களுக்கு விரக்தி அவ்வளவு எளிதாக வருவதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமது முயற்சிகளை சரியாக மேற்கொள்ள முடிந்தவரை சிரமப்பட்டு, எப்பாடுபட்டாவது தனக்கு வேண்டியதை அடைந்தே தீர வேண்டுமென்கிற குறிக்கோளுடன் முன்னேறுவது தான் அதற்கு காரணம். அவர்கள் தங்களது குறைகளை கண்டறிந்து சரி செய்வதிலும், இலக்கு நோக்கி முன்னேருவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பதனால், இடையில் சந்திக்கும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் கண்டுக் கொள்ள அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்கள் நமக்கு இவ்வளவு முயற்சிகளுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகும் கூட கிடக்கவில்லையே என்று கவலை கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவ்வாறான கவலை கொள்வதால் எதையும் சாதிக்க இயலாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை. கவலைகள் எப்போதும் எதையுமே பெற்று தருவதில்லை. அதிகபட்சமாக அவை மனதளவில் சோர்வையும் தளர்சியையுமே கொண்டு வரும். கவலை கொள்வதற்கு பதிலாக, அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்திப்பதும், சிந்தனையோடு மட்டும் நில்லாமல் அதனை செயலில் காட்டுவதும் மட்டுமே நாம் விரும்பியதை பெற கொஞ்சமாவது உதவும்.

எல்லோருடைய பயணங்களும் எளிதானதல்ல. ஒரு சிலருக்கு எளிதாக கிடைக்கும் சில விஷயங்களை பலர் கடினப்பட்டு தான் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பதை விட்டுவிட்டு 'ஏன் இந்த ஏற்ற தாழ்வு..?' என்று ஆதங்கம் கொள்வதிலும் விரக்தி கொள்வதிலும் அர்த்தமில்லை. இன்னும் சிலருக்கோ அவை கிடைக்காமல் கூட போகலாம். இன்னொரு உண்மையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். தான் விரும்பியதை அடைவது மட்டும் வெற்றியல்ல. தான் விரும்பியது தனக்கு சரியானதல்ல, அது ஒத்து வராது என்பதை கண்டறிவதும் கூட ஒரு விதத்தில் வெற்றி தான். அத்தகைய புரிதல்களும் கண்டறிதல்களும் பல நேரங்களில் சில முயற்சிகளுக்கு பின் தான் புலப்படும். அதை தோல்வியென்று எண்ணி அதனை நினைத்து வருந்தி யோசித்துக் கொண்டிருப்பதில் பயனொன்றுமில்லை. அத்தகைய புரிந்து கொள்ளுதலை கண்டறிய முடிந்ததே என்று சந்தோஷபட்டு கொள்ள வேண்டியது தான்.

பல நேரங்களில் மனித மனமானது "அவர்களிடம் இது இருக்கிறது.. அது இருக்கிறது.. எனக்கோ ஒன்றுமே இல்லை.. நான் எப்படி என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவது..?" என்பதான ஆதங்கமும், "எனது சூழ்நிலை மட்டும் எப்போதுமே சரியாக இருப்பதில்லை.." என்பதான குற்றச்சாட்டுடன் கூடிய வெறுப்பும், "எதுவுமே இல்லாமல் நானெப்படி முயற்சி எடுத்து வெல்வது..?" என்பதான விரக்தியும் கொள்ளுகிறதே தவிர, "என்னிடம் இருப்பவற்றை உபயோகித்து நான் எப்படி முன்னோக்கி நகருவது.." என்று சிந்திக்க தவறி விடுகிறது. இல்லாத ஒன்று இருந்திருந்தால் எளிதாக நான் வென்றிருப்பேன், எனகானதை பெற்றிருப்பேன் என்று காரணங்களை சொல்லி சமாளிக்க முயல்கிறதே தவிர, "இருப்பதை வைத்து கொண்டு நான் என்ன செய்திருந்தால் முன்னோக்கி நகர்ந்திருக்க முடியும்" என்று யோசிக்க மறுக்கிறது.

பல நேரங்களில் நம் கையில் இருக்கும் விஷயங்களை வைத்தே ஏதாவதொரு வழி செய்து நம்மால் முன்னோக்கி நகர முடியும். வேகமாக இல்லாவிட்டாலும் மெதுவாகவாவது முன்னேற முடியும் என்பதே உண்மை. வேகமாகவோ மெதுவாகவோ, முன்னோக்கி நகர்தலேன்பது முன்னோக்கி நகர்வது தான். அது நிலை கொள்ளுதலை (staying still) விட மேலானது என்பதை உணர வேண்டும். 'இது' இருந்தால் எனது முயற்சிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு உடனே எனது இலக்கை அடைய முடியும், நான் விரும்பியதை பெற முடியும் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. அதற்காக அது கிடைக்கும் வரையில் சும்மா இருப்பதில் பயனில்லை. என்னிடம் 'இது' இருந்தால் தான் என்னால் முயற்சி எடுக்க முடியும் அல்லது இதை செய்ய முடியுமென்று காரணம் சொல்லிக் கொண்டிருக்காமல், இருப்பவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதான சிந்தனையும் அதனையொட்டிய முயற்சியும் எப்போதுமே ஏதாவதொரு பலனை தரும். அது மட்டுமல்லாது அத்தகைய அணுகுமுறை மனதை சோர்வுபடுத்தக் கூடிய தேவையில்லாத சில எண்ணங்களை சிந்திக்காது தவிர்த்திட உதவும்.

எல்லாவற்றையும் விட நம்மாலான முயற்சிகளை முதலில் செய்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நான் பார்த்த பலர் அவர்களாலான முயற்சிகளை எடுக்காமலேயே, "எனக்கு வெற்றி கிடப்பதே இல்லை.." என்று அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நம்மால் முடிந்தவரையில் முயற்சி (our best effort) எடுக்காமல் சூழ்நிலைகளை நொந்துக் கொள்வதிலும் அதிர்ஷ்டத்தை வசை பாடுவதிலும் எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment