Sunday, August 29, 2010

மழலை..

வெளிச்சம் வலிமையிழந்துக் கொண்டிருக்கிறது.. பறவைகள் கூடு திரும்புகின்றன.. ஆரவாரங்கள் அடங்கிக் கொண்டிருக்கின்றன.. எல்லாமுமே எல்லாருமே அமைதியாய் இயல்புநிலையின் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, சாந்தப்படாத எண்ணங்களும் கொதித்தெழும் சிந்தனைகளுமாக என் மனம் மட்டும் பரபரப்பின் உச்சத்தில் சுழன்றுக் கொண்டிருக்கின்றது..

கண்கள் திறந்திருந்தாலும் கூட காட்சிகள் எதுவும் பதியவில்லை என்பதை நிலைத்துப் போயிருக்கும் விழிகளின் உட்கரு தெளிவாகவே சொல்கிறது. திறந்திருக்கும் வானம் எல்லாம் நிறைந்திருந்தாலும் கூட ஏதோவொரு வெறுமையை பிரதிபலித்த வண்ணமே உள்ளது. சுற்றியிருக்கும் மனிதர்களைப் போலவே இந்த காற்றுக் கூட திசை மாறி தீண்ட மறுத்து செல்கிறது..

தன்னுணர்வில் இயங்கிக் கொண்டிருப்பது நாசிவழி உள்சென்று வெளிவரும் சுவாசம் மட்டுமே.. அமர்திருக்கும் சுற்றுவெளியில் அசைவுகள் இருப்பதாக உள்மனம் சொன்னாலும் கூட விழிகளோ செவிகளோ பெரிதாய் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை..

எதற்குமே கலைந்திடாத ஆழ்நிலை மௌனம் சட்டென்று கலைகிறது தோள் மீது படர்ந்திட்ட மென்மையின் மிருதுவான ஸ்பரிசம் உணர்ந்து.. தெய்வீகம் கலந்த புன்னகையுடன் முன்வந்து தோள் சரிகிறாள் அந்த குட்டி தேவதை.. "எனக்கு தெரியும் நீங்க இங்க இருப்பீங்கன்னு", மழலை மொழியை காற்றில் உமிழ்ந்தபடி புருவம் உயர்த்தி தலையசைத்து சிரிக்கிறாள்.. இறுக்கம் தளர்ந்து இயல்பு திரும்ப, அடிமன ஆழத்திலிருந்து மேலெழுந்து என் உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது புன்னகையொன்று..

Wednesday, August 18, 2010

எப்போதுமில்லாத சில உணர்வுகள்..

எப்போதுமே உணர்ந்த தனிமை தான்.. ஆனால் எப்போதுமில்லாத வலி இப்போது மட்டும்!! வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட எல்லோருமே கண்டு கொள்கிறார்கள் 'இவனுக்கு என்னமோ ஆகிவிட்டதென்று'.. ஒருவேளை வெளித்தோற்றம் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறதோ..

இப்போதெல்லாம் 'என்னாயிற்று' என்பதான கேள்விகளே அதிகம் காதில் விழுகின்றன. கேள்வி கேட்போருக்கு பதிலளிக்க தெரியாமலில்லை.. பதிலளிக்க தோன்றுவதில்லை.. அதிகபட்சம் ஒரு புன்னகை மட்டுமே.. அதுவும் எனக்காகவல்ல.. அவர்களுக்காக!!

வீழும் வேளையில் கயிறொன்று கைகளில் தட்டுபட, உயிர் பிழைத்தோமென்று சுவாசக்காற்றை உள்ளிழுக்கும் போது, விதியின் விளையாட்டாலோ அல்லது யாரோ ஒருவர் செய்த வினையின் விளைவாகவோ அக்கயிரின் மறுமுனை அறுபட்டு விடை கொடுக்கவே, தளர்ந்திட்ட நம்பிக்கையுடன் செய்வதறியாது தரை நோக்கி கீழ் விழும் நிலையை ஒத்தது தான் என் நிலையும்..

இதுவரை மனதின் ஓரத்தில் தேங்கியிருந்த வீராப்பும், தைரியமும், மீண்டு மேல்நோக்கியெழும் அந்த வெறியும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதில் கொஞ்சம் ஆச்சர்யமே.. பல விஷயங்கள் இப்போது பொருள்படுகின்றன.. படிப்பினைகளுக்கு குறைவேயில்லை.. என்ன.. படிப்பினைகளின் அளவு மிக அதிகம்.. ஏற்றுக் கொள்வதற்கு தான் மனதில் இடமில்லை..

Wednesday, August 4, 2010

நான் வருகிறேன்..

உள்ளுணர்வுகள் யாவும் உயிர் பெற்று ஏதோ சொல்ல முயல, என்றும் போலல்லாது அன்று அவற்றை அலட்சியப்படுத்துகின்றேன்.. அடி எடுத்து வைத்த காரியம் அவசரமானது மட்டுமல்ல.. என் வாழ்வின் மிகவும் அவசியமான ஒன்றும் கூட. 'பயந்தால் இனி பூமி பந்தில் பங்கில்லை' என்பதாக ஏதோவொரு உள்குரல் சப்தமிட, இனியும் தாமதிக்கலாகாது என்பதான எண்ணமே மேலோங்குகின்றது..

எவ்வளவு காலம் தான் தயக்கத்தின் தடுமாற்றத்திற்கு தீனிப் போடுவது..? தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் தரணியிலான பொழுதின் கணக்கு கரைந்து கொண்டே போகின்றது என்பதை உணர்ந்த பின்னும் கூட எவ்வாறு அமைதி காப்பது..? 'பொறுத்திருந்தேன் அதனால் பொங்கி எழுகிறேன்' என்பதாக நான் சொல்லவில்லை. பொடி நடையாக இனியாவது முன்னோக்கி நகரலாமே என்பதான எண்ணம் தான்.. வேறொன்றும் இல்லை..!!

ஏதோவொரு நம்பிக்கையில் பயங்களை பின் தள்ளி பயணத்தை தொடங்கிவிட்டேன். நடத்துனர் வருகின்றார்.. சிரித்த முகத்துடன் இலக்கென்னவென்று வினவுகின்றார்.. புதைத்து வைத்திருந்த தயக்கத்தின் ஒரு சொட்டு நாவின் நுனியில் வேகமாய் வந்து ஒட்டிக் கொள்ள எனக்கும் அவருக்கும் மட்டும் கேட்குமான குரலில் போகத் துடிக்கும் இலக்கின் பெயர் சொல்கின்றேன். சிரித்தபடி சில்லறையுடன் பயணச் சீட்டையும் தருகின்றார். பதிலுக்கு புன்னகைக்க சொல்லும் உணர்வொன்றை சட்டை செய்யாது உறைந்து போய் இருக்கின்றன உதடுகளும் விழிகளும்..

பின் மண்டையில் பாதிக்கும் மேல் சிதறிக் கிடப்பது முன் நிற்கும் காரியம் பற்றிய சிந்தனைகளே.. சன்னமான இரைச்சலுடன் முன்னோக்கி நகரும் பேருந்தின் இதயம் என் மனதின் அப்போதைய நிலையை அப்படியே பிரதிபலிக்கின்றது..

காத்திருத்தல் இதோ கரைய தொடங்கிவிட்டது.. காணத் துடித்த ஒருவர் முகம் ஒருவர் காண்போம்.. கண்கள் கலப்போம்.. அருகாமை உணர்வோம்.. உரையாடுவோம்.. உலகம் மறப்போம்.. உவகை கொள்வோம்.. உயிர் உணர்வோம்.. விரல்கள் பின்னி உள்ளங்கை பற்றுவோம்.. கற்பனைகளும் கனவுகளும் இனி நிகழ்வுகளாகும்.. உனதாகவும் எனதாகவும் மட்டுமே இருந்த பொழுதுகள் இனி நமதாகும்.. இனி நீ தனியாகவோ தவித்திருக்கவோ வேண்டியதில்லை.. உனக்காக.. எனக்காக.. நமக்காக.. இதோ நான் வருகிறேன்..!!

