மாற்றங்கள் ஏற்படும் தருணங்கள் மறக்க முடியாத பாதிப்பை உள்ளுக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. வேண்டுமென்று தவம் கிடக்கும் போது எட்டிப் பார்க்காத மாற்றங்கள், 'எல்லாம் நலமென்று' மகிழ்ச்சியாக இருக்கும் போது வந்து கதவு தட்டுகின்றன. வேண்டுமென்னும் போது எதுவும் கிடைப்பதேயில்லை. 'சரி அது தான் கிடைக்கவில்லையே, இனி நமக்கு அது வேண்டாம்' என்று விலகவோ விட்டுவிடவோ முடிவெடுக்கும் போது கேள்விகள் எதுவும் கேட்காமலேயே நம்மை அவை பின்தொடர்கின்றன.
பல நேரங்களில் தவமிருக்கும் போது எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சி எதற்காக காத்திருந்தோமோ அவை கிடைக்கும் போது ஏற்படுவதில்லை. ஒருவேளை அதற்கு காரணம், கிடைக்கவில்லை என்பதால் ஏற்படும் ஏமாற்றம் பழகி விட எதிர்பார்ப்பை புதைத்து விடுவதால் கூட இருக்கலாம். என்ன தான் மனமானது முதிர்ச்சியடைந்த பண்பினை (maturity) கொண்டிருந்தாலும் எதிர்பார்ப்புகளையோ அல்லது அதனால் ஏற்படும் ஏமாற்றங்களையோ தவிர்த்து வாழவோ அவற்றை கையாளவோ முடிவதில்லை.
விருப்பங்களும் விழைவுகளும் ஏன் எப்போதுமே எதிரெதிர் திசையிலேயே நிகழ்கின்றன என்று தெரியவில்லை. வாழ்வினது போக்கு ஏன் நமக்கு பிடிபடாமலேயே இருக்கின்றது..? உடலை நாம் விருப்பும் இடத்திற்கு நம்மால் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதை போன்று, ஏன் மனதினது ஓட்டத்தை கட்டுப்படுத்தி நாம் விரும்பும் திசையில் செலுத்த முடிவதேயில்லை..?
எதற்காக மற்றவர்களது ஆளுமையின் கீழ் எளிதாக நமது உணர்வுகள் அடிமையாக விட்டு விடுகிறோம்..? வாழ்க்கையில் பெரும்பாலானவற்றை நமது கைகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கும் நாம், மிகவும் முக்கியமான சில விஷயங்களை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் ஏன் விட்டுவிடுகிறோம் என்று தெரியவில்லை. நம்மை ஆழமாக பாதிக்கக் கூடிய பல முடிவுகளை நமக்கு சாதகமாக நாமே எடுக்கக் கூடிய நிலையிலிருந்தாலும் கூட எதற்காக நாம் முடிவெடுக்காமல் அவற்றை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் விடுகிறோம் என்பது புரியவில்லை.
ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக நமது உணர்வுகளை மற்றவர்கள் எளிதாக அடக்கியாண்டுவிட எதற்காக நாம் இடம் கொடுக்கிறோம்..? பதில் தேடி அலைவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுகிறது போங்கள்..!!
No comments:
Post a Comment