நீண்ட நாட்கள் பழகி உறவாடியவர்களுடன் விரிசல் ஏற்பட்டு, அவர்களை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறதென்றால், அது "சரியான" காரணங்களுக்காகவாவென்று (right reason ) மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தி கொள்வது நல்லது. காரணம், நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதென்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அது ஓரிரவில் (over night) நிகழும் அதிசயமுமல்ல. யாரென்றே தெரியாத மனிதர்களுடன் புன்னகைகளை பரிமாறி கொள்வது கூட மிக கடினமான காரியம் தான். புன்னகைப்பதற்கே பலமுறை யோசிக்க வேண்டியதாக உள்ளது. அப்படியிருக்கும் போது பல மாதங்கள் வருடங்களென்று பழகியவர்களுடன் விரிசல்கள் விழுவதற்கும், அத்தகைய உறவுகளை முடித்துக் கொள்வதற்கும் எதற்காக அவசரபட வேண்டும்.
உண்மையிலேயே கருத்து வேறுபாடுகள் வரும் சூழ்நிலைகளிலும் கூட 'நமது உறவு முக்கியம்' என்கிற எண்ணத்துடன் இருவரும் பிரச்சனைகளை கலந்தாலோசித்தால், பல நேரங்களில் அத்தகைய கருத்து வேறுபாடுகளை புறக்கணித்து மீண்டும் உறவை தொடர்வதான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் எனது நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவன் மீது எனக்கிருந்த கோபத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். "அவன் இப்படியெல்லாம் பண்றப்ப எனக்கு அவன் மேல செம கோவம் வருதுங்க..", என்றேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "பால்.. எப்பவுமே கோவத்த சூழ்நிலை மேல காட்டணுமே தவிர மனுஷங்க மேல கிடையாது.. அப்போ தான் ரிலேஷன்ஷிப்லே (relationship) ப்ராப்ளம் வராம பாத்துக்கலாம்..", என்றார்.
அவர் சொன்னது ஒரு விதத்தில் சரியென்றும் பட்டது. எப்பொழுதுமே அவ்வாறு முடியாது என்றாலும், முடிந்தவரை கோபத்தையும் ஆதங்கத்தையும் சூழ்நிலைகள் மீது காட்டுவது நல்லது. கோபத்தின் பெரும் பகுதியை சூழ்நிலைகள் மீதும், கோபத்தின் மிக சிறிய அளவை மனிதர்கள் மீதும் காட்ட முயலும் போது, மனிதர்களுடனான உறவில் மிக பெரிய விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, அத்தகைய அணுகுமுறை சூழ்நிலைகளை ஆராயவும், அத்தகைய பிரச்சனை வரும் சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தவிர்க்கவும் உதவும். மனிதர்கள் மீது கோபம் கொள்ளும் போது, தொடர்ந்து அவர்கள் செய்யும் காரியங்களையும் கோப கண்ணோடு நம்மையும் அறியாமல் நாம் பார்க்க ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம். கோபமும் ஆதங்கமும் மனிதர்கள் மீது காட்டப்படும் போது, எதிர்காலத்தில் அவர்கள் எது செய்தாலும் அதிலே இருக்கும் நல்லவைகளை ஒதுக்கி விட்டு, அவர்கள் செய்வதில் ஒளிந்திருக்கும் தவறுகளையே நமக்கு பெரிதுபடுத்தி காட்டும்.
அதே நேரத்தில், எப்போதுமே சூழ்நிலைகளை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. காரணம் ஒரு மனிதனின் உண்மையான குணங்களை சூழ்நிலைகளே வெளிக் கொணர்கின்றன. ஒருவன் எப்படிபட்டவன் என்பதை சில சூழ்நிலைகளில் அவன் நடந்து கொள்ளும் விதத்திலேயே புரிந்து கொள்ள முடியும். எனவே பிரச்னை வருவதான சூழ்நிலைகளில் மற்றவருடைய குணாதிசயங்களையும் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். நடந்தவைகளை பல கோணங்களிலிருந்து ஆராய்வதுடன், அதை சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடுவதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்னவென்பதை அறிய உதவும். தவிர்க்க கூடிய சூழ்நிலைகளினால் பிரச்சனையும் கருத்து வேறுபாடுகளும் வருகிற பட்சத்தில், அத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முயலலாம். ஆனால் அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாதவை என்றாலோ, அவை மீண்டும் மீண்டும் அரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகமென்றாலோ முடிவெடுப்பதென்பது சற்று கடினமான விஷயம் தான்.
சில நேரங்களில் இருவருகிடையேயான குணாதிசயங்கள் ஒத்து போகாமலும், கருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகவும் அமைவதென்பது இயற்கை. அது மாற்ற முடியாதது. அத்தகைய முரண்பாடுகளை சகித்துக் கொண்டு போகமுடியாத பட்சத்தில், 'நாம் இருவருக்கும் ஒத்து போகவில்லை' என்பதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. அத்தகைய நேரங்களில் பிரிவென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதே நேரத்தில் நன்றாக பழகிவிட்ட சில உறவுகளில் விழும் விரிசல்கள் தவறான புரிந்து கொள்ளுதல்களினாலோ அல்லது அகங்காரத்தினாலோ (ego) அல்லது தற்காலிகமாக வாழ்வில் புகுந்து கொள்ளும் சூழ்நிலைகளினாலோ இல்லாதவாறு பார்த்து கொள்வோமே. ஏனென்றால் உறவுகள் மதிப்புமிக்கவை. அவை அமைவதென்பது அரிது. அவ்வாறான உறவுகளில் விரிசல்களும் பிரிவும் ஏற்படுகிறதென்றால் அது சரியான காரணங்களுக்காக மட்டும் இருக்கட்டும். உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக இருக்க வேண்டாமே..
hmm nice what u said is right..''Never show ur anger to he person'' nice lines,,
ReplyDeleteயோசிக்க வைக்கும் பதிவு.
ReplyDeleteநன்றி.