மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Tuesday, February 23, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (4)
தெருவிலோ, சாலையோரத்திலோ அல்லது மரத்தடியிலோ பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களைப் எப்போதெல்லாம் நான் பார்க்கிறேனோ, உடனே அந்த காட்சி என் மனதிற்குள் புகுந்துக் கொண்டு, ஒருவித சுமையை ஏற்படுத்தி இம்சை செய்ய ஆரம்பித்துவிடும். 'ஏன் இப்படி நடக்கிற'தென்று ஒரு ஆதங்கம் தோன்றும். இப்படி தனது தாய் தந்தைகளை வீட்டை விட்டு விரட்டி விடும் அத்தகைய பிள்ளைகள் மீதும் அதற்கு காரணமாக மற்றவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் மீதும் கோபம் வரும். எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காகவென்று செய்து விட்டு இப்போது எதுவுமே இல்லாமல் சாலையில் கையேந்தி நிற்கும் அந்த வயதான முதியவர்களின் அவலத்தை பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே தான் அவர்களுக்கு உதவும் போதெல்லாம், 'நான் கொடுப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கோ அல்லது ஒரு நாளுக்கோ அல்லது சில நாட்களுக்கோ போதும், அதன் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்' என்பதானதொரு கவலை தோன்ற ஆரம்பித்து விடும்.
வயதாகிவிட்டாலே அது இன்னொரு குழந்தை பருவம் போல தான். குழந்தைகளைப் போலவே அவர்களுக்கும் எப்போதும் ஒருவர் கூட இருந்து அனுசரணையாக கவனித்துக் கொள்ள வேண்டிய காலமது. வயதாகும் காலமானது எப்போதுமே ஒரு தனிமை சூழ்ந்துக் கொள்ளும் காலம். சுற்றி பலர் இருந்தாலே தனிமை ஆட்கொள்ளக் கூடிய காலமென்னும் போது, வீட்டை விட்டு விரட்டப்பட்டு உண்மையிலேயே தனிமைபடுத்த படும்போது அவர்களது நிலைமையை சொல்லியா தெரிய வேண்டும். அன்பான பேச்சு, அக்கறையான கவனிப்புகள், அவர்களது அன்றாட தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ள கைகொடுத்து உதவ அவர்களை நேசிக்கும் சிலர் என்று ஏங்கும் பருவம் அது. அத்தகைய பருவத்தில் வீட்டிலிருந்து விரட்டப்படும் பொழுது உண்மையிலேயே அவர்களின் நிலை பரிதாபத்திற்குறியது தான். அத்தகைய வயதான மனிதர்களின் காட்சி எப்போதுமே என் சிந்தனையை பாதிப்பதுண்டு.
எனது ஆபீஸ் பெங்களூரின் ஏர்போர்ட் ரோட்டில் [இப்போது அதன் பெயர் பழைய ஏர்போர்ட் சாலை(old airport road)] இருந்த போது அந்த சாலையோரங்களில் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அத்தகைய வயதானவர்களை அடிக்கடி நான் காண்பேன். காலையில் அலுவலகம் செல்லும் போது, மதியம் உணவருந்த வெளியே வரும் போது, மாலையில் வீட்டிற்கு கிளம்பும் போது என்று எப்போதுமே அங்கே ஒருசிலராவது தட்டுபடுவர். எனவே ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் எனது சிந்தனைகளை அவர்களை நோக்கி ஈர்த்து விடுவர்.
அப்படி தான் அன்றும் மதிய உணவருந்த வெளியே போய்விட்டு அலுவலகத்திற்கு திரும்பி நடந்து வந்துக் கொண்டிருக்கையில் வருவோர் போவோரிடம் கையேந்தி நின்றுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி கண்ணில் பட, "எப்டி வில்லியம் அம்மா அப்பாவ வீட்ல இருந்து தொரத்தி விட ஒரு சிலருக்கு மனசு வருது..?", என்று ஆதங்கத்துடன் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த எனது நண்பர் வில்லியமிடம் கேட்டேன். "எவ்வளவோ கஷ்டப்பட்டு வளத்து விடுறாங்க.. கடைசியிலே அவங்கள தொரத்தி விட எப்டி தான் முடியுதோ..", என்று தொடர்ந்து சொன்னேன்.
