Monday, June 28, 2010

வலி..

sorrow III., photo originally uploaded by *juice.
எதையெதை பற்றியோவெல்லம் சிந்திக்கின்றது மனம். 'நலமா...?' என்பவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. சாய்ந்தழ ஒரு தோளில்லையே என்பதான ஏக்கம் எப்போதும் எட்டாத உயரத்தை அடைந்துள்ளது. 'நமக்காக' என்பதாக நாம் நினைத்த சிலர் நம்மை விட்டு அகலும் போது, என்ன தான் முதிர்ச்சியடைந்த சிந்தனைவாதியாய் இருந்தாலும் கூட, சற்று தடுமாறி தான் போய்விட நேர்கிறது.

'நமக்கான உலகம் இவர்கள்' என்பதான சிந்தனையோடு வாழ்க்கையை நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது 'எனக்கான உலகம் வேறு' என்பதாக பின்னாளில் அவர்கள் நம்மிடம் சொல்வார்களேயானால், அத்தகைய தருணங்களை கையாள்வதென்பது சற்று முடியாத காரியமே. கடினப்பட்டு கட்டியெழுப்பிய கோட்டையின் மையத்தூண் சட்டென்று வழுவிழந்து சாய்வதை போன்று தான் வாழ்க்கை ஆகிவிடுகிறது அந்த நொடிகளில்.

தெரிந்த தவறையே திரும்ப திரும்ப செய்வதில் நம்மை மிஞ்சுபவர்கள் நாம் மட்டுமே. வாழ்க்கையில் என்ன தான் அடிபட்டாலும், மீண்டும் மீண்டும் மற்றவர்களை நமது வாழ்க்கையின் மையமாக வைத்து கோட்டையை எழுப்புவதும், பின்னாளில் நம்பிக்கை மோசத்திற்கு இலக்காவதுமாக நம் வாழ்க்கை ஏன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது..? ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்து நிற்கின்றன. அனுபவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விடைகளென்னவோ அகப்படுவதேயில்லை.

இம்முறைப் போல, சில நேரங்களில் அடி கொஞ்சம் பலமாகவே விழுந்து விடுகிறது. எழுந்து நிற்க முடியாவிட்டாலும் கூட எதிரில் இருப்பவர்களின் உள்ளம் சுருங்கக் கூடாது என்பதற்காக போலியாய் உதடு விரித்து புன்னகைக்கிறேன். மார்பில் துளையிடாது உள்ளுக்குள் பதம் பார்த்த வார்த்தைகள் சிலதின் ஆறா ரணங்களும் அவை சார்ந்த வலியின் சாயங்களும் தன்னையும் மீறி கலந்து விடுமோ என்கிற பயத்தின் காரணமோ என்னவோ அப்புன்னகைகளின் போது உதடுகளின் ஓரப்பகுதிகள் கொஞ்சம் தந்தியடிக்கின்றன..

Friday, June 18, 2010

தனித்திருக்கும் நிமிடங்கள்..


Alone, originally uploaded by Lel4nd.
இந்த தனிமை..!! பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா..? எளிதாக சொல்லத் தெரியவில்லை. அதை பற்றி யோசிக்கையில் ஒரு சிறிய குழப்பம் எப்போதுமே மனதிற்குள் எட்டிப் பார்ப்பதுண்டு. ஒருபுறம் கூட்டத்தின் நடுவில் இருக்கும் போது தனித்திருக்க தோன்றினாலும், மறுபுறம் தவிப்புகள் சிலவும் சலனங்கள் சிலவும் வந்து ஒட்டிக் கொள்ளக் கூடிய தனித்திருக்கும் தருணங்களில் அருகில் சிலர் இருந்தால் நலமாக இருக்குமென்கிற எண்ணமும் தோன்ற தான் செய்கின்றது. மனதின் தேவைகள் நொடிக்கொருமுறை மாறிய வண்ணமே உள்ளன.

ஆனாலும் மனதை ஆழ்ந்து கவனிக்கையில், தனிமை ஒருவிதத்தில் பிடித்து தான் இருக்கின்றது. ஆழ்மனதினது சலனங்களை சற்று உற்று நோக்கவும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்குமென்று சிந்தனைகளை மெல்லுவதற்கும் தனித்திருத்தல் என்பது மிகவும் தேவையான ஒன்றாகி விடுகின்றது.

மற்றவர்கள் அருகிலிருக்கும் போது கட்டுப்பாடோடு இருக்கும் சிந்தனைகள் ஆழ்ந்த அமைதி பூசிய நிசப்தத்தின் நடுவில் தனித்திருக்கையில் தறிகெட்டு ஓடுகின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லையென்றாலும் கூட எனக்கென்னவோ அத்தகைய தருணங்கள் இப்போதெல்லாம் பிடித்து போய்விடுகின்றன. ஆழ்கடலில் மூச்சைப் பிடித்து உள்ளுக்குள் மூழ்கி முத்தெடுப்பதை போன்ற உணர்வையே அக்கணங்கள் ஏற்படுத்துகின்றன. 'நான்' என்னும் சுயத்தை அறிய உதவுவது அத்தகைய தருணங்களே.

தனித்திருத்தலே நிஜம். அது தான் வாழ்வினது நிதர்சன உண்மை. அங்கே தான் 'நான்' என்னும் சுயம் நிறைந்திருக்கின்றது. அக்கணங்கள் தான் என்னை நானாக எனக்கு காட்டுகின்றன. எனக்கே எனக்கான வாழ்க்கையை வாழ்வதற்கு கிடைக்கும் நிமிடங்கள் அவையே. அங்கே முகமூடி அணிவதற்கோ, போலி ஒப்பனைகள் போட்டுக் கொள்வதற்கோ தேவையில்லை. மற்றவர்களுக்காக அழுகை மறைத்து புன்னகைப்பதற்கோ, 'நான்'னில்லாத நானாக இருப்பதற்கோ அவசியமில்லை. அத்தருணங்களில் தான் எனக்கே எனக்கான என்னுலகத்தில் நானாக இருக்க இயல்கின்றது. அதனால் தானோ என்னவோ 'தனிமை' இப்போதெல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

Wednesday, June 16, 2010

கை மீறும் கட்டுப்பாடுகள்..


Uncontrollable, originally uploaded by Silvia de Luque.
மாற்றங்கள் ஏற்படும் தருணங்கள் மறக்க முடியாத பாதிப்பை உள்ளுக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. வேண்டுமென்று தவம் கிடக்கும் போது எட்டிப் பார்க்காத மாற்றங்கள், 'எல்லாம் நலமென்று' மகிழ்ச்சியாக இருக்கும் போது வந்து கதவு தட்டுகின்றன. வேண்டுமென்னும் போது எதுவும் கிடைப்பதேயில்லை. 'சரி அது தான் கிடைக்கவில்லையே, இனி நமக்கு அது வேண்டாம்' என்று விலகவோ விட்டுவிடவோ முடிவெடுக்கும் போது கேள்விகள் எதுவும் கேட்காமலேயே நம்மை அவை பின்தொடர்கின்றன.

பல நேரங்களில் தவமிருக்கும் போது எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சி எதற்காக காத்திருந்தோமோ அவை கிடைக்கும் போது ஏற்படுவதில்லை. ஒருவேளை அதற்கு காரணம், கிடைக்கவில்லை என்பதால் ஏற்படும் ஏமாற்றம் பழகி விட எதிர்பார்ப்பை புதைத்து விடுவதால் கூட இருக்கலாம். என்ன தான் மனமானது முதிர்ச்சியடைந்த பண்பினை (maturity) கொண்டிருந்தாலும் எதிர்பார்ப்புகளையோ அல்லது அதனால் ஏற்படும் ஏமாற்றங்களையோ தவிர்த்து வாழவோ அவற்றை கையாளவோ முடிவதில்லை.

விருப்பங்களும் விழைவுகளும் ஏன் எப்போதுமே எதிரெதிர் திசையிலேயே நிகழ்கின்றன என்று தெரியவில்லை. வாழ்வினது போக்கு ஏன் நமக்கு பிடிபடாமலேயே இருக்கின்றது..? உடலை நாம் விருப்பும் இடத்திற்கு நம்மால் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதை போன்று, ஏன் மனதினது ஓட்டத்தை கட்டுப்படுத்தி நாம் விரும்பும் திசையில் செலுத்த முடிவதேயில்லை..?

எதற்காக மற்றவர்களது ஆளுமையின் கீழ் எளிதாக நமது உணர்வுகள் அடிமையாக விட்டு விடுகிறோம்..? வாழ்க்கையில் பெரும்பாலானவற்றை நமது கைகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கும் நாம், மிகவும் முக்கியமான சில விஷயங்களை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் ஏன் விட்டுவிடுகிறோம் என்று தெரியவில்லை. நம்மை ஆழமாக பாதிக்கக் கூடிய பல முடிவுகளை நமக்கு சாதகமாக நாமே எடுக்கக் கூடிய நிலையிலிருந்தாலும் கூட எதற்காக நாம் முடிவெடுக்காமல் அவற்றை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் விடுகிறோம் என்பது புரியவில்லை.

ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக நமது உணர்வுகளை மற்றவர்கள் எளிதாக அடக்கியாண்டுவிட எதற்காக நாம் இடம் கொடுக்கிறோம்..? பதில் தேடி அலைவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுகிறது போங்கள்..!!

Sunday, June 13, 2010

அந்நிய உணர்வு..


A stranger passing by..., originally uploaded by manganite.
இடைவெளி அதிகமாகிவிடும் போது நட்புகளில் முன்பிருந்த பழைய எதார்த்தமான உணர்வுகளை திரும்ப பெறுவது சற்று கடினமாகி விடுகிறது. நண்பர்கள் பட்டியலில் பலர் அவ்வபோது தலை காட்டி இடம் பிடித்தாலும், தொடர்ந்து நிலைத்திருப்பவர்களின் எண்ணிக்கை என்னவோ மிகவும் குறைவு தான்.

நன்றாக பேசி 'இவர்கள் நமக்கான நண்பர்கள்' என்னும் உணர்வை ஏற்படுத்துபவர்கள் கூட பல நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடுகின்றனர். பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பின்பு மீண்டும் அவர்கள் பேசும் போது முன்பிருந்த அந்த எதார்த்தமான நட்புணர்வு காணாமல் போய்விட்டதை போன்ற உணர்வு வந்து விடுகிறது. ஏதோ ஒரு அந்நிய உணர்வு தலை தூக்குகிறது. பேசும் போது வார்த்தைகளை உள்ளுணர்வுகள் வடிகட்டியே வெளி அனுப்புகின்றன. அன்னியோன்யத்தின் சுவடு லேசாக மறைந்த மாதிரியான எண்ணமே தோன்றுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு என் தோழியொருத்தி என்னிடம் பேசிய போது அப்படி தான் தோன்றியது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட, தொடர்பிற்காக எடுத்த முயற்சிகள் சில தோல்வியையே தழுவ, 'ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும்..' என்பதான எண்ணம் மனதிற்குள் புகுந்து கொள்ள, ஏமாற்றம் தழுவும் முன் எதிர்பார்ப்புகளை புதைத்து விட்டு வாழ்வில் முன்சென்று கொண்டிருக்கும் போது, "ஹாய்.. எப்டி இருக்க..?" என்பதாக அவர்கள் மீண்டும் நம் வாழ்வில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்பு நுழையும் போது, மகிழ்வதா அல்லது அங்கிருந்து அகன்று விடுவதா என்பதான ஒரு பெரிய குழப்பம் தான் ஏற்படுகிறது.

அவள் நன்றாக பழகியவள் தான். பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள நல்ல தோழியாக இருந்தவள் தான். எவ்வளவோ பேசியிருக்கிறோம். 'இவள் எனக்கு கிடைத்த நல்ல தோழி' என்பதான எண்ணம் எழுந்த போது, இடைவெளி விழ ஆரம்பித்தது. சண்டையென்று ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையில் மும்முரமாகிவிடும் போது இடைவெளிகள் விழுந்து விடுகின்றன. அவர்களுக்கு நாம் நட்பளவில் முக்கியத்துவம் அளித்து சில எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் போது, அவர்களும் அப்படியே சிந்திக்காத பட்சத்தில் தான் இத்தகைய இடைவெளிகள் விழுகின்றன.

ஆனால் அவர்களுக்கு அத்தகைய இடைவெளி விழுந்த உணர்வுகள் வருவதில்லை போலும். ஒருவேளை அவர்கள் நம்மளவிற்கு அவ்வளவு ஈடுபாடோடு நட்பில் இணையவில்லையோ என்னவோ. ஆனால் ஆழமாக நட்பில் இணைந்து, தெரிந்தோ தெரியாமலோ சில எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டவர்களுக்கு இத்தகைய இடைவெளிகள் வலிக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே தான் இடைவெளி அதிகமாகும் போது, 'இனியும் பொறுக்க இயலாது' என்பதால் அவர்கள் அதிலிருந்து வெளியேற ஆரம்பித்து விடுகின்றனர்.

எவ்வளவோ பேசி பழகியிருந்தாலும் கூட, பல நேரங்களில் அத்தகைய நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு அவர்கள் பேசும் போது ஒருசில வார்த்தைகளை தவிர வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வெளிவர தயங்குகின்றன. 'நீ எப்டி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க..? லைஃப் எப்டி போயிட்டு இருக்கு..?' அதற்கு மேல் எதுவும் கேட்க தோன்றுவதில்லை. அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாததால் மௌனம் நீள்கின்றது.

நட்பில் அன்னியோன்யம் இருக்கும் போது மௌனம் அழகான மொழி. ஆழமான நட்புணர்வு உள்ளுக்குள் படர்ந்திருக்கும் பட்சத்தில் மௌனமானது நெருக்கமான உணர்வுகளையே ஏற்படுத்தும். அங்கே மௌனம் என்பது மொழிபெயர்க்க முடியாத அழகான உணர்வுகளின் பரிமாற்றம். ஆனால் இடைவெளிகளுக்கு பின்பு அந்நிய உணர்வு கலந்து விடும் போது அதே மௌனம் உள்ளுக்குள் இறுக்கத்தை தான் ஏற்படுத்துகிறது. இருவர் பேசிக் கொள்ளும் போது மௌனம் அசௌகர்யமான ஒரு சலனத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தினால் அங்கே நெருக்கமான நட்பு மறைந்து அந்நிய உணர்வு கலந்துவிட்டது என்றே அர்த்தம்.

Wednesday, June 9, 2010

நழுவியோடும் நிகழ்காலம்

இப்போதெல்லாம் மனதில் எண்ணங்களால் எழும் சலசலப்பு சற்று அதிகமாகி விட்டது. அதனாலேயோ என்னவோ கவனம் செலுத்த நினைக்கும் பெரும்பாலானவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை. இப்போதெல்லாம் பதிவுகளுக்கிடையிலான இடைவெளி சற்று அதிகமாகி வருவதற்கு அது கூட காரணமாக இருக்கலாம்.

ஏதாவதொன்றை பற்றிய பயம் எப்போதும் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் வர போகாத இழப்புகளை பற்றி வீணாக சிந்திப்பதாலா அல்லது இழந்த பின் வருத்தப்படுவதை விட இழக்கும் முன் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலமென்னும் எண்ணம் தோன்றுவதாலா என்று தெரியவில்லை.

வாழ்க்கையை வாழும் நிமிடங்களை விட தேவையில்லாத பல விஷயங்களை பற்றி சிந்திப்பதிலேயே தான் பலர் காலம் கழிக்கின்றனர். நானொன்றும் அதில் விதிவிலக்கல்ல. கடந்த காலங்களை பற்றிய கவலைகளுக்கும், எதிர்காலங்களை பற்றிய முன்னெச்சரிக்கை சிந்தனைகள் மற்றும் பயங்களுக்கும் மத்தியில் நிகழ்காலமென்று ஒன்றிருப்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

எல்லாம் உணர்ந்து தெளிந்து, 'சரி இனியாவது வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழலாம்' என்று முடிவெடுக்கும் சமயத்தில் தான் முன்பின் அறிந்திடாத ஏதாவதொரு பிரச்சனையொன்று முன்னெச்சரிக்கையின்றி தலை தட்ட, செய்வதறியாது இப்போதும் சிந்தனை தறிகெட்டோட, எப்போதும் போலவே சப்தமின்றி சொல்லிக் கொள்ளாமல் கை விட்டு நழுவுகின்றன நிகல்காலமென்று சொல்லப்படும் வாழ்க்கையின் இப்போதைய நிமிடங்கள்..

Tuesday, June 1, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (11)

வாழ்வினது நிகழ்வுகள் பல நேரங்களில் புரிந்து கொள்வதற்கில்லை. 'எதற்காக அவை நிகழ்கின்றன.. நமக்கு என்ன சொல்ல அவை முற்படுகின்றன..' என்பதான கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில்கள் கிடைப்பதில்லை. நிகழ்வுகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. அர்த்தங்களை கண்டறிய முற்படுவதென்பது புதைக்குழியில் கால் பதிப்பதை போன்றது. தரை தட்டுமென்று நினைத்து கால் வைத்தால் உள்ளுக்குள்ளேயே புதைந்து போகவேண்டியது தான்.

ஒருவகையில் அவை 'மாடர்ன் ஆர்ட்' என்று சொல்லப்படும் நவீன ஓவியங்களை போன்றவை. ஒன்றுமே புரியவில்லையென்றாலும் கூட ஏதோ புரிவதாக நடித்து, ரசிப்பதாக காட்டிக் கொள்வதை போன்று தான் வாழ்க்கையை வாழ வேண்டியதாகி விடுகிறது. பொருள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு ஓரமாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. எவ்வளவு தான் சிந்தித்தாலும் 'ஏன்.. எதற்கு.. என்ன.. எது..' என்பதற்கான அர்த்தங்கள் விளங்கப் போவது இல்லை.

கிறுக்கப்பட்ட கோடுகளுக்கும், தெளிக்கப்பட வண்ணங்களுக்கும் நடுவில் ஏதோ ஒன்றை கண்டதை போன்ற பிரமை தோன்றும் போது, அதுவாக தானிருக்குமென்று ரசித்து விட்டு அடுத்த ஓவியத்திற்கு தாவுவதே புத்திசாலித்தனம். சில விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்து என்ன நடக்கிறதென்று அறிந்து கொள்வது அவசியமென்றாலும் கூட, எல்லா விஷயங்களையும் அவ்வாறே சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என்பது என் கருத்து.

காரணம், எல்லாவற்றிக்கும் 'ஏன்..எதற்கு..' என்பதான கேள்விகளுக்கு அர்த்தத்தை கண்டறிய முயன்றோமென்றால் நாம் உண்மையிலேயே வாழ்கின்ற நேரத்தின் அளவு குறைந்து விடக் கூடும். எல்லாவற்றிக்கும் பொருள் தேடியலைந்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம். வாழ்க்கையில் அவ்வபோது தற்காலிகமாக வந்து போகக்கூடிய பல விஷயங்களை அதன் போக்கிலேயே ரசித்து வாழ்க்கையில் முன்னோக்கி நகர்வதே பல நேரங்களில் புத்திசாலித்தனம்.

பெரும்பாலான நேரங்களில் தொலைத்தது என்னவென்று தெரியாமலேயே நாம் தேடுதலில் இறங்கி விடுகிறோம். எந்த தைரியத்தில் அத்தகைய தேடுதல் வேட்டையில் நாம் இறங்குகிறோம் என்று தெரியவில்லை. அவ்வாறான தேடுதல்கள் எதை கண்டறிந்தாலும் திருப்தியளிக்கப் போவதில்லை. இன்னும் ஏதேனும் தட்டுப்படும் என்பதான எண்ணமே எப்போதும் தோன்றிக் கொண்டிருக்கும். தேடுதல்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குட்பட்டதாகவே இருக்க வேண்டும். எல்லையற்ற தேடல்கள் பெரும்பாலும் நம்மையே நாம் தொலைத்துவிடும் சுழலில் கொண்டு போய் விட்டுவிடக் கூடும்.