Monday, August 5, 2013

கசிந்து வழியும் கேள்விகள்..!

ஏன் இவ்வளவு குழப்பங்கள் ?
இத்தனை மிதமிஞ்சிய பயங்கள் ??
எதற்காக இவையெல்லாம் ???

ஒன்றுமே புரியவில்லை. அப்படி எதை இழந்து விட போகிறோம் வாழ்க்கையில்
?
 பகவத்கீதையில் சொல்வதை போல நாம் எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு? ஆனாலும்
​,​
 விடைபெற மறுத்து விட்டகலா நிழலைப் போல இரவு பகலென்று ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பயத்தையும் குழப்பத்தையும் என்ன செய்ய..?

எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றாலும் கூட, படிய மறுத்து விரிந்து படரும் இந்த மாய வலையின் பின்னல்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பதிலேயே வாழ்வு முடிந்து விடும் போல இருக்கிறது. 

இல்லை என்றிருந்தவைகளுக்கு எதற்காக உத்திரவாதங்களும் நம்பிக்கைகளும் அளிக்கப்பட வேண்டும்..? எதற்காக பறத்தலின் இன்பநிலை உணர்த்தப்பட வேண்டும்..? புதிய வாசல்களும் புதிய வெளிச்சங்களும் எதற்காக இருப்பதாய் காட்டப்பட்டு
​,​
 பின்னர் இழுத்து மூடி
​ உடைத்து எறிய ​
முடியா சங்கிலிகளின் உதவியுடன் பூட்டப்பட வேண்டும்..? எதற்காக இந்த விளையாட்டுகள்..? எப்படி மனம் வருகிறது..? என்ன தான் நடக்கிறது இங்கே..? 

​'​
விளையாட்டுப் பொருளாகிறோம்
​​'
 என்று தெரிந்தாலும் கூட எதற்காக நம்முடைய தற்காப்பு உணர்வுகள் மழுங்கி கிடக்கின்றன? விடைகள் எதுவும் இல்லையென்று தெரிந்தும் கூட வெற்று வெளியில் யாரிடம் நாம் உரத்த குரல்களில் கேள்விகளை கேட்டுக் கொண்டு நம்முடைய சக்திகளை விரையமாக்கிக் கொண்டிருக்கிறோம்..?

அன்பின் இறுதி ஊர்வலங்களில், நம்பிக்கையின் காயம்பட்ட முதுகுகளில், பாசத்தின் அறுபட்ட குரல்வளைகளில், காதலின் வெட்டுபட்ட சிறகுகளில் மிதமிஞ்சிய கேள்விகளே நிரம்பி வழிகின்றன. 

கேள்விகள்.. 
கேள்விகள்.. 
கேள்விகள்.. 
எங்கும் கேள்விகள்.. 

ஆதங்கத்தின் வெகுண்ட சீற்றங்களும், அழுகையின் நிலைகொள்ள முடியா தடுமாற்றங்களும், கோபத்தின் தீராத தாகங்களும், விரக்தியின் வெளுத்த நிறங்களும், உடைபட்ட இதயத்தின் ரத்த சிதறல்களுமான கேள்விகள்.. விடைகள் இல்லையென்று தெரிந்தும் கூட புதைய மறுத்து மேலெழுந்து வெடிக்கும் கேள்விகள்.

ஏன் ? 
எதற்காக நான் ?
​?

விடைகளை செவி கொடுத்து கேட்க கூட இயலாத தவிப்புகளினூடே கசிந்து வழிந்த வண்ணமே இருக்கின்றன இந்த கேள்விகள்.

-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment