என் கேமரா சரியாக இயங்காததால், சரி செய்ய கொடுக்கலாமென்று கேனான் சர்வீஸ் சென்டருக்கு சென்றேன். பெங்களூரில் அது பிரிகேட் ரோட்டில் (Brigade Road) உள்ளது. ஆனால் அது இருக்கும் இடம் சரியாக தெரியாததால் என் பைக்கை எங்காவது நிறுத்தி விட்டு, சர்வீஸ் சென்டரை தேடலாமென்று நினைத்தேன். பிரிகேட் ரோட்டில் பைக்கை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பது கடினமென்பதால் பக்கத்திலிருக்கும் எம்.ஜி. ரோட்டில் பைக் நிறுத்துவதற்கு அனுமதி பலகை (bike parking board) எங்கிருக்கிறதென்று தேடி, எனது பைக்கை நிறுத்தி விட்டு, கேமராவுடன் நடக்க ஆரம்பித்தேன்.
மிக பிரமாண்டமாக இருந்தது கேனான் சர்வீஸ் சென்டர். பதிவேட்டில் (register) பதிவு செய்து, டோக்கன் கொடுத்து, உட்காருவதற்கு ஜம்மென்ற ஷோபா போட்டு அமர்க்களப்படுத்தி இருந்தனர். அறைகளை மிக நவீனமாகவும் கலை நயத்துடனும் வடிவமைத்து இருந்தனர். நுனி நாக்கு ஆங்கிலம், விலை உயர்ந்த எல்.சி.டி தொலைக்காட்சி, பளிசென்ற கண்ணாடிகளுடனான ஏசி அறை, வந்திருப்போர் குடிப்பதற்கு மூடி வைக்கப்பட்ட அழகான கண்ணாடி தம்ளர்களில் தண்ணீர் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து விட்டது, "தீட்ட போறானுங்கடா.." என்று. ஏதோ இருநூறு முந்நூறில் கேமராவை சரி செய்து விடலாமென்று போன எனக்கு, "லெவன் ஹன்ரட் பார் சர்விஸ் அண்ட் இப் வி ஹவ் டு சேன்ஞ் எனி பார்ட்ஸ், இட் வில் பி எக்ஸ்ட்ரா..(eleven hundred for service and if we have to change any parts, it will be extra)", என்று பளிசென்ற புன்னகையுடன் நுனி நாக்கில் அங்கிருந்த பெண் சொல்ல, தலை சுற்றியது. 'ஓ.. இது தான் அழகுல மயங்குறதா..' என்ற வடிவேலுவின் காமெடி என் மனத்திரையில் ஓடியது..
'ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா..' என்று எங்கெங்கோ எதிரொலிப்பதை (echo) போன்று இருந்தது. 'அவ்வளவா..'வென்று நான் வாய் பிளந்ததை அவள் ஒரு மாதிரியாக தான் பார்த்தாள். 'இந்த டென்சன்ல பொண்ணு அழகா இருக்குறத கவனிக்காம விட்டுடாதடா பால்..' என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த ரசிகன் சொல்ல, என்னையும் அறியாமல் வாயில் ஜொள்ளு வழிய ஆரம்பித்தது. சின்ன உதடுகள், கவர்ந்திழுக்கும் விழிகள், வசீகர புன்னகை, மின்னும் கன்னங்கள், புதைக்குழியை போன்ற கன்னக்குழிகள், எடுப்பான அவளின்... (ரொம்ப வர்ணிக்கிறேனோ..) அவள் உண்மையிலேயே அழகாக தான் இருந்தாள். 'கொடுத்து வைத்தவன் எவனோ..' என்று தோன்றியது. ஆனால் அது சில வினாடிகள் தான். பின்பு மீண்டும், 'ஆயிரத்து நூறா..'வென்ற எதிரொலி எனக்குள் கேட்க ஆரம்பித்து விட்டது.
'அடப்பாவிகளா.. ஒரு சின்ன ரிப்பேர்-க்கு இவ்ளோ வா..?', என்று உள்ளுக்குள் மலைத்தேன். 'சரி.. தீட்டுறதுன்னு முடிவு பண்ணிடீங்க.. தீட்டுங்கடா.. தீட்டுங்க..', என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன், வேறு வழியில்லை என்பதால் 'சரி' என்று கேமராவை கொடுத்தேன். 'எவ்வளவோ பண்றோம்.. இத பண்ண மாட்டோமா..' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். "வி வில் கால் யு வென் தி கேமரா இஸ் ரெடி.. இட் வுட் டேக் அரோன்ட் போர் டேஸ்..(we will call you when the camera is ready.. it would take around four days)" என்றாள் அவள். 'சரிங்க டயானா..', என்று சொல்லி அவளிடம் ரிசிப்ட் (receipt) வாங்கிக் கொண்டு, அங்கிருந்து எம்.ஜி. ரோடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நான் சொல்ல வந்த விஷயம் என் கேமராவை பற்றியதோ அல்லது அந்த சர்வீஸ் சென்டரை பற்றியதோ அல்லது அந்த அழகான பெண்ணை பற்றியதோ [அத பத்தி கூட எழுதலாம் :-) ] அல்ல. 'அப்புறம் எதுக்குடா இவ்ளோ பில்டப் கொடுக்குறனு கேக்குறீங்களா'.. சும்மா தாங்க.. அப்டி ஆரம்பிச்சா சொல்ல வந்த விஷயம் சுவாரசியமா இருக்குமேனு நெனச்சேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்..
'என் பைக் பத்திரமா இருக்குமா..'வென்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே நடக்கையில் இன்னொரு விஷயம் என் ஞாபகத்திற்கு வந்தது. நான் பைக்கை நிறுத்தியிருப்பது ரோட்டோரத்தில் பொது மக்களுக்கான பார்க்கிங் (parking) இடத்தில் தான். ஆனாலும் நான் பைக்கை திரும்ப எடுக்க போகும் போதெல்லாம், சட்டென்று எனக்கு பின்னால் வந்து நின்று 'இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்' என்று காசு கேட்கும் அந்த மூன்றாம் மனிதர்கள் பற்றிய எண்ணம் என் சிந்தனையில் வந்தது. ஏதோ அந்த இடத்தை பார்க்கிங் கான்ராக்ட் (contract) எடுத்தவர்கள் போன்ற தோரணையில் தான் அவர்கள் அதிகாரத்துடன் கேட்பார்கள்.
எல்லோரும் அவர்களுக்கு காசு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். நானும் கொடுத்திருக்கிறேன். அவர்கள் கன்னடத்தில் பேசுவதாலும், எளிதாக கூட்டம் சேர்த்து வம்புக்கு வருவார்கள் என்பதாலும் நான் எதுவும் கேட்டதில்லை இதுவரை. ஆனால், 'எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டு'மென்று எப்போதும் நினைத்ததுண்டு. 'அதிகாரமாக காசு கேட்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டதுண்டு. 'பொது மக்களுக்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கு நான் எதற்காக இவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப எனக்குள்ளேயே கேட்டுக் கொள்வேனே தவிர நேரடியாக அவர்களிடம் தைரியமாக கேட்டதில்லை. ஆனால் இந்த முறை யாரவது வந்து நின்று காசு கேட்டால் அவர்களிடம் 'ஏன்' என்று கேட்டு, தேவைப்பட்டால் பிரச்சனை செய்வதென்று முடிவெடுத்தேன். ஒருவேளை ஏற்கனவே ஆயிரத்து நூறு ரூபாய் கேமராவிற்கு தண்டம் கட்ட போவதால் உள்ளுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத எரிச்சலின் விளைவாக கூட எனக்கு அப்படி தோன்றி இருக்கலாம்.
என் பைக் இருக்குமிடம் வந்தேன். நான் நிறுத்தும் போது யாரும் அங்கே தென்படவில்லை. ஆனால் பைக்கை நான் எடுக்க முற்பட்டவுடன், வேகமான காலடி சப்தம் என் பின்னால் கேட்டது. 'எங்க இருந்து தான் வருவானுங்களோ..' என்று நினைத்துக் கொண்டே மெதுவாக திரும்பினேன். இதோ.. வந்து விட்டான்.. பார்ப்பதற்கு பக்கா லோக்கலாக தெரிந்தான். மழிக்கப்படாத ('not shaved'ஐ தாங்க அப்டி சொன்னேன்) முகம், கலைந்திருந்த தலை, ஆங்காங்கே அழுக்குடன் சுருக்கங்கள் நிறைந்த உடை என்பதாக இருந்தது அவனது தோற்றம். என் பைக்கை வெளியில் எடுக்கும் போது, ஏதோ எனக்கு உதவுவதை போன்று என் பைக்கில் கை வைத்து பின்னால் இழுப்பதாக பாவனை செய்தான். நான் சட்டென்று திரும்பி, அவன் கையை எடுக்குமாறும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்பதை போன்றும் சைகை செய்தேன். உடனே கையை எடுத்து விட்டு, சற்று தள்ளி நின்றுக் கொண்டான். பைக்கை வெளியில் எடுத்து, நான் அதில் ஏறி அமரும் வரை பொறுமையாக இருந்து விட்டு, "டூ ருபீஸ்.." என்று என்னிடம் கேட்டான்.
"ஒய் (why)..", என்று கேட்டேன்.
நான் கேட்டதை காதில் வாங்காதவன் போல, "டூ ருபீஸ்.." என்று தனது இரண்டு விரல்களை காண்பித்து சற்று சப்தமாக, இன்னும் தெளிவாக மீண்டும் கேட்டான்.
என் முகத்தை சட்டென்று சீரியஸாக மாற்றி, "ஒய் (why)..", என்று மீண்டும் கேட்டேன். இம்முறை எனது குரலை நன்றாக உயர்த்தியிருந்தேன்.
"ஒய் ஷூட் ஐ கிவ் யு டூ ருபீஸ் (why should I give you two rupees)..?", என்று குரலை உயர்த்தி கேட்டேன்.
கண்டிப்பாக அவன் ஏதாவது பிரச்னை செய்வான் என்று எதிர்பார்த்திருந்ததால் சற்று தயாராகவே இருந்தேன். எனக்கு கன்னடம் தெரியாது என்பதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கொஞ்சம் விவகாரமான விஷயம் தான். அதிலும் நான் தமிழன் என்று தெரிந்தால் அவ்வளவு தான். 'என்ன தான் நடக்கும்.. பார்த்து விடலாம்..' என்று முடிவெடுத்திருந்தேன்.
ஆனால் என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு (உள்ளுக்குள் திக் திக்குன்னு இருந்தது எனக்கு தான் தெரியும்), குரலை உயர்த்தி கேள்வி கேட்டதும், நான் ஆச்சரியப்படும் விதமாக அவன் பதில் பேசாமல் சட்டென்று அடங்கி திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டான். 'இவனிடம் மீண்டும் கேட்டால் பிரச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான்..' என்பதான கலவரம் அவன் முகத்தில் தெரிந்தது (இது பில்டப்புக்காக சொல்லலங்க.. உண்மையிலேயே தான்). அடுத்த முனையில் இன்னொருவன் பைக்கை வெளியில் எடுத்துக் கொண்டிருக்க அவனை நோக்கி போனான்.
'ஹே.. எங்கடா போற.. பெரிய பில்டப்போட வந்திருக்கேன்.. அதுக்காகவாச்சும் சின்னதா சண்டை போட்டுட்டு போடா..' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே பைக்கை கிளப்பினேன். 'அடப்பாவிகளா.. இவ்ளோ தானா நீங்க'.. 'இது தெரியாம இவ்ளோ நாள் இவனுங்களுக்கு காசு கொடுத்துட்டு இருந்தேனே' என்று தோன்றியது. பல நேரங்களில் நம்மிடம் அநியாயம் செய்பவர்கள் பலவீனமானவர்களாக இருந்தாலும் கூட, நாம் எதிர்த்து கேட்க பயந்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கும் அதிகாரம் செய்வதற்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக எனக்கு தோன்றியது. குரலை உயர்த்தி 'ஹே என்ன..' என்று இனி கேட்டு தான் பாருங்களேன். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
PS: இந்த பதிவிற்கு 'எம்.ஜி. ரோட்டில் நடந்தது என்ன.. குற்றம்.. ஒரு சிறப்பு பார்வை..' என்று தொலைகாட்சிகளில் வருவதை போன்று டைட்டில் வைக்கலாமென்று தான் நினைத்தேன். சரி ஓவரா எதுக்கு பில்டப் கொடுத்துக்கிட்டு என்று தலைப்பை மாற்றி விட்டேன்.
machi supper da டூ ருபீஸ் ku ..
ReplyDeleteWHY?????????????????
Apparam
ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா.. ஆயிரத்து நூறா..
ennada???????????????
NICE TO READ