Tuesday, January 26, 2010

முன்னுரிமை யாருக்கென்பதில் தெளிவாயிருங்கள்..

பத்தோடு பதினொன்றாகவும் (one among the ten), மற்றவர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுக்கு பதிலீடாகவும் (alternative or choice) மட்டுமே நினைத்து நம்மோடு பழகும் மனிதர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்கள் முக்கியமென்று அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தோமேயானால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. நம்மை பெரிதாக எண்ணாத சிலருக்கு நாம் முக்கியதுவம் அளித்தோமேயானால் விரைவிலேயோ அல்லது பின்னாளிலோ நமது இதயத்தின் ஆழம் வரை பதியுமளவிற்கு மிக பெரிய காயத்தை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

அவர்களை பொறுத்த வரையில் நீங்களொரு விளையாட்டு பொம்மை. தேவைப்படும் போது எடுத்து விளையாடி பின்பு கிடப்பில் போட்டு விட்டு தங்கள் வாழ்நாள் முழுதும் கூட இனி அவர்கள் உங்களை கண்டுக் கொள்ளாமல் போக கூடும். காரணம் நீங்கள் அவர்களுக்கு பத்தோடு பதினொன்று. அவர்கள் உங்களை என்றுமே முதன்மைபடுத்தி எதையும் யோசிப்பதில்லை. நீங்கள் தான் அவர்களை மையபகுதியாக வைத்து அவர்களை சுற்றி உங்களது உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; அவர்கள் உங்களை விட்டு நகரும் போது உங்களது உலகம் சரிந்து விடுமென்பது புரியாமல்..

அவன்(ள்) என்னை கண்டுக் கொள்ளவில்லையென்றால் பரவாயில்லை ஆனால் நான் அவனு(ளு)க்காக உருகுவேன்.. எதையும் செய்வேன்.. உயிரை கொடுப்பேன்.. என்பதை விட மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை புரிந்துக் கொள்ளாமலோ அல்லது புரிந்துக் கொள்ள தயாராக இல்லாமலோ இருந்தோமேயானால், மீண்டும் மீண்டும் வேகமாக ஓடி சென்று சுவற்றில் மோதி நமது மூக்கை நாமே உடைத்துக் கொள்வதை போன்றதாகி விடும் வாழ்க்கை.

உங்களை முக்கியமென்று நினைக்காத சிலருக்காக நீங்கள் வருத்தப்படுவதிலோ, உருகுவதிலோ, அவர்களுக்காக கண்மூடித்தனமாக எதையும் செய்ய தயாராக இருப்பதிலோ அர்த்தமொன்றும் இல்லை. அவ்வாறு செய்வதால் உங்களுக்கு அதிகபட்சமாக கிடைப்பது மனதளவிலான (சில நேரங்களில் உடலளவிலும் கூட) ஆறாத காயங்கள் மட்டுமே. உங்களது சிந்தனைக்கும், அன்புக்கும், அக்கறைக்கும் அவர்கள் சிறிதும் தகுதியானவர்கள் இல்லையென்பதை உணருங்கள்.

உங்களை பெரிதாக மதிக்காதவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதால், உங்களையே உலகமென்று எண்ணி வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிலரை நீங்கள் கண்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட பாடம். நம்மை பெரிதாக எண்ணாத சிலரை முக்கியமானவர்களென்று நினைத்து வாழ்வின் சில மதிப்பு மிக்க கணங்களை அவர்களுக்காக இழந்து, உணர்வளவிலும் மனதளவிலும் காயப்பட்டு, கோமாளியை போன்று வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் அழும்படியான சூழ்நிலைகளுக்குள் சிக்கியவர்களில் நானும் ஒருவன்.

ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள்: "Don't allow someone to be your priority when you are just their option.." அதே அழகுடன் மொழி பெயர்க்க தெரியாததால் அதை தமிழாக்கம் செய்யவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள அர்த்தம் மிக மிக ஆழமானது.. நிச்சயமாக நடைமுறைபடுத்த வேண்டியது.. நம்மை முக்கியமென்று நினைக்காதவர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அது யாராக இருந்தாலும் சரி. அவ்வாறு முக்கியத்துவமளித்து அவர்களுக்காக உருக ஆரம்பித்தால், உங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்.. ஒருவிதத்தில் எனது வாழ்க்கையை நான் வாழும் விதத்தை மாற்றியமைத்த வார்த்தைகள் அவை.. சொல்ல வேண்டுமென்று தோன்றியது அதனால் சொல்கிறேன் :-)

2 comments:

  1. hey really too good to read all ur words,,its make me think so much,,,thanks to all..நம்மை முக்கியமென்று நினைக்காதவர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க ஜெயா.. :-)

    ReplyDelete