புன்னகைகள் மட்டுமே பரிசாக வேண்டுமென்றால் புகைப்படங்களிலும் ஓவியங்களிலும் தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். புன்சிரிப்புகள் அங்கே தான் சிதறி கிடக்கின்றன.. மலிவாக!! உறைந்து நிற்பவைகளில் மட்டுமே புன்னகைகள் நிரந்தரமாகின்றன. ஒருவேளை ஓவியங்களோ புகைப்படங்களோ உயிர் பெறுமாயின் அவற்றின் புன்னகைகளும் காணாமல் போக வாய்ப்புண்டு. உயிர் கொண்டு அசைந்தாடும் வாழ்க்கையோ சற்று வித்தியாசமானது. மேகங்கள் மாறிக் கொண்டே இருக்கும் வானை போன்றது. எனவே தான் நிரந்தரமான எதுவும் அதில் தென்படுவதில்லை..
மேலும் கீழும் அசைந்தாடும் கடலின் மேற்பரப்பில், அதன் இசைக்கேற்ப தாளம் போட்டுக் கொண்டு மெல்ல அடிவானம் நோக்கி நகரும் படகை போன்றது தான் வாழ்க்கையும். அங்கே சீரான பயணங்கள் என்பது பெரும்பாலும் ஓட்டுபவரின் திறனையோ அல்லது படகின் அமைப்பையோ பொறுத்து அமைவதில்லை.. அது முழுக்க முழுக்க படகை தாங்கி பிடிக்கும் கடலையும், அதன் மனநிலையையும் பொறுத்தது.. சுற்றி வரும் காற்றை பொறுத்தது.. நிழல் கொடுக்கும் மேகங்களைப் பொறுத்தது.. அங்கே எதற்கும் உத்திரவாதமில்லை.. எதுவும் உறுதியளிக்கப்படுவதுமில்லை.
அமைதியும் சீற்றமும் மாறி மாறி முகம் காட்ட, பயணத்தின் வெற்றியோ புன்முறுவலுடன் அவற்றை சந்தித்து முன்னோக்கி நகர்தலை பொறுத்தே அமைகிறது.. அங்கே தன்னம்பிக்கை இழத்தலென்பது துடுப்பை தவற விடுவதை போன்றது. துடுப்பை இழந்தவன் முன்னோக்கி நகர்ந்ததாகவோ, கரையேறி மகிழ்ந்ததாகவோ தகவலில்லை.. தத்தளித்து சில நாட்களில் தண்ணீருக்குள் மூழ்க வேண்டியது தான். புயலுக்கு பின் அமைதியென்பது இயற்கையின் விதி. அமைதியின் அடியாழத்தில் புயலொன்று மறைவாக இருப்பதென்பதும் மாறாதது.. மறுக்கவியலாததும் கூட.. எனவே தான் எதிர்பாராதவைகளை எதிர்பார்த்து எப்போதும் தயாராகவே இருக்க வேண்டியுள்ளது.
சோகங்களும் அழுகைகளும் ஆங்காங்கே தென்படுகின்றன என்பதற்காக பயணத்தை நிறுத்துவதோ, தொடர்ந்து பயணிப்பதற்கு அத்யாவசியமான துடுப்பு போன்ற (தன்)நம்பிக்கையை கைவிடுவதோ சரியான முடிவன்று. புன்னகைகளிலேயே வாழ்க்கை அமிழ்ந்திருக்கட்டுமென்று எதிர்பார்த்திருப்பதை விடுத்து வாழ்க்கையின் இயற்கையான சில நியதிகளை ஏற்றுக் கொள்ளும் போது, அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பயணத்தை தொடர்ந்திட முடியும்..
மாறிவரும் சூழ்நிலைகளையும், ஆங்காங்கே வலி ஏற்படுத்தும் சில நிகழ்வுகளையும் வாழ்வின் சுவாரசியமான அம்சங்களாக பாவிக்க ஆரம்பிக்கும் போது, அவை உங்களுக்கு நிகழ்கின்றன என்றாலும் கூட மூன்றாம் மனிதனாக அவற்றை சில நேரங்களில் ரசித்திட முடியும்.. மற்ற நேரங்களில், அவ்வாறான மனோபாவமானது அத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் வலியின் வீரியத்தை குறைத்திட உதவும். அழுகையும் சில நேரங்களில் அழகு தான். காரணம், அவை வலியினால் ஏற்பட்டாலும் கூட நமக்கு சில பாடங்களை கற்றுத் தருவதால்!
No comments:
Post a Comment