Saturday, November 24, 2012

கிச்சுகிச்சு


ஒரு லேடி (lady)*.. பெயர் வேண்டாம். பாவம். 'பாவம்' என்று அவர்களைப் பார்த்து சொல்ல வேண்டுமா இல்லை என்னைப் பார்த்து சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. சரி, யாருக்கோ பாவம் என்று வைத்துக் கொள்வோம். அந்த லேடி தான் எனக்கு பேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வஸ்ட்  கொடுத்தார்கள். அவர்கள் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்ததற்குமே ஒரு உள்நோக்கம்^ இருந்தது எனக்கு தெரியாமல் இல்லை.

'இருந்தாலும் பரவாயில்லை', என்று பெரிதாக~ எடுத்துக் கொள்ளாமல் அவர்களது ரெக்வஸ்ட்டை அக்சப்ட் பண்ணினேன். அதன் பிறகு அவர்கள் ஏதோ ஒரு கவிதையை (?) பேஸ்புக்கில் ஷேர் பண்ணி இருந்தார்கள். கவிதை என்னும் பெயரில் பகிரப்பட்ட அந்த வரிகள் அப்படியே அச்சு பிசகாமல் எனக்கு நினைவில் இல்லாவிட்டாலும் அதனுடைய சாரம் இது தான்:

தலைப்பு: அம்மா 

"மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தேன். எல்லோரும் மழையில் நனைந்து வந்ததற்காக என்னைத் திட்டினார்கள். அம்மா தன் சேலை முந்தானையால் என் தலையைத் துடைத்துக் கொண்டே திட்டினாள் மழையை."

"மழையைத் திட்டினாள்" என்று சொல்லாமல் "திட்டினாள் மழையை" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து எழுதி ஒரு பஞ்ச் (கவிதையிலா இல்லை முகத்திலா என்று கேட்காதீர்கள்) கொடுத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

அதை ஷேர் பண்ணி "பயங்கரமான வன்முறை இது" என்று எழுதி இருந்தார்கள். நான் 'ethu' என்று கேட்டு கமெண்ட் அடித்தேன். உண்மையிலேயே அங்கு சொல்லப்பட்டதில் எது பயங்கரமான வன்முறை என்பதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. மழையில் நனைந்து வந்ததற்காக எல்லோரும் திட்டியதா அல்லது நனைத்ததற்காக அம்மா மழையை திட்டியதா ? எது பயங்கரமான வன்முறை ?

'பயங்கரமாக' இல்லாவிட்டாலும், வன்முறை என்று சித்தரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இரண்டுக்குமே நிறைய இருந்ததால் எனக்குள் எழுந்த குழப்பம் அது. இதை பற்றி எழுத வேண்டுமென்றால் கவித்துவம், கலைத்துவம் மற்றும் எல்லா 'துவம்'களும் பொங்கி வழிய தனியாக ஒரு நீண்ட பதிவாகவே எழுதலாம். ஆனால் சொல்ல வந்த கதையின் (நிகழ்வின்) சுவாரசியம் போய்விடும் என்பதனால் நாம் மீண்டும் கதைக்கே திரும்பி விடுவோம்.

நான், "ethu", என்று கேட்டேன் அல்லவா.

"முதலில் தலைக்கவசம் அணிந்துக் கொள்ள பழகிக் கொள்' என்பதாக அந்த லேடி எனது கமெண்டிற்கு பதிலளித்தார்கள்.

'தலைக்கவசமா..? அது எதற்கு? ஒருவேளை வன்முறை நம் மேல் பாயப் போகிறதோ..?', என்று ரொம்பவே குழம்பிப் போய்விட்டேன்.

"onnume puriyala", என்று நான் பதிலளித்தேன்.

"ஒண்டும் புரியவில்லையா..? ********** (கெட்ட வார்த்தைக்கு பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு வார்த்தை)... முதலில் தமிழ் கற்றுக் கொள் என்று அர்த்தம்....." என்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டு போக, ஒன்றும் புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று வேகமாக ஓடி வந்துவிட்டேன். அவர்கள் திட்டியதற்கு கூட நான் எதுவும் பதில் சொல்லவில்லை. 'சரி போனா போறாங்க, அவங்க கிட்ட போய் என்னத்த பதிலுக்கு எதுவும் பேசிகிட்டு', என்று விட்டு விட்டேன்.

அதன் பின்பு நான் என் ஸ்டேடஸ் மெசேஜில் எதுவோ எழுதினேன். அது சம்பந்தமே இல்லாத ஏதோ ஒன்று. வேறு எதற்காகவோ தோன்றிய ஒரு கருத்தை எழுதி இருந்தேன். அந்த ஸ்டேடஸ் மெசேஜ்க்கு 'சூடு போட்டவுடன் தமிழ் தாழமிடுகிறது" என்று கமெண்ட் எழுதினார்கள். (திட்டி சூடு போட்டுட்டாங்கலாமா !!)

அவர்கள் என்னைத் திட்டியதற்கு காரணம் நான் தமிழை இங்கிலீஷ் லெட்டர்ஸ் உபயோகித்து எழுதியதால் தான் என்பது உண்மையிலேயே அப்போது தான் எனக்கே தெரிந்தது. அதாவது 'எது' என்று எழுதாமல், 'ethu' என்று எழுதி விட்டேனாம். நானும் மிகவும் அமைதியாக (?) 'நீங்க சூடு போட்டதா நெனைச்சாலும், நீங்க என்னை திட்டினது என் பார்வையில தப்பா தான் படுதுங்க' என்றேன். உண்மையிலேயே இது மட்டும் தான் சொன்னேன், மேலும் பொதுவான என்னுடைய சில கருத்துக்களை** "வித் ஆல் டியூ ரெஸ்பெக்ட்" என்று போட்டு*** தான் சொன்னேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பார்த்தால் அந்த லேடி என்னை பிளாக் (block) பண்ணி விட்டார்கள்.. ஹா ஹா ஹா..!!

அந்த லேடி தான் அவர்களாக வலிய வந்து எனக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட்  கொடுத்தார்கள். அதுவும் அவர்களுடைய ஆதாயத்திற்காகவும் அவர்களுடைய ஸ்டேடஸை காப்பாற்றிக் கொள்வதற்காகவும். அதன் பின்பு நான் எதுவுமே செய்யாவிட்டாலும் கூட அவர்களாக என்னை சூடு வைக்கும் முனைப்புடன் (இப்போது புரிகிறது எதற்காக என்னை தலைக்கவசம் மாட்ட சொன்னார்கள் என்று) என்னை திட்டி விட்டு, பின்பு அவர்களாக என்னை பிளாக் பண்ணியது தான் இந்த வாரத்தின் காமெடி.