Sunday, August 1, 2010

வழக்கம் போலவே இன்னுமொரு விடியல்..

விடியல் வேண்டாமென்று இமைகளை இறுக்கி மூடி துயில் கொள்ள நினைக்கும் போது தான் ஜன்னல் வழி காற்றுடன் வேகமாய் பரவி விழுகின்றன அதிகாலை கதிரவனின் ஒளிக்கற்றைகளில் சில.. கருமை கலந்திருந்த இரவுகளில் இமை மூடாது எதையெதையோ தேடித் திரிந்த விழிகள், இருள் வெளுத்தப் பின் தூக்கம் வருவதாக சொல்லி துயில் கொள்ளத் துடிக்கின்றன.

'பாசாங்கு செய்தது போதும்.. நிறைய வேலையிருக்கிறது', என்று போராடி எழ முயன்றாலும், "விடைகளில்லாத இன்னுமொரு விடியலா..? எவ்வாறு சமாளிப்பது..?", என்பதான அவஸ்தை பரவுகிறது கனமான இதயத்தின் ரணமான காயங்களிலிருந்து..

"இரவு மட்டும் தினம் தினம் விடிகிறது. ஏன் வாழ்க்கை மட்டும் இன்னுமதே இருட்டில் இரைந்தே கிடக்கிறது..?" நிஜத்தின் பொய்மை பிரதிபலிக்கும் கண்ணாடி முன்னின்று தினந்தோறும் கேட்கும் கேள்வி தான்.. வழக்கம் போல் வெற்றுப் புன்னகையும் அசாத்திய மௌனமுமே பதிலாக இன்றும்..

"கனவுகளிலும் கற்பனைகளிலும் எண்ணங்களிலும் எழுத்துக்களிலுமே மட்டும் இன்னும் எத்தனை நாட்கள் தான் வாழ்க்கை ஓடப் போகின்றது..? இருள் பிரித்து வெளிச்சம் படரும் இந்த நிஜமான பொழுதுகளோடு எனக்கே எனக்கான வாழ்க்கையும் புலராதா..?" என்பதான ஏக்கம் கண்களின் கருவிழிகளுக்கு பின்னால் கனமாகவே இன்னும்..!!

இன்னுமொரு விடியல் கண்ட குதூகலத்துடன் எல்லோரும் மலர்ந்திருக்கும் போது ஏனோ என் மனம் மட்டும் நிசப்தம் கலந்த பின்னிரவு பொழுதுகளிலேயே இன்னமும் தங்கி இருக்கின்றது.. தனிமை கலந்துவிட்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் காணும் காட்சிகளில் தட்டுப்படும் மௌனங்களை மட்டுமே விழிகள் உள்வாங்குகின்றன.. எனக்கே எனக்கான பொழுதுகளுடன் விடியலொன்று மலருமென்பதான நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகின்றேன் தன்னந்தனியாய்..!!

பொல்லாத குணம் கொண்ட விதியின் முன்னே போராடி வெல்வதற்கு இருகரம் போதவில்லை.. தன்னந்தனியாகவே போர்க்களம் எதிர்கொள்வதால் கரைந்திடும் நாட்களைப் போலவே நம்பிக்கையின் இறகுகள் மெல்ல உதிர்கின்றன.. உரையாடி உறவாடினாய்.. உடனொருவர் தேவைப்படும் முக்கியமான தருணமிது.. உடனிருப்பாயா..? யோசித்துச் சொல்..!!