Monday, January 4, 2010

ஆசைகள் பற்றியவை..

மனிதனின் ஆசைக்கு தீனி போடுவதென்பது ரொம்பவே கடினமான விஷயம் தான்.. சத்குரு ஜாக்கிவாசுதேவின் 'அத்தனைக்கும் ஆசைப்படு..' தலைப்பை படித்த போது, "அதை சொல்லியா கொடுக்க வேண்டும்.. அது தான் எல்லாவற்றின் மேலும் ஆசை கொண்டு அவற்றை துரத்தி அலைகிறோமே.. ஆசைப்படுவதெல்லாம் சரி தான், ஆனால் ஆசைப்படுவதை அடைந்த பிறகு அதை முழுவதுமாக அனுபவிக்க முயல்கிறோமா..?" என்றொரு கேள்வி எழுந்தது.. பொருளளவில் மட்டுமல்லாது சிந்தை அளவிலும், மதிப்பு, கெளரவம், பதவி என்று எதுவெல்லாம் மனிதனால் கற்பனை செய்ய முடிகின்றதோ அத்தனைக்கும் நாம் ஆசைப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்..இந்த பதிவை சத்குரு ஜாக்கிவாசுதேவ் அவர்களின் எழுத்துக்கள் பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது வேறு.. இது வேறு.. அந்த தலைப்பை படித்த போது எனக்குள் எழுந்த எண்ணங்களைப் பற்றிய பதிவே இது..

பலருக்கு ஆசைப்படும் போது இருக்கும் உந்துதலின் (curiosity) வீரியம் அதனை அடைந்த பிறகு, அதை அனுபவிக்க இருப்பதில்லை. அந்த பலரில் நானும் அவ்வபோது அடக்கம் என்பதும் உண்மை. ஆசைப்பட்ட ஒன்றை அடைந்த பிறகு, அடுத்த ஆசையை பற்றியும் அதை அடைவதெப்படி என்று வியூகம் அமைப்பதிலும் மனம் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகின்றது. அடைந்ததை முழுதாக அனுபவிக்க எப்போதும் முயல்வதில்லை. ஒருவேளை, "இது தான் நமக்கு சொந்தமாகிவிட்டதே, அதை எப்போது வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம்.." என்னும் அலட்சியப் போக்கு கூட ஒரு காரணமாக இருக்கலாம். முடிந்தவரை ஆசைப்பட்ட எல்லாவற்றையும் தம் வசப்படுத்திக் கொள்ளும் மும்முரத்தில் இருப்பதாலும், மனிதனின் ஆசைகளுக்கு அளவில்லை என்பதாலும் கடைசிவரை ஆசைப்பட்டவைகளை துரத்திக் கொண்டு ஓடுவதிலேயே பலரின் கவனமிருகின்றது..

ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடைந்த பின், 'இனி அவற்றை அனுபவிக்கலா'மென்று அசந்து உட்காரும் போது, "உனக்கான காலம் முடிந்தது.. இஜ்-ஜென்மம் போய் மறு ஜென்மம் வா.." என்று காலதேவன் கூறும் நாள் வந்துவிடக் கூடும் என்னும் உண்மையை அறியாமலேயே இருக்கிறோமோ என்னும் குற்ற உணர்ச்சி வர ஆரம்பித்து விட்டது இப்போதெல்லாம். நமக்கு சொந்தமானவைகளை அனுபவிக்க நேரம் ஒதுக்காமல் அத்தனைக்கும் ஆசைப்படுவதில் என்ன பயன்..?

சில நேரங்களில் ஆசைப்படுவதை ஓடியாடி அலைந்து திரிந்து அடைந்த பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். எதற்காக அதை ஆசைப்பட்டோமென்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. "ஏன் அதன் மேல் ஆசை கொண்டாய்..?" என்றொரு கேள்வி கேட்கப்பட்டால், அவர்களது குறைந்தபட்ச பதில் 'திரு திருவென்ற முழிப்பாக'வும், அதிகபட்ச பதில் 'அவனை(ளை)ப் பார்த்து நானும் ஆசைப்பட்டேன்' என்பதாகவுமே இருக்கின்றது. பலர் அவர்களது உண்மையான சுய தேவைகளை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுக் கொள்வதில்லை. காரணம் அவர்களது கண்ணோட்டம் முற்றிலும் வெளிப்புற உலகம் பற்றியதாகவே இருப்பது தான். அக உணர்வு பற்றிய சிந்தனைகளிலும், அதன் மேலான தேடல்களிலும் அவர்கள் கவனம் செலுத்த முயல்வதில்லை.

அத்தனைக்கும் ஆசைப்படுங்கள்.. ஆனால் அந்த ஆசையை பூர்த்தி செய்த பின், அதை அனுபவிக்க தயாராக இருக்கிறோமா என்பதிலும் அது உண்மையிலேயே தேவை தானா என்பதிலும் தெளிவாக இருங்கள். நிறைய ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை.. அதை அடைந்த பின், அனுபவிக்க தவறாதீர்கள்.. இருப்பதை அனுபவிக்கும் மனமில்லாமல், இல்லாதவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பதில் பயனென்ன இருக்கின்றது..

இது இவ்வாறிருக்க, சிலர் ஆசைப்படுவதை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்று பெரு முயற்சிகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் துறக்கவும் தயங்குவதில்லை. உணவு, உடை, உறக்கம் என்று தொடங்கி சில நேரங்களில் உறவு மற்றும் நட்புகளையும் கூட துறக்க தயாராகி விடுகின்றனர். "அட இவ்வளவை இழந்து எதையோ அடைந்தாயே, மகிழ்ச்சி கொண்டாயா..?", என்று கேட்டால் பெரும்பாலனவர்களின் பதில், "வரும் வழியில் இழந்தவைகளை இப்போது மீண்டும் தேடி போய் கொண்டிருக்கிறேன்" என்பதாகவே இருக்கின்றது. அவ்வாறு பதில் சொல்பவர்கள் பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம்..

No comments:

Post a Comment