எவ்வளவு தான் கஷ்டங்களைக் கொடுத்து வாழ்க்கையை கடினமானதாக ஆக்கினாலும், அவ்வபோது இப்படி ஏதாவது கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்க இந்த கடவுள் தவறுவதேயில்லை.

கடவுளே, நீங்க நல்லவரா கெட்டவரா..?

பின்குறிப்புகள்:

* 'பெண்' என்று சொன்னால் கேர்ள் என்று அர்த்தம் ஆகும், ஆனால் அவர்கள் கேர்ள் இல்லை. அதே நேரத்தில், 'லேடி' என்பதை எனக்கு தெரிந்த தமிழில் சொன்னால் ஒரு சிலர் அதை "offensive"வாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் லேடி என்றே சொல்லிவிட்டேன். "'பெண்' என்பது பொதுவான ஒரு வார்த்தை, அது எல்லாரையும் குறிக்கக் கூடியது, பெண் என்றால் இளம் பருவத்தினர் என்று நினைப்பது தவறு, இளம்பெண் என்பதை இளமையானவர்களுக்கு உபயோகிக்கலாம், எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரா.." என்று கதைக்கப் போகிறவர்கள் ஒரு வினாடி நிற்க. அதெல்லாம் எனக்கும் தெரியும். இங்கே உபயோகப்படுத்தி இருப்பது நடைமுறை சார்ந்த வழக்கில் தான். உடனே நடைமுறை அப்படியொன்றும் இல்லையே என்றெல்லாம் வாதிடாதீர்கள். தயவு செய்து இந்த வரிகளை அறுவை சிகிச்சை மேசையின் மேல் கிடத்தப்பட்ட எலியைப் போல அறுத்து கூறு போட்டு ஆராயாதீர்கள். (கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா !!)

^ அந்த உள்நோக்கம் என்ன என்று சொன்னால் மனிதகுல வெறுப்புக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். அதனால் வேண்டாம். அந்த உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றால் தலை வெடித்து விடும் என்று நினைப்பவர்கள் எனக்கு தெரியப்படுத்தவும். அவர்களுக்கு அந்த தகவலை நான் தனியாக மெயிலில் அனுப்புகிறேன்.

~ "பெருந்தன்மையாக" என்னும் வார்த்தையை தான் நான் உபயோகித்து இருக்க வேண்டும். ஆனால் அது கொஞ்சம் சுயவிளம்பரம் மாதிரி இருக்கும் என்பதால் பெருந்தன்மையுடன் 'பெருந்தன்மையாக' என்னும் வார்த்தையை உபயோகிக்காமல் விட்டு விட்டேன்.

**

என்னுடைய பதிலாக நான் எழுதி இருந்தது இது தான்:

########, உங்களுக்கு நேரடியான பதில்: தமிழ் மீதான என்னுடைய கருத்துக்களும் ஈடுபாடும் எத்தகையது என்பதை துளிக்கூட அறியாமல் சூடு வைப்பதாக தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொண்டு "எதையோ" சொன்னது என் பார்வையில் தவறாகவே படுகிறது. அதைப் பற்றி மேலும் பேசுவது நேரத்தை வீணடிப்பது என்று எண்ணியதால் மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அது அசௌகர்யங்களை தான் கொண்டு வந்து விடும். மேலும் இங்கே நான் தமிழில் பதிவிட்டு இருப்பதற்கும் உங்களுக்கும் (நீங்கள் சொன்னதற்கும்) துளியும் சம்பந்தமில்லை.

பொதுவாகவே தமிழ் வளர்க்கிறேன் என்னும் பெயரில் "எரிச்சல்" ஏற்படுத்தும் சப்தமிடுபவர்களுக்கும் (இந்த வாக்கியத்தைப் பொதுப்படையாக சொல்லவே இல்லை, எனவே இதை தன்னைத் தான் சொல்கிறான் என்று எவரேனும் எடுத்துக் கொண்டால் அது அவரவர் பிரச்சனை), நான் சொல்ல நினைக்கும் ஒன்று உண்டு: 

தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதியதை நான் ஒன்றும் பெரிய தவறாகவோ கொலைக் குற்றமாகவோ எண்ணவில்லை. அப்படி எழுதுவது தவறு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடும் இல்லை. பொதுவாகவே தமிழ் வளர்க்கிறேன் என்னும் பெயரில் இங்கு அடிக்கப்படும் கேலிக்கூத்துக்களைப் பார்க்கும் போது சிரிப்பாகவும், ஒருவிதத்தில் அத்தகைய மனிதர்கள் மேல் பரிதாபமாகவும் தான் உள்ளது. ஆங்கிலத்தில் தமிழை எழுதுவது அவரவரது சௌகர்யத்தைப் பொறுத்தது. தமிழே கணிணியில் தெரியாத காலத்தில் நாம் என்ன கைகளை சுட்டுக் கொண்டு கணிணியைத் தொடாமலா இருந்தோம்.

தமிழ் பயன்படுத்துதல் அல்லது வளர்த்தல் என்பது இத்தகைய முட்டாள்தனமான வற்புறுத்தலின் மூலமாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் ஒருவரைக் கவரும் போது அவர் தாமாக தமிழ் பேச ஆரம்பிப்பார். அத்தகைய கவர்ச்சியை தமிழ் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அதில் ஏற்கனவே வளர்ந்திருக்கும் கவர்ச்சியை ஒருவர் அவராக கண்டு கொள்ளும் தருணத்தில் தமிழ் மீதான ஆர்வமும் அதை பயன்படுத்த வேண்டுமென்பதான எண்ணமும் அவரவர்க்கு அதுவாகவே வரும். அப்படி அதைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கையைப் பெருக்க விரும்பினால் ஒருவர் அதிகபட்சம் செய்யக்கூடியது என்னவென்றால் தமிழின் மேன்மைகளை தம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் எதுவும் இல்லாமலும் வற்புறுத்தாமலும் மெளனமாக செய்துக் கொண்டிருப்பது தான். அதற்கு மேல் ஒருவர் ஏதேனும் செய்தால் அது எந்தவிதத்திலும் பயனுடையதாக இருக்காது என்பது மட்டுமல்லாமல் பெரும்பாலும் எரிச்சலைத் தான் ஏற்படுத்தும் என்பது என்னுடைய கருத்து.

இதை வைத்து நான் தமிழின் எதிரி, தமிழ் துரோகி என்றெல்லாம் யாரேனும் சொன்னால், அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. தமிழ் மீது எவ்வளவு ஈடுபடும் ஆர்வமும் எனக்கு உள்ளது என்பது எனக்கு மட்டும் தெரிந்தால் போதுமானது. அதை ஊருக்கு விளம்பரப்படுத்தும் ஆர்வம் எனக்கு இல்லை.

*** கண்டிசன்ஸ் அப்ளை..

-- பால் ஆரோக்கியம்

Tuesday, November 13, 2012

பண்டிகை நாள் நல்வாழ்த்துக்கள்..!!

கதவுகள் சாத்தப்பட்டு இருந்தாலும், திறந்து விடப்பட்ட சாளரங்களின் வழியாக இடைவிடாமல் செவிகளை தாக்கிய வண்ணமே இருக்கின்றன பட்டாசுகளின் வெடிச் சப்தங்கள். மந்தமான வெளிச்சத்தில் மின்விசிறியின் சீரான விசிறல்களுக்கு கீழே கசங்கி கிடக்கும் மெத்தையிலிருந்து இன்னமும் எழுந்திருக்கவில்லை. உறக்கம் கலைக்கும் பட்டாசு சப்தங்கள் எரிச்சலுக்கு பதிலாக உற்சாகத்தையும் ஒருவித சந்தோசத்தையும் தான் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.

ஆண்டு முழுதும் உழைத்து, களைத்து, சிக்குண்டு, சிதறுண்டு, கசங்கி போய் இருக்கும் மனம் ஆசுவாசமாய் கொஞ்ச நேரம் குதூகலம் கொள்ள இப்படி சில தினங்கள் தேவைப்படத் தான் செய்கின்றன.

எத்தனையோ வயிறுகள் கொஞ்சமேனும் சுவையாக வயிற்றுக்கு சாப்பிடலாம் என்று இந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்திருக்கலாம். எத்தனையோ தேகங்கள் புத்தாடையோ புதுபிக்கப்பட்ட ஆடையோ தன்னை தழுவும் பரவச கணத்திற்காக இந்த நாளை எதிர்நோக்கி இருந்திருக்கலாம். எத்தனையோ இதயங்கள் சூன்யம் கவ்விய தனிமையிலிருந்து சில மணித்துளிகளாவது விடுதலை கிடைக்குமென்று இந்தநாளுக்காக காத்துக் கொண்டிருந்திருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் பார்த்திராத ஸ்பரிசித்திராத அணைத்துக்  கொள்ளும் தொலைவில் இல்லாத தன் உறவுகளை கட்டியணைத்து உச்சிமுகர இந்த நாளுக்காக தவமிருந்திருக்கலாம்.. இப்படி இன்னும் எத்தனையோ.. ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் ஒரு சொட்டு நீர்த் துளியளவிலாவது தன் தாகம்தணித்துக் கொள்ள பண்டிகைகள் தேவைப்படவே செய்கின்றன..!!

கொண்டாடுவோம் நம்மால் முடிந்த மட்டும்.. மூச்சு முட்டலின் எல்லைத் தொட்டு இதற்கு மேலும் முடியாதென்று அயர்ந்து வீழும் வரையிலும் ஆடி பாடிக் கொண்டாடுவோம்.. இந்த வாழ்வின் குரூரங்களைத் தாண்டி எதைப் பற்றிய கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு குதூகலிப்போம்.. ஆனந்தத்தை, உறவின் இன்ப நிலையை முழுமையாக உணர்ந்து உடலின் ஒவ்வொரு அணுவும் அயர்ந்து போகும் வரை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வோம்.. இது நமக்கான தினம்.. மகிழ்ச்சி.. ஆனந்தம்.. சந்தோசம்.. பரவசம்.. குதூகலம்.. இவற்றை மட்டுமே இந்த நாள் தன் பொழுதுகளில் கரைந்தோடுவதைப் பார்த்து ரசிக்கட்டும்..

கோபம், மனஸ்தாபம், விரோதம், மனவருத்தம் எல்லாவற்றையும் விட்டு விட்டு உறவுகளின் அழகியலை முழுமையாக ஸ்பரிசித்து பரவசத்தில் திளைக்க இந்த நாள் ஒரு காரணமாக அமையட்டும்..!

பண்டிகை நாள் நல்வாழ்த்துக்கள்..!!

-- பால் ஆரோக்கியம்.

Tuesday, February 22, 2011

சின்னதாய் ஒரு 'ஹாய்'..!!

எவ்வளவு நாட்களாகிவிட்டது உங்களையெல்லாம் சந்தித்து..!!

சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொண்டது தவறு தான்.. "நிறைய வேலையிருக்கிறது, ஆதலால் கொஞ்சம் பொறுத்திருங்கள்" என்றாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்று தினமும் நினைப்பேன்.. எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் இல்லை.. உண்மையை சொல்லப் போனால் எழுத நிறையவே இருந்திருக்கிறது இந்த நாட்களில்.. மௌனம் காக்கலாம் என்று முடிவெடுத்த பின்பு தானே வார்த்தைகள் முன்பை விட அதிவேகமாக வெளிவர துடிக்கும்.. அது போல தான்.. ஆனாலும் ஏதோ ஒன்று பின்னுக்கு இழுத்ததன் காரணமாக எண்ணியவைகளை ஏட்டில் வடிக்க முடியாத நிலை.. ஆதலால் தான் விழுந்து விட்டது இந்த இடைவெளி.. இனி விழாமல் பார்த்துக் கொள்கிறேன்..!!

இன்னும் ஒரு வாரத்திற்கு சரியாக பதிவிட முடியாமல் போகலாம்.. அதன் பின்பு முன்பு போல நாம் இடைவெளியின்றி சந்திக்கலாம்..!! உங்களுக்கெல்லாம் சின்னதாய் ஒரு
"ஹாய்" சொல்லலாம் என்று தான் இந்த பதிவு.. இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பு வழக்கம் போலவே மீண்டும் சிந்திப்போம் நாம் இடைவெளிகளின்றி..!! :-)

அப்புறம்..? உங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது இவ்வளவு நாட்களும்..?

Saturday, January 15, 2011

காதல் சார்ந்தவை [4]: நீயருகில் இல்லாத பொங்கல்..!!


Photo, originally uploaded by lenin1985.
நீயருகில் இல்லாததாலோ என்னவோ பொங்கல் கூட கசக்கிறதடி.. உன் அருகாமை உணரும் நாட்களிலெல்லாம் பண்டிகைக்கால குதூகலத்தை விட அதிகமான மகிழ்ச்சியை உணரும் மனம், நீ எட்டி போய்விடும் வேளைகளிலோ பண்டிகையாகவே இருந்தாலும் கூட வாடிய மலராக வசமிழந்து தவிக்கிறது..!

எல்லோரும் கரும்பு கடித்து சுவைத்து மகிழ்கின்றனர்.. சிறுவயது முதலே கரும்பென்றால் உயிர் எனக்கு உன்னை காணும் வரை. முதன்முறை உன் இதழ்களை சுவைத்த பின்பு கரும்பிலோ அதன் தித்திப்பிலோ நாட்டமிழந்து விட்டது மனம்.. அதன் பிறகு தினந்தோறும் நாம் கொண்டாடுகிறோம் பொங்கல்.. ஆனாலும் திகட்டவில்லை.. இனிப்பான எதுவுமே அதிகம் உண்டால் திகட்டும் என்று சொல்வது மூடநம்பிக்கை என்பதை உணர்த்தியவள் நீ..

தினமும் நாம் சேர்ந்திருக்கும் போதெல்லாம் பொங்கல் கொண்டாடுவதையொத்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூட இன்னும் வேண்டுமென்பதான ஏக்கமும் ஆசையும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.. என்றென்றும் இருக்கும் இந்த ஏக்கமும் ஆசையும்.. இன்று நீ குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடி கொண்டிருக்கின்றாய். நானோ இங்கு உன் அருகாமையின்றி தவித்தபடி அமர்ந்திருக்கின்றேன்.. இன்னமும் விடிந்திடாத விடியலின் நிமித்தம் நாமிருவரும் ஒன்றாய் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது அதில் வரும் நேரடி ஒளிபரப்புகளிலோ மனம் லயிக்கவில்லை.. அதிகாலையில் எழுந்து புள்ளிகள் இணைந்து நீ கோலம் போடுவதையும், வண்ணம் தூவி அக்கோலங்களை நீ அலங்கரிப்பதையும், குளித்த பின்பு துவட்ட மறந்த நீர்த்துளிகள் சில உன் மேனியில் மின்னுவதையும், இமை மூடியபடி கைகூப்பி செல்லமாய் உன்னுதடுகளால் முணுமுணுத்தபடி நீ சாமி கும்பிடுவதையும், குடும்பத்தாருடன் சேர்ந்து நீ பொங்கல் பொங்கி கொண்டாடுவதையும் இமை மூடி கற்பனை செய்து ரசித்த வண்ணமிருக்கின்றேன்.. கரும்பை நீ மென்மையாய் கடிக்கும் காட்சி கற்பனையில் வரும் போது ஏனோ தெரியவில்லை கரும்பை விடுத்து உன்னுதடுகள் மட்டுமே என் கண்களுக்கு தெரிகின்றன.. நீயும் நானும் சேர்ந்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் எப்போது வருமென்பதான ஏக்கம் பெருக்கெடுக்கின்றது என் நெஞ்சுக்குள்.. உன் அருகாமைக்காக ஏங்கி தவித்திருக்கின்றேன் என் அன்பே..! ஐ மிஸ் யூ, மை டார்லிங்..!!

Tuesday, January 11, 2011

புதுப்பொழிவு பெற சில யோசனைகள்.. [2]


Photo, originally uploaded by nvanspronsen.
இந்த பதிவு போன பதிவோட தொடர்ச்சி.. முதல் பகுதிய படிச்சிட்டு இந்த பதிவை படிங்க.. இதன் முதல் பகுதிய படிக்க இங்க கிளிக் செய்யுங்க..

இனி பனிப் பொழியும் இப்பருவத்தில் புதுப்பொழிவு பெற, புத்தாண்டு உறுதிமொழிகளுக்கான மேலும் சில யோசனைகள்:

16. உங்களுக்கு நெருக்கமானவங்களுக்கும், உங்கள நெருக்கமானவனா(ளா) நெனைக்குறவங்களுக்கும் அப்பப்ப இன்ப அதிர்ச்சி குடுங்க.. அது திடீர் விசிட், எதிர்பாரா நேரத்தில போன் கால், பூங்கொத்து, பரிசு பொருள், அவங்க மேல உங்களுக்கு இருக்குற பிரியத்தை வெளிப்படுத்துற எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள், அவங்க உங்களுக்கு எவ்ளோ முக்கியமானவங்கன்னு அப்பப்ப அவங்களுக்கு வெளிப்படுத்துறது, வாழ்த்து மடல் இப்படி எதுவா வேணாலும் இருக்கலாம்.. சின்னதோ பெரிசோ, எதிர்பாராத சந்தோசத்தயும் மகிழ்ச்சியயும் அப்பப்ப அவங்களுக்கு குடுக்குற பழக்கத்த ஏற்படுத்திகோங்க.. உறவுகள் சந்தோசமா நீடித்து நிலைக்க அது ரொம்ப உதவும்..

17. வாழ்க்கையில நீங்க சாதிக்கணும்னு நெனைக்குற விஷயத்துக்காகவோ இல்ல நீங்க ரொம்ப பிரியப்படுற விஷயத்த செய்யறதுக்கோ தினமும் நேரம் ஒதுக்குங்க.. அது அரை மணியோ, ஒரு மணியோ இல்ல ரெண்டு மணி நேரமோ.. உங்க சௌகர்யம்.. ஆனா நேரம் ஒதுக்குங்க.. அதுக்காக இருவத்தி நாலு மணி நேரத்தையும் உங்களுக்காக மட்டுமே ஒதுக்கிக்காதீங்க.. அப்பப்ப மத்தவங்களுக்காகவும் அதே சமயத்துல உங்களுக்காகவும் கொஞ்ச நேரம் ஒதுக்க தவறாதீங்க..

18. மத்தவங்க குறைகள மட்டுமே சுட்டிக் காட்டாதீங்க.. மட்டம் தட்டி மட்டுமே பேசறவங்கள பெரும்பாலும் மத்தவங்களுக்கு பிடிக்காம போக வாய்ப்பிருக்கு.. அதுக்காக எப்பவுமே முதுகுல தட்டிக் கொடுத்தே பேசணும்ன்னு நா சொல்லல.. மத்தவங்க குறைகள பத்தி பேசறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் அத விட இரண்டு மடங்கு அவங்ககிட்ட இருக்குற நல்ல விஷயங்கள பத்தி பேசி பாராட்ட மறக்காதீங்க..

19. ஹீரோக்கள் படத்துல தான் வலம் வரணும்னு இல்ல. நீங்களும் ஹீரோவா இருக்க ட்ரை பண்ணுங்க. சிகரெட்ட தூக்கிப் போட்டு பிடிக்குற, வலிப்பு வந்த மாதிரி கைய சிலுப்பிகிட்டு தல முடிய கோதி விடுற ஹீரோயிஸம் பத்தி நா பேசல. நாலு பேத்துக்கு நல்லது பண்ணினா நீங்களும் ஈஸியா ஹீரோ ஆகலாம். அப்படி நாலு பேத்துக்கு நல்லது செய்ய முடியாட்டி எதுவுமே செய்யாம ஜீரோவாவே இருங்க.. ஆனா கெட்டது செஞ்சு வில்லனா மட்டும் ஆகாதீங்க..

20. நீங்க மிஸ்டர்/மிசஸ்.பர்பெக்டா இருக்கலாம். அதுக்காக உங்கள சுத்தி இருக்கவங்களும் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்காதீங்க.. மத்தவங்கள அவங்க நிறை குறைகளோட எதுக்குறது தான் வாழ்க்கை.. இன்னொருத்தவங்க உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு அவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவங்களுக்காக நீங்க கொஞ்சமாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அப்பறமா சொல்லுங்க.. எல்லாத்தையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்ய முடியாது. அதே நேரத்துல மத்தவங்க அத உங்களுக்காக செய்யறப்ப அவங்க ஸ்டைல் நிச்சயமா அதுல கலந்து தான் இருக்கும். நீங்க நெனைக்குற மாதிரியே பர்பெக்டா இல்லன்னு அவங்கள படுத்தி எடுக்காதீங்க..

21. எல்லாத்துக்கும் 'ஆமாஞ்சாமி'ன்னு தலையாட்டாம, 'இல்லை'.. 'எனக்கு விருப்பமில்ல'.. 'வேண்டாம்'.. 'பிடிக்கல'..ன்னு 'நோ' சொல்லப் பழகிகோங்க.. மத்தவங்க சொல்றதுக்கு எல்லா நேரத்துலயும் 'எஸ்'ன்னு சொல்லி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினா, 'நல்லவன்(ள்)'.. 'வல்லவன்(ள்)'...ன்னு பாராட்டுவானுங்க.. ஆனா மாடு கணக்குல சேத்துடுவாங்க.. அப்படி இருந்தீங்கன்னா மனுஷனாவோ மனுஷியாவோ மதிக்காம உங்கள அவங்க சுயநலத்துக்கு தான் உபயோகப்படுத்த பாப்பாங்க.. மத்தவங்களுக்கு "நோ"ன்னு சொல்றது தப்பான காரியம் ஒண்ணும் இல்ல.. நீங்க எதுக்காக "நோ" சொல்றீங்கன்னு விளக்கம் குடுத்து நோ சொல்லுங்க.. உங்க விருப்பதுக்கு மாறா நீங்க செயல்படனும்னு எல்லா நேரத்திலேயும் அவசியமெல்லாம் இல்ல.. முடிஞ்ச வரைக்கும் மத்தவங்கள அனுசரிச்சு போங்க, ஆனா அதுக்காக உங்களோட எமொஷனல் வீக்னசை மத்தவங்க அவங்க ஆதாயத்துக்கும் சுயநலத்துக்கும் உபயோகிக்க இடம் குடுக்காதீங்க..

22. கடவுள கும்பிடுங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா மத்த உயிர்கள் மேல அன்பு காட்டுறது, இரக்கம் காட்டுறது முதலான விஷயங்கள் கடவுளுக்கான குணாதிசயங்கள் அப்படின்னு ஒதுக்காம, நீங்களும் கடவுளா மத்தவங்களுக்கு இருக்க முயற்சி பண்ணுங்க.. உங்கள நாலு பேரு கடவுள்னு சொன்னா அது நல்ல விஷயம் தான.. :-)

23. மனிதர்கள சம்பாதிங்க.. பணத்த செலவு பண்ணுங்க (அதுக்காக சேமிப்பு இல்லாம ஒரேடியா செலவு பண்ணிட்டு பின்னாடி முழிச்சிகிட்டு நிக்காதீங்க).. மனிதர்கள செலவு பண்ணி பணத்த சம்பாதிக்காதீங்க..

24. நல்ல நண்பர்களின் எண்ணிக்கைய அதிகரிக்கிறீங்களோ இல்லையோ அது குறையாம பாத்துக்கோங்க.. எதிரிகளின் எண்ணிக்கைய கண்டிப்பா குறைக்க முயற்சி பண்ணுங்க.. எதிரிகள போட்டு தள்ளுங்கன்னு சொல்லல.. சமாதானமா போக முயற்சி பண்ணுங்க..

25. வீட்ல உங்க கூட இருக்கவங்க சந்தோசமா இருக்காங்களான்னு அடிக்கடி கேக்குற பழக்கத்த ஏற்படுத்திக்கோங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் மனவருத்தம்னா நீங்களா முன்வந்து என்னான்னு கேட்டு அதை சரி பண்ணவோ இல்ல அவங்களுக்கு சூழ்நிலைய புரிய வைக்கவோ முயற்சி பண்ணுங்க.. வீட்ல இருக்கவங்க சந்தோசத்துக்காக பெரிசு பெரிசா எதுவும் பண்ணனும்னு அவசியம் இல்ல.. 'நீங்க சந்தோசமா இருக்கீங்களா..?'ன்னு அக்கறையா விசாரிக்கிறதும் அன்பா நாலு வார்த்தை பேசறதுமே அவங்கள மகிழ்ச்சிப்படுத்தும்னு தெரிஞ்சுகோங்க.. வீட்ல இருக்கவங்க கூட உங்க நேரத்துல ஒரு பகுதிய கண்டிப்பா தினமும் செலவழிங்க.. டெய்லி ஒரு வேளையாச்சும் குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து உக்காந்து சாப்பிடுங்க..

26. வீட்ல வயசானவங்க இருந்தா அவங்க கூட அப்பப்ப பேசி நேரத்த செலவிடுங்க.. உங்க வீட்ல வயசானவங்க இல்லாட்டி, நண்பர்கள் வீட்லயோ இல்ல வயதான சிலரை எதேச்சையா சந்திச்சு அவங்களோட பேச வாய்ப்பு கெடைக்குறப்பயோ அவங்க கூட பேசி நேரத்த செலவிடுங்க.. வயதானாலே ரொம்ப தனிமையா ஃபீல் பண்ணுவாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசறத விட அவங்களுக்கு சந்தோசம் தர்றது வேற எதுவும் கெடையாது..

27. வாழ்க்கையிலே மாற்றம் தவிர்க்க முடியாதது.. அத பழகிக்க ஒரு வழி, நிறைய புது மனிதர்கள சந்திக்கிறது, புது இடங்களுக்கு போயிட்டு வர்றது, ஆபீசுக்கோ காலேஜுக்கோ ஸ்கூலுக்கோ எப்பவும் போற வழில போகாம அப்பப்ப வேறு வழிகள்லயும் போறது, ஒரே மாதிரி ஒரு விஷயத்தை செய்யாம வேற மாதிரி செஞ்சு பாக்குறது, இப்படி புதுசு புதுசா நெறையா ட்ரை பண்ணுங்க.. புதுசா நாலு எடத்துக்கு போயிட்டு வாங்க.. புது அனுபவங்களுக்கு உங்களையே நீங்க தயார்படுத்தி பாருங்க.. அது வேறு சில சூழ்நிலைகளிலே ரொம்ப உதவும்..

28. மாற்றுத் திறனுடையவர்கள் இல்லதிலோ, ஆதரவற்றவர்கள் காப்பகங்களிலோ, முதியோர் இல்லத்திலோ உங்க பொறந்தநாள் கொண்டாட்டத்த வச்சிகோங்க.. உங்களோட பொறந்த நாள் பார்ட்டிக்காக நீங்க முடிவு பண்ணியிருக்க பணத்த அவங்களுக்கு உபயோகமான எதையாச்சும் வாங்கி கொடுக்குறதுல செலவழிங்க..

30. விரோதம் பாராட்டாதீங்க.. மத்தவங்க மேல வெறுப்ப வளர்த்துக்காதீங்க.. அது உங்க மனச மட்டுமில்ல உடல் நலத்தையும் கூட கெடுக்கும்.. டென்ஷன், பிளட் பிரஷர் இப்படி நெறைய வந்து உங்க உடல் நலத்த பாதிக்க வாய்ப்புண்டு.. விரோதிகளையோ பிடிக்காதவங்களையோ நிச்சயமா நண்பர்களா பாக்க முடியாது, ஆனா அவங்கள அந்நியர்களா பாக்க பழகிக்கலாம்.. அந்நியர்கள் மேல நாம் கோவப்பட மாட்டோம், விரோதம் பாராட்ட மாட்டோம், அவங்கள பாத்து வெறுப்படைய மாட்டோம்.. கண்டும் காணாம தான் போக முயற்சி பண்ணுவோம்.. அத நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க..

"ஹையோ இப்பவே கண்ண கட்டுதே.." அப்படின்னு நீங்க சொல்றது காதுல விழுது.. சரி சரி.. இதோட நிறுத்திக்கிறேன்.. இதுக்கு மேல சொன்னா என்னை அடிக்க வருவீங்கன்னு தெரியும்.. அட்வைஸு அம்புட்டுத்தான் (இப்போதைக்கு)..

புது வருஷம் யாருக்காகவோ பொறக்கல.. உங்களுக்காக தான் பொறந்திருக்கு.. அதனால ஜாலியா வருஷம் ஃபுல்லா கொண்டாடி கலக்குங்க.. ('இன்னும் போகலையா நீ'ன்னு யாரோ கேக்குறது காதுல விழுது)

இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் மலர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..! வாருங்கள்.. வாழ்க்கையை வாழ்ந்துப் பார்ப்போம்..!!

Saturday, January 8, 2011

புதுப்பொழிவு பெற சில யோசனைகள்.. [1]


Photo, originally uploaded by peevee@ds.
புத்தாண்டுனாலே உறுதிமொழி எடுத்துக்கிறது வழக்கமா நடக்கிறது தான். நம்மையே நாம மாத்திக்க எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும், அத உடனே செயல்படுத்தாம அதுக்கு ஒரு நேரம் வரட்டும்னு காத்துகிட்டு இருந்தே பழகிட்டோம்.. அப்படி நேரம் வந்திடுச்சுன்னு நெறையா பேரு நெனைக்குறது புது வருஷத்த தான்.. இந்த வருஷம் ஏதாச்சும் உறுதிமொழி எடுத்துக்கணும்னு தோணுது, ஆனா என்ன எடுத்துக்கிறதுன்னு தெரியலன்னு சொல்றவங்களுக்கு இதோ சில யோசனைகள்.. ஏற்கனவே நா உறுதிமொழி எடுத்துகிட்டேன்னு சொன்னீங்கன்னா, 'அடடே இத நாமலும் செய்யலாமே'ன்னு உங்களுக்கு தோணலாம் இங்க இருக்குற சிலவற்றை படிச்சதும்..

இனி பனிப் பொழியும் இப்பருவத்தில் புதுப்பொழிவு பெற சில யோசனைகள்:

1. உம்மணா மூஞ்சியாவே இல்லாம தினமும் ஒரு புது முகத்தையாச்சும் பாத்து புன்னகைங்க.. (நீங்க பையனா இருந்தா பொண்ணுகள மட்டுமே பாத்து சிரிக்கிறதும், நீங்க பொண்ணா இருந்தா பசங்கள மட்டுமே பாத்து சிரிக்கிறதும் இந்த கணக்குல ஏற்றுக் கொள்ளப்படாது.. ஆனா கலந்து இருக்கலாம், அது தப்பில்ல.. வாழ்க்கையே பழகுறது தான ;-) வாங்க பழகலாம்ன்னு முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் சிரிச்சு வரவேற்க தயங்காதீங்க)

2. பச்சை நிறமே பச்சை நிறமேன்னு பூமிய பச்சையா வச்சுக்க மின்சாரம், நீர், காகிதம் முதலானவற்றை தெரியாமக் கூட வீணாக்குறத எவ்ளோ முடியுமோ அவ்ளோ தவிர்க்க முயலுங்க.. பச்சை பசேல்ன்னு ஒரு ஊர காமிக்கணும்னா கிராபிக்ஸ் உபயோகிச்சா தான் உண்டுங்கிற நிலைமை எதிர்காலத்துல வராம இருக்க உங்களால முடிஞ்சத செய்யுங்க.. ஒரு மரமாச்சும் இந்த வருஷம் நட முயற்சி பண்ணுங்க.. நீங்க நடாட்டியும் அதுவா வளந்து இருக்குற மரங்கள தயவு செஞ்சு வெட்டாதீங்க.. மரம், செடி, கொடிகளுக்கு தண்ணி ஊத்துறது மன நிறைவைத் தரக்கூடிய, உலகத்துக்கு உபயோகமான ஒரு நல்ல பொழுதுபோக்கு.. முயற்சி பண்ணுங்க..

