இக்கட்டான சூழ்நிலைகளிலும், வாழ்வின் துயர நேரங்களிலும் தான் சில மனிதர்களின் உண்மையான ரூபங்களை (true color) உணர முடிகின்றது. பல நேரங்களில் நாம் சந்திக்கும் கஷ்டங்களையும் துன்பங்களையும் விட, அவ்வாறான நேரங்களில் நம்முடன் இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் நம்மை கண்டுக் கொள்ளாத போது, 'ஏன்.. என்னாயிற்று..?', என்று கேட்க கூட அவர்கள் முன்வரவில்லையே என்பதான வருத்தமே மிக அதிகமாக மனதை பாதிக்கின்றது.
"நாம் அவர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறோம்.. அவர்களது கடினமான பயணங்களின் போது நம் தேவைகளை விட்டுக் கொடுத்து அவர்களுடன் எவ்வாறெல்லாம் கூட இருந்து ஆறுதல் அளித்திருக்கிறோம்.. அவர்களுக்காக எவ்வளவு அக்கறை எடுத்திருக்கிறோம்.. நமக்கு அவர்கள் முக்கியமானவர்களென்று எத்தனை விஷயங்களை அல்லது எத்தனை மனிதர்களை அவர்களுக்காக இழந்திருக்கிறோம்.. ஆனால் இன்று நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்முடன் இருக்கவும், ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்பதற்கும் கூட அவர்கள் தயாராக இல்லையே" என்பதான ஆதங்கமே அதிகமாகின்றது. மனதை அது காயப்படுத்தவும் செய்கின்றது.
அத்தகைய நேரங்களில், 'நமது வாழ்நாளின் பெரும் பகுதியை ஏன் அத்தகைய மதிப்பற்றவர்களுக்காக (worthless people) வீணாக்கினோம்..?' என்பதானதொரு ஆதங்கம் மனதை இடைவிடாமல் அரிக்க ஆரம்பித்து விடுகிறது. துயரம் சூழும் நேரங்களில் உடனிருந்து ஆறுதல் தரும் உறவுகளையும் நட்புகளையும் அடையாளம் கண்டு கொள்வதென்பது மிக கடினம். அது அத்தகைய சூழ்நிலைகள் வரும் போது தான் தெரிய வரும். அத்தகைய நேரங்களில் நமக்கு தோள் கொடுக்க சில மனிதர்கள் இல்லையென்றால் நம் வாழ்வில் என்ன சம்பாதித்தோம் என்பதான கேள்வி குறியே எழுகிறது மனதில். எல்லாவற்றையும் விட, நம்முடன் கூட இருப்பார்கள் என்று நம்பியிருந்த சிலர் அத்தகைய நேரங்களில் திடீரென்று 'நீ யாரோ நான் யாரோ..' என்பதை போன்று நம்மை விட்டு விலகி கொள்ளும் போது அதனால் ஏற்படும் வேதனையும் வலியும் மிக ஆழமாக மனதை பாதிக்க கூடியது.
ஒரு சிலரை அவர்களின் உண்மையான சுயரூபம் அறியாமல் முழுமையாக நம்பி, எப்போதும் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று தவறுதலானதொரு எண்ணத்துடன் வாழ்பவர்களுக்கு பல நேரங்களில் வாழ்க்கை தருவதோ அதிர்ச்சி வைத்தியம் தான். ஆனால் நாம் நம்பியவர்களின் சுய ரூபங்கள் தெரியவரும் நேரங்களில் அதை மனதளவில் தாங்கிக் கொள்ளும் நிலையில் நாம் இருப்பதில்லை. அதற்காக எல்லோரும் நம்பிக்கைகுரியவர்களல்ல என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வாறான மனிதர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவு என்பது எனது கருத்து.
ஆனால் நாம் நம்பியிருந்தவர்கள் நமக்கு மிகவும் தேவையான தருணங்களில் நம்மை விட்டு விலகும் போது, அதனால் மனதில் ஏற்படும் வருத்தத்தையும் வலியையும் தவிர்க்க முடியாது என்றாலும், அதை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதிலும் எந்த பயனுமில்லை. அடுத்து என்ன செய்வது என்பதிலும், நாம் எவ்வாறு இப்போது முன்னோக்கி நகரலாம் என்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
பொதுவாகவே 'வாழ்கையில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்..' என்பதை ஏற்றுக் கொள்ள கூடிய பக்குவத்தை நமக்குள்ளேயே வளர்த்துக் கொண்டேமேயானால் அத்தகைய 'அதிர்ச்சி வைத்திய' சூழல்களில் மனதளவில் மிக ஆழமான காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வாழ்வின் சில நேரங்களில் நாம் தனியாக பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. அத்தகைய கணங்கள் ஒருவர் மட்டுமே செல்ல கூடிய குறுகிய வழியை போன்றது. எனவே அதிகமாக சார்ந்திருத்தலென்பது நமது சுயத்தின் (self) மீது இருக்க வேண்டுமே தவிர மற்றவர் மீதல்ல. அவ்வாறான பக்குவமும், மனதளவில் அதற்காக நம்மையே நாம் தயார் செய்து கொள்வதும் நாம் மட்டுமே தனியாக சந்திக்க வேண்டிய வாழ்க்கையின் சில கணங்களை எளிதாக கடந்து செல்ல உதவும்.
Athirchi vaithiyangalaga erunthalum...
ReplyDeletesariyana msg than..
really superb goahead..
:-) நன்றிங்க ஜெயா..
ReplyDelete