Showing posts with label இழப்பு. Show all posts
Showing posts with label இழப்பு. Show all posts

Wednesday, October 20, 2010

சூன்யம் அப்பிய இரவொன்றில்..


Photo originally uploaded by teddypopit.
பசியின் காரணமாக வான் கடித்துண்ட மிச்சம் கொண்டு இருள் துளைக்க முயன்று தோற்றுப் போய் துவண்ட முகத்துடன் ஒடுங்கிய இலையாய் மேகங்களுக்குள் மறைந்தவாறே மெலிதாய் வெளிச்சம் கசிகிறாள் வானத்து நிலா.. நீர்த்துகள்களை தாங்கிய குளிர்ந்த காற்று தேகத்தில் மோதினாலும் கூட உள்ளுக்குள் இன்னும் வெக்கையின் தாக்கம்..

அமைதி ஆட்கொண்டுவிட்ட நடுநிசியில் எங்கோவொரு மூலையில் நிசப்தத்தை கொலை செய்தபடியே ஊளையிடும் நாய்க் கூட்டம் உள்ளுக்குள் இருக்கும் உயிரை நடுங்க செய்யாமலில்லை.. ஆனாலும் ஏதோவொரு தைரியத்தில் மொட்டை மாடியின் திறந்தவெளியில் தன்னந்தனியாய் நின்றபடியே ஆளரவமற்ற வீதியை வெறிக்கிறேன்..

சருகுகள் எங்கோ படபடக்கும் ஓசையும் சுவர்க்கோழிகளின் சன்னமான இரைச்சலும் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டிருக்க சூன்யம் அப்பிய அவ்விரவின் கருமை அடிமனதினது ஆழத்தில் ஒருவித பயத்தை மெலிதாக உண்டாக்குகிறது..

உள்ளுக்குள் சென்றுவிடலாமென்று திரும்ப எத்தனிக்கும் வேளையில் அறையினுள் அவள் விட்டுச் சென்ற சுவடுகள் யாவும் அவளில்லையென்பதை உமிழ்ந்தபடியே அடிமனதின் ஆழங்களை காயப்படுத்தும் அந்த ஞாபகங்கள் மீண்டும் கண்முன் அகோர தாண்டவமாடுகின்றன.. துளியும் தாங்க முடியா வலி தரும் அவ்வுணர்வுகள் எதிர்த்து தாக்க, அறைக்கு திரும்ப பயந்து இருளை மீண்டும் வெறிக்கிறேன்.. அதே சருகுகள் படபடக்கும் ஓசை.. சுவர்க்கோழிகளின் இரைச்சல்.. சூன்யத்தின் சுவடுகள்.. ஆனாலும் அவை சில கணங்களுக்கு முன்பு நெஞ்சுக்குள் ஏற்படுத்திய பயம் இப்போது சற்று குறைந்திருப்பதாக தோன்றுகிறது..

அறையின் சுவடுகள் கண்முன் நிறுத்தும் கடந்தகால நினைவுகளும் இரவை கவ்விக் கொண்டிருக்கும் சூன்யம் ஏற்படுத்தும் பீதியும் மாறிமாறி உள்ளத்தை நடுநடுங்க செய்ய, கிழக்கு வெறிக்கிறேன்.. வானமோ விடிந்தபாடில்லை..!!

Monday, June 28, 2010

வலி..

sorrow III., photo originally uploaded by *juice.
எதையெதை பற்றியோவெல்லம் சிந்திக்கின்றது மனம். 'நலமா...?' என்பவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. சாய்ந்தழ ஒரு தோளில்லையே என்பதான ஏக்கம் எப்போதும் எட்டாத உயரத்தை அடைந்துள்ளது. 'நமக்காக' என்பதாக நாம் நினைத்த சிலர் நம்மை விட்டு அகலும் போது, என்ன தான் முதிர்ச்சியடைந்த சிந்தனைவாதியாய் இருந்தாலும் கூட, சற்று தடுமாறி தான் போய்விட நேர்கிறது.

'நமக்கான உலகம் இவர்கள்' என்பதான சிந்தனையோடு வாழ்க்கையை நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது 'எனக்கான உலகம் வேறு' என்பதாக பின்னாளில் அவர்கள் நம்மிடம் சொல்வார்களேயானால், அத்தகைய தருணங்களை கையாள்வதென்பது சற்று முடியாத காரியமே. கடினப்பட்டு கட்டியெழுப்பிய கோட்டையின் மையத்தூண் சட்டென்று வழுவிழந்து சாய்வதை போன்று தான் வாழ்க்கை ஆகிவிடுகிறது அந்த நொடிகளில்.

தெரிந்த தவறையே திரும்ப திரும்ப செய்வதில் நம்மை மிஞ்சுபவர்கள் நாம் மட்டுமே. வாழ்க்கையில் என்ன தான் அடிபட்டாலும், மீண்டும் மீண்டும் மற்றவர்களை நமது வாழ்க்கையின் மையமாக வைத்து கோட்டையை எழுப்புவதும், பின்னாளில் நம்பிக்கை மோசத்திற்கு இலக்காவதுமாக நம் வாழ்க்கை ஏன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது..? ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் ஒரே நேரத்தில் எழுந்து நிற்கின்றன. அனுபவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விடைகளென்னவோ அகப்படுவதேயில்லை.

இம்முறைப் போல, சில நேரங்களில் அடி கொஞ்சம் பலமாகவே விழுந்து விடுகிறது. எழுந்து நிற்க முடியாவிட்டாலும் கூட எதிரில் இருப்பவர்களின் உள்ளம் சுருங்கக் கூடாது என்பதற்காக போலியாய் உதடு விரித்து புன்னகைக்கிறேன். மார்பில் துளையிடாது உள்ளுக்குள் பதம் பார்த்த வார்த்தைகள் சிலதின் ஆறா ரணங்களும் அவை சார்ந்த வலியின் சாயங்களும் தன்னையும் மீறி கலந்து விடுமோ என்கிற பயத்தின் காரணமோ என்னவோ அப்புன்னகைகளின் போது உதடுகளின் ஓரப்பகுதிகள் கொஞ்சம் தந்தியடிக்கின்றன..

Monday, May 24, 2010

இரங்கல்

மங்களூர் விமான விபத்து பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே நெஞ்சை உலுக்கி விட்டது. விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் கதையை கேட்கும் போதும் நெஞ்சம் பதறுகிறது. துபாயிலிருந்து வந்த இந்த விமானத்தில் எத்தனை பேர் தம் குடும்பத்தை விட்டு சம்பாதிப்பதற்காக அரபு நாடுகளுக்கு சென்று பல வருடங்கள் அங்கேயே இருந்து விட்டு தம் குடும்பத்தினரை பார்க்க வந்தவர்களோ.. விமானத்தில் பயணம் செய்தவர்களை வரவேற்க வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தரை இறங்கிவிட்டதென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதே கட்டுப்பாடு இழந்து விமானம் தறிகெட்டு போக, தன் கண் முன்னாலேயே தனக்கு உயிருக்கு உயிரானவர்கள் இறந்ததை பார்த்தவர்களது இதயம் எப்படி துடித்திருக்கும்..? நினைக்கும் போதே கண்கள் ஈரமாகின்றது.

தம் உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு அந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அந்த இறைவன் தான் கொடுக்க வேண்டும். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. :'-(