3. படிக்க வசதியில்லாத ஒரு பையனயாசும்/பொண்ணயாசும் படிக்க வைக்க உங்களால முடிஞ்சத செய்யுங்க..

4. தினம் ஒரு உதவி செய்ய முடியாட்டியும், முடிஞ்ச வரைக்கும் வழியில (வாழ்க்கையோட வழியிலங்க) தட்டுபடுறவங்களுக்கு தேவைப்படுற உதவிகள தவறாம செய்யுங்க.. (உபத்திரவம் செய்யாம இருந்தா அதுவே ஒரு பெரிய உதவிங்கிறதையும் ஞாபகத்துல்ல வச்சுக்கோங்க.. அதுக்காக 'நா உண்டு என் வேலை உண்டு'ன்னு இருந்துட்டு, 'நா இந்த வருஷம் நெறையா உதவி செஞ்சு இருக்கேன்'னு சொல்லாதீங்க)

5. திரும்ப கேட்டா கேவலமா நெனைக்க கூடும்ன்னு (பஸ்ல, கடைகள்ள மற்றும் இன்னப்பிற இடங்களில்) விட்டுட்டு போற உங்களுக்கு சொந்தமான அம்பது பைசா, ஒரு ரூபா முதலான சில்லறை பாக்கிய சண்டை போட்டாச்சும் வாங்குங்க. உங்களுக்கு அது வேணாம்னு தோணுச்சுன்னா அந்த சில்லறைய எல்லாம் வாங்கி, அப்படி சேர்ற பணத்த சேமிச்சு கஷ்டபடுற யாருக்காச்சும் வருஷ கடைசியில குடுங்க.. ஒரு வாரத்துக்கு அப்படி பத்து ரூபா சேர்த்தீங்கன்னா ஒரு வருஷத்துக்கு ஐநூறு ரூபாய்க்கு மேல சேரும்.. உங்களுக்கு சொந்தமானத நீங்க விடாம வாங்கின மனநிறைவும், இன்னொருத்தருக்கு உதவுன நிறைவும்னு ரெண்டு விதமான சந்தோசம் கிடைக்கும்..

6. வேலியில போற ஓணான்னு நெனைச்சு 'எனக்கெதுக்கு வம்பு'ன்னு ஒதுங்கி போகாம, நியாயத்துக்கு முடிஞ்சவரைக்கும் (அடிவாங்கிட்டு முன்னாடி நிக்காட்டியும் பின்னாடி நின்னாவது) ஆதரவு குடுங்க.. எதிர்காலத்துல எங்கயாச்சும் நீங்களும் அந்த ஓணான் சூழ்நிலைல சிக்கிக்க வாய்ப்பு உண்டுங்கிறத மறக்காதீங்க..

7. பிஸின்னு சீன் போட்டு உங்களுக்கே தெரியாம தொலைச்சிட்ட பால்ய நண்பர்கள்ல ஒண்ணு ரெண்டு பேரையாச்சும் கண்டுபிடிச்சு நட்ப புதுபிச்சுக்க முயற்சியாச்சும் பண்ணுங்க..

8. அவன்(ள்) போன் பண்ணி பேசுவான்(ள்)னு நெனைச்சிட்டு இல்லாமலும், மிஸ் கால் மட்டுமே குடுக்காமலும் நீங்களும் யாருக்காச்சும் (எப்பவும் இல்லாட்டியும்) எப்பவாச்சுமாவது கால் பண்ணி பேசுங்க..

9. உங்களால ஒருத்தன்(ஒருத்தி) அழுதான்(ள்)னு இருக்க வேணாம்.. மத்தவங்க மனச (உடலையும் தான்) தெரிஞ்சே புண்படுத்தாதீங்க..

10. எவ்ளோ முடியுமோ அவ்ளோ சிரிங்க.. மத்தவங்களயும் சிரிக்க வைங்க.. அதுக்காக சிரிக்கிறேன்னு சொல்லிட்டு ரோட்டு ஓரத்துல நின்னு கேக்கபிக்கன்னு சிரிச்சு பைத்தியம்னு பேரு வாங்காதீங்க.. அதே மாதிரி சிரிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு ஒரேடியா காமெடி பீஸாவும் ஆயிடாதீங்க.. சந்தோசமா இருங்க, மத்தவங்களயும் சந்தோசமா வச்சுக்கோங்கன்னு சொல்றேன்.. ('புரியுது புரியுது'ன்னு நீங்க சொல்றது கேக்குது)

11. ஒரு உறவையோ நட்பையோ நீங்க முடிச்சுகிட்டீங்கன்னு இருக்க வேணாம்.. எவ்ளோ முடியுமோ அவ்ளோ விட்டுக் குடுத்தாலும் குடுங்க, ஆனா ரிலெஷன்ஷிப்ப மட்டும் விட்டுடாதீங்க.. உறவிலயும் நட்பிலயும் ஈகோவ விட்டுட்டு சமரசம் செய்ய முதல்ல முன் வர்றது நீங்களா இருக்க முயற்சி பண்ணுங்க..

12. 'மன்னிப்பு.. தமிழ்ல்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை'ன்னு விஜயகாந்த் ஸ்டைல்ல டயலாக் அடிக்காம நெறையா மன்னிங்க.. மன்னிப்பு கேக்க தயங்காதீங்க..

13. கண்மூடித்தனமா நிறைய லவ் பண்ணுங்க.. அது உயிர்களா இருக்கட்டும்.. பொருள்களா இருக்க வேணாம்..

14. சில விஷயங்கள நல்லா ரூம் போட்டு யோசிச்சுட்டு அப்பறமாவே பேசுங்க.. பேசினதுக்கு அப்பறம் யோசிக்குற மாதிரியான சூழ்நிலைகள முடிஞ்ச வரைக்கும் தவிர்க்க முயற்சி செய்யுங்க.. அதுக்காக ரொம்ப நேரம் ரூம் போட்டு யோசிச்சிட்டு கடை காலியானதுக்கு அப்பறம் வந்து டீ ஆத்த முயற்சி பண்ணாதீங்க..

15. மாற்றம் உள்ளுக்குள்ள இருந்தும் ஏமாற்றம் வெளிய இருந்தும் வர்ற மாதிரி பாத்துக்கோங்க.. மத்தவங்க உங்களுக்காக மாறணும்னு எதிர்பாக்காதீங்க.. உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க.. சுயமாற்றமும் முன்மாதிரியா நடந்துக்கிறதும் தான் நாம விரும்புறத பெறுவதற்கு முதல் படின்னு தெரிஞ்சுகோங்க.. மத்தவங்களுக்கு முடிஞ்சவரைக்கும் ஏமாற்றத்தை குடுக்காதீங்க.. உங்ககிட்ட இருந்து அதிகம் எதிர்பாக்குறாங்கன்னா உங்களால அத பூர்த்தி செய்ய முடியாம போகலாம்ன்னு முடிஞ்சவரைக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க.. அதே நேரத்துல உங்களோட எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யும் முதல் நபர் நீங்களா இருங்க..

யோசனைகள சொல்லி முடிக்கல.. இன்னும் நெறையா இருக்கு.. இதன் தொடர்ச்சியா மேலும் சில யோசனைகள அடுத்த பதிவுல எழுதறேன்..

வாங்க.. மத்தவங்கள சந்தோசப்படுத்தி நாமலும் சந்தோசமா இருக்கலாம்(எதுக்கு முன்னுரிமை குடுத்து இருக்கேன்னு நல்லா கூர்ந்து கவனிங்க).. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

இந்த பதிவோட தொடர்ச்சிய படிக்க இங்க கிளிக் செய்யுங்க..

Tuesday, December 28, 2010

மழலைப் பருவத்தின் அழகு..!!


Photo, originally uploaded by GOPAN G. NAIR.
இன்று காலை டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன் [ பொதுவாவே வீட்ல தான டீ குடிப்பாங்க, நான் டீ குடிச்சிட்டு வீடு திரும்பினதா சொல்றேனேன்னு நெனைக்குறீங்களா..? வீட்ல டீ போட்டு தர ஆள் இல்லப்பா.. அதான் வெளிய போய் குடிச்சிட்டு வந்தேன் ]. சரி கதைக்கு வருகிறேன்..

அப்போது வீட்டு முதலாளியின் பேரனுக்கு அந்த குட்டிப் பையனது அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் என்னைப் பார்த்ததும், "ஹல்லோ" என்று சொல்வான். அது நான் அவனுக்கு கற்றுக் கொடுத்தது. அவன் கைக் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவனை தினமும் பார்ப்பேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்வான், ஏனென்றால் அந்நேரங்களில் அவன் பேச கற்றுக் கொள்ளவில்லை. தினமும் நான் அவனைப் பார்த்து, "ஹல்லோ" என்று சொல்லி அவன் திரும்ப சொல்கிறானா என்று பார்ப்பேன்.. அவன் உதடுகள் முயற்சி செய்யும், ஆனால் வார்த்தைகள் வராது. வெறும் புன்சிரிப்பு மட்டுமே வரும்.. உள்ளம் கொள்ளைக் கொள்ளும் புன்னகை அது.. பிறகு ஒருநாள் அவனைப் பார்த்து வழக்கம் போல் நான் "ஹல்லோ" சொல்ல, பதிலுக்கு புன்னகைத்தவன் தனது பிஞ்சு மொழிகளில், "ஹல்லோ" என்று சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனேன்.

அதற்காக இப்போது அவன் பெரிதாக வளர்ந்து விட்டான் என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவனுக்கு இரண்டு வயது கூட ஆகவில்லை. இன்று காலை அவனைப் பார்த்ததும் புன்னகைத்தேன்.. அவனாக "ஹல்லோ" சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.. என்னைப் பார்த்ததும் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, "பைன்" என்றான். எனக்கு சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அது என்ன "பைன்" என்று குழம்பிப் போனேன். என் முகத்திலிருந்த புன்னகையை நழுவ விடாமல், எனது ஒரு புருவத்தை மேல் நோக்கி உயர்த்தி கேள்விக் குறியுடனான முக பாவனையை காண்பித்தேன். அவன் மீண்டும் புன்னகைத்து, "பைன்' என்றான்.

நான் சிரித்தவாறே, "என்ன சொல்கிறான்..?" என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். "நேத்து நைட் நீங்க 'ஹவ் ஆர் யூ'ன்னு கேட்டீங்கல்ல, அதுக்கு இப்ப பதில் சொல்றான்", என்று அவன் அம்மா கன்னடத்தில் விளக்கம் சொன்னார்கள் [ அவங்க கன்னட மொழி பேசும் குடும்பம் ].. அவனது செயல் என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது.

நேற்றிரவு நான் வீடு திரும்பிய போது அவன் வெளி கேட்டுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். வழக்கம் போல் நாங்கள் பரிமாறி கொண்ட "ஹல்லோ"விற்கு பின்பு, நான் புன்னகையோடு முதன்முறையாக "ஹவ் ஆர் யூ..?" என்று கேட்டேன். அதற்கு எப்படி பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. வெறும் சிரிப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. யாரும் அவனிடம் இதுவரை அந்த கேள்வியை கேட்டதில்லை என்று நான் புரிந்து கொண்டேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. "குட் நைட்", என்று நான் சொல்ல, பதிலுக்கு அவனும் "குட் நைட்" என்று சொல்லி கையசைத்தான். இதை அவனது அப்பா உள்ளிருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

நான் சென்ற பின்பு, "ஹவ் ஆர் யூ..?" என்று யாராவது கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டுமென அவனது அப்பா சொல்லி கொடுத்திருக்க வேண்டும். இன்று காலை என்னைப் பார்த்ததும் மறக்காமல் முதல் வேலையாக எனது நேற்றைய கேள்விக்கு அவனாகவே பதிலளித்த அவனது மழலைத்தனம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹவ் க்யூட் அண்ட் ஸ்வீட்..!! ரொம்பவே மகிழ்ந்து போனேன். நேற்று கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொண்டு, ஞாபகம் வைத்து என்னைப் பார்த்ததும் முதல் காரியமாக அவன் புன்னகையுடன் பதில் சொன்ன விதம்.. ச்ச.. சான்ஸே இல்ல.. மழலைப் பருவத்தில் கொட்டி கிடக்கும் அழகு எப்போதுமே மனதை சொக்க வைக்கிறது. எவ்வளவு பருகினாலும் திகட்டவே திகட்டாத இன்பம் இந்த மழலைத்தனம்.. இன்றைய பொழுது மிக நன்றாகவே விடிந்தது..!!