மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Friday, January 29, 2010
முன்னோக்கிய பயணத்திலெழும் பின்னோக்கிய நினைவுகள்..
சில நாட்களுக்கு முன்பு எதற்காகவோ எதையோ புரட்டிக் கொண்டிருக்கும் போது தட்டுபட்டது அந்த காகிதம். துண்டு காகிதமாக இருந்தாலும் சட்டென்று மனதை தூண்டும் மேற்கோளொன்று கண்ணில் பட்டது.
"வாழ்க்கையை பின்னோக்கியே புரிந்துக் கொள்ள முடியும் ஆனால் அதை முன்னோக்கி தான் வாழ்ந்தாக வேண்டும்.." [Life can be understood backwards but it has to be lived forward]
வாழ்க்கையின் மிக பெரிய தத்துவங்களிளொன்றை ஆழமாக பொதிந்து அழகாக வடிக்கப்பட்ட வரி அது.. சில விஷயங்கள் நடந்து முடிந்த பின்பு தான் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஒரு சிலருடன் பழகிய பின்பு தான் இனி இம்மாதிரியான நபர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிற புரிதல் ஏற்படுகிறது. சில நிகழ்வுகள் நடந்த பின்பு தான் 'அதை அவ்வாறு செய்திருக்க கூடாது..' என்பதான எண்ணமும், 'அதை இவ்வாறு செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கு'மென்பதான சிந்தனைகளும் தோன்றுகிறது. சொல்லப்பட்ட வார்த்தைகளின் விளைவாக மற்றவரிடமிருந்து வரும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை கண்ட பிறகு தான் நமது எண்ணங்களை அவ்வாறு வெளிப்படுத்தியிருக்க கூடாது என்பதும் அவ்வாறு பேசுதல் தவறென்பதும் புரிகின்றது. இப்படி எத்தனையோ.. சொல்லிக் கொண்டே போகலாம்.
வாழ்வில் படிப்பினை தருவதான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தானிருகின்றன. 'ஏன்.. எதற்கு.. எப்படி..' என்பதான கேள்விகளுடன் வாழ்வின் கடந்த கால சுவடுகளை தூசு தட்டி ஆராய்வதில் தான் பலரின் (நான் உட்பட) நேரம் செலவழிக்கப்படுகிறது. இன்னும் பலரோ, நடந்து முடிந்தவை பற்றிய ஆதங்கம், கோபம், வெறுப்பு, வருத்தம், வேதனையென்று பலவித உணர்ச்சிகளின் கலவைகளினூடே நிகழ்காலத்தையும் கடந்த காலத்தின் நிழலிலேயே வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.
கடந்த கால பக்கங்களை புரட்டிப் பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. அது ஒரு வகையில் அவ்வபோது அவசியமும் கூட. ஏனென்றால் அவை வாழ்வின் முன்னோக்கிய பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும், மீண்டும் சறுக்கி விழாமல் கவனமாக பயணிக்கவும் உதவும். அதே நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளை படிப்பினையாக அல்லாமல் பாரமாக எடுத்துக் கொண்டோமேயானால் வாழ்க்கையில் முன்னோக்கி நகர இயலாது. அது தலையில் பாராங்கல்லை சுமந்தபடியே நடப்பதை போன்றது. நீண்ட தூரம் தொடர்ந்து நடப்பதென்பது கடினமான காரியமாகிவிடும்.
'ஏன் இப்படி நடந்ததென்பதான' கவலைகளுக்குள்ளேயே நமது நேரத்தை செலவிட ஆரம்பித்தோமென்றால், இப்போது நடந்து கொண்டிருப்பதிலும் இனி நடக்க இருப்பதிலும் கவனம் செலுத்த தவறி விடுவோம். எனவே நடப்பதும் நடக்க இருப்பதும் தவறுதலாக போய் வருங்காலத்திலும் இதே கவலைகளுக்குள்ளேயே வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பின்னோக்கிய நினைவுகளை முன்னோக்கி செல்வதை தடுக்கும் தடைகளாக பாவிக்காமல், சரியான திசையில் முன்னோக்கி செல்ல உந்து சக்திகளாக உபயோகிப்பதே விவேகம்.
தவறிழைப்பதில் தவறொன்றும் இல்லை. அது முதன் முறையாக இருக்கும் வரையில்.. செய்த தவறையே திரும்ப செய்யாதிருக்க ஏற்கனவே செய்த தவறுகளிலிருந்து பாடங்களை கற்று கொள்வது அவசியமாகிறது. தவறி விழலாம்.. அது பல நேரங்களில் தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் விழுந்த இடத்திலேயே 'விழுந்து விட்டோமே' என்று யோசித்தபடியே படுத்திருப்பதில் பயனில்லை. எழுவதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். "விழுந்ததால் காலொடிந்து விட்டதே, நானெப்படி எழுவது..?" என்று கேட்பீர்களேயானால், அத்தகைய கேள்வியை கேட்குமளவிற்கு தெளிவாயிருக்கும் (consciousness) உங்களுக்கு ஊர்ந்தாவது உதவி கிடைக்குமிடத்திற்கு செல்லும் சக்தி இருக்கிறதென்று தான் அர்த்தம். அதையாவது செய்யுங்கள். விழுந்த இடத்திலேயே இருப்பதால் எதையுமே சாதிக்க முடியாது; சாவதை தவிர..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment