Saturday, August 17, 2013

தலைப்பிடாதவை - 3

எல்லாவற்றையும் 
யோசித்த பிறகு 
நாம்
எல்லாவற்றையும் 
மறக்க விரும்புகிறோம் 

-- பால் ஆரோக்கியம் 

துணுக்குகள்: கவிதை

எல்லா கவிதைகளும்
எனக்கு
புரிவதில்லை

எனக்கு புரிந்தவை
எல்லாமே
கவிதைகள் தான்..

-- பால் ஆரோக்கியம் 

Friday, August 16, 2013

Does it ?

Does succeeding make a person good ?

Of course, but may not necessarily be in the context that we would  like to talk about :-)

-- Paul Arockiam

தலைப்பிடாதவை - 2

எல்லா மனிதர்களிடமும் 
ஏதேனுமொரு காரணம் 
இருக்கவே செய்கிறது 

தனிமையிலிருக்கும் போது 
​தனக்கு தானே 
புன்னகைத்து கொள்வதற்கும்
கண்ணீர் சிந்தி 
கொஞ்சம் அழுவதற்கும்
-- பால் ஆரோக்கியம்

துணுக்குகள்: கவனம் தேவை


துண்டிப்பதற்கு 
வேறு எதுவும் இல்லாத போது 
உயிர் வேரும் கூட 
அறுக்கப்ப​டக் கூடும்

எதற்கும்
கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

-- பால் ஆரோக்கியம் 

நஷ்ட ஈடு

வாலிபம் பேசும் 
வணிக மொழிகளில் 
விழிப் பிதுங்கும் 
முதலீடுகள் 
இலவசங்களிலும் 
கருணை இல்லங்களிலும் 
தன் நஷ்டத்திற்கு
ஈடு கேட்டு நிற்கின்றன 

-- பால் ஆரோக்கியம் 

முரண்

முரண்பாடுகள் 
என்னை 
நிறைய வசீகரிக்கின்றன

என் 
கவிதைகள் பெரும்பாலும்
அங்கிருந்தே
பிறக்கின்றன 

-- பால் ஆரோக்கியம்

Thursday, August 15, 2013

துணுக்குகள்: பலவீனம்

உன் 
பலவீனமே 
நீ 
வெளி உலகிற்கு வர 
பயப்படுகிறாய் என்பது தான் !!

-- பால் ஆரோக்கியம் 

67வது சுதந்திர தினம்

அம்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடிய ஞாபகம் அப்படியே மனதில் இருக்கிறது. ஏதோ நேற்று தான் அது நடந்தது போல இருக்கிறது. அதற்குள் 17 வருடங்கள் அவ்வளவு விரைவாக ஓடி விட்டிருக்கிறது.

வேகமாக கீழே நழுவியோடும் இந்த காலத்தை எதிர்த்து எவ்வளவு அடம் பிடித்து குதித்துக் கொண்டிருந்தால் இன்னும் இந்த இடத்திலேயே நாம் இருந்துக் கொண்டிருப்போம். மாற்றங்களை நாம் விரும்புவதேயில்லை. நகர்ந்துக் கொண்டே இருக்கும் கடிகாரத்தின் முட்கள் மாற்றத்திற்கான தேவைகளை நமக்கு நொடிக்கொரு முறை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் அதை காணாததைப் போல நடித்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்த உலகம் அதன் அழகை இழந்துக் கொண்டிருப்பதை பற்றி நமக்கு எந்த கவலைகளும் இன்னும் ஏற்படவேயில்லை. மாசுகளை துடைப்பதற்கு மனமில்லாதது மட்டுமல்ல, நாம்மேலும் பல குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்க தயங்குவதேயில்லை.

பூமியின் இந்த வேகமான சுழற்சியில் நம்மை சுற்றியிருந்த எவ்வளவோ கரைந்து, சிதறுண்டு, ஆவியாகி காணாமல் போய் விட்டன.. காணாமல் போய் கொண்டிருக்கின்றன. அது இயல்பான ஒன்றே என்று ஒவ்வொரு இரவிலும் நாம் நமக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கொண்டு வரவோ, அழகை புதுபிக்கவோ, இருக்கும் அழகை அதன் உன்னதத்தை பாதுகாக்கவோ நாம் முயல்வதேயில்லை. அது நாளைய விடியலில் நடக்கும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். அந்த நாளைய விடியலுக்காக நாம் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நேற்றோ, அதன் முந்தைய தினங்களிலோ, ஏன் இன்றும் கூட அது கடந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர மறுத்து நாம் இன்னமும் காத்திருக்கிறோம். காத்திருப்போம். அவ்வளவு பொறுமை நிரம்பியவர்கள் நாம்.

இன்னும் 8 ஆண்டுகளில் நாம் 75-யை கொண்டாடுவோம்.. இன்னும் 33 ஆண்டுகளில் நூறை எட்டுவோம். அப்போதும் நாமோ அல்லது நமக்கு பிந்தைய சந்ததிகளோ இதே போன்றதொரு பதிவை எழுதிக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை வேறு மொழிகளில் அல்லது வேறு ஊடங்கங்களில்.

சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்கள் தானா..?

-- பால் ஆரோக்கியம் 

Wednesday, August 14, 2013

தலைப்பிடாதவை - 1

"... அதனால்",
என்று தொடர்ந்தாள்

அதற்குள் 
அவன் 
திரும்பி வர முடியாத 
தொலைவு போயிருந்தான்

-- பால் ஆரோக்கியம் 

Tuesday, August 13, 2013

தலைப்பிடத் தோன்றாதவை

சோர்ந்து போகிறேன் 
காரணங்கள் இல்லாமலேயே 
பிறகு 
காரணங்களைத் 
தேடிச் செல்கிறேன்
மீண்டெழுவதற்காக

இப்போது 
இந்த நிமிடம் 
நான்
காரணங்கள் ஏதுமற்று இருக்கிறேன் !!

-- பால் ஆரோக்கியம் 

Friday, August 9, 2013

சுவடு

எல்லாவற்றையும் 
கவனமாக 
துடைத்து விட்டான்

பின்பு
வந்தார்கள் 
சென்றார்கள் 
எந்த சந்தேகமும் 
வரவேயில்லை அவர்களுக்கு

புன்சிரித்த அவன் 
மீண்டும் தயாரானான் 

-- பால் ஆரோக்கியம் 

Thursday, August 8, 2013

சமரசம்

இயல்பை தாண்டிய நீட்சியுடன் 
என்னனென்னவோ 
பேசினோம்
பேச வந்ததை 
பேசாமல் தவிர்க்க

பின்பு 
பிரிந்து சென்றோம் 
நேரம் இன்னும் வரவில்லையென்று
ரகசிய குரலில்
நமக்குள் சொல்லிக் கொண்டே !!

-- பால் ஆரோக்கியம்

Wednesday, August 7, 2013

தேர்வு

எல்லோரும் 
குடையை கையில் பிடித்தபடி 
நடந்து செல்கின்றனர்..
நான் 
மேகங்களை..!!

-- பால் ஆரோக்கியம்

Tuesday, August 6, 2013

எழுப்புதல்

உன்னை எழுப்பி ஆச்சர்யப்படுத்த
சூடாய் கொஞ்சம் தேநீர் தயாரித்து
கவனமாய் அதில் சர்க்கரை சேர்த்து 
பூனை நடையில் கட்டிலடைந்து
துயில் மீளா உன் முகத்தின் 
மூடிய இமைகளைப் ...

எழுப்பினாய் 
நீ 
என்னை..
தேநீர் 
ஆறிப் போயிருந்தது..!!

-- பால் ஆரோக்கியம் 

Monday, August 5, 2013

கசிந்து வழியும் கேள்விகள்..!

ஏன் இவ்வளவு குழப்பங்கள் ?
இத்தனை மிதமிஞ்சிய பயங்கள் ??
எதற்காக இவையெல்லாம் ???

ஒன்றுமே புரியவில்லை. அப்படி எதை இழந்து விட போகிறோம் வாழ்க்கையில்
?
 பகவத்கீதையில் சொல்வதை போல நாம் எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? ஆனாலும்
​,​
 விடைபெற மறுத்து விட்டகலா நிழலைப் போல இரவு பகலென்று ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பயத்தையும் குழப்பத்தையும் என்ன செய்ய..?

எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றாலும் கூட, படிய மறுத்து விரிந்து படரும் இந்த மாய வலையின் பின்னல்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பதிலேயே வாழ்வு முடிந்து விடும் போல இருக்கிறது. 

இல்லை என்றிருந்தவைகளுக்கு எதற்காக உத்திரவாதங்களும் நம்பிக்கைகளும் அளிக்கப்பட வேண்டும்..? எதற்காக பறத்தலின் இன்பநிலை உணர்த்தப்பட வேண்டும்..? புதிய வாசல்களும் புதிய வெளிச்சங்களும் எதற்காக இருப்பதாய் காட்டப்பட்டு
​,​
 பின்னர் இழுத்து மூடி
​ உடைத்து எறிய ​
முடியா சங்கிலிகளின் உதவியுடன் பூட்டப்பட வேண்டும்..? எதற்காக இந்த விளையாட்டுகள்..? எப்படி மனம் வருகிறது..? என்ன தான் நடக்கிறது இங்கே..? 

​'​
விளையாட்டுப் பொருளாகிறோம்
​​'
 என்று தெரிந்தாலும் கூட எதற்காக நம்முடைய தற்காப்பு உணர்வுகள் மழுங்கி கிடக்கின்றன? விடைகள் எதுவும் இல்லையென்று தெரிந்தும் கூட வெற்று வெளியில் யாரிடம் நாம் உரத்த குரல்களில் கேள்விகளை கேட்டுக் கொண்டு நம்முடைய சக்திகளை விரையமாக்கிக் கொண்டிருக்கிறோம்..?

அன்பின் இறுதி ஊர்வலங்களில், நம்பிக்கையின் காயம்பட்ட முதுகுகளில், பாசத்தின் அறுபட்ட குரல்வளைகளில், காதலின் வெட்டுபட்ட சிறகுகளில் மிதமிஞ்சிய கேள்விகளே நிரம்பி வழிகின்றன. 

கேள்விகள்.. 
கேள்விகள்.. 
கேள்விகள்.. 
எங்கும் கேள்விகள்.. 

ஆதங்கத்தின் வெகுண்ட சீற்றங்களும், அழுகையின் நிலைகொள்ள முடியா தடுமாற்றங்களும், கோபத்தின் தீராத தாகங்களும், விரக்தியின் வெளுத்த நிறங்களும், உடைபட்ட இதயத்தின் ரத்த சிதறல்களுமான கேள்விகள்.. விடைகள் இல்லையென்று தெரிந்தும் கூட புதைய மறுத்து மேலெழுந்து வெடிக்கும் கேள்விகள்.

ஏன் ? 
எதற்காக நான் ?
​?

விடைகளை செவி கொடுத்து கேட்க கூட இயலாத தவிப்புகளினூடே கசிந்து வழிந்த வண்ணமே இருக்கின்றன இந்த கேள்விகள்.

-- பால் ஆரோக்கியம்

Sunday, August 4, 2013

Happy Friendship Day !!

நான் 
இருக்கிறேன் இன்னமும்..
நீங்களும்
இருக்கிறீர்கள் இன்னமும்..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

-- பால் ஆரோக்கியம்