"யாவரும் நலம்.. யாவதும் நலம்.." என்று எல்லாம் சரியாகவும் எதிர்பார்த்தபடியும் வாழ்க்கையில் நடந்து, தானும் தன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாயிருக்கும் போது, திடீரென்று ஒருநாள் கரை கடந்த புயலின் சாரல் வாழ்வை லேசாக தீண்டியதை போல, நேற்று வரை சரியாக இருந்தவற்றிற்கு ஏதோ ஒன்றாகி, கடினமான கணங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, பலர் தட்டு தடுமாறி சற்று நிலைகுலைந்து தான் போகிறார்கள்.
'நேற்று வரை எல்லாம் சரியாக தானே இருந்தன..? ஏன் திடீரென்று இப்படி நடக்கின்றது..? ஏன் எனக்கு மட்டும் இப்படியாகின்றது..? நான் தவறொன்றும் செய்யவில்லையே..?' என்று வாழ்வில் நுழைந்துவிட்ட திடீர் திருப்பங்களையும், மாறிவிட்ட தனது சூழ்நிலைகளையும் எண்ணி கவலையும் வருத்தமும் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்களே தவிர, 'சூழ்நிலைகள் மாறுதலென்பது வாழ்வில் இயற்கையான ஒன்று' என்கிற உண்மையை ஏற்று கொண்டு, 'அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன'வென்று யோசிப்பது வெகு சிலரே.
'சந்தோசமாக இரு.. ஆனால் அதே நேரத்தில் சூழ்நிலைகள் மாறி கஷ்டமொன்று வந்துவிட்டால் என்ன செய்வாயென்று இப்பொழுதே தயார்படுத்தி கொள்..' என்பதாக சொல்லப்படும் அறிவுரைகள் பலர் காதுகளில் ஏறுவதேயில்லை. அப்படியே காதில் விழுந்தாலும், அதை சிந்தையில் ஏற்றி கொள்ள அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. வாழ்க்கை நன்றாக போகும் போது மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதென்பது இருக்க வேண்டியது தான். அதே சமயத்தில், வாழ்வின் சூழ்நிலைகள் மாறிவிட்டால் அதை சமாளிப்பது எப்படியென்று உள்ளுக்குள் தன்னையே தயார்படுத்தி கொள்வது அவசியமென்பதை பலர் மறந்து விடுகின்றனர். அதற்காக உங்களது நிகழ்கால வாழ்வின் நிமிடங்களை பாதிக்கும்படி சிந்தியுங்களென்று நான் சொல்லவில்லை.
வாழ்வின் தற்போதைய நிகழ்வுகளை கொண்டாடும் அதே சமயத்தில், எதிர்பாராத சில பிரச்சனைகளையும் மாற்றங்களையும் கையாள்வதற்கு நம்மையே நாம் தயார் செய்து கொள்ளுதலென்பது எதிர்மறையாக சிந்திப்பதாக (negative thinking) அர்த்தமாகாது. எதிர்மறையான சிந்தனையென்பது கவலையளிப்பது. நான் சொல்வதோ, நாம் எதிர்பார்த்தவாறு நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் அமையாத பட்சத்தில், தொடர்ந்து எப்படி முன்னேறுவது என்று சிந்திப்பதையும், பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர்கொண்டு கையாள்வதற்கு தேவையான பக்குவத்தை வளர்த்து கொள்வதுமான அணுகுமுறையையும் பற்றியது.. அதோடு நின்றுவிடாமல் நிகழ்காலத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வதை பற்றியது..
எல்லாம் சரியாக இருப்பதாலும் பிரச்சனைகளின்றி வாழ்க்கை போய் கொண்டிருப்பதாலும், சாகும் வரை அப்படியே வாழ்க்கை இருந்துவிடுமென்று யோசித்தீர்களேயானால் அதை விட அறியாமையொன்று இருக்க முடியாது. 'எல்லாம் சரியாக இருக்கும் போது பிரச்சனை ஏன் வருகிற'தென்கிற கேள்வி சரிதான், ஆனால் 'சரியாக இருப்பவை சரியாகவே இருக்குமா' என்றொரு கேள்வியும் இருக்கிறதென்பதை மறந்துவிடக் கூடாது.
பிரச்சனைகளுக்கு (அவை நடப்பதற்கான சூழ்நிலையே இல்லையென்றாலும் கூட) நம்மையே நாம் தயார்படுத்தி வைத்திருந்தோமென்றால், அவை வாழ்வில் நிகழும் போது, 'இப்படியாகிவிட்டதே..!' என்று கவலை கொள்ளுவதற்கு பதிலாக, அவற்றை சமாளிப்பதெப்படி என்பதை பற்றி யோசிக்க முடியும். சூழ்நிலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். 'எதிர்பாராமல் அப்படி நடந்து விட்டால் என்ன செய்வது..?' என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் திட்டங்களையும் மனதிற்குள் தயாராக வைத்திருக்கும் போது, அவ்வாறான நிகழ்வுகளை அதிக கஷ்டப்படாமல் (கஷ்டமே இல்லாமல் சமாளிப்பதென்பது முடியாத காரியமென்பதால், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகா வேண்டும்) சமாளித்து கொள்ள முடியும்.
ஒரு இலக்கு நோக்கி பயணிக்கும் போது ஒரு வழியை மட்டும் சார்ந்து உங்களது முழு பயணத்தையும் முடிவெடுக்காமல், போய் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கான பல வழிகளையும் தெரிந்து கொண்டு, தேவைப்பட்டால் வேறு வழியை தேர்ந்தெடுத்து, நாம் போக வேண்டிய இடம் நோக்கி பயணத்தை தொடர்வதென்பது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க அவசியமான ஒன்று. வழியில் உணவு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது, பயணிக்கும் வாகனத்தில் பழுது ஏற்பட்டால் என்ன செய்வது, உடல்நிலை சரியில்லாமல் போனால் அதை எவ்வாறு சமாளிப்பது.. இப்படி எத்தனையோ விஷயங்களை முன்கூட்டியே யோசித்து அதற்கு தேவையான மாற்று திட்டங்களை வைத்திருப்பதென்பது பயணத்திற்கு மிக தேவையான ஒன்றாக உள்ளது.
இப்படி சாதாரண பயணத்திற்கே இவ்வளவு யோசித்து பலவற்றிற்கு தயாராக இருக்க வேண்டுமென்கிற போது, வாழ்க்கையெனும் மிக நீண்ட பயணத்திற்கு எவ்வளவு முன்யோசனைகளும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கான தயார்நிலையும் அவசியம்.. எப்பொழுதுமே வாழ்க்கை வாழ்வதற்கான 'இன்னொரு திட்டம்' (backup plan) வைத்திருப்பது அவசியம். எதிர்பாராதவைகளை எதிர்பார்த்து, அவற்றை தைரியமாக சந்தித்து கையாளும் மனப்பக்குவத்தை நமக்குள் வளர்த்து கொண்டோமேயானால், எவ்வித பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட தொடர்ந்து முன்னேறி நமது இலக்கை (destiny) நம்மால் அடைய முடியும். ஒரு வழியில் தடங்கல் ஏற்படுகிறது என்பதற்காக பயணத்தையே கைவிட முடியுமா என்ன..? அப்படி தடங்கல் ஏற்பட்டாலும் பயணத்தை தொடர வேண்டுமென்றால் உங்களது இலக்கிற்கான பல வழிகளையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா..
இன்னும் இன்னொரு பதிவில்..
No comments:
Post a Comment