"அது உண்மை தான் பால்.. இவங்கள பாத்தா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஆனா சில நேரத்துல இவங்க மேலயும் தவறுகள் இருக்குமோனு எனக்கு தோன்றதுண்டு..", என்று மெல்லிய யோசனையுடன் அவர் பதிலளித்தார்.
"அப்டி என்ன இவங்கள் மேல தப்பு இருக்கும்னு சொல்றீங்க. அத என்னால அக்செப்ட் (accept) பண்ண முடியல. என்ன தான் இருந்தாலும் குழந்தையிலே இருந்து வளத்து விட்டவங்க இல்லையா. அதெப்படி அவங்கள வெளிய போனு சொல்ல மனசு வரும்..?", என்று அவரிடம் கேட்டேன். என்ன தான் தாய் தந்தையர் மேல் சில தவறுகள் இருந்தாலும் அதை கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இவர்களெல்லாம் என்ன பிள்ளைகள் என்று எனக்கு தோன்றியது.
"பட் (but) பால், அம்மா அப்பாவை பாத்துக்காம அவங்கள வீட்ட விட்டு வெளிய அனுப்பிடனும்னு உங்களுக்கோ எனக்கோ தோணுமா..?", என்று கேட்டார். தொடர்ந்து, "நமக்கு அப்டி தோணாம இருக்க காரணம் என்ன.. அவங்க வளத்த விதம் தான. நம்மளோட சிட்சுவேசன் (situation) எப்டி இருந்தாலும் அம்மா அப்பாவ கவனிச்சுக்கணும்னு நமக்கு தோனுதுல்ல. காரணம் அவங்க நம்மள எவ்ளோ கஷ்டப்பட்டு வளத்தாங்கனு நமக்கு தெரியற மாதிரி வளத்தது தான. வளக்குற விதம் சரியா இருந்திருந்தா பிள்ளைங்க ஏன் அவங்கள தொரத்தி விட போறாங்க..?" என்று கேட்டார்.
அவர் கேட்டது மிக நியாயமான கேள்வியாக தோன்றியது எனக்கு. அது தான் எதார்த்த உண்மையோ என்று நினைத்தேன்.. ஒருவேளை பிள்ளைகளை இவர்கள் வளர்த்த விதம் சரியில்லாததால் தான் இவர்களுக்கு இந்த நிலையோ என்று எண்ண வைத்தது. அது ஒருவிதத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமோ என்று கூட எனக்குப்பட்டது.
பிள்ளைகளை அன்பு மழை பொலிந்து வளர்த்தால் மட்டும் போதாது; அவர்களை வளர்க்க என்னென்ன தியாகங்கள் மற்றும் கஷ்டங்கள் படுகிறோமென்பதை அவர்கள் உணரும்படி வளர்க்கும் போது தான் அவர்கள் பொறுப்புள்ளவர்களாகவும், குடும்பத்தின் மீது அக்கறையுள்ளவர்களாகவும், பெற்றோர் மீது பற்றுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள். இன்னொரு புறம், எல்லா வசதிகளையும் கொடுத்து வளர்த்தாலும் கூட, அவர்களுடன் போதிய நேரம் செலவழித்து அன்பு பரிமாறாதிருக்கும் போது அவர்களுக்கு தங்களது குடும்பம் மற்றும் பெற்றோர் மீது ஒரு பிடிப்பு ஏற்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பிள்ளைகள் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பாசத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்பினால் அவர்களை சரியான முறையில் வளர்ப்பதும், தேவையான அளவிற்கு அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடன் அன்போடிருப்பதும் அவசியமென்றே தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் கஷ்டப்பட்டு நிறைய தியாகங்கள் செய்து உங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்களென்றால் அது அவர்களுக்கு தெரியும்படி அவர்களை வளருங்கள். அது தான் பின்னாளில் நீங்கள் கஷ்டப்படாமல் இருக்க உதவுமென்று நான் நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment