உறவு மற்றும் நட்பு வட்டங்களிலிருந்து வரும் கோரிக்கைகளை பல நேரங்களில் 'முடியாது..' 'இல்லை..' என்று சொல்ல முடியாமல் தவிக்கும் பலரில் நானும் ஒருவன். தமது சக்திக்கு மீறியதாக இருந்தாலும், அவர்களது கோரிக்கையை நிறைவு செய்வதால் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் உணர்வளவிலோ பொருளளவிலோ பாதிக்கும் என்பதான சூழ்நிலையிருந்தாலும் கூட பல நேரங்களில் 'இல்லை (no).. என்னால் அப்படி செய்ய இயலாது (அல்லது) உங்களுக்கு உதவ கூடிய சுழலில் நான் இல்லை..' என்று சொல்வதற்கு உதடுகள் ஒத்துழைப்பதில்லை.
நன்றாக பழகியவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற கூடிய சூழ்நிலையில் உண்மையிலேயே இல்லாவிட்டாலும் கூட, 'இல்லை.. என்னால் இயலாது' என்று சொல்லும்படியாக மனதிலிருந்து கட்டளைகள் வரும் முன்பே, 'சரி..' என்று நா சொல்லி விடுகிறது. அதன் பின்பு 'சரி..' சொல்லிவிட்டோமே என்பதற்காகவே, மிகவும் கஷ்டப்பட்டு தனது சுய தேவைகளையும் சுய விருப்பங்களையும் துறந்து எப்படியாவது அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
மனதளவிலும் பொருளளவிலும் நஷ்டப்பட்டு, 'நம்மிடம் கேட்டுவிட்டார்களே..' என்று கஷ்டப்பட்டு அவர்களுக்கு நாம் உதவ, அவர்களோ உணர்வளவிலான நமது பலவீனத்தை ஆதாயப்படுத்தி நம்மை அவர்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு எளிதாக அவர்களது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். அவர்களது தேவைகளுக்காக உபயோகித்துக் கொள்ளும் நோக்குடன் நம்மை அணுகும் சுயநலவாதிகள் தான் நம்மை சுற்றி உலா வரும் மனிதர்களில் பலர். அவர்களை பொறுத்தவரையில் அவர்களது காரியம் ஆகா வேண்டும். அவ்வளவே.. நம்மை பற்றியோ, நம் உணர்வு மற்றும் சூழ்நிலை பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை. உண்மையை சொல்லப் போனால், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற கூடிய சூழ்நிலையில் நாம் இல்லையென்பதும் அவர்களது கோரிக்கை நியாயமற்றது என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உணர்வளவிலான நமது பலவீனத்தால் நாம் 'இல்லை..' என்று சொல்ல மாட்டோம் என்பதை பயன்படுத்தி நம்மிடம் காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். நமது உணர்வுகளுடன் எளிதாக விளையாடி நம்மை 'சரி..' என்று சொல்ல வைத்து வெற்றிப் புன்னகையுடன் சென்று விடுகின்றனர். நாமோ அவர்கள் சென்றவுடன், 'ஏன் சரியென்று ஒத்துக் கொண்டோ'மென்று தனிமையில் சிந்தித்து நம்மை நாமே கடிந்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை தான் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
இவ்வாறாக நாம் அவர்களுக்கு உதவி கொண்டிருக்க, நமது அத்யாவசிய மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் அவர்களிடம் உதவி கேட்டால், 'இல்லை.. என்னால் இப்போது உதவ முடியாது..' 'உனக்கு அதை கொடுக்கும் சூழ்நிலையில் நான் இல்லை..' என்று எவ்வளவு எளிதாக சொல்லி நழுவிக் கொள்கிறார்கள். என்ன தான் இத்தகைய பாடம் கற்பிக்கும் நிகழ்வுகள் நடந்து 'உனது தேவைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து உதவுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்ல.. அவர்களிடம் எச்சரிக்கையாயிரு!!' என்று நமக்கு உணர்த்தினாலும், அதே மனிதர்கள் மீண்டும் நம்மிடம் வந்து "எனக்கு இது வேண்டும்.. இதை செய்துக் கொடு.." என்று கேட்கும் போது, 'உன்னை உபயோகித்துக் கொள்ள மறுபடியும் வந்து விட்டார்கள்.. இந்த முறையாவது முட்டாளாகாமல் தைரியமாக முடியாது என்று சொல்..' என்று மனம் அடித்துக் கொண்டாலும் கடைசியில் 'சரி..' என்று சொல்ல தான் வாய் வருகிறது. மீண்டும் முட்டாளாகவும் இளிச்சவாயாகவும் நாம் தயாராகி விடுகிறோம்.
அவர்களது தேவைகளுக்காக எளிதாக நம்மை பயன்படுத்திக் கொள்ளும் அத்தகைய சுயநல மனிதர்களை காணும் போதும், அவர்களுக்கு 'இல்லை..' என்று சொல்லாமல் மீண்டும் மீண்டும் நாம் முட்டாளாகும் சூழ்நிலைகளிலும், மனதளவில் கோபமும் ஆதங்கமும் கொள்ள முடிகிறதே தவிர அத்தகைய மதிப்பற்றவர்களிடம் உணர்வளவில் பலவீனமாக இல்லாமல் எச்சரிக்கையாக இருந்து, அடுத்த முறை 'இல்லை' என்று சொல்ல முடியவில்லை. நம்மை அவர்களது சுயநலத்திற்காக பயன்படுத்தி, மாடி படிகளைப் போன்று நம் மீது கால் வைத்து எளிதாக அவர்கள் வாழ்க்கையில் மேலேறி சென்று கொண்டிருக்க, நாமோ உதவுகிறோமென்கிற பெயரில் இன்னும் அடிமட்டத்திலேயே உழன்றுக் கொண்டிருக்கிறோம்.
உணர்வளவில் பலவீனமாக இருப்பது தவறான காரியமொன்றும் அல்ல. ஆனால் நாம் யார் மீது அவ்வாறு இருக்கிறோமோ அதற்கு அவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமென்று தோன்ற ஆரம்பித்து விட்டது இப்போதெல்லாம். விழித்துக் கொள்ளும் தருணம் வந்து விட்டது.. எனக்கும், என்னை போன்று இருப்பீர்களேயானால் உங்களுக்கும்..
No comments:
Post a Comment