அம்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடிய ஞாபகம் அப்படியே மனதில் இருக்கிறது. ஏதோ நேற்று தான் அது நடந்தது போல இருக்கிறது. அதற்குள் 17 வருடங்கள் அவ்வளவு விரைவாக ஓடி விட்டிருக்கிறது.
வேகமாக கீழே நழுவியோடும் இந்த காலத்தை எதிர்த்து எவ்வளவு அடம் பிடித்து குதித்துக் கொண்டிருந்தால் இன்னும் இந்த இடத்திலேயே நாம் இருந்துக் கொண்டிருப்போம். மாற்றங்களை நாம் விரும்புவதேயில்லை. நகர்ந்துக் கொண்டே இருக்கும் கடிகாரத்தின் முட்கள் மாற்றத்திற்கான தேவைகளை நமக்கு நொடிக்கொரு முறை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் அதை காணாததைப் போல நடித்துக் கொண்டே இருக்கிறோம்.
இந்த உலகம் அதன் அழகை இழந்துக் கொண்டிருப்பதை பற்றி நமக்கு எந்த கவலைகளும் இன்னும் ஏற்படவேயில்லை. மாசுகளை துடைப்பதற்கு மனமில்லாதது மட்டுமல்ல, நாம்மேலும் பல குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்க தயங்குவதேயில்லை.
பூமியின் இந்த வேகமான சுழற்சியில் நம்மை சுற்றியிருந்த எவ்வளவோ கரைந்து, சிதறுண்டு, ஆவியாகி காணாமல் போய் விட்டன.. காணாமல் போய் கொண்டிருக்கின்றன. அது இயல்பான ஒன்றே என்று ஒவ்வொரு இரவிலும் நாம் நமக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கொண்டு வரவோ, அழகை புதுபிக்கவோ, இருக்கும் அழகை அதன் உன்னதத்தை பாதுகாக்கவோ நாம் முயல்வதேயில்லை. அது நாளைய விடியலில் நடக்கும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். அந்த நாளைய விடியலுக்காக நாம் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நேற்றோ, அதன் முந்தைய தினங்களிலோ, ஏன் இன்றும் கூட அது கடந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர மறுத்து நாம் இன்னமும் காத்திருக்கிறோம். காத்திருப்போம். அவ்வளவு பொறுமை நிரம்பியவர்கள் நாம்.
இன்னும் 8 ஆண்டுகளில் நாம் 75-யை கொண்டாடுவோம்.. இன்னும் 33 ஆண்டுகளில் நூறை எட்டுவோம். அப்போதும் நாமோ அல்லது நமக்கு பிந்தைய சந்ததிகளோ இதே போன்றதொரு பதிவை எழுதிக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை வேறு மொழிகளில் அல்லது வேறு ஊடங்கங்களில்.
சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்கள் தானா..?
-- பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment