Tuesday, January 12, 2010

பழகிவிடும் ஏமாற்றம்..


வழக்கம் போல் காலையில் விசில் ஊதும் சப்தம் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். பெங்களூரு மாநகரில் தினந்தோறும் காலையில் குப்பைகளை வாங்கிக் கொண்டு போக வரும் துப்புரவு தொழிலாளர்கள் கொடுக்கும் ஒலி (signal) தான் அது. நான் வசிக்கும் தெருவில் தினமும் மூன்று சக்கர வண்டியை தள்ளிக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை வாங்கிக் கொண்டு போகும் அந்த பெண்மணிக்கு முப்பத்தைந்து வயதிருக்கும்.

விசில் ஊதும் சப்தம் ஒன்றாக இருந்தாலும், அன்று வந்திருந்தது வழக்கமாக வரும் பெண்ணல்ல. அவளுக்கு பதிலாக வேறொரு பெண் வந்திருந்தாள். குப்பைகளை கொண்டு போய் கொட்டும் போது ஏனோ தெரியவில்லை, "அந்த பெண் ஏன் வரவில்லை.." என்றொரு கேள்வி எழுந்தது.. எனக்கும் அவளுக்கும் துளியும் சம்பந்தமில்லையென்றாலும் , "என்னாயிற்று அவளுக்கு..?" என்பதான கவலை கலந்த எண்ணம் என் மனதை ஆக்கிரமித்தது. பழகி விட்ட முகத்திற்கு பதிலாக இன்னொரு முகத்தை பார்க்க நேர்ந்ததோ அல்லது எப்போதும் வரும் அந்த பெண்ணின் முகத்தில் பூக்கும் சிநேக புன்னகையை புதிதாக வந்த பெண்ணின் முகத்தில் காண முடியாததோ அதற்கு காரணமாக இருக்கலாம்.

குப்பையை கொட்டிவிட்டு திரும்புகையில், பக்கத்துக்கு சந்திலிருந்து துள்ளி குதித்துக் கொண்டு நாய் குட்டியொன்று  அங்கு ஓடி வந்தது.. விசில் சப்தம் கேட்டதும் வாலை ஆட்டிக் கொண்டு அங்கு பாய்ந்து வந்த அந்த நாய் குட்டி புதிதாக வந்திருந்த பெண்ணை பார்த்ததும் சற்று உற்சாகமிழந்தது. அதன் முக மலர்ச்சி வேகமாக சுருங்கியதும் அதன் வாலாட்டும் வேகம் குறைந்ததும் அதை தெளிவாக காட்டியது.

முன்பு வந்து கொண்டிருந்த பெண் வரும் போதெல்லாம் இந்த நாய் குட்டியும் அவள் சப்தம் கேட்டு வாலாட்டிக் கொண்டு ஓடி வர, அவளும் ஒரு பெரிய புன்னகையுடன் புடவை மடிப்பிலிருந்து சில பிஸ்கட்களை எடுத்து அதற்காகவென்றே சின்னதாக உடைத்து அன்பாக அதனருகில் வைப்பாள். அதுவும் மெல்லிய சிணுங்கலுடன் சாப்பிடும். இவ்வாறாக அவள் காலையில் வந்து விசிலடிப்பதும், அந்த நாய் குட்டி ஓடி வருவதும், அவள் அதற்கு சிரித்த முகத்துடன் பிஸ்கட் வைப்பதும், அது சாப்பிட்டு விட்டு கொஞ்சலுடன் வாலாட்டிக் கொண்டே அவளுடன் கொஞ்ச தூரம் நடந்து போவதுமான காட்சியை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். இரு வெவ்வேறு உயிர்கள் சிநேகம் பரிமாறிக் கொள்ளும் காட்சி அது.. பார்பதற்கு மிக அழகானது..

ஆனால் இன்று எப்போதும் வரும் அந்த பெண்ணை காணாததால் அந்த நாயின் முகத்தில் ஏமாற்றம். புதிதாக வந்திருந்த பெண் அந்த நாய் குட்டியை கண்டு கொள்ளவில்லை.. உற்சாகம் முகத்தில் குறைந்திருந்தாலும், அது அன்று வந்திருந்த பெண்ணிடம் சிநேகத்துடன் வாலாட்டிக் கொண்டு நட்பு பரிமாற்ற முயல, அவளோ அதை விரட்டி விட்டு சட்டென்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அது ஏமாற்றத்துடன் அங்கு கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து விட்டு திரும்பி சென்றது.

அதே காட்சி அடுத்த நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்தது. முன்பு வந்து கொண்டிருந்த பெண் மீண்டும் திரும்ப வந்திருக்க கூடும் என்கிற எதிர்பார்ப்புடன் துள்ளி குதித்து வரும் அந்த நாய் குட்டி, அவள் இன்றும் வரவில்லையென்று  தெரிந்ததும் ஏமாற்றம் கலந்த முகத்துடன் சற்று நேரம் அங்கிருந்து விட்டு திரும்பி போகும். அவள் இப்போதெல்லாம் வருவதில்லை.. ஏமாற்றம் பழகிவிட்டதாலோ என்னவோ அந்த நாய் குட்டியும் இப்போதெல்லாம் விசில் சப்தம் கேட்டு அந்த நேரத்திற்கு அங்கு வருவதேயில்லை.. ஏனோ தெரியவில்லை, வாழ்வின் ஒரு பகுதியினுடைய அர்த்தத்தை அந்த காட்சிகள் பிரதிபலிப்பதாக என் மனதிற்கு பட்டது..

No comments:

Post a Comment