Friday, March 5, 2010

இன்னும் சில சிந்தனைகள்.. (6)

வாழ்வது நீங்களாக இல்லாதவரையில் 'இப்படி தான் வாழவேண்டுமெ'ன்று முடிவெடுக்காதீர்கள்.. வேண்டுமானால் நீங்கள் ஆலோசனைகள் கூறலாம்.. அறிவுறுத்தலாம்.. ஆனால் மற்றவர்கள் வாழ்க்கையை நீங்கள் ஏன் வாழ முனைகிறீர்கள்..? 'இப்படி இரு.. அப்படி இரு.. இதை செய்யாதே.. அதை செய்யாதே..' என்று மற்றவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு பலர் மிகுந்த சிரத்தை எடுக்கிறார்கள். என்னவோ தங்கள் வாழ்க்கையை இவர்கள் முழுதாக வாழ்ந்து முடித்து விட்டதை போல.. அப்படியே உங்கள் வாழக்கையை நீங்கள் வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால், அது தான் வாழ்ந்து முடித்து விட்டீர்களே.. அப்பறமென்ன.. அவர்களும் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்க்கட்டுமே, அவர்கள் விரும்பியபடி!

'நான் சொல்வதையே இவன்(ள்) கேட்பதில்லை..' 'நான் செய்யாதேவென்று சொல்லியும் ஏன் அதை செய்கிறான்(ள்)..' இப்படியாக தான் சொல்லியதை மற்றவர்கள் பின்பற்றவில்லையென்று ஆதங்கமும் கோபமும் கொள்ளும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.. "அது அவர்கள் வாழ்க்கையப்பா.. அவர்கள் விரும்பியபடி வாழட்டுமே..", என்று சொன்னால், "அவனு(ளு)க்கு ஒன்றும் தெரியாது.. பச்சை குழந்தை.. நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டுமெ"ன்று சொல்லி அவர்களது வாழ்க்கையையும் இவர்கள் சேர்த்து வாழ முனைவது எனக்கு உண்மையிலேயே சிரிப்பை தான் வரவழைக்கும். வளர்ந்து விட்டவர்களை குழந்தைகளாக பாவித்து நேசிப்பதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக உங்கள் கைப்பிடித்து தான் அவர்கள் காலம் முழுதும் நடக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். நான் இங்கே எந்தவொரு உறவையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

மற்றவர்கள் நலம் விரும்பி, 'நீ இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.. ஆனால் அதை கட்டாயப்படுத்தும்போது அங்கே ஒரு அசௌகர்யம் (uncomfortable feeling) ஏற்பட்டுவிடுகிறது. 'நல்லது சொன்னால் கேட்க மறுக்கிறான்(ள்)..' என்று நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் உங்களுக்கு நல்லதாக பட்டது அவர்களுக்கும் நல்லதாக படுகிறதாவென்று கொஞ்சம் யோசித்து தான் பாருங்களேன். மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்குவதுடன் நிறுத்தி கொள்வது உத்தமம். அவர்களது நலம் விரும்புவது உயரிய கொள்கை தான். அதை நான் குற்றம் சொல்லவில்லை. அதே நேரத்தில், அவர்கள் விரும்பியபடியும் அவ்வபோது வாழ அவர்களை விடுங்களேன்..

"நீ இப்படி தான் வாழ வேண்டுமெ"ன்று யாரையும் அதிகாரம் செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லையென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். ஆலோசனைகளும் அறிவுரைகளும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப்படும் போது அவை நிராகரிக்கப்படுவதில்லை என்பதையும் நம்புபவன் நான்.. பொதுவாகவே, "நீ இதை செய்.. அல்லது இதை செய்யாதே.." என்று மேலோட்டமாக சொல்லப்படும் பொழுது, அத்தகைய அறிவுரைகள் பெரும்பாலும் செவி சாய்க்கப்படுவதில்லை.. காரணம் யாருமே கண்மூடித்தனமாக மற்றவர்களை பின்பற்றுவது வெகு சில காலங்களுக்கு மட்டுமே. பின்பு அவர்களுக்குள்ளே இருக்கும் 'நான்' விழித்துக் கொள்வது இயற்கையே..

சொல்லப்படும் ஆலோசனைகளுடன், அவற்றினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவதுடன், (மிக முக்கியமாக) உங்களது ஆலோசனையோ அல்லது அறிவுரையோ ஏன் அவர்கள் நினைப்பதை விட மேலானது என்பதையும் எடுத்து சொல்வது மிகவும் அவசியம். அப்போது தான் அது மற்றவர்களின் கவனத்தை பெறுகிறது. உங்களது ஆலோசனைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அதை அலட்சியப்படுத்த போகிறார்கள். அப்படியே அவர்கள் அலட்சியப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் நினைக்கும் சில காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தான் உங்களது ஆலோசனை இருக்க வேண்டுமேயொழிய, உங்களது சிந்தனை மற்றும் மனபோக்கின் அடிப்படையில் மட்டுமல்ல. எல்லாவற்றையும் விட 'அது அவர்களுடைய வாழ்க்கை' என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

நீங்கள் விரும்பியபடி வாழ உங்களுக்கு உரிமைகள் இருப்பதை போன்று தானே அவர்கள் விரும்பியபடி வாழ அவர்களுக்கும் உரிமையுண்டு. 'நீ இப்படி செய்வதால் இத்தகைய பாதிப்பு வர வாய்ப்பிருகிறது', என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டென்றாலும், 'பாதிப்பு வந்தால் பரவாயில்லை..' என்று முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு அல்லவா. அப்படி முடிவெடுக்கிறார்களென்றால், அவர்களது முன்னுரிமை வேறொன்றில் இருக்கிறதென்று தான் அர்த்தம். அது முற்றிலும் தவறென்று சொல்வதற்கு இயலாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனுக்கான முன்னுரிமைகளும், வாழும் விதம் பற்றிய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயற்கை தானே. அவ்வாறாக அவர்கள் முடிவெடுக்கும் போது, "சரி.. இது தான் நீ விரும்புவதென்றால், நீ விரும்பியவாறு செய்.. ஆனால் கொஞ்சம் கவனமாக இரு.." என்று கூறுவதும், எவ்வாறு அவர்கள் கவனமாக இருக்கலாமென்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவதும் மட்டுமே ஏற்று கொள்ள தக்கது. அதை விடுத்து, "நீ நான் சொல்வதை கேட்க மாட்டாயல்லவா.. போ.. இனி என் முகத்தில் விழிக்காதே.." என்று முகம் திருப்புவதும் கோபம் கொள்வதும் அழகன்று..

"பிரச்சனைல மாட்டிக்குவான்(ள்)னு தெரிஞ்சே, எக்கேடோ கேட்டு போன்னு எப்டி பால் சும்மா விடுறது.." என்று சொல்வீர்களேயானால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிரச்சனை இருப்பதை விளக்கி சொன்ன பின்பும் ஒருவன்(ள்) தொடர்ந்து முன்னோக்கி நகர்கிறான்(ள்) என்றால் வரவிருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ளவும் அதை சமாளிக்கவும் அவன்(ள்) தயாராக இருக்கிறான்(ள்) என்று தானே அர்த்தம். எப்போதும் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. என்ன தான் நெருங்கிய உறவாகவோ அல்லது நட்பாகவோ இருந்தாலும் நீங்கள் நீங்கள் தான்.. அவர்கள் அவர்கள் தான்.. தம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் அவரவர் கனவுகளிலும் கற்பனைகளிலும் இருக்கும் போது, மற்றவர்களுடைய வாழ்க்கையை அவர்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் வாழ முனைகிறீர்கள்..? உங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருங்கள்..

No comments:

Post a